ஸ்டில் அசிஸ்டெண்டா இருந்தவனை ஒளிப்பதிவு பக்கம் திருப்பினது இயக்குநர் பிரபு சாலமன்தான்! நெகிழ்கிறார் மைனா சுகுமார்



“இன்னிக்கு நினைத்தாலும் ஆச்சர்யமா இருக்கு. அண்ணன் ஜீவன் சினிமாவில் ஸ்டில் போட்டோகிராபராக இருந்தார். அவர்கிட்ட ஒரு அசிஸ்டெண்டாக இருந்தேன். பெரிசா ஈடுபாடு அப்ப இருந்ததில்லை. அடுத்தடுத்து வேலை செய்யும்போது பிடிப்பு வந்த மாதிரியிருந்தது.
பிறகு பிரபு சாலமன் சார்கிட்டே வேலை பார்க்கும்போது ‘ஒளிப்பதிவாளராக வந்திடு’ன்னு சொன்னார். அது பெரிய வேலையாச்சேன்னு பயமாக இருந்தது. ‘கொக்கி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஒளிப்பதிவு செய்தேன். கொஞ்சம், கொஞ்சமாக இந்தக்கலையின் மீது பிரியம் வந்தது.

அப்புறம் பிரபு சாலமன் சாரே ‘மைனா’வைக் கொடுக்க அங்கிருந்து ஆரம்பிச்சது எனக்கான காலம். பெரிய வாசலைத் திறந்துவிட்டு இன்னிக்கு இந்த கௌரவ மான வாழ்க்கையை எனக்கு கையளித்தவர் பிரபு சாலமன் சார்தான். இன்னிக்கும் அவரை நினைச்சுக்கிட்டுத்தான் நாளைத் தொடங்குவேன். என்னுடைய இன்றைய நல்ல இடத்திற்கு அவரே பொறுப்பானவர்...” கனிவாகப் பேசத் தொடங்குகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

‘மைனா’வில் தொடங்கி ‘மான் கராத்தே’ கடந்து இப்போது தெலுங்குப் படவுலகிலும் உயரக்கொடி பிடிக்கிறார். பிரபு சாலமன் பறக்கவிட்ட குதிரைக்கு இப்போது தமிழ், தெலுங்கு இரண்டிலும் செம தீனி.அடுத்தடுத்த பயணங்களில் வந்தது உங்களின் உயர்வு…

அப்படி வந்தால் நல்லாயிருக்கும்தானே! அண்ணன்கூட சேர்ந்து ஒர்க் பண்ணாலும், ஆர்வம் இல்லாமல் இருந்தேன். பின்னாடி சினிமா இயங்குவதை பார்த்து பெரிய ஆசை வந்திடுது. இந்த சினிமா அத்தனை பேரையும் கவருது. கட்டிப்போடுது. நல்ல புகழைத்தருது. தேவையான பணத்தைத் தருது. அதுபோக இங்கே தினமும் கற்றுக்கொள்ளுதல் நடக்குது. ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு வாழ்க்கையின் பிரதிபலிப்பு. அதில் அத்தனை உணர்வுகளை புரிஞ்சிக்க வேண்டியிருக்கு.

நல்ல டைரக்டர்கள் எனக்கு வகையாக கிடைக்கவும், ஒரு சினிமா உருவாக்கத்தில் அவங்க பங்கு காணக் கிடைக்கிறபோது நமக்கே நல்ல பாடங்கள் கிடைக்குது. இந்த சினிமாவில் அனுதினமும் கத்துக்க வேண்டியது இருக்கு. அதுவும் ஒளிப்பதிவில் நாளும் புதுப்புது தினுசாக மாற்றங்கள் வருது.  தினப்படி அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கு.

இப்படி சினிமா செய்கிறவங்களை தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தவன் நான். இப்போதான் நமக்கே இவ்வளவு பொறுப்புகள் வந்து நிக்குதேன்னு நினைச்சால் கொஞ்சம் சந்தோஷமா, நிறைய பயமாக இருக்கும். ஏன்னா, இது கவனத்தை சிதறவிடக்கூடாத இடம்.இப்ப ஒளிப்பதிவுகளில் மரபுகளை மீறுவது அதிகமாக இருக்கே…

முன்னாடி கேமராவில் நெகட்டிவ் இருந்தது. அதில் ஒவ்வொரு அடியும் காசு. அத்தனை பேரும் உஷாராக இருந்த நேரம். இப்ப எத்தனை ஒன்ஸ்மோர் வேண்டுமானாலும் போகலாம். ஆனால், அப்ப முடியாது. சிக்கனமாக நெகட்டிவ்வை பயன்படுத்துகிற ஒளிப்பதிவாளருக்கு நல்ல பெயர் கிடைக்கும். அதே மாதிரி அதிகம் டேக் வாங்காமல் நடிக்கிற நடிகர்களுக்கும் நிறைய மரியாதை உண்டு.

இப்ப பிலிம் போனதும் கொஞ்சம் இன்னும் காட்சிகள் நன்றாக வர முயற்சி பண்றாங்க. அதனால் ஒளிப்பதிவிலும் வழக்கமான அம்சங்களை மீறி செய்து பார்க்கிறாங்க. எங்காவது புதுசா எதுவும் கிடைத்தால் நல்ல விஷயம்தானே. ஒளிப்பதிவாளர்களுக்குன்னு சில கடமைகள் இருக்கு. கதை எப்படி நகரணும், எங்கே வேகம் கூடணும், எங்கே திசை மாறணும்னு டைரக்டர்கூட சேர்ந்து வேலை செய்வது சுவாரஸ்யமான வேலை. அதில் உழைப்பு ரொம்பவும் முக்கியம்.

எனக்கு எப்பவும் இயக்குநர்கள் கூட இணைந்து வேலை பார்க்கத்தான் பிரியம். கதையை மீறவே கூடாது. நம்ம சௌகரியத்திற்காக கதையை மீறிப்போவது அறமல்ல. அங்கே ஏன் நாம் தெரியணும்! அப்படி ஓர் இயக்குநர்கிட்டேயும் சேர்ந்து வேலை செய்யும்போது அது அவங்க படமாகவே வருது.

எனக்கும் சுகுமார் படம்னு தனிச்சுத் தெரியணும்னு ஆசை கிடையாது. இயக்குநர் பார்வையை மீறாததுதான் நமக்கு அழகு. இன்னும் நிறைய வருஷம் கழிச்சு பார்க்கும்போது விதவிதமாக படங்கள் பண்ணியிருக்கோம்னு ஒரு மகிழ்ச்சி இருக்கணும்.

தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து இருக்கீங்க… எப்படி இருக்கு..?

இப்ப நல்லாயிருக்கு. நல்ல இயக்குநர்கள் ரசனையோட வர்றாங்க. அப்படி வர்றவங்க ஒளிப்பதிவாளர்களோட ஒரு இணக்கமான உறவை வைச்சுக்கிறாங்க. தமிழில் இப்ப பிரபு சாலமன் சாரின் ‘கும்கி 2’, சீனு ராமசாமி சாரோட ‘மாமனிதன்’னு நல்ல நல்ல படங்கள் வரிசையில் இருக்கு. இந்த கொரோனா வெளியேறியதும் எல்லாமே நல்லபடியாக வெளியாகும்னு நினைக்கிறேன்.

தெலுங்கிலும் நாகார்ஜுனாவின் ‘மன்மதடு 2’ எல்லாம் முடிஞ்சு, அடுத்தடுத்து படங்கள் செய்துகிட்டு இருக்கேன். தெலுங்கிலும் அருமையான காலக்கட்டம். தொழில் பக்தியிலும் முன்னாடி நிற்கிறாங்க. நல்ல கதைகளுக்கு உணர்வுபூர்வமான ஈடுபாடு காட்டுறாங்க. எங்கேயும் நான்தான் பெரிய ஆளு, நீதான் பெரிய ஆளு என்ற விஷயங்கள் எல்லாம் இப்போ இல்லவே இல்லை.

தியேட்டர் திறக்கிற நாளை அறிவித்து விட்டார்களே…தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் முன்னாடி போட்டாங்க. அப்ப ஓடிப்போய் பார்த்தோம். இப்ப அப்படி பார்க்கிறோமா? ஆனால், சினிமாவுக்கு தியேட்டர்தான் வசதி. அசல் சினிமா அனுபவம் அங்கேதான் கிடைக்குது. ஒரு சினிமாவை தியேட்டரில் மக்களோட மக்களாக உட்கார்ந்து பார்க்கிற சுகம் வேறு எதிலும் இல்லை. தியேட்டரில் போய்ப் பார்த்தால்தான் நான் படம்னே சொல்லுவேன்.

வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும்போது என்ன தோணும்?

முக்கியமான நல்ல படங்கள் செய்திருக்கோம்னு நெஞ்சில் படுது. இன்னும் காலமிருக்கு, பயணம் போகலாம்னு நம்பிக்கையும் இருக்கு.
என்னை உழைப்பு மட்டுமே இவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்திருக்குன்னு நம்புகிறேன். அதோடு நேரமும் முக்கியம்.

என்னை சினிமாவுக்குள் விட்டு வழிகாட்டிய அண்ணன் ஜீவன் அவர்களையும், எனக்கு வெளிச்சமிட்ட இயக்குநர் பிரபு சாலமன் அவர்களையும் மறக்க இயலாது. என் சுமுகமான வாழ்க்கைக்குத் துணையாக இருக்கிற மனைவியும், குழந்தைகள் யோகஸ்ரீ, சுமந்த் இருவரும் என் மனசறிந்து செயல்படுகிற குழந்தைகள்.   

நா.கதிர்வேலன்