தல! sixers story-25சுரேஷ் ரைனா சுரேஷ் ரைனா
டோண்ட் ஒர்ரி சுரேஷ் ரைனா!

மூத்த வீரர்கள் சொதப்பிய போட்டியிலும் கூட தோனி- சுரேஷ் ரைனாவின் புதிய கூட்டணி, இந்தியாவை வெற்றிக்கோட்டுக்கு அழைத்துச் சென்று தொடரை வெல்லக் காரணமானது.
வழக்க மான கிரிக்கெட் பேட்டிங் ஸ்டைலை விட்டு விலகி, முற்றிலுமாக தன்னுடைய தனித்துவமான பாணியை தோனி அறிமுகப்படுத்தியது அந்தப் போட்டியில்தான்.ஸ்ட்ரீட் கிரிக்கெட் பாணியிலான ஸ்ட்ரோக்குகளை அவர் பயன்படுத்த ரசிகர்களுக்கு புதுமையான அனுபவம் கிடைத்தது.

அகமதாபாத் நகரில் நடந்த அடுத்த போட்டியில் தோனியை ஒன் டவுன் ஆர்டரில் களமிறக்கினார் திராவிட்.ஆனால் -சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து டக்-அவுட் ஆனார் தோனி.இம்முறை ரசிகர்களுக்கு அவர் மீது கோபம் வரவில்லை.

ஏனெனில் ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று கொடுத்தவர் என்கிற மரியாதைதான் காரணம்.திராவிட்டும், காம்பீரும் தலா 103 ரன்கள் விளாசியும், தன்னுடைய அபாரமான மிடில் ஆர்டர் பேட்டிங் துணையுடன் அப்போட்டியை வென்றது இலங்கை.

அடுத்து ராஜ்கோட்டில் நடந்த போட்டியிலும் இந்திய அணியே வென்றது. இதில் தோனி பேட்டை எடுக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.
கடைசிப் போட்டி வதோதராவில் நடந்தது.முதலில் ஆடிய இலங்கை 244 ரன்களை எடுத்திருந்தது.இலக்கை துரத்திய இந்திய அணி 13வது ஓவரிலேயே 100 ரன்களை புயல்வேகத்தில் கடந்தது.

இம்முறை நான்காவது விக்கெட்டாக களமிறங்கிய தோனி, பந்துகளை நாலாப்புறமும் விளாசி 80 ரன்களை எடுக்க, 40வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.அக்காலக்கட்டத்தில் பேட்டிங், பவுலிங் என்று வெகு வலுவான நிலையில் இருந்த இலங்கை அணியை 6-1 என்கிற கணக்கில் கிட்டத்தட்ட தொடரில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது இந்தியா.

இலங்கை அணியின் அப்போதைய பயிற்சியாளரான கிரிக்கெட் ஜாம்பவான் டாம் மூடி, “தோனி எங்கள் அணியை அழித்து விட்டார்...” என்று புலம்பினார்.346 ரன்கள் (ஆவரேஜ் 115.33) என்று தொடரைக் கலக்கிய தோனியே, ‘மேன் ஆஃப் த சீரிஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2005ல் இந்தியாவில் இலங்கை சுற்றுப்பயணம் செய்து தோற்ற இத்தொடரே, தோனியின் இடத்தை கிரிக்கெட் உலகில் வலுவாக நிலைபெறச் செய்தது என்று சொல்லலாம்.

ஏற்கனவே சொன்ன மாதிரி, இத்தொடரில்தான் அவருக்கு விலைமதிக்க முடியாத சுரேஷ் ரைனாவின் நட்பும் கிடைத்தது.இருவரும் இணைபிரியா நண்பர்களாக மாறியது இயல்பானது. இருவருமே சிறுநகரங்களில் இருந்து கிரிக்கெட் ஆட வந்தவர்கள்.

தோனி பீகாரின் ராஞ்சி நகரிலிருந்தும், ரைனா உத்தரப் பிரதேசத்தின் முராத் நகரிலிருந்தும் கிளம்பி வந்து சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தவர்கள்.வளரும் நிலையில் இருந்தபோது பெருநகரங்களில் இருந்து வந்த வீரர்களின் கேலி, கிண்டல், ஒடுக்குமுறைகளை ஒரே மாதிரியாக எதிர்கொண்டவர்கள்.ஆரம்பத்தில் ஆங்கிலம் பேசுவது இருவருக்குமே பெரிய பிரச்னையாக இருந்தது.

இதுவே போட்டிகளின் போது தங்கும்போது இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளக் காரணமானது.“கிரிக்கெட் டூருக்காக வெளியூர்களுக்கு போகும்போது தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுவேன். சரியான அறை நண்பராக தோனி அமைந்தபின்னரே நிம்மதியாக தூங்க ஆரம்பித்தேன்...” என்று ஒருமுறை மனம் திறந்தார் ரைனா.கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் இருவரும் இணைந்து விளையாடினார்கள்.

மிடில் ஆர்டரில் இவர்களது கூட்டணி அமைத்திருக்கும் சாதனைகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு எந்த ஒரு பார்ட்னர்ஷிப்பாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வலிமையானது.இருவரும் இணைந்தாலே எத்தகைய இலக்கையும் எட்டி விடுவார்கள் என்று எதிரணிகள் அஞ்சி நடுங்கின.

எத்தனையோ வெற்றிக் கொண்டாட்டங்கள்; தோல்வியின் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்த சந்தர்ப்பங்கள்.

எனவேதானோ என்னவோ ஐபிஎல் தொடங்கியபோதும் தன்னுடைய நம்பகத்துக்குரிய பார்ட்னரை தன் அணியிலேயே சேர்த்துக் கொண்டார் தோனி.
ஐபிஎல்லின் போதுதான் தோனியை ‘தல’ என்று தமிழக ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். தோனி ‘தல’ ஆகிவிட்டதால், ஆட்டோமேட்டிக்காக ரைனாவும் ‘சின்ன தல’ ஆகிவிட்டார்.

எந்தளவுக்கு இவர்களது நட்பு நெருக்கமானது என்றால் -2015ம் ஆண்டு தோனி மேற்கிந்தியத் தீவுகளில் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தார். இங்கே குர்கான் நகரில் ஒரு மருத்துவமனையில் தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு மகள் பிறந்திருந்தாள்.திருமணமாகி ஐந்து ஆண்டுகள் தவமாய் தவமிருந்து பிறந்த மகள்.சாக்‌ஷி, தன் கணவருக்குக் கூட விஷயத்தைச் சொல்லவில்லை.

“அண்ணா, அவருக்கு மகள் பிறந்திருக்கிறாள்...” என்று முதன்முதலாக எஸ்எம்எஸ் மூலம் அவர் தகவல் சொன்னது சுரேஷ் ரைனாவுக்குத்தான்!“தோனி எனக்கு வெறும் நண்பனல்ல. கடினமான சந்தர்ப்பங்களில் என்னை வழிநடத்தும் சக்தி...” என்று தன் வாழ்வில் தோனியின் இடத்தை ஒரு நண்பர்கள் தின செய்தியாக சொன்னார் ரைனா.

கடந்த ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தோனி.அடுத்த சில நிமிடங்களி லேயே சற்றும் யோசிக்காமல், “உன்னோடு இணைந்து விளையாடிய மகிழ்ச்சியே போதும் தோனி. நானும் உன் பாதையிலேயே நடக்கிறேன்...” என்று கூறி தன்னுடைய கிரிக்கெட் ஓய்வையும் அறிவித்து விட்டார் ரைனா.

தோனி, 2014ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவைக் கூட முதலில் ரைனாவிடம்தான் ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தன்னுடைய ஜெர்சியைக் கழற்றி அதில் கையொப்பமிட்டு ரைனாவுக்குத்தான் தந்தார்.

(அடித்து ஆடுவோம்)

 - யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்