ஐடி to கைத்தறி நெசவு! சென்னிமலை இளைஞரின் இலட்சியப் பயணம்ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் சிவகுரு நாதன். ஒருநேரத்தில் ஐடி பணியில் கைநிறைய சம்பளம், அடுக்கு மாடியில் வீடு, நிறைவான வாழ்க்கை என்றிருந்தவர். ஆனால், அந்த வேலையைத் துறந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக கைத்தறியை மீட்டெடுக்கும் குறிக்கோளுடன் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்.

கலப்படம் இல்லாத பருத்தி நூலிலும், இயற்கை சாயத்திலும் கைத்தறியால் துணிகள் நெய்யப்பட வேண்டும் என்பதே இவரின் நோக்கமும் ஆசையும்!
இந்த அடிப்படையிலேயே, ‘நூற்பு’ எனும் பெயரில் கைத்தறி ஆடைகளை நெய்து விற்பனை செய்து வருகிறார். இவரின் ‘நூற்பு’ பிராண்ட் இப்போது வெளியுலகில் பிரபலம்.

மட்டுமல்ல. இந்தத் தீபாவளிக்கு பெண்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கைத்தறி புடவைகளும், ஆண்களுக்கான வேட்டி, சட்டைகளும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தவிர, இந்தக் கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கான தொட்டில் துணியை நெய்து அதனை அரசு ருத்துவமனைகளுக்கு இலவசமாகக் கொடுத்துள்ளார் சிவகுருநாதன். இப்போதும் அந்த சேவையைத் தொடர்கிறார்.

‘‘சொந்த ஊர் ஈரோடு பக்கத்துல துடுப்பதினு ஒரு கிராமம். அங்க எங்க குடும்பம் கைத்தறி நெசவுத் தொழில்ல இருந்தது. தாத்தாவிற்குப் பிறகு அந்தப் பணியை அப்பா சின்னச்சாமி செம்மையா செய்தார். பிறகு, விசைத்தறியின் வரவால் அப்பா துணிகளை வாங்கி விற்கிற தொழிலுக்கு மாறினார்.
நான் ஈரோட்டில் அத்தை வீட்டிலிருந்து பள்ளிப் படிப்பைப் படிச்சேன். பிறகு, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங்ல டிப்ளமோ முடிச்சேன். எனக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. அப்பாவும், அம்மாவும் எங்கள நெசவு பக்கம் வரவிடல. படிச்சு நல்லதொரு வேலைக்குப் போகணும்னு நினைச்சாங்க.

நானும் டிப்ளமோ முடிச்சதும் கேரளாவுல ஒரு ஹார்டுவேர் நிறுவனத்துல வேலைக்குப் போனேன். அந்நிறுவனம் பேங்கிங் பணிகளை எடுத்தாங்க. அதனால, சாப்ட்வேரும் வெளியில் படிச்சேன். அங்கிருந்து பெங்களூருக்கு மாறினேன். என்னுடைய கனவெல்லாமே கை நிறைய சம்பாதிக்கணும், லக்சுரி கார் வாங்கணும், பிராண்டட் ஆடைகள் அணியணும்… இப்படியாதான் இருந்துச்சு.

ஆனா, அங்க போனபிறகு நிறைய இலக்கியப் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். அதுதான் எனக்குள்ள நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துச்சு.
அப்ப, ‘குக்கூ’ சிவராஜ் அண்ணாவின் நட்பு கிடைச்சது. நேரம் கிடைக்கிறப்ப அவரை திருவண்ணாமலை போய் சந்திப்பேன். நிறைய பேசுவோம். அவர் வழியா நம்மாழ்வார் ஐயாவை சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சது.

இப்படியாக என்னுடைய தேடல் ஆரம்பிச்சது. எவ்வளவு காலத்துக்கு இப்படி ஓடிக்கொண்டே இருக்குறதுனு மனசுல ஒரு கேள்வியும் எழுந்துச்சு. ஏதாவது சுயமா செய்யணும்னு நினைச்சேன். அப்பதான் என் குடும்பத்தின் பாரம்பரிய நெசவுத் தொழிலை மீட்டெடுக்கணும்னு முடிவெடுத்தேன்.

ஆனா, எனக்கு நெசவுத் தொழில் பத்தி எதுவும் தெரியாது. முன்னாடியே நான் சொன்னமாதிரி அப்பாவும், அம்மாவும் எங்கள அதன் பக்கத்துல கூட விடல. ஆனாலும் ஆர்வமும் குறிக்கோளும் என்னை விடாம துரத்துச்சு. இந்நேரம் திருமணமாச்சு. என்னுடைய குறிக்கோள்களை எல்லாம் மனைவி ரூபாகிட்ட சொன்னேன். புரிஞ்சுகிட்டாங்க.

இதுக்கு முன்னாடி சிவராஜ் அண்ணா மூலம் கர்நாடகவுல உள்ள மெல்கோட் கிராமத்துக்குப் போனேன். கைத்தறியில் துணிகளை உற்பத்தி செய்திட்டு வர்ற கிராமம் அது. அங்க காந்திய சிந்தனையாளரும், காதி இயக்க ஆதரவாளருமான சுரேந்திர கெளலாகி அய்யாவ சந்திச்சேன். அவர்தான், ‘இதுக்கு நிறைய பொறுமை தேவை… லாபம் பார்க்காமல் வேலை செய்யணும்’னு அறிவுறுத்தினார். இப்ப அவர் உயிருடன் இல்லை. ஆனா, அவரின் வார்த்தைகளையும் அவர் சொன்ன நுணுக்கங்களையும் வேத வாக்கா எடுத்துக்கிட்டேன்.

2016 அக்டோபர் 2ம் தேதி ‘நூற்பு’ எனும் பெயரில் கைத்தறி நெசவு சங்கத்தைத் தொடங்கினேன். நூற்புனா ஒரு சாதாரண பொருளில் இருந்து பயனுள்ள ஒரு பொருளாக உருவாகுதல்னு அர்த்தம். அதாவது, ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு நல்லவிதமாக வருவது.

என் வாழ்க்கையும் நூற்பு போலதான். அதனால அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன். பிறகு, 2017ம் ஆண்டு ஜனவரியில் என் மனைவிகிட்ட மட்டும் சொல்லிட்டு ஐடி வேலையில் இருந்து விலகினேன். அப்ப நான் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன்.

வேலையை விட்ட விஷயம் அப்பா, அம்மாவுக்குத் தெரிஞ்சதும் அதிர்ச்சியானாங்க. ‘நெசவுத் தொழில்ல சம்பாதிக்க முடியாதுப்பா’னு அறிவுரை சொன்னாங்க. ஆனா, நான் முடியும்னு உறுதியா நின்னேன்...’’ என்கிறவர் அதன்பிறகான கதையைத் தொடர்ந்தார். ‘‘அப்புறம், கைத்தறி நெசவாளர்களைத் தேடினேன். அப்பதான் சென்னிமலை 1010 காலனி பற்றி தெரிஞ்சுது.

கைத்தறி நெசவாளர்களுக்காகவே கட்டப்பட்ட ஆயிரத்து பத்து வீடுகள் கொண்ட காலனி அது. ஒருகாலத்துல கைத்தறி சத்தம் எப்பவும் கேட்டுக்கிட்டே இருந்த இடம். ஆனா, இன்னைக்கு பத்து வீடுகள்லதான் அந்தச் சத்தம் கேட்குது. ஏன்னா, நிறைய பேர் வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. இங்க சத்தியார்த்தினு ஒரு அண்ணாவின் நட்பு சிவராஜ் அண்ணா மூலம் கிடைச்சது. அவர்கிட்ட பேசினதும், ‘சிறப்பா பண்ணுங்க’னு ஊக்கப்படுத்தினார்.

உடனே, அங்குள்ள சில நெசவாளர்கிட்ட போய் பேசினேன். முதல்ல யோசிச்சாங்க. தயக்கம் காட்டினாங்க. தொடர்ந்து உங்களுக்கு வேலைகள் தர்றேன்னு சொன்னேன். ஆறு வீடுகள்ல இருந்து நம்பிக்கை சைகை வந்தது. வேலையை துவக்கினேன். முதல்ல, நான் தரமான பருத்தி நூல் வாங்கி நெசவாளர்கள்கிட்ட கொடுத்துடுவேன். அவங்க துணியா நெய்து எங்கிட்ட தருவாங்க. வேட்டி, சேலைகளை அவங்களே முடிச்சிடுவாங்க. ஆண்களுக்கான சட்டைகள் மட்டும் வெளியே கொடுத்து தைச்சு வாங்குவேன்.

ஆனா, எனக்கு பருத்தி நூல் வாங்கிப் பழக்கமில்லாததால ஆரம்பத்துல சில இடங்கள்ல ஏமாந்தேன். கலப்படமான நூலை தந்திருக்காங்கனு என் தம்பி பாலகுருநாதன் சொன்னான். பிறகு, அவனே எனக்கு உதவினான். அவன் டெக்ஸ்டைல் படிச்சவன். இப்படியா நான் பல நுணுக்கங்களை அனுபவங்கள் வழியா படிச்சேன். இப்ப தொழிலை நல்லா கத்துக்கிட்டேன். தனியா நெசவு செய்யவும், துணிக்கு சாயம் போடவும், அச்சு ஏற்றவும் தெரியும்...’’ என்கிற சிவகுருநாதன் வியாபாரம் பற்றி பேசினார்.  

‘‘என்னுடைய வியாபாரத்தை ஆன்லைன் வழியா செய்றேன். முதல்ல, மதுரை, ஈரோடுனு சில இடங்கள்ல நடக்குற விழாக்கள்ல ஸ்டால் போட்டேன். கொரோனாவுக்குப் பிறகு முழுவதும் ஆன்லைன்னு இறங்கிட்டேன். இதுக்குனு nurpu.in என்ற இணையதளத்தை ஆரம்பிச்சேன். முதல் மூணு வருஷம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்ப செலவு எல்லாம் போக என் கையில் மாசம் 30 ஆயிரம் ரூபாய் நிற்குது. அதைவிட வாழ்க்கை ரொம்ப ரொம்ப நிறைவா இருக்குது.

இந்தத் தீபாவளிக்கு ஜக்கார்ட், புட்டா, அச்சு சேலைகள்னு மூணு வகையான பிராண்டில் 150 கைத்தறி பருத்திப் புடவைகள் நெய்திருக்கோம். ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை செய்திருக்கோம். அதேமாதிரி ஆண்களுக்கு வெள்ளை மற்றும் கலர் வேட்டிகளும், கலர் கைத்தறி சட்டைகளும் பண்ணியிருக்கோம். இதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு...’’ என்கிறவரிடம் தொட்டில் துணிகள் பற்றிக் கேட்டோம்.

‘‘எங்க சென்னிமலை பகுதியே போர்வைக்கு புகழ்பெற்றது. போர்வையை நெய்து உலகம் முழுவதும் அனுப்புறாங்க. இந்த 1010 காலனியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்களும் இந்தப் பணியில் இருக்காங்க. ஆனா, இந்தக் கொரோனா காலத்தில் யாருக்குமே வேலையில்ல. அவங்களுக்கு வேலை கொடுக்கணும்னு நினைச்சேன். அப்பதான் தொட்டில் துணி நெய்யலாம்னு தோணுச்சு.

இன்றைய தலைமுறையினர் துணிகளில் தொட்டில் கட்டுறதில்ல. இருந்தும் இன்னமும் தொட்டில் துணியை விரும்புகிறவர்கள் நிறைய இருக்காங்க. அந்த எண்ணத்துல நாலு மீட்டர்ல கைத்தறி தொட்டில் துணியும், குழந்தைங்களுக்கான துண்டும் நெய்தோம். இதனுடன் தொட்டில் கம்பும் தர்றோம்.

இதுக்காக நிறைய நண்பர்களிடம் உதவி கோரினேன். அதாவது crowd fundingஇல் நிதியுதவி பெற்று ஈரோடு பகுதி அரசு மருத்துவமனைகளுக்கு இருபது தொட்டில் துணிகள் இலவசமா கொடுத்தேன். இதை சமூகவலைத் தளத்துல பார்த்து காஞ்சிபுரம் நண்பர்கள் நூறு தொட்டில் துணிக்கு ஆர்டர் கொடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு கொடுத்தாங்க.

இப்ப இதையும் தொடர்ந்து செய்திட்டு வர்றேன்...’’ என்கிற சிவகுருநாதனின் எதிர்கால லட்சியம் ஒரு நெசவுப் பள்ளி துவங்க வேண்டும் என்பது!   
‘‘இப்ப கைத்தறி நெசவு அழிஞ்சிட்டு வருது. இதை மீட்டெடுக்கணும்னுதான் நான் வந்தேன்.

என்னைமாதிரி பலரும் கைத்தறிக்குள்ள வரணும். அதுக்காக நெசவுப் பள்ளி ஒண்ணை ஆரம்பிக்கணுங்கிறது என் எதிர்காலக் கனவு. ஏன்னா, இப்ப உள்ள கைத்தறி நெசவாளர்கள் இந்தக் கைத்தறி நெசவை எதிர்காலத் தலைமுறையினருக்கு கடத்தல.

கடத்தணும்னு அவங்களுக்கு தோணவும் இல்ல. அதை செய்யணும்ங்கிறது என் ஆசை. முன்னாடி பள்ளிகள்லயே கைத்தறி நெசவு பற்றி ஒரு வகுப்பு இருக்கும். நான் எங்க ஊர் பள்ளியில் படிச்சிருக்கேன். இப்ப அந்த வகுப்பை எடுத்திட்டாங்க. அதை மீண்டும் கொண்டு வரணும். அப்படி வந்தால் கைத்தறி நெசவு இன்னும் பரவலாகும்.

அடுத்து, எல்லோரையும் கைத்தறி ஆடைகள் அணியச் செய்யணுங்கிறது என் நோக்கம். ஏன்னா, கைத்தறியில் நெய்த ஆடைகளை அணிஞ்சா நல்ல காற்றோட்டம் உடலுக்குள்ள போகும். வெப்பம் சீரா இருக்கும். சருமப் பிரச்னைகள் எதுவும் வராது. உடலும் ஆரோக்கியமா இருக்கும்...’’ நம்பிக்கையாகச் சொல்கிறார் சிவகுருநாதன்.

பேராச்சி கண்ணன்