ரஜினி கொடுத்த எனர்ஜி...அஜித் செய்த டிஷ்..! மாடர்ன் பட்டாசு சாக்‌ஷி படபட...‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மாதிரி காஜல் அகர்வாலுக்கு கல்யாணம் ஆனா என்ன... சாக்‌ஷி அகர்வால்தான் இருக்கே... என சொல்ல வைத்துவிடுவார் போல... அப்படி அசத்தல் காஸ்ட்யூம்களில் இன்ஸ்டாவில் தீபாவளி தமாகாவாக ஜொலிஜொலிக்கிறார் சாக்‌ஷி.
‘காலா’வில் ரஜினியின் மருமகள், அஜித்தின் ‘விஸ்வாச’மில் நயன்தாராவின் கொலிக்... என டாப் ஹீரோக்கள் படங்கள் கொடுத்த எனர்ஜியில், இப்போது ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘டெடி’, ‘அரண்மனை 3’, ‘சிண்ட்ரெல்லா’ தவிர, வெப்சீரீஸிலும் பளபளக்கிறார்.

‘‘லாக்டவுன் சீஸன்ல எல்லாருமே சிரமப்பட்டாங்க. எல்லாருக்குமே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுச்சு. பலரும் வெளியே எங்கேயும் போக முடியாத சூழல்னு மன அழுத்தத்தினால் கஷ்டப்படுறதை கண்ணால பார்த்தேன். அவங்க எல்லாருக்கும் பாசிட்டிவிட்டியை விதைக் கணும்னுதான் ஃபிட்னஸ் ஷூட், போட்டோஷூட்னு பதிவிட்டு இன்ஸ்டாவில் பாசிட்டிவிட்டியை விதைச்சேன்...’’ என கலர்ஃபுல் மத்தாப்பூவாய் மலர்கிறார்.
எம்பிஏ பொண்ணு சினிமாவுல எப்படி?

என்னைப் பத்தி சிம்பிளா சொல்றதா இருந்தா ஹார்டு ஒர்க்கிங், ரொம்பவே ஸ்டிரைட் ஃபார்வர்ட், பாசிட்டிவ் கேர்ள். அவ்ளோதான். என் லைஃப்ல நான் சினிமாவுல என்ட்ரி ஆவேன், நடிகையாவேன்னு நினைச்சே பார்த்ததில்ல. சின்ன வயசில இருந்து ஐஏஎஸ் ஆபீசர் ஆகணும்னுதான் விரும்பினேன்.
அது கனவாகவே இருந்துச்சு. எங்க வீட்லயும் அதைத்தான் எதிர்பார்த்தாங்க. ஆனா, காலேஜ் டைம் வரும்போது ஐடி துறை பெரிய பூம் ஆச்சு. எல்லாரும் சாஃப்ட்வேர் என்ஜினியரா ஆக விரும்பினாங்க. எம்பிஏவுக்கு பெரிய கிரேஸ் இருந்துச்சு. அதனால கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏனு படிச்சேன்.

படிக்கும்போது மாடலிங்ல இறங்கினேன். அப்படியே ஆக்ட்டிங்ல ஆர்வம். அதுக்கேத்த மாதிரி என்னை ரெடி பண்ணிக்கிட்டேன். வீட்ல அப்பாகிட்ட சொன்னதும் அவர் அமெரிக்காவுக்கு அனுப்பி ஆக்ட்டிங் கோர்ஸ் படிக்க வச்சார். நம்ம ரூபாய் மதிப்பில் 18 லட்சம் செலவு செய்து கோர்ஸ் முடிச்சேன்.

‘ராஜா ராணி’க்குப் பிறகு மறுபடியும் ஆர்யாவோட ‘டெடி’யில் நடிச்சிருக்கேன். தமிழ், மலையாளம், கன்னடம்னு மூணு இண்டஸ்ட்ரியிலும் நடிச்சிருக்கேன். கிரியேட்டிவ்வான ஆட்கள் இங்கே அதிகம். இப்ப தமிழ்ல உமன் சென்ட்ரிக் படங்கள் அதிகம் வருது. அப்படி ஒரு படத்துல நடிக்க விரும்புறேன்.ரஜினி... அஜித்... ரெண்டு பேர் கூடயும் டிராவல் பண்ணினது எப்படியிருந்தது..?

சாக்‌ஷி ஸோ ஹேப்பி. சின்ன வயசுல என் க்ரெஷ் அஜித் சார்தான். நான் அவரோட ரொம்ப பெரிய ஃபேன். ‘விஸ்வாசம்’ல டாக்டர் ரோல்ல நடிக்கக் கேட்டதும், சின்ன ரோல்னாலும் உடனே சம்மதிச்சது, ‘தல’க்காக மட்டும்தான். முதல் நாள் ஸ்பாட்டுல என்னை அவர் பார்த்ததும், ‘வாங்க சாக்‌ஷிஜி’னு வெல்கம் பண்ணின மொமண்ட்டை மறக்க முடியாது. அவரோட பர்த் டே டைம்ல நான் ஒரு வீடியோ போஸ்ட் பண்ணியிருந்தேன். அவர் அதை பார்த் திருக்கார். அந்த வீடியோவைப் பார்த்து ஹேப்பியானார்.

எங்க அம்மாவோட சமையல் பத்தி அவர்கிட்ட சொன்னேன். எங்க அம்மா தால்பாட்டிசுர்மானு ஒரு டிஷ் செய்யறதுல எக்ஸ்பர்ட். அவ்ளோ டேஸ்ட்டியா இருக்கும். அதை அவர்கிட்ட சொன்னதும், பொறுமையா கேட்டுக்கிட்டார்.  ஒருநாள் எங்க அம்மாவுக்கு அவரே போன் செய்து, அந்த டிஷ் செய்முறையைக் கேட்டு தெரிஞ்சுக்கிட்டார். ஸ்பாட்டுல அதை அஜித் சாரே செய்து கொடுத்தார். அப்படியே எங்க அம்மா செய்த டிஷ் மாதிரியே இருந்துச்சு.

அதே போல, ‘காலா’வில் ரஜினி சாரின் மருமகளா நடிச்சதும் மறக்க முடியாதது. மொத்தம் 55 நாட்கள் நடிச்சேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சது. ரஜினி சாரைப் பார்த்தாலே எனர்ஜி அள்ளும். அவரோடு நடிக்கும் போது, நம்ம நடிப்பை அப்படி பாராட்டுவார். ‘ஆசம்... ஆசம்’னு மோட்டிவேட் பண்ணுவார்.

அடுத்து நான் விஜய் 65ல் நடிக்கப் போறேன்னு ஒரு ரூமர் சுத்துறதா சொன்னாங்க. அப்படி நடந்தா சாக்‌ஷி இன்னும் ஹேப்பி.புல்லட் போட்டோஷூட்ல போஸ் மட்டும்தானா? வண்டி ஓட்டத்தெரியுமா?

சாக்‌ஷிகிட்ட இப்படி ஒரு கேள்வியா! பைக் ஓட்ட ரொம்ப பிடிக்கும். சாதாரண பைக் ஓட்ட பிடிக்காது. என் சாய்ஸ் சூப்பர் பைக்தான். பெங்களூருல என்னோட ஃப்ரெண்ட்கிட்ட ஒரு சூப்பர் பைக் இருக்கு. காலையில பைக்கை ஸ்டார்ட் பண்ணினா டேஅவுட் ரைட்தான். அப்படி சுத்துவேன்.
நோட் திஸ் பாயிண்ட். தனியாகத்தான்!

மை.பாரதிராஜா