டெலிவரிக்கு முதல் நாள் வரை சீன்ஸ் எழுதினேன்...டெலிவரி அன்று மயக்கத்துல சீன்ஸ் கரெக்க்ஷன் சொன்னேன்...



புன்னகைக்கிறார் சூப்பர்ஹிட் மெகா தொடரான ரோஜாவுக்கு திரைக்கதை எழுதும் வே.பத்மாவதி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியல் பெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. சேனலை மாற்றாமல் இல்லத்தரசிகள் விரும்பிப் பார்க்கும் இத்தொடர், தொடர்ந்து டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தபடி இருக்கிறது.
இந்த சீரியலுக்கு திரைக்கதை அமைப்பவர் வே.பத்மாவதி @ பத்மா என்னும் பெண் என்பதுதான் ஹைலைட். ஏனெனில் சீரியல் துறையில் ஆண் எழுத்தாளர்களே கோலோச்சி வருகிறார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய பெண் எழுத்தாளர்களே இத்துறையில் முத்திரை பதிக்கிறார்கள். அதில் முக்கியமானவர் பத்மா.

‘‘உண்மைல ‘ரோஜா’வுக்கு கிடைக்கற வரவேற்பை பார்க்கப் பார்க்க சந்தோஷமா இருக்கு... அதோட 300வது எபிசோடில் இருந்துதான் நான் திரைக்கதை அமைக்க ஆரம்பிச்சேன்...’’ முகமெல்லாம் மலர பேச ஆரம்பித்தார் பத்மா.‘‘இந்தத் தொடரோட வெற்றிக்கு முதல் காரணம், சன் டிவி.

அடுத்தது ‘சரிகம’வின் ஹெட் ஆன பி.ஆர்.விஜயலட்சுமி மேம், தொடரின் கிரியேட்டிவ் ஹெட் பிரின்ஸ் சார், டைரக்டர் சதாசிவம் சார், வசனகர்த்தா குரு சம்பத்குமார் சார், கேமராமேன் உள்ளிட்ட டெக்னீஷியன்ஸ், திறமையான ஆர்ட்டிஸ்ட்ஸ்னு எல்லாரோட பங்களிப்பும்தான் இந்த சக்சஸுக்கு காரணம்...’’ அழுத்தமாகச் சொல்லும் பத்மா, ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர்.

‘‘திருச்சி ஸ்ரீரங்கத்துலதான் பிறந்தது வளர்ந்தேன். அப்பாவும் அம்மாவும் வழக்கறிஞர்கள். என்னையும் லாயர் ஆக்கணும்னுதான் விரும்பினாங்க. ஆனா, எனக்கு என்ஜினியரிங்ல ஆர்வம். கோவைல என்ஜினியரிங் முடிச்சேன். காலேஜ் படிக்கும்போதே, கவிதைகள், சிறுகதைகள் எழுது வேன். ஜெயகாந்தன் எழுத்து மேல ஈர்ப்பு வந்துச்சு. என்னை எழுதத் தூண்டினது அவரோட எழுத்துகள்தான்.

காலேஜ் முடிச்சதும் சாஃப்ட்வேர்ல வேலை கிடைச்சது. எழுதறதோட பட்டிமன்றங்கள்ல கலந்துகிட்டு ஒரு பேச்சாளராகவும் பேர் வாங்கினேன். ஐடி துறைல இருந்ததால மும்பை, ஹைதராபாத்னு ஒர்க் போச்சு. புது இடங்கள், புது சூழல்னு என் பரப்பு விரிந்தது. என் முதல் நாவல் ‘இடம்
பெயர்ந்தவள்’. இது ‘குங்குமச் சிமிழ்’லதான் பிரசுரமாச்சு! அப்புறம், பல்வேறு இதழ்கள்ல சிறுகதைகள் எழுதினேன். ‘புரட்சி யின் உச்சகட்டம்’, ‘ஜானகி’னு நாவல்களும் படைச்சேன்.

பத்திரிகைல எழுத ஆரம்பிச்ச பிறகுதான் கமிட்மென்ட்டுல - குறிப்பிட்ட நேரத்துக்குள்ள - தரமானதை எழுதிக் கொடுக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன். அதுக்கு என்னை நானே பழக்கப்படுத்திக்கவும் செய்தேன்...’’ என்கிற பத்மா, கொல்கத்தாவின் விலைமாதர்களைப் பற்றி ‘கைத்தலம் பற்றி’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார்.

‘‘அந்த நாவல் எழுத ஊக்கம் கொடுத்த நண்பர் அருண்பாரதியையே கைத்தலமும் பற்றினேன்! என் கணவரான அவர் பாடலாசிரியர். விஜய் ஆண்டனி சார், இயக்குநர் சிவா சார், இமான் சார்னு ஒரு நல்ல டீம் அவருக்கு கிடைச்சிருக்கு...’’ கண்சிமிட்டிய பத்மா, ஸ்டோரி டிஸ்கஷனில் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார்.

‘‘அதுக்கு விதை போட்டது நான் எழுதின ‘புரட்சியின் உச்ச கட்டம்’ நாவல். இதை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் மேம் படிச்சுட்டு என்னைப் பாராட்டினாங்க. அவங்களோட பட ஸ்டோரி டிஸ்கஷன்ல என்னையும் பங்கு பெற வைச்சாங்க.

என் கணவர் என்னை ஊக்கப்படுத்தினார். என் மேல எனக்கும் நம்பிக்கை வந்தது. சாஃப்ட்வேர் வேலையை உதறினேன். முழுவீச்சுல சீரியல்களுக்கு எழுத ஆரம்பிச்சேன். ‘பாசமலர்’, ‘வள்ளி’, ‘அரண்மனைக்கிளி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சிவா மனசுல சக்தி’னு ஒரு லிஸ்ட் இருக்கு. இதுல சிலதுல வசனம் மட்டுமே எழுதியிருப்பேன்...’’ புன்னகைப்பவர், திரைக்கதை அமைப்பதில் தனது பாணியை விவரிக்கிறார்.

‘‘தினமும் அதிகாலை நாலு மணிக்கு எழுந்துடுவேன். காலை 10 மணி வரை சீன்ஸ் எழுதுவேன். இந்த நேரத்துல மொபைல் தொல்லை, வீட்டு வேலைகள் எல்லாம் இருக்காது. முழுமையா சீன்ஸ் எழுதுறதுல கவனம் செலுத்த முடியும். ஒரு எபிசோடுக்கு அஞ்சு சீன்ஸ் தேவை.

மாசத்துக்கு 80 சீன்ஸ். சில சமயம் நாம எழுதின சீனுக்கான ஆர்ட்டிஸ்ட்ஸ் அன்று கிடைக்க மாட்டாங்க. நாம மனசுல வைச்ச லொக்கேஷன் பல்வேறு காரணங்களால மாறும். இதுமாதிரி நேரங்கள்ல பதட்டமடையக் கூடாது. பொறுமையா, அதுவும் சட்டுனு கிடைச்ச லொக்கேஷனை வைச்சு வேற சீன்ஸ் எழுதணும். இதுதான் திரைக்கதை எழுதுறவங்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம், பண்பு, திறமை.

நான் முதன்முதலா எழுத ஆரம்பிச்சதே, சன் டிவில ஒளிபரப்பான ‘பாசமலர்’ தொடருக்குத்தான். அந்த தொடர் முடியற ஸ்டேஜ்ல எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் ‘வள்ளி’ தொடருக்கு எழுதினேன். இந்த ரெண்டுமே ‘சரிகம’ தயாரிப்பு. விஜயலட்சுமி மேம்தான் வாய்ப்பு கொடுத்தாங்க. ‘ரோஜா’ல கூட அப்படி 300வது எபிசோடுலதான் என்ட்ரி ஆனேன்.

அப்பப்ப என்ன டிரெண்ட் ஆகுதோ அதை அப்படியே சீன்ஸ்ல கொண்டு வந்துடுவேன். ‘இந்தி பேசமாட்டேன் போடா’ டி ஷர்ட், டல்கோனா காஃபி, எல்லாரையும் கலாய்ச்சு பண்ற பிராங்க்... இப்படி பலதை சீன்ஸா ஆக்கியிருக்கேன்...’’ என்கிற பத்மா, தொடர் எழுதும் போது ஒரு விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்கிறாராம்.

‘‘‘இந்தத் தொடரை நான் ஏன் பார்க்கணும்’னு ஒரு கேள்வியை எழுப்புவேன். அதுக்கான விடையை பளிச்சுனு வைக்கணும்னு முடிவு செய்வேன்.
ஒவ்வொரு நாளும் தொடர் விறுவிறுப்பா நகரணும்... அன்றைய எபிசோட் முடிவுல டுவிஸ்ட் இருக்கணும்... வார இறுதில ஒரு கொக்கியை போடணும்... இதெல்லாம் ஒரு தொடர்ல இருக்கணும்.

‘திரைக்கதை எழுதுவது எப்படி’ புத்தகத்துல சுஜாதா சார் ஒரு விஷயம் சொல்லியிருப்பார். ‘நீ எழுதுறதை ரெட், க்ரீன், ஆரஞ்ச்னு பிரிச்சுக்கோ. ரெட்னா, அந்த சீன்களை நீக்கவே முடியாது... க்ரீன்னா அந்த சீன்ஸை பரிசீலனை பண்ணிக்கலாம், ஆரஞ்ச்னா அந்த சீன்ஸ் இல்லைனாலும் பரவாயில்லை... இப்படி மூணா வகைப்படுத்தி எழுது’னு சொல்லியிருப்பார். இதை நானும் ஃபாலோ பண்றேன்.

இயக்குநரின் பங்களிப்பையும் சொல்லணும். நாம எழுதினதை விட பெட்டரான மேக்கிங்கை அவர் கொடுக்கறார். இந்தத் துறைல பெரிய ரைட்டர்கள் யாரும் எனக்கு அறிமுகமில்லை. எழுத்தாளரா இருந்து சீரியல்ல கோலோச்சுபவர் தேவிபாலா. அந்த வகைல அவர் என் ரோல்மாடல்...’’ என பூரிப்பவர் திறமையுள்ள பெண்கள் அனைவரும் சீரியல்களுக்கு எழுத வரவேண்டும் என்கிறார்.

‘‘நிச்சயம் திறமைக்கான அங்கீ காரம் கிடைக்கும். என் கணவரும், குடும்பமும் முழுமையா என்னை சப்போர்ட் பண்றதாலதான் என்னால திரைக்கதை அமைக்க முடியுது. எந்த நேரமும் வீட்லயே எழுதிட்டிருக்க முடியாது. வாரத்துக்கு ஒருமுறையோ இல்ல மாசத்துக்கு ஒருமுறையோ சீரியலுக்கான கதை விவாதங்கள்ல கலந்துக்க வேண்டிய சூழல் இருக்கும்.

திடீர்னு நாம ஸ்பாட்டுக்கு போய் பார்க்க வேண்டியிருக்கும். ‘இந்த சீன்ல கரெக்‌ஷன்ஸ் இருக்கு’னு லேட் நைட்ல போன் வந்தா, பொறுமையா அதை தெளிவா, விளக்கமா எடுத்து சொல்லணும். இதெல்லாம் சவால்கள். ஆனா, கண்டிப்பா சமாளிக்க முடியும்.

சமீபத்துலதான் எனக்கு பையன் பிறந்தான். அஞ்சு மாசம்தான் ஆச்சு. கொரோனா டைம்லதான் பிரசவம் நடந்தது. 14ம் தேதி டெலிவரி டேட்னா, 13ம் தேதி வரை சீரியலுக்கு எழுதிட்டிருந்தேன். அதாவது கர்ப்பமான பத்து மாதங்களும் தொடர்ந்து எழுதினேன்.  

டெலிவரில மயக்க நிலைல இருக்கும் போது கூட, அன்னிக்கு எபிசோடுக்கான கரெக்‌ஷன்ஸை சொன்னேன். லாக்டவுன்ல எந்த சிக்கல்களும் இல்லாம கடவுள் அருளால எனக்கு நார்மல் டெலிவரி ஆச்சு. மூணாவது நாளே பெங்களூருவுக்கு ஸ்டோரி மீட்டிங் போக வேண்டிய கட்டாயம். அதுல பங்கேற்றேன்.

நான் கர்ப்பமா இருக்கறப்ப என்னால எழுத முடியுமானு நான் யோசிச்சப்ப, எங்க தயாரிப்பாளர் பி.ஆர்.விஜயலட்சுமி மேம்தான் ‘உன்னால முடியும்’னு தைரியம் கொடுத்து பண்ண வச்சாங்க. எங்க தயாரிப்பாளரும் ஒரு பெண்ணா இருந்ததால, இந்த சுதந்திரம் சாத்தியமாச்சு. எனக்கு ரொம்ப பிடிச்ச வரி எது தெரியுமா..? ‘அடுத்தவங்க என்ன பண்றாங்கனு யோசிக்கறதை விட்டுட்டு, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசி... வாழ்க்கை சிறப்பா அமையும்’
இதுதான் என் தாரக மந்திரம்...’’ கலகலக்கிறார் பத்மா.

செய்தி: மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்