லவ் ஸ்டோரி -பா.விஜய்இத்தனை காலம் அவரோடு வாழ்ந்ததையும், வாழப் போவதையும் ஒரு சிறகடிப்பு மாதிரியே உணர்கிறேன்...

காதல் ஓர் இயல்பான உணர்வுதான். சிலருக்கு அது அழகான கனவு... பலருக்கு சுகமான உறவு. இன்னும் நுணுக்க மனதுடையவர்களுக்கு அது ஓர் பிரார்த்தனை. பூக்கள் பெறுவதும், பதிலாக புன்னகை தருவதும், பரிசுகள் பரிமாறிக் கொள்வதும், கடற்கரையில் நடப்பதும், தோள் தொட்டுப் பேசுவதும், காதலுக்காகவே கவிதை எழுதுவதும் காதலுக்கு புதியதல்ல.

காதல், எல்லாம் பார்த்திருக்கிறது. இன்னது செய்கிறோம் என்று உணர்வதற்கு முந்திய கணமே நேர்ந்துவிடுவதுதான் காதல்.
அப்படிச் சேர்ந்த பின்னரும் இன்னதுதான் செய்கிறோம் என உணரவிடாததும் அந்தக் காதலே! காதல் கொண்ட காலத்தில் காதல் மட்டுமே உலகமாகத் தெரியும். மொழிக்கு இலக்கணம் எப்படி முக்கியமோ, அப்படி வாழ்க்கைக்கு காதல் முக்கியம் என பலரும் வசந்தத்திற்கு மட்டுமே வரவேற்பு தருகிறார்கள்.

அறிவின் முதிர்ச்சிக்குத் தக்கபடி எனது பிரியம் மாறி வந்திருக்கிறது. ஒன்பதாவது படிக்கும்போது ‘பொன்னியின் செல்வன்’ நந்தினி மேல் காதலில் விழுந்தேன். அந்தப் பெண்ணை கல்கி வார்த்தை மீறாமல் வர்ணித்துக் கொண்டேயிருப்பார். அந்த அழகு தந்த அழகுணர்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல.

12வது படிக்கும்போதுதான் படைப்பாளன் வெளியே வருகிறான். மு.மேத்தாவின் கவிதைகளைப் படித்து உணர்ந்தபிறகு கவிதை பெருகுகிறது. ஒரு காலக்கட்டத்தில் காதல் கடிதங்களில் இருந்தது. காதலைச் சொல்வதும், சொல்வதில் மனம் கொடுப்பதும் அபூர்வமான தேவதைகளுடைய வரமாக இருந்தது.

அழகாக காதல் கடிதம் எழுத முடிவது ஒரு கலை. அந்தக்கலை, என் கையில் வர பள்ளிக்கூடத்தில் காதல் கடிதங்கள் இருபாலாருக்கும் எழுதித் தருவதில் அவர்களுக்கு நெருக்கமானேன். அந்த நாட்கள் அத்தனையும் ரசிக்கும்படியானவை.

அதனால் பெண்களிடமிருந்து கிடைக்கிற வாழ்த்துகள், நன்றிகள், சிநேகிதமான சிரிப்புகள்... இதெல்லாம் விசேஷம் இல்லையா பின்னே! மற்றவர்களுக்கு காதல் கடிதம் எழுதியவனுக்கு எனக்காக எழுதத் தோன்றியதில்லை.ஊரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தேன்.

அம்மா என்னை இறுக்கிப்பிடித்து ‘எங்களுக்கு நீ ஒரே மகன். உன் மனதுக்குப் பிடித்த மாதிரி நானே ஒரு நல்ல பெண்ணை உனக்காகக் கண்டுபிடிப்பேன். அதனால், போகிற முயற்சியைத் தவிர்த்து, காதல், கல்யாணம் என இறங்கி விடாதே. அப்புறம் என்னால் தாங்க இயலாது’ என்றார்.

ஒரு தூசும் என்மீது ஒட்டாமல் வளர்த்தவருக்கு அந்த உறுதியைத் தந்தேன். ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கும்போது காதலுக்கு நேரமில்லை. ஆனால், காதல் படைப்புகளில் பெருக்கெடுத்தது.

கிடைக்கிற புகழில் துள்ளி விடாமல் அடக்கம் வேண்டும். யாரையும் பார்த்து, ஒரு வார்த்தையோ, ஒரு புன்னகையோ அவசியமாகத் தரவேண்டும். பிரச்னைகளின் உள்மடிப்பில் உட்கார்ந்து கொண்டு பார்த்தும் பார்க்காத மாதிரி போய் விடக்கூடாது. விளையாட்டில்லை இந்தக் கலைத்துறை. நம்மை உன்னிப்பாக கவனித்துக் கொண்டேயிருக்கும்.

2004லிருந்து 2012 வரை வீட்டில் இருந்த நேரத்தை விட ரிக்கார்டிங் அறைகளிலேயே அதிகம் இருந்தேன். அத்தனை வேலைகளிலும் என் மனைவி லேனாவின் புரிதல் அருமையானதாக இருந்தது. வருஷத்திற்கு 400 பாடல்கள் எழுதிக்கொண்டு இருந்த காலங்களில் இருக்கிற பதற்றத்திற்கும் பெரு அவசரத்திற்கும் ஈடு கொடுத்த பெருந்தன்மை அவர்களுடையது. குடும்பத்தோடு செலவிட முடியாத தருணங்களைப் புரிந்துகொண்டதும், அதற்குப் பழகிக் கொண்டதும் பேரன்பு!

என் அப்பா, அம்மா, மகன்கள் விஷ்வா, விஷ்னா என என்னோடு சேர்த்து எல்லோரையும் ஒட்டுமொத்தமாக அரவணைக்கிறார். லேனாவின் நீள் கரங்களில் அன்பு சேர்ந்து சந்தோஷமாக வாழ எங்களால் முடிந்திருக்கிறது.

சொல்லப்போனால் அந்த அன்புக்கு மாற்றாக வேறு ஒன்றையும் அவருக்கு நாங்கள் அதிக மாகச் செய்துவிடவில்லை. செய்தாலும் அவரது கனிந்த அன்புக்கு முன்னால் அது சிறியதாகி விடுகிறது.இப்போது கூட ‘நேர்கொண்ட பார்வை’யில் ‘அகலாதே...’ பாடல் வழி என் மனைவிக்காகவும் கவிதை வரிகளை எழுதியிருந்தேன்.

நீ எந்தன் வாழ்வின் மாறுதல்
என் இதயம் கேட்ட ஆறுதல்
மடி சாயும்
மனைவியே
பொய்க் கோபப் புதல்வியே
நடு வாழ்வில் வந்த உறவு நீ
நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ
இதயத்தின் தலைவியே
பேரன்பின் பிறவியே
என் குறைகள் நூறை மறந்தவள்
எனக்காக தன்னைத் துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே  உயிரை அளந்தவள்
உன் வருகை என் வரமாய்  ஆனதே...

- என அவருக்காக எழுதிய வரிகள் மக்கள் மனதையும் தொட்டது.எனக்கு பாட்டுதான் ஓடிக்கொண்டு இருக்கிற ரத்தம். நான்கு ஆண்டுகளாக நிறுத்தி
யிருந்தபோது ‘LKG’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘கோப்ரா’, ‘வலிமை’ என மறுபடியும் உற்சாகப்படுத்தி ஓட விட்டது மனைவிதான். ‘பா.விஜய்யின் பாட்டு வேண்டாம் என ஒருவரும் சொன்னதில்லை. பின் ஏன் நீங்கள் ஒதுங்க வேண்டும்’ எனக் கேள்வி கேட்டதும் லேனாதான்.

பரஸ்பர மரியாதையும், கூடுதல் கவனிப்பும், அன்பு பகிர்தலும் வாழ்வை அர்த்தப்படுத்துகிறது என்பதே உண்மை. நினைத்தபோது சின்ன சண்டை போட்டுக்கொண்டு நினைத்த மாதிரி எந்த ஈகோவும் இல்லாமல் சேர்ந்துகொள்வதே அழகுதான். எனக்கென்று ரசனைகள் உண்டு. அவருக்கென்று விருப்பங்கள் உண்டு. யாரும் யார் மீதும் விருப்பங்களைத் திணிப்பதே கிடையாது. என்மேல் அவர் காட்டுகிற கரிசனம், பதிலுக்கு அவர்மேல் என்னை அன்பு கொள்ள வைப்பதே உண்மை.

என்னைப் பொறுத்து அவரோடான என் வாழ்க்கை மனைவியாகப் பார்த்த முதல் நாள் மாதிரி அழகானதுதான்.லேனா விஜய்நாங்கள் இரண்டு பேரும் ஒரே ஊர்தான். ஒரு தெருதான். அவரது உறுத்தாத, மெல்லிய வகையில் சொல்கிற பாடல்களுக்கு நான் முன்னமே ரசிகையாக இருந்தேன்.

என்னைப் பெண் பார்க்க அவர்கள் வந்தபோது நான் சந்தோஷமானேன். அவரது இயல்புகள், பாந்தமான அணுகுமுறை எனக்கு எப்பவும் பிடிக்கும். அது கல்யாணத்திற்குப் பின்னும் இருந்ததுதான் ஆச்சர்யம்.

நிச்சயமாகி நடுவிலிருந்த ஆறு மாதங்களில் அவர் பேசியதற்கும், அவரோடு வாழ வந்த பிறகு அவர் காட்டிய அன்பிற்கும் வேறுபாடில்லை. நாங்கள் ஜாதகம்கூடப் பார்க்கவில்லை. எங்கள் குல தெய்வத்திற்கு பூ போட்டுப் பார்த்தோம். தெய்வமே சரியென்று முடித்த திருமணம் இது.

வெளியே இருந்தாலும், அவர் மனசு எப்பவும் வீட்டிலிருக்கும். எவ்வளவு வேலையிலும் எங்களுக்கான அன்பான வார்த்தைகளை அவர் பரிசளிப்பார்.
இத்தனை காலம் அவரோடு வாழ்ந்ததையும், வாழப் போவதையும் ஒரு சிறகடிப்பு மாதிரியே உணர்கிறேன். எங்கள் மொத்தக் குடும்பத்தினருக்கும் அவரே பெரும் இளைப்பாறல்.  
 
நா.கதிர்வேலன்