வலைப்பேச்சு



@Lakshmi Saravanakumar - முப்பத்தைந்து வயதில் கடும் மழை நாளில் பெண் துணையின்றி தனித்திருக்கும் மனிதன் சபிக்கப்பட்டவன்.

@Gokul Prasad - தன் நாய்க்குட்டிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்த நாயை இதுவரைக்கும் பதினாறாயிரம் பேர் பின்தொடர்ந்திருக்கிறார்கள்.அட, இத்துப்போனவிய்ங்களா? பரிணாம வளர்ச்சியில பத்தாயிரம் வருஷம் பின்னோக்கிப் போய்ட்டீங்களேடா?!

@Pa Raghavan - டைப்ரைட்டர் நிறத்துக்குப் பொருத்தம் பார்த்துப் புதுத்துணி எடுக்கும் இந்திய ஆங்கில அழகிய இளம் பெண் எழுத்தாளர்கள் எங்கே, நாம் எங்கே! வெட்கம். வெட்கம்.

@Bogan Sankar - காந்தி, தோரோ, டால்ஸ்டாய், ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம்... என்று எவ்வளவோ படித்தாலும் ஹெல்மட் போடாமல் போனால் டிராஃபிக் போலீசுக்கு பயப்படுவதை நிறுத்த முடியவில்லை!

@Paadhasaari Vishwanathan - சில பெண்களை அறிவேன். எந்தத் தீர்விலும் ஒரு புதுப் பிரச்னையை உண்டாக்கிக் கொள்வதும், எட்டின எந்தத்  தீர்வையுமே பிரச்னையாகப் பார்ப்பதும் என ஒரு வெட்டிப் புலம்பல் மனோபாவம் பூண்டிருப்பர். மீண்டும் மீண்டும் பிரச்னைக்கே - பிரச்னை தூங்கியிருந்தாலும் விடாப்பிடியாகப் போன் அடித்து எழுப்பி விடுவர்.ஆண்களிலும் இதுபோன்ற அற்பங்கள் சிலருண்டு. ஆனால், அது சொற்பமே...

@Saravanakarthikeyan Chinnadurai - ஆணுக்கு உண்மையில் அழகு என ஒன்றில்லை. அழகு என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியது. ஆணுக்குப் பெண்தன்மை மிகுந்திருப்பதைத்தான் அழகு என்கிறார்கள்.

@ividhyac - நிறைய பேசணும் கேட்கணும்னு தோணும். ஆனா, பேசறதை சரியான முறையில புரிஞ்சிப்பாங்களா... இல்ல எதுவும் தப்பா நினைச்சிப்பாங்
களான்னு பயந்துட்டே பல தடவ எதுவும் பேசாம சும்மா இருந்திடுவேன். இப்படியே வாழ்க்கை பாழாப் போனதுதான்
மிச்சம்.

@Sen Balan - ஒரு பெரிய எண்ணைத் தொடர்ந்து வரும் ஒன்றிற்கும் குறைவான மதிப்புகளை புள்ளி வைத்து எழுத வேண்டும். அப்படி எழுதும் போது புள்ளிக்கு அடுத்து வரும் எண்களில் இறுதியாக வரும் சைபர்களுக்கு மதிப்பில்லை. 12.42 என்பதும் 12.420 என்பதும் ஒரே மதிப்புதான். இதனால் புள்ளிகளுக்கு அடுத்து வரும் எண்களை தனித்தனியாகத்தான் உச்சரிக்க வேண்டும். உதாரணமாக 12.42 கோடி என்பதை “பனிரெண்டு புள்ளி நாற்பத்தி இரண்டு கோடி” எனச் சொல்வது தவறு. “பனிரெண்டு புள்ளி நான்கு இரண்டு கோடி” என்பதுதான் சரி. அதுவும் முதலீடு திரட்டும் சந்திப்புகளின்போது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.பெரும்பாலான தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் இதைச் சரியாகச் சொல்கிறார்கள் என்பது மகிழ்வான நிகழ்வு.

@Meenakshi Sundaram - என்னடி காலைலயே பழைய சோத்தைப் போடற..?ரெண்டு நாளா வெடிச்சத்தத்துல ஒரு நாயையும் காணம்..!

@பெ. கருணாகரன் - வறுபடும் அரிசியே பொரியாகிறது... உரிபடும் கோழியே பிரியாணி ஆகிறது...

@Perundevi Perundevi - ஜோ பைடனுக்கு வயது 78, துணை அதிபர் கமலாவுக்கு வயது 56 என முகநூலில் பெரும்பாலோர் குறிப்பிடுகிறார்கள். நம் ஊரில்தான் வயது என்பது பெரிய விஷயமாக உள்ளது. அரசியலை எடுத்துக்கொண்டாலும் சரி, திருமணம், காதல், ஏன்-வேலை நியமனத்தை எடுத்துக்கொண்டாலும் சரி... நான் அறிந்தவரை அமெரிக்காவில் வயதின் அடிப்படையில் ஒருவரைப் பாகுபடுத்துவது இனவாதம், செக்சிஸம் போலவே பெரிய குற்றம். இங்கே (அமெரிக்காவில்), உதாரணமாக, பல வேலைகளுக்கான விண்ணப்பங்களில் வயதைக் கேட்கமாட்டார்கள். தவறு மட்டுமல்ல, அது குற்றமும்கூட.

@நேச மித்ரன் - சாவை விட பெரிய அச்சம் ஒரு பிரியத்தின் பிரிவு என்று உணரும் நாளில் வாழ்வு பிடிமண்ணை இறுகப் பற்றும் வேராகிறது...

@Vinayaga Murugan - இந்த யூ டியூப்காரனுங்களை மட்டும் நம்பி எதுவும் வாங்கிச் சாப்பிடக்கூடாது. எதைச் சாப்பிட்டாலும் ‘வேற லெவல் ப்ரோ’ன்னு சொல்றானுங்க. இவங்க பேச்சைக்கேட்டு ஆர்டர் செய்து வாங்கிப் பார்த்தால்..! காசு வேற அதிகம்!

@Tk Kalapria - மகிழ்ச்சி என்பது அதிர்வலை அல்ல; ஓர் அழுத்தமான நேர்கோடு.

@Saravanan Chandran - ‘‘சிக்கன் குழம்பு சட்டி என்ன அவங்கப்பன் வீட்டு சொத்தா..? கவுத்துடா அதை!’’
எங்க தோட்டத்து வளர்ப்பு பூனையார்கள் அட்டகாசம்!

@not_imp_name - கிராமத்தில் 6 மாதங்களாக இருப்பதால் கற்றுக்கொண்ட பாடம்...
1) யாருக்கும் இரக்கம் காட்டாதே
2) யாருக்கும் கடன் குடுக்காதே
இரக்கமோ கடனோ வாங்கிய பின் நம்மை ஏறி மிதிப்பதில் அவர்களுக்கு ஓர் ஆனந்தம். நமக்கு கடுப்புகள்...

@athisha - ஜிடிபி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா... நீ மைனஸ்ல இறக்குடா...
- பொருளாதார மேதை.

@Ramanujam Govindan - கோவிட் 19 ஏன் சிறுவயதினரைத் தாக்குவதில்லை?
கோவிட் 19 வைரஸ் மேல் இருக்கும் முட்கள்( Spikes) நமது செல்களில் (குறிப்பாக நுரையீரல்) உள்ள ACE2 என்ற ஒரு ரசாயனப் பொருள் மேல் ஒட்டிக் கொள்கிறது (ஏற்பான்கள் - Receptor). பின்னர் நம் செல்லில் உள்ள TMPRSS 2 என்ற இன்னொரு இரசாயனம் நம் செல் சுவர்களைத் தளர்த்தி அந்த வைரஸை செல்களுக்கு உள்ளே அனுப்ப உதவுகிறது. நாம் கட்டிய ஜன்னல் வழியே திருடன் நுழைவது போல்.

சிறுவயதினருக்கு செல்களில் இந்த TMPRSS 2 கம்மியாக இருக்கிறது. வயதானவர்களின் செல்களில் அதிகமாக இருக்கிறதாம்.
நிறைய ஜன்னல்கள் இருந்தால் கொசு நிறைய வீட்டுக்குள் வருவதுபோல் வயதானவர்கள் செல்களுக்குள் கோவிட் வைரஸ்கள் எளிதில் நுழைந்து விடுகின்றன.இந்த TMPRSS 2-வை வேறு மருந்துகள் கொண்டு மூட முடியுமா (Blockers) என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

@kusumbuonly - கடவுளாக இருந்தாலும் போட்டியும் பொறாமையும் பெண்களுக்கானதுன்னு சொல்லியிருக்கு ‘மூக்குத்தி அம்மன்’!

@naaraju - வெந்நீர்ல குளிச்சுட்டு வந்து, துவட்டுறதுக்கு முழுசா காய்ஞ்ச துண்டு எதாவது இருக்கான்னு தேடுற அளவுக்கு மழை பெய்ஞ்சுட்டு இருக்கு...

@Naan Rajamagal - ஆணும் பெண்ணும் சரிசமம்னு சொல்றீங்க... புடவை எல்லாப் பெண்களுக்கும் அஞ்சரை மீட்டர்தான். வேட்டி நாலு முழம்ங்கறீங்க...
எட்டு முழம்ங்கறீங்க... கரை வச்சதுங்கறீங்க... என்னங்க உங்க நாட்டாம!

@Shan Karuppusamy - புடவையிலும் ஆறு கஜம், எட்டு கஜம், ஜரிகை வெச்சது, வெக்காததுன்னு ஆயிரம் வகை இருக்கே... இதெல்லாம் போக ஹாஃப் சாரின்னு ஒண்ணு. நாங்க மடிச்சுக் கட்டிக்கிட்டுத் திரியறோம்... என்னிக்காவது லுங்கில ஜரிகை வேணும்னு கேட்டிருக்கோமா!