ரத்த மகுடம்-125பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’ அழுத்தமாக உச்சரித்த சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், தன் முன்னால் பிரமை பிடித்து நின்ற சீனனை உற்றுப் பார்த்தார். ‘‘நீ தேடி வந்தது வீரபாண்டிய தச்சரையா அல்லது பல்லவ இளவல் ராஜசிம்மனையா என்பது முக்கியமல்ல...
அடையாளச் சொல்தான் பிரதானம்! அதை பிசிறில்லாமல் உச்சரிப்பவருக்கு கட்டுப்பட வேண்டியது உன் கடமை! உனது தாங் வம்சத்து சீன மன்னர் இதைச் சொல்லித்தானே உன்னை தமிழகத்துக்கு அனுப்பினார்..? பிறகென்ன தயக்கம்..?!’’அளவுக்கு அதிகமாக சீனனின் கண்கள் சுருங்கின.

‘‘தெள்ளத் தெளிவாக உச்சரித்துவிட்டேன்! கச்சையை எடு!’’ நிதானமாகச் சொன்னார் விக்கிரமாதித்தர்.சீனன் அசையவில்லை.சாளுக்கிய மன்னர் அவனைப் பொருட்படுத்தவும் இல்லை. அடி மேல் அடி எடுத்து வைத்து சீனனை நெருங்கினார். அவனது இடுப்பில் இருந்து கச்சையை எடுத்தார்.

இரு நுனிகளையும் தன் இரு கைகளிலும் பிடித்தார். அறையில் இருந்த அகல் விளக்கின் ஒளி வழியே அதை ஆராய்ந்தார். தலையசைத்தார். சீனனைப் பார்த்தார். தன் புருவத்தை உயர்த்தினார். கருவிழிகளால் நகைத்தார்.

அடுத்த கணம் கச்சையின் ஒரு நுனியை விளக்கில் காண்பித்தார்.கச்சை தீப்பிடித்து எரியத் தொடங்கியது!அதிர்ச்சியும் ஆச்சர்யமும் திகைப்புமாக... விவரிக்க இயலாத உணர்வுகளுடன் கச்சை எரிவதை நங்கை பார்த்துக் கொண்டிருந்தாள்; பார்த்தபடியே சிலையாக நின்றாள்.இதற்காகத்தானே சிவகாமி தன் உயிரையும் பணயம் வைத்தாள்... மதுரை பாதாளச் சிறையில் இருளில் அடைந்து கிடந்தாள்... இதற்காகத்தானே கரிகாலர்...

நங்கையின் நாசியும் உதடுகளும் துடித்தன. புகைமூட்டமாக கரிகாலனும் சிவகாமியும் மாறி மாறி அவள் மனக்கண்முன்னால் தோன்றினார்கள்; ஏதேதோ உரையாடினார்கள். ‘‘நங்கை...’’புலவர் தண்டியின் அழைப்பு அவளை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. ‘‘புலவரே...’’
‘‘இந்த சாம்பலைத் திரட்டி அந்த சிறிய வாழை இலையில் வை...’’வைத்தாள்.

‘‘அதை மடித்து நாரினால் லேசாகக் கட்டு...’’கட்டினாள்.‘‘எடுத்து இந்த வெள்ளித் தாம்பாளத் தட்டில் வை...’’வைத்தாள்.திருப்தியுடன் தலையசைத்த புலவர், மகாமேருவுக்கு அர்ச்சனை செய்திருந்த பாரிஜாத மலர்களையும் நந்தியாவட்டை பூக்களையும் கொஞ்சமாக எடுத்து அதே தட்டில் வைத்தார். நிமிர்ந்து நங்கையைப் பார்த்து கண்சிமிட்டினார். விக்கிரமாதித்தர் கனைத்ததும் பத்துக்கும் மேற்பட்ட தச்சர்கள் நுழைந்தார்கள்.

அவர்கள் தச்சர் வேடத்தில் இருக்கும் சாளுக்கிய வீரர்கள் என்பதைப் புரிந்துகொள்ள சீனனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
‘‘இதைத் திரட்டுங்கள்...’’ தன் காலடியில் இருந்த சாம்பலை சாளுக்கிய மன்னர் சுட்டிக் காட்டினார்.

திரட்டினார்கள்.‘‘இந்த சிறிய வாழையிலையில் சாம்பலைக் குவியுங்கள்...’’குவித்தார்கள்.‘‘இதை மடித்து நாரினால் லேசாகக் கட்டுங்கள்...’’
கட்டினார்கள்.திருப்தியுடன் தலையசைத்த விக்கிரமாதித்தர், நிமிர்ந்து சீனனைப் பார்த்து கண்சிமிட்டினார். ‘‘நங்கை... அடிவயிற்றில் உனக்கு வலிக்கிறதல்லவா..?’’இமைக்காமல் புலவரைப் பார்த்தாள். அவர் கண்கள் சொன்ன செய்தியை உள்வாங்கினாள். ‘‘ஆம் புலவரே... எதை
உண்டாலும் அது ஜீரணமாகாமல் வெளியில் வந்து விடுகிறது...’’

‘‘அடடா... இதனால் மயக்கம் வருமே...’’
நங்கையின் முகம் தெளிந்தது. ‘‘சரியாகச் சொன்னீர்கள்... நடக்கும்போது கண்கள் இருளடைகின்றன...’’
‘‘அப்படியானால் உன் இடத்துக்குச் செல்வதற்கு முன் ஆதுரச் சாலைக்குச் செல்வாய் அல்லவா..?’’
‘‘ஆம் புலவரே... தலைமை மருத்துவரைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன்...’’

‘‘அப்படியானால் அவரிடம் ‘நான் கொடுத்ததாக’ச் சொல்லி இந்த பிரசாதத்தை கொடுத்து விடுகிறாயா..?’’ வெள்ளித் தாம்பாளத் தட்டை எடுத்து நங்கையிடம் கொடுத்தார். ‘‘அவசியம் அளிக்கிறேன் புலவரே...’’ சொன்ன நங்கை குனிந்து தாம்பாளத் தட்டில் இருந்த புஷ்பங்களையும் வாழையிலைப் பொட்டலத்தையும் எடுத்து தன் முந்தானையில் முடிச்சிட்டாள்.

‘‘வருகிறேன் புலவரே...’’ முழந்தாளிட்டு அவரை நமஸ்கரித்தவள், எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
‘‘நடை தள்ளாடும்... அடிக்கடி பசியால் மயக்கம் வரும்... எச்சரிக்கையுடன் காஞ்சி ஆதுரச் சாலைக்கு செல்...’’‘‘வீரனே... அடிவயிற்றில் உனக்கு வலிக்கிறதல்லவா..?’’ தச்சனின் வேடத்தில் இருந்தவனைப் பார்த்து விக்கிரமாதித்தர் அக்கறையுடன் கேட்டார்.

இமைக்காமல் மன்னரைப் பார்த்தான் அந்த வீரன். அவர் கண்கள் சொன்ன செய்தியை உள்வாங்கினான். ‘‘ஆம் மன்னா... எதை உண்டாலும் அது ஜீரணமாகாமல் வெளியில் வந்து விடுகிறது...’’‘‘அடடா... இதனால் மயக்கம் வருமே...’’வீரனின் முகம் தெளிந்தது. ‘‘சரியாகச் சொன்னீர்கள்... நடக்கும்போது கண்கள் இருளடைகின்றன...’’‘‘அப்படியானால் உன் இல்லத்துக்குச் செல்வதற்கு முன் ஆதுரச் சாலைக்குச் செல்வாய் அல்லவா..?’’
‘‘ஆம் மன்னா... தலைமை மருத்துவரைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன்...’’‘‘அப்படியானால்  அவரிடம் ‘நான் கொடுத்ததாக’ச் சொல்லி இந்த பிரசாதத்தை கொடுத்து  விடுகிறாயா..?’’ வாழையிலைப் பொட்டலத்தை எடுத்து அந்த வீரனிடம் கொடுத்தார் விக்கிரமாதித்தர்.  

‘‘அவசியம்  அளிக்கிறேன் மன்னா...’’ சொன்ன வீரன், மரியாதையுடன் அதைப் பெற்றுக் கொண்டு விக்கிரமாதித்தரை வணங்கினான்.
‘‘வருகிறேன் மன்னா...’’ ‘‘நடை தள்ளாடும்... அடிக்கடி பசியால் மயக்கம் வரும்... எச்சரிக்கையுடன் மதுரை ஆதுரச் சாலைக்கு செல்...’’
புலவர் தண்டியின் சொற்களில் புதைந்திருந்த கட்டளையை நங்கை பூரணமாக உள்வாங்கினாள். புரிந்து கொண்டதற்கு
அறிகுறியாக தலையசைத்தாள்.

பூஜையறையை விட்டு வெளியே வந்தவள், நிதானமாக மாளிகையைவிட்டு வெளியே வந்தாள். சாலையில் கால் வைத்ததும் நடக்கவே சிரமப்பட்டாள். அவ்வப்போது மயக்கம் வந்ததால் தள்ளாடினாள். நின்றாள். சமாளித்தாள். நடந்தாள். தள்ளாடினாள். நின்றாள். சமாளித்தாள். நடந்தாள்.
இப்படியே ஒரு நாழிகை நடந்து காஞ்சியின் ஆதுரச் சாலைக்கு வந்து சேர்ந்தாள்.

நோயாளிகளின் நாடியைப் பார்த்து பரிசோதித்தபடி அவர்களுக்கு பச்சிலையை மருத்துவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அனைத்தையும் கவனிக்காதது போல் தலைமை மருத்துவரின் அறைக்குள் நங்கை நுழைந்தாள். ஆசனத்தில் அமர்ந்திருந்த
தலைமை மருத்துவரைப் பார்த்து புன்னகைத்தாள்.அவரை நெருங்கி எதையோ சொல்வதற்காக வாயைத் திறந்தாள்.

நங்கை என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தாளோ... எந்த சொற்களை உச்சரிக்க வேண்டும் என எண்ணினாளோ... அதே சொல்லை... சொற்களை... யாரோ அவளுக்குப் பின்புறமிருந்து உச்சரித்தார்கள்!‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’திகைப்புடன் திரும்பிய நங்கை, தனக்குப் பின்னால் கைகளைக் கட்டியபடி நின்றிருந்த மனிதரைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தாள்.

சாளுக்கிய மன்னரின் சொற்களில் புதைந்திருந்த கட்டளையை அந்த வீரன் முழுமையாக உள்வாங்கினான். புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்தான்.அந்த அறையிலிருந்து வெளியே வந்தவன், நிதானமாக வீரபாண்டிய தச்சரின் இல்லத்தை விட்டு வெளியே வந்தான். வீதியில்  கால் வைத்ததும் நடக்கவே சிரமப்பட்டான். அவ்வப்போது மயக்கம் வந்ததால்  தள்ளாடினான். நின்றான். சமாளித்தான். நடந்தான். தள்ளாடினான். நின்றான்.  சமாளித்தான். நடந்தான்.

இப்படியே ஒரு நாழிகை நடந்து மதுரையின் ஆதுரச் சாலைக்கு வந்து சேர்ந்தான். நோயாளிகளின் நாடியைப் பார்த்து பரிசோதித்தபடி அவர்களுக்கு பச்சிலையை மருத்துவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.அனைத்தையும்  கவனிக்காதது போல் தலைமை மருத்துவரின் அறைக்குள் அந்த வீரன் நுழைந்தான்.  ஆசனத்தில் அமர்ந்திருந்த தலைமை மருத்துவரைப் பார்த்து புன்னகைத்தான்.

அவரை நெருங்கி எதையோ சொல்வதற்காக வாயைத் திறந்தான்.அவன் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ... எந்த சொற்களை உச்சரிக்க வேண்டும்  என எண்ணினானோ... அதே சொல்லை... சொற்களை... யாரோ அவனுக்குப் பின்புறமிருந்து  உச்சரித்தார்கள்!

‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’திகைப்புடன் திரும்பிய அந்த வீரன், தனக்குப் பின்னால் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தவனைக் கண்டதும் உறைந்தான்.

‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ! அடையாளச் சொல் சரிதானே நங்கை!’’ கண்களில் குரூரம் படர நகைத்த அந்த மனிதர், தன் வலது கையை நீட்டினார். ‘‘கொடு...’’‘‘எ...தை... நான்... நான்... சிகிச்சைக்காக வந்தேன்...’’ நங்கை தடுமாறினாள்.‘‘அடிவயிறு வலிப்பதற்காகவா..! எதை உண்டாலும் ஜீரணமாகாமல் இருப்பதற்காகவா..!

பசி மயக்கத்தால் தடுமாறித் தடுமாறி நீ நடப்பதற்காகவா!’’ ஆதுரச் சாலையே இடிந்து விழும் அளவுக்கு வாய்விட்டுச் சிரித்த அந்த மனிதர், நங்கையை நெருங்கினார். ‘‘புலவர் தண்டியின் பூஜை பிரசாதத்தைக் கொடு!’’கணத்துக்கும் குறைவான நேரம் தயங்கியவள், பிறகு தன் முந்தானையில் சுருட்டி வைத்திருந்த பூக்களை எடுத்து அந்த மனிதரிடம் கொடுத்தாள்.‘‘வாழையிலைப் பொட்டலம்..?’’ அந்த மனிதரின் கண்களில் இருந்து ஜ்வாலை வீசியது.  

உதட்டைக் கடித்தபடி அதையும் எடுத்துக் கொடுத்தாள்.பூக்களைத் தரையில் உதறிய அந்த மனிதர், வாழையிலைப் பொட்டலத்தை எடுத்து தன் நாசிக்கு அருகில் கொண்டு சென்றார். ஆழமாக முகர்ந்தார். ‘‘சாம்பல் மணக்கிறது! எரிந்தது கச்சையல்லவா!’’ சொன்னவர் நங்கையை நிமிர்ந்து பார்த்தார்.

‘‘கெட்டிக்காரன்தான்... இந்தக் கணத்தில் வாழையிலைப் பொட்டலத்துடன் இங்கு நீ வந்து நிற்பாய் என்று சரியாகவே கணித்துச் சொன்னான்... பல்லவ உபசேனாதிபதியும் பல்லவ இளவலின் ஆருயிர் நண்பனும் புலவர் தண்டியின் அணுக்க சீடனுமான கரிகாலன்!’’ கருவிழிகள் மின்ன நகைத்தார்.
அவர் சாளுக்கிய போர் அமைச்சரான ராம புண்ய வல்லபர்!

‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ! அடையாளச் சொல் சரிதானே வீரனே!’’  கண்களில் குரூரம் படர நகைத்த அந்த மனிதன், தன் வலது கையை நீட்டினான்.  ‘‘கொடு...’’‘‘எ...தை... நான்... நான்... சிகிச்சைக்காக வந்தேன்...’’ வீரன் தடுமாறினான்.‘‘அடிவயிறு  வலிப்பதற்காகவா..! எதை உண்டாலும் ஜீரணமாகாமல் இருப்பதற்காகவா..!

பசி  மயக்கத்தால் தடுமாறித் தடுமாறி நீ நடப்பதற்காகவா!’’ ஆதுரச் சாலையே இடிந்து  விழும் அளவுக்கு வாய்விட்டுச் சிரித்த அந்த மனிதன், அச்சத்துடன் நின்றிருந்த வீரனை நெருங்கினான். ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் கொடுத்து அனுப்பிய பிரசாதத்தைக் கொடு!’’கணத்துக்கும் குறைவான நேரம் தயங்கிய அந்த வீரன், பிறகு இடுப்பிலிருந்து வாழையிலைப் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கிய அந்த மனிதன் தன் நாசிக்கு  அருகில் கொண்டு சென்றான். ஆழமாக முகர்ந்தான். ‘‘சாம்பல் மணக்கிறது! எரிந்தது கச்சையல்லவா!’’ சொன்னவன் வீரனை உற்றுப் பார்த்தான்.  ‘‘கெட்டிக்காரிதான்... இந்தக் கணத்தில் வாழையிலைப் பொட்டலத்துடன் இங்கு நீ  வந்து நிற்பாய் என்று சரியாகவே கணித்துச் சொன்னாள்... சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியான சிவகாமி!’’ என்றபடி கருவிழிகள் மின்ன நகைத்தான்.

அவன் பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன்!சிவகாமி நிமிர்ந்தாள். மலை உச்சியில் இருந்த கோட்டை நிலவொளியில் பளபளத்தது. தன் முன்னால் இருந்த கொடியை இழுத்தாள். பலமாக இருந்தது. சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கொடியைப் பிடித்தபடி ஏறத் தொடங்கினாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்