இது பெய்டு கில்லர் கதை!



சரத்குமார், சசிகுமார் இணைந்து நடிக்கும் படம் ‘நா நா’. டிரைலர், பாடல்கள் வரவேற்பு பெற்ற நிலையில் ரிலீஸுக்கான வேலையில் மும்முரமாக இருந்தார் இயக்குநர் நிர்மல் குமார். இவர் ‘சலீம்’, ‘சதுரங்கவேட்டை - 2’ படங்களை இயக்கியவர். பாரதிராஜாவிடம் சினிமா கற்றவர்.

டைட்டில் ரொம்ப சிக்கனமா இருக்கே?

இப்போது எவ்வளவு அழகான பேர் வெச்சாலும் அதை இனிஷியல் மாதிரி சுருக்கிடறாங்க. மத்தவங்க சுருக்கிறதை நாமே சுருக்கிடலாம்னு நா.நாராயணன் என்ற பேரை ‘நா நா’னு சுருக்கிட்டேன்.அடிப்படையில் இது பெய்டு கில்லர் கதை. கூலிக்காகக் கொலை செய்யும் ஒருவனின் பயோபிக் என்றும் சொல்லலாம்.
சசி சார் கதைக்குள் வந்ததும் கதையோட பேட்டர்ன் அப்படியே மாறிடுச்சு. அவர் நம்ம மைண்டுக்குள்ள வந்ததும் அவருடைய பாய் நெக்ஸ்ட் டோர் லுக் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். அவருடைய உடல்மொழி, கதைத் தேர்வு என எல்லாமே புதுசாக இருக்கும்.

கதை எதைப் பற்றி பேசுது என்றால், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பேசும் வார்த்தைகள், செயல்கள், உணவுத் தேர்வு எல்லாமே நம் இஷ்டத்துக்கு ஏற்ப, நம்முடைய சுதந்திரத்துக்கு ஏற்ப செய்கிறோம்னு நினைத்துக் கொண்டிருக்கிறோம்.உண்மை அதுவல்ல. எல்லாமே நமக்குள் திணிக்கப்பட்டுள்ளது. 

அதை கார்ப்பரேட் உலகத்தில் மைண்ட் மாஃபியானு சொல்கிறார்கள். அவர்கள்தான் நாம் என்ன பேசணும், எதைச் சாப்பிடணும், எதை உடுத்தணும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.அப்படி மைண்ட் மாஃபியா வலையில் சிக்கிய ஒருவன் எப்படி அதிலிருந்து வெளியே வருகிறான் என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்ல முயற்சித்துள்ளேன்.

சரத்குமார், சசிகுமார் என இரண்டு ஜாம்பவான்களை இயக்கிய அனுபவம் எப்படி?

சொன்னா சிரிப்பீங்க. இந்தக் கதையை ரஜினி சாரும், தனுஷ் சாரும் சேர்ந்து பண்ணினா எப்படியிருக்கும் என்ற ஐடியாவுல எழுதியது.

என்னுடைய ஹீரோக்கள் சரத்குமார், சசிகுமார் என்று முடிவானதும் அவர்களுக்கு ஏத்தமாதிரி ஸ்கிரிப்ட்டை மாத்தி அமைச்சுட்டேன். சரத்குமார் சாருக்கு கதை பிடிச்சு, எத்தனை நாள் கால்ஷீட் வேணும்னு உடனே கமிட்டானார். படப்பிடிப்பு சமயத்துல அவருடைய ஒத்துழைப்பு வேற லெவலில் இருந்துச்சு. 

சசி சார், சரத் சார் இருவரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்
பதுதான் படத்தோட தீம்.சசிகுமார் சாரிடம் கதை சொன்னதும், என்னை வெச்சு எப்படி இப்படியொரு கதை பண்ணினீங்கனு ஆச்சர்யத்துடன் கேட்டார். ரெகுலர் ஃபார்முலாவிலிருந்து விலகிப் பண்ணா நல்லா இருக்கும்னு பண்ணிய ஸ்கிரிப்ட்னு சொன்னதும் அவருக்குப் பிடிச்சது.

உங்க குருநாதரை இயக்கிய அனுபவம் எப்படி இருந்துச்சு?

பாரதிராஜா சாருக்கு மிக முக்கியமான ரோல். அவருடைய ரோல் பேசப்படுமளவுக்கு சிறப்பாக வந்திருக்கு. முற்றிலும் அவரை புதிய கோணத்தில் காண்பித்துள்ளேன்.
சாரிடம் பதினான்கு வருடம் கோ-டைரக்டரா வேலை பார்த்திருக்கிறேன். நட்பு அடிப்படையில் கதை சொன்னதும் அவருக்கு பிடிச்சிருந்தது. அவர் சைட்ல இருந்து வந்த ஒரே கண்டிஷன், ‘நீ அசிஸ்டெண்ட்டா இருந்தபோது நான் உன்னை வேலை வாங்கியதை மனசுல வெச்சு, அதை எங்கிட்ட காட்டிடாதடா...  உனக்கு என்ன வேணும் என்பதை தெளிவா சொல்லிடு. நான் பண்றேன்’னு கேட்டுகிட்டார்.

கதை மும்பையில நடக்கிறதால் வட இந்திய முகம் தேவைப்பட்டுச்சு. சித்ரா சுக்லா சரியா இருந்தார். இன்னொரு ஹீரோயின் ரேஷ்மா, தமிழ்க்காரர். இருவருக்கும் இது முதல் படம் என்றாலும் விளம்பரப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பதால் என் வேலையை எளிதாக்கிட்டாங்க. 

பிரதீப் ராவத், ரமா, பகவதி பெருமாள், மயில்சாமி உட்பட படத்துல வர்ற எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்றார். என்னுடன் ‘சலீம்’ பண்ணியவர். டைரக்டர் சொல்வதை கரெக்ட்டா புரிஞ்சு பண்ணுவார். ‘சலீம்’ அவுட்புட் சிறப்பா இருந்துச்சுனு அப்போது நிறைய பேர் சொன்னாங்க. அதைவிட இதுல பல மடங்கு சிறப்பா பண்ணியிருக்கிறார்.

ஹர்ஷவர்த்தன் ராமேஸ்வர் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்தியில் பம்பர் ஹிட் அடித்துள்ள ‘அனிமல்’ படத்தோட இசையமைப்பாளர். அருண்பாரதி எழுதிய பாடலுக்கு நல்ல வரவேற்பு. பின்னணி இசை அஷ்வமித்ரா, கவாஸ்கர் அவிநாஷ். தயாரிப்பு ராம் மோகன். ‘சென்னையில் ஒருநாள் - 2’, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படங்களை தயாரித்தவர்.

பாரதிராஜாவின் மாணவனாக அவரிடம் என்ன கத்துக்கிட்டீங்க?

எனக்கு சொந்த ஊர் மதுரை. டைரக்‌ஷன் ஆர்வத்துல சினிமாவுக்கு வந்தவன். பல நூறு விளம்பரப் படங்கள் எடுத்துள்ளேன். பாரதிராஜா சார் என்னுடைய சினிமா குரு. அவருடைய ஒர்க்மேன்ஷிப் எப்போதும் அண்ணாந்து பார்க்கும்படியாக இருக்கும்.லொகேஷனுக்குப் போனதும் இயற்கையுடன் கலந்துவிடுவார். அவர் பண்ணிய படங்கள் அனைத்தும் வெளி கதைகள். அந்தக் கதையை உள்வாங்கி இயற்கையுடன் கலந்து எமோஷன்ஸை வெளிப்படுத்துவார்.

நள்ளிரவில் தூங்கப் போனாலும் அதிகாலையில் முதல் ஆளாக லொகேஷனில் இருப்பார்.இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரிடமும் கொஞ்ச காலம் ஒர்க் பண்ணியிருக்கிறேன். பக்கா கமர்ஷியல் டைரக்டர். சினிமா வியாபாரிகள் நஷ்டமடையக்கூடாதுனு ஷூட்டிங்கை ப்ளான் பண்ணி எடுப்பார். அவர்களிடம் கத்துக்கிட்டதுதான் ‘சலீம்’.

சமீபத்திய தமிழ்ப் படங்களில் வன்முறைக் காட்சிகள்தான் அதிகம்... ஆழமான கதை இல்லை என்று இந்தி நடிகர் அமீர்கான் சொல்லியதைப் பற்றி?

வன்முறை என்பது கற்பனை செய்து உருவாக்குவது அல்ல. பொதுவாழ்க்கையைப் பார்த்துதான் இயக்குநர்கள் கதை பண்ணுகிறார்கள். பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ‘போக்சோ‘ சட்டம் இருக்கிறது. அது  தெரிஞ்சும் குற்றங்கள் நடக்குது. கொலைக் குற்றங்களுக்கு கடினமான தண்டனை கிடைக்கும்னு தெரியும். ஆனா, குற்றச் செயல்கள் குறையல.
இப்போதுள்ள ஆடியன்ஸ், வியாபார எல்லைகள் போன்ற காரணங்களால் ஆக்‌ஷன் காட்சிகளை அதிகமாக சேர்க்க வேண்டியுள்ளது. கன்டன்ட்டுக்கு ஏற்பதான் இயக்குநர்கள் ஸ்கிரிப்ட் பண்ணுகிறார்கள். அதுல குறைசொல்ல ஏதுமில்லை.

எஸ்.ராஜா