வயது 77... ஹாலிவுட்டில் படங்களை இயக்கும் முதல் ஆசியர்... இடது காலை விட வலது காலின் உயரம் குறைவு...



உலகெங்கும் உள்ள ஆக்‌ஷன் படப்பிரியர்களுக்கு ரொம்பவே பிடித்தமான ஒரு பெயர், ஜான் வூ. ‘மிஷன்: இம்பாசிபிள் 2’, ‘ பெட்டர் டுமாரோ’, ‘புரோக்கன் ஏரோ’, ‘ஃபேஸ்/ஆப்’, ‘ரெட் கிளிப்’ போன்ற புகழ்பெற்ற ஆக்‌ஷன் திரைப்படங்களின் இயக்குநர் இவர். 
ஹாலிவுட்டில் படம் இயக்கிய முதல் ஆசிய இயக்குநரும் இவரே. விஷயம் இதுவல்ல. முதுமையைப் பொருட்படுத்தாமல் இளமைத் துடிப்புடன் ஆக்‌ஷன் படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியாகி, ஆக்‌ஷனில் பட்டையைக் கிளப்பிய ‘சைலன்ட் நைட்’டை இயக்கியது வூதான்.

இப்போது அவரது வயது 77. திரைப்படப் பள்ளியில் படிக்காமல் இயக்குநரான வூவின் வாழ்க்கையும், அனுபவங்களும் திரைப்படத்துறைக்குள் நுழைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் பாடம்.
சீனாவில் உள்ள குவாங்சோவில், 1946ம் வருடம் பிறந்தார் ஜான் வூ. இயற்பெயர் வூ யூ சேங். சீனாவில் நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக பள்ளிக்கல்வியில் பல விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒன்று, குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டால் பள்ளியில் சேர்க்க மாட்டார்கள்.

அதனால் அவரது அம்மா வூவின் பிறந்த தேதியை 1948ம் வருடத்துக்கு மாற்றி, பள்ளியில் சேர்த்தார். மாற்றப்பட்ட இந்த பிறந்த தேதியே வூவின் கடவுச்சீட்டிலும் தொடர்கிறது. அவரது குடும்பம் தீவிரமாக புரோட்டஸ்டண்ட் கிறிஸ்துவத்தைக் கடைப்பிடித்தது.

இதன் காரணமாக சீனாவில் கம்யூனிசப்புரட்சி நிகழ்ந்தபோது ஹாங்காங்குக்கு குடிபெயர்ந்தது வூவின் குடும்பம். அப்போது அவரது வயது 5. ஹாங்காங்கில் உள்ள ஷேக் கிப் மெய் என்னும் இடத்தில் அமைந்திருந்த குடிசைப்பகுதியில் வூவின் குடும்பம் வாழ்ந்து வந்தது. காச நோய் காரணமாக வூவின் தந்தையால் எந்த வேலைக்கும் செல்ல இயலவில்லை. அவரது அம்மா கட்டட வேலை செய்து குடும்பத்தை நடத்தினார்.

1953ம் வருடம் ஷேக் கிப் மெய்யில் நிகழ்ந்த பெரும் தீ விபத்தில் ஆயிரக்கணக்கானோர் வீட்டை இழந்தனர். அதில் வூவும் ஒருவர். சில தொண்டு நிறுவனங்களின் உதவியால் ஷேக் கிப் மெய்யிலிருந்து வூவின் குடும்பம் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்தது. இன்னொரு பக்கம் சீனாவில் இருந்தபோது, மூன்று வயதில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார் வூ. அவரது முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எட்டு வயது வரை அவரல் சரியாக நடக்க இயலவில்லை. இதன் விளைவாக அவரது இடதுகாலை விட வலது காலின் உயரம் குறைந்துவிட்டது. இதுபோக அவர் புதிதாக குடியேறிய இடத்தில் வன்முறைகள் அதிகம். காரணமே இல்லாமல் வூ-வை தாக்குவார்கள். 

இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் அடைக்கலம் தேடிச்சென்ற இடம்தான், சினிமா.‘‘என்னுடைய சிறு வயதில் உயிர் பிழைத்திருப்பதற்காக ரொம்பவே போராடினேன். நான் வசித்துவந்த பகுதியில் தேவையே இல்லாமல் அடிக்கடி சண்டைகள் நிகழும். காரணமே இல்லாமல் யாராவது என்னை அடிப்பார்கள். அப்படியே நிலைகுலைந்து போவேன்.

இதிலிருந்து வெளியேறுவதற்காக திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பேன். திரும்பத் திரும்ப பிரச்னைகள் ஏற்பட்டாலும், துவண்டு போகாமல் மன உறுதியோடு இருந்தேன். யாரிடமும் சரணடைய மாட்டேன். என்னைத் தாக்குபவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பயப்பட மாட்டேன். எல்லா நேரத்திலும் எனக்கு சினிமா மட்டுமே துணையாக இருந்தது.
பெரும்பாலும் என்னிடம் பணம் இருக்காது.

அப்போதெல்லாம் திரையரங்கத்தின் கதவு துவாரத்தின் வழியாகவோ அல்லது திருட்டுத்தனமாக திரையரங்குத்துக்குள் நுழைந்தோ படம் பார்ப்பேன். எனக்கான சொர்க்கத்தை திரையரங்குகளில்தான் கண்டடைந்தேன்...’’ என்கிற வூ, 1969ம் வருடம் ஸ்கிரிப்ட் சூப்பர்வைசராக கேத்தி ஸ்டூடியோஸில் வேலைக்குச் சேர்ந்தார். இதுதான் அவரது சினிமா வாழ்க்கையின் முதல் படி.

அடுத்த இரண்டு வருடங்களிலேயே ஹாங்காங்கின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘ஷா ஸ்டூடியோ’ஸில் உதவி இயக்குநராகச் சேர்ந்து, பல படங்களில் பணிபுரிந்தார். அப்போது புரூஸ் லீ நடித்த ‘த பிக் பாஸ்’ படத்தைப் பார்க்கும் வாய்ப்பு வூவுக்குக் கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற தற்காப்புக்கலை சண்டைக்காட்சிகள் அவரை ரொம்பவே பாதித்தது.

புரூஸ் லீயின் மற்ற படங்களையும் தேடித்தேடிப் பார்த்தார் வூ. புரூஸ் லீயின் படங்கள்தான் வூ ஆக்‌ஷன் படங்கள் இயக்க மூல காரணம். 1974ம் வருடம் தனது முதல் படமான ‘த யங் டிராகன்ஸ்’ஸை இயக்கினார் வூ. இந்தப் படத்தில் இடம்பிடித்த குங்பூ காட்சிகளை வடிவமைத்தவர் ஜாக்கி சான் என்பது குறிப்பிடத்தக்கது.

1986ல் வூ இயக்கிய ‘ பெட்டர் டுமாரோ’ என்ற படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. ஹாலிவுட்டில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கின. 1993ல் வான் டேமை வைத்து ‘ஹார்டு டார்கெட்’ என்ற ஹாலிவுட் படத்தை இயக்கினார் வூ. இதுதான் அவரது முதல் ஹாலிவுட் படம். இந்தப் படம் வசூலில் சக்கைப்போடு போட ‘கோல்டன் ஐ’ எனும் ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு வூவைத் தேடி வந்தது. ஆனால், அதை தவிர்த்துவிட்டார். வாய்ப்பையே கௌரவமாக நினைத்தார்.

2000ல் வூவின் இயக்கத்தில் வெளியான ‘மிஷன்: இம்பாசிபிள் 2’ எனும் ஆக்‌ஷன் திரைப்படம் அவரது புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. வூ-வுக்கு என்றே தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானது. ஹாலிவுட்டின் ஸ்டூடியோ முறை, அரசியல், அங்குள்ள மக்களை வூவுக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. அடுத்த சில வருடங்களில் ஹாலிவுட்டிலிருந்து விலகி, ஆசிய படங்களை மட்டுமே இயக்க ஆரம்பித்தார். வூ ஆசியப் படங்களை இயக்கினாலும் சரி, ஹாலிவுட் படத்தை இயக்கினாலும் சரி அதை வூவின் படங்களாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.  

இப்போது ‘சைலன்ட் நைட்’ மூலமாக ஹாலிவுட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறார் வூ. மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கும் தந்தையின் கதை இது. இதன் ஆக்‌ஷன் காட்சிகள் மிரள வைக்கின்றன. இப்படத்தின் டிரெய்லரிலேயே முழுக்கதையையும் சொல்லிவிட்டு படத்தை வெளியிடுவது வூவுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.

மட்டுமல்ல, இயல்பாகவே தயக்க குணத்தைக் கொண்டவர் வூ. அவ்வளவாக யாரிடமும் பேச மாட்டார். ‘‘என்னுடைய உணர்வுகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் இடமாக சினிமாவைப் பார்க்கிறேன். என்னுடைய மொழி சினிமாதான்...’’ என்கிற வூ-வின் படத்தில் இடம்பெறும் துப்பாக்கிச் சண்டைகள் ரொம்பவே தனித்துவமானது.

ஆனால், வூவிடம் சொந்தமாக ஒரு துப்பாக்கிகூட இல்லை. இத்தனைக்கும் ஹாலிவுட்டில் நீண்ட வருடங்கள் இருந்திருக்கிறார். அங்கே துப்பாக்கி இல்லாத ஹாலிவுட் ஆட்களைக் காண்பது அரிது.  தவிர, வன்முறை உச்சத்தில் இருக்கும் காட்சிகளுக்குப் பின்னணியாக ரம்மியமான இசையைப் பயன்படுத்துவது அவரது ஸ்பெஷல். இப்போது ‘த கில்லர்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இந்த ஆக்‌ஷன் கிங்.

த.சக்திவேல்