இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கிரீன்!



இன்று ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட், கம்ப்யூட்டர், லேப்டாப், திரையரங்குகள் என ஏராளமான வழிகள் வந்துவிட்டன. திரையரங்குகளில் மட்டுமல்லாமல் ஓடிடி தளங்களிலும் நேரடியாக திரைப்படங்கள் வெளியாகின்றன.
ஆனாலும் எந்த ஒரு திரைப்படத்தையும் திரையரங்குக்குச் சென்று பார்ப்பதே சிறந்த அனுபவத்தை தருவதாக இருக்கும். இந்த திரையரங்குகளிலும் ஐமேக்ஸ், பெரிய திரை, 4டிஎக்ஸ், எபிக் என நிறைய வகைகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு திரையரங்கமும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது.

நல்ல விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய ஹாலிவுட் படங்களை பெரிய திரையிலும், ஐமேக்ஸிலும் பார்ப்பது பேரனுபவமாக இருக்கும். இந்த வகையில் இந்தியாவிலேயே ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதற்குச் சிறந்த திரையங்கமாகத் திகழ்கிறது ‘பிரசாத் மல்டிபிளக்ஸி’ல் உள்ள ‘பிசிஎக்ஸ்’ எனும் பெரிய திரை. இது ‘பிரசாத்ஸ் சினிமாட்டிக் எக்ஸ்பிரீயன்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய திரையும் இதுதான்.

ஹைதராபாத்துக்குச் சென்று ‘பிரசாத் ஐமேக்ஸ்’ எங்கிருக்கிறது என்று கேட்டால் போதும். எல்லோருமே திரையரங்குக்குச் செல்லும் வழியைச் சொல்கின்றனர். அந்தளவுக்கு ஹைதராபாத்தின் அடையாளமாகவும், அங்கே வசிக்கும் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்ட திரையரங்கம் இது. 
இத்தனைக்கும் ஐமேக்ஸ் லைசென்ஸை ரத்து செய்துவிட்டு, டிஜிட்டல் ப்ரொடக்‌ஷனுக்கு மாறிவிட்ட பிறகும் கூட ‘பிரசாத் ஐமேக்ஸ்’ என்றே ‘பிரசாத் மல்டிபிளக்ஸ்’ திரையரங்கை மக்கள் அழைக்கின்றனர்.இந்த மல்டிபிளக்ஸில் நிறைய ஸ்கிரீன்கள் இருந்தாலும் ‘ஸ்கிரீன் 6’தான் வெகு பிரபலம்.

ஆம்; இந்த ஸ்கீரின் 6தான் ஒரு காலத்தில் இந்தியாவிலேயே 70 எம்எம் ஐமேக்ஸ் ஃபிலிம் ப்ரொஜக்‌ஷன் கொண்ட ஒரே திரையரங்கமாக இருந்தது. மட்டுமல்ல, உலகிலேயே
மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையரங்குகளில் ஒன்றாகவும் இருந்தது. 

இங்கே ஐமேக்ஸ் ஃபிலிம் பிரின்டில் ‘அவதார்’ திரையிடப்பட்டு நூறு நாட்களுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடியது. இங்கே சினிமா பார்க்க வேண்டும் என்பது இந்தியா முழுவதும் இருந்த சினிமா காதலர்களின் கனவாக இருந்தது. அந்தளவுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சினிமா அனுபத்தை கொடுத்தது ‘பிரசாத் ஐமேக்ஸ்’.

2014ம் வருடம் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘இன்டர்ஸ்டெல்லர்’தான் ‘பிரசாத் ஐமேக்ஸி’ல் வெளியான கடைசி ஐமேக்ஸ் திரைப்படம். இந்தப் படத்தை 70எம்எம் ஐமேக்ஸில் காண்பதற்காக வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சினிமா காதலர்கள் ஹைதராபாத்தை நோக்கி வந்தனர். 

டிஜிட்டல் வந்தபிறகு ஐமேக்ஸ் ஃபிலிம் ப்ரொஜக்‌ஷன் லைசென்ஸை ரத்து செய்துவிட்டு, டிஜிட்டல் புரஜக்‌ஷனுக்கு மாறிவிட்டது பிரசாத். இந்த ‘பிரசாத் ஐமேக்ஸ்’ திரையரங்கம்தான் ‘பிசிஎக்ஸ்’ என்று மாற்றப்பட்டு ரசிகர்களுக்குபிரமாண்டமான சினிமா அனுபவத்தைக் கொடுத்து வருகிறது. பிசிஎக்ஸ்க்குள் நுழைந்ததுமே நம் கண்களில் படுகின்ற பிரமாண்டமான திரை அப்படியே நம்மை வியப்பில் உறைய வைக்கிறது.

ஆம்; 64 அடி உயரமும், 101.6 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட திரையைக் கொண்டிருக்கிறது பிசிஎக்ஸ். உலகிலேயே ஐமேக்ஸ் அல்லாத உயரமான திரை பிசிஎக்ஸ்தான்.
இவ்வளவு பெரிய திரையில் ‘அவதார் 2’ , ‘டியூன் 2’ போன்ற படங்களைப் பார்க்கும்போது நாமும் படத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுவோம். அத்துடன் ஒவ்வொரு ஃபிரேமையும் ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. மட்டுமல்ல, 53 ஸ்பீக்கர்களுடன் துல்லியமான சவுண்ட் அனுபவத்தைக் கொடுக்கிறது டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம்.

இந்தியாவிலேயே சிறந்த டால்பி அட்மோஸ் சவுண்டையும் தன்வசம் வைத்திருக்கிறது பிசிஎக்ஸ். இவ்வளவு பெரிய திரையில் துல்லியமான காட்சி அனுபவத்துக்காக ‘டூயல் பார்கோ டிபி4கே-60எல் லேசர் 3டி’ என்ற ப்ரொஜக்‌ஷன் பயன்படுத்துகிறது. இந்தியாவிலேயே இரண்டு ஆர்ஜிபி 4கே லேசர் ப்ரொஜக்டரைப் பயன்படுத்தும் திரையரங்கமும் பிசிஎக்ஸ்தான். பிரசாத் ஐமேக்ஸைப் போலவே பிசிஎக்ஸ்க்கும் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய சினிமா காதலர்கள் வருகை தருகின்றனர்.

ஹைதராபாத்தில் இருந்து த.சக்திவேல்