இந்தியத் தேர்தல் வரலாறு!



சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா பதினேழு தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இன்று நவீன வசதிகள் வந்தபோதும் தேர்தலை நடத்துவதில் அத்தனை சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அன்று முதல் தேர்தல் எப்படி நடந்திருக்கும்?

நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.பிரதமராக இருந்த நேரு, முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார்சென் என்பவரை நியமித்தார். ஐசிஎஸ் அதிகாரியான அவர் மாகாணத் தேர்தல் ஆணையர்களை நியமித்து, வாக்காளர் பட்டியலை உருவாக்கி ஜனநாயகத் தேர்தலுக்கு வழிகாட்டினார். 1951 அக்டோபரில் தொடங்கி, 1952 பிப்ரவரி வரை முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அப்போதிலிருந்து இப்போது வரை நடந்துவரும் பொதுத் தேர்தல் பற்றிய குறிப்புகள் இங்கே...  

1951-52- முதல் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 17,32,12343
பதிவான வாக்குகள்: 10,59,50083
வாக்கு சதவீதம்: 44.87%

மொத்தம் 26 மாநிலங்கள். 489 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள். இதுதவிர, நியமன உறுப்பினர்கள் 10 பேர் என 499 உறுப்பினர்கள். இதில் நியமன உறுப்பினர்கள் என்பவர்கள் ஜம்மு காஷ்மீரிலிருந்து 6 பேரும், ஆங்கிலோ இந்தியர்கள் 2 பேரும், அசாம் பழங்குடி பகுதியிலிருந்து ஒருவரும், அந்தமான் தீவுகள் சார்பாக ஒருவரும் நியமிக்கப்பட்டனர்.

அப்போது தொகுதிகள் ஒரு உறுப்பினர் தொகுதி, இரட்டை உறுப்பினர் தொகுதி, மூன்று உறுப்பினர் உள்ள தொகுதி எனப் பிரிக்கப்பட்டது. 
அதாவது, ஒரே தொகுதியிலிருந்து இரண்டு, மூன்று வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் பொது உறுப்பினர், தாழ்த்தப்பட்ட உறுப்பினர் என இருவர் தேர்வுசெய்யப்பட்டனர்.

மொத்தத் தொகுதிகள் 401. இதில் 314 தொகுதிகள் ஒரு வேட்பாளர் உள்ளவை. 172 தொகுதிகள் இரு வேட்பாளர்கள் கொண்டவை. ஒரு தொகுதி மட்டும் மூன்று வேட்பாளர்கள் உடையது. ஆக, மொத்தம் 489 இடங்கள். இதற்கு 1874 பேர் போட்டியிட்டனர். இதில், சுயேட்சைகள் மட்டும் 533 பேர். இதில் காங்கிரஸ் 364 இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களைப் பிடித்தது. மொத்தமாக இந்தத் தேர்தலில் 53 கட்சிகள் பங்கெடுத்தன.

1957-இரண்டாவது தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 19,36,52179
பதிவான வாக்குகள்: 12,05,13915
வாக்கு சதவீதம்: 45.44%

இந்தத் தேர்தலில் மாநிலங்கள் 17 ஆக சுருங்கியிருந்தன. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் இடங்கள் 494 ஆக அதிகரித்தன. நியமன உறுப்பினர்கள் 11 ஆக கூடியது. அதாவது இந்த நியமன உறுப்பினர்களில் லட்சத் தீவிலிருந்து ஒருவர் நியமிக்கப்பட்டார். மொத்தமாக 505 இடங்கள். ஆனால், தொகுதிகளோ மொத்தம் 403. இதில் 312 இடங்கள் ஒரு வேட்பாளர் கொண்டது. இருவேட்பாளர் உடைய தொகுதிகள் 182. ஆக, மொத்தமாக 494 உறுப்பினர்கள்.

இந்தத் தேர்தலில் கட்சிகளும் 15 ஆக சுருங்கின. நான்கே தேசிய கட்சிகள்தான். 1519 பேர் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கினர். இதில் 481 பேர் சுயேட்சைகள்.
நிறைவில் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 371 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தொடர்ந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 27 இடங்களைக் கைபற்றி இரண்டாவது இடம் பிடித்தது. சுயேட்சைகள் 42 இடங்களை வென்றனர். இந்தத் தேர்தலில் 45 பெண்கள் போட்டியிட்டனர். அதில் 22 பேர் வெற்றிபெற்றனர். இதில் 19 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இரண்டு பேர் பீகாரிலிருந்து ஜனதா கட்சி சார்பாக வெற்றி பெற்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெற்றிபெற்ற அந்த ஒரு பெண்மணி கோவையைச் சேர்ந்த பார்வதி. இவர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த பி.சுப்பராயனின் மகள்.
1962 - மூன்றாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 21,63,61569
பதிவான வாக்குகள்: 11,99,04284
வாக்கு சதவீதம்: 55.42%

இந்தத் தேர்தலில் மாநிலங்கள் 18 ஆனது. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் இடங்கள் அதே 494தான். ஆனால், நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை 14 ஆனது. இந்தமுறை ஏற்கனவே உள்ள நியமன உறுப்பினர்களுடன் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலிக்கு ஒரு இடமும், கோவா-டாமன்-டையூவிற்கு ஒரு இடமும், அசாமிற்குப் பதிலாக வடஇந்திய எல்லைப்புற ஏஜென்சி என மொத்தமாக அந்தப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு நியமன இடமும், நாகலாந்து பகுதிக்கு ஒரு நியமன இடமும் அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் 27 கட்சிகள் போட்டியிட்டன.

சுயேட்சைகள் களத்தில் இருந்தனர். இந்தத் தேர்தலில் முதல்முறையாக திமுக போட்டியிட்டு ஏழு இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில் ஒரு தொகுதி, இருதொகுதி வேட்பாளர் கான்செப்ட் நீக்கப்பட்டது. மொத்தமாக 1,985 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இதில் பெண் வேட்பாளர்கள் மட்டும் 66 பேர். அவர்களில் 31 பேர் வெற்றிபெற்றனர்.சென்னை மாகாணத்தில் நான்கு பெண்கள் போட்டியிட்டனர். இதில், நீலகிரி தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அக்கம்மாதேவி மட்டும் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலிலும் 361 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் மூன்றாவது முறையாக அரியணை ஏறியது.

1967- நான்காவது தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 25,02,07401
பதிவான வாக்குகள்: 15,27,24611
சதவீதம்: 61.04%

கடந்த மூன்று தேர்தல்களைவிடவும் இந்தமுறை வாக்களித்தவர்கள் விகிதம் அதிகமானது. அதேபோல மாநிலங்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. தொகுதிகளின் எண்ணிக்கையும் 523 ஆனது. இதில் மூன்று இடங்கள் நியமன உறுப்பினர்களுக்கானது. இவர்களுக்கு முன்பிருந்த 14 இடங்கள் இந்தத் தேர்தலில் 11 ஆக குறைக்கப்பட்டன.

ஏனெனில், அந்தப் பகுதிகளிலிருந்து கட்சிகள் போட்டியிட்டன. இதனால் 2 ஆங்கிலோ இந்தியர்கள், ஒரு வடகிழக்கு எல்லைப்புற ஏஜென்சி உறுப்பினர் என மூன்றே நியமன இடங்கள்தான். இந்த நியமன இடங்களைத் தவிர்த்து மொத்தமுள்ள 520 இடங்களுக்கு 2,369 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் தேசிய கட்சிகள் ஏழு என்றானது. ஏனெனில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்சிஸ்ட் உருவானது.

இதில் காங்கிரஸ் 283 இடங்களிலும், சுதந்திரா கட்சி 44 இடங்களிலும், பாரதிய ஜன சங்கம் 35 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 23 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 19 இடங்களிலும், சம்யுக்தா சோசலிஸட் கட்சி 23 இடங்களிலும், திமுக 25 இடங்களிலும் வென்றன. இந்தத் தேர்தலில் 67 பெண்கள் போட்டியிட்டனர். இதில் 29 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் 283 இடங்களைப் பிடித்ததால் பெரும்பான்மையுடன் இந்திரா காந்தி தலைமையில் ஆட்சியை அமைத்தது.

1971- ஐந்தாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 27,41,89132
இதில் ஆண் வாக்காளர்கள்: 14,35,64829,
பெண் வாக்காளர்கள்: 13,06,24303
பதிவான வாக்குகள்: 15,15,36802
வாக்கு சதவீதம்: 55.27%

கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் வாக்களித்தவர்கள் விகிதம் குறைவானது. தொகுதிகளும் 518 ஆனது. நியமன உறுப்பினர்கள் அதே மூன்று இடங்கள்தான்.
இந்தமுறை 27 மாநிலங்களிலிருந்து 2,784 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் கோரிக்கையாளர்கள் என இந்திரா தலைமையில் ஓர் அணியும், இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பாளர்கள் (ஸ்தாபன காங்கிரஸ்) காமராஜர், மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட தலைவர்களுடன் இன்னொரு அணியாகவும் போட்டியிட்டனர். நிறைவில் இந்திரா காங்கிரஸ் 352 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.

1977- ஆறாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 32,11,74327
இதில் ஆண் வாக்காளர்கள்: 16,70,19151, பெண் வாக்காளர்கள்: 15,41,55176
பதிவான வாக்குகள்: 19,42,63915
வாக்கு சதவீதம்: 60.49%

1975ல் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்ஸியால் இந்தத் தேர்தல் 1977ல் நடந்தது. இப்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 31 பகுதிகளாகின. தொகுதிகள் 542 ஆனது. இரண்டு ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர்கள் என மொத்தம் 544 இடங்கள். இந்தமுறை இந்திரா காங்கிரஸுக்கு எதிராக ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், பாரதீய லோக்தள், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி என அனைத்தும் இணைந்து ஜனதா கட்சியாக நின்றன.

இதில் ஜனதா கட்சி 295 இடங்களைக் கைப்பற்றி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சியை அமைத்தது.
இந்தத் தேர்தலில் 70 பெண்கள் போட்டியிட்டு 19 பேர் வெற்றிபெற்றனர். இதில் தமிழ்நாட்டில் கோவை தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட பார்வதி கிருஷ்ணன் வெற்றி பெற்றார். சிவகாசி தொகுதியிலிருந்து இந்திரா காங்கிரஸைச் சேர்ந்த ஜெயலட்சுமி வெற்றியை ஈட்டினார்.

1980- ஏழாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 35,62,05329
இதில் ஆண் வாக்காளர்கள்: 18,55,39439, பெண் வாக்காளர்கள்: 17,06,65890
பதிவான வாக்குகள்: 20,27,52893
வாக்கு சதவீதம்: 56.92%

இந்தத் தேர்தல் 529 தொகுதிகளுக்கு நடந்தது. இரண்டு நியமன உறுப்பினர்கள் சேர்த்து 531 மக்களவை இடங்கள்தான். மொத்தம் 36 கட்சிகள் களத்தில் இருந்தன. சுயேட்சைகளைச் சேர்த்து 4 ஆயிரத்து 629 பேர் போட்டியிட்டனர்.இதற்கிடையே நடந்த மொரார்ஜி தேசாய் ஆட்சியில் சில குழப்பங்கள் அரங்கேறின. அவருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார் சரண்சிங். நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தார்.

இந்திரா காங்கிரஸின் ஆதரவுடன் சரண்சிங் இந்தியாவின் ஐந்தாவது பிரதமரானார். ஆனால், அவரின் மெஜாரிட்டியை நிரூபிக்கும்முன் இந்திரா காங்கிரஸ் ஆதரவை விலக்கியது. 23 நாட்கள் மட்டுமே சரண்சிங் பிரதமர் பதவியில் இருந்தார். நாடாளுமன்றத்தைச் சந்திக்காமலே பதவி விலகிய ஒரே பிரதமர் அவர்தான். பிறகு, காபந்து பிரதமராக 1980 தேர்தல் வரை இருந்தார்.இந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் 353 இடங்கள் பிடித்து பெரும்வெற்றியை ஈட்டியது.

1984 - எட்டாவது பொதுத் தேர்தல்
 மொத்த வாக்காளர்கள்: 37,95,40608
இதில் ஆண் வாக்காளர்கள்: 19,67,30499, பெண் வாக்காளர்கள்: 18,28,10109
பதிவான வாக்குகள்: 24,12,46887
வாக்கு சதவீதம்: 63.56%  

இந்தத் தேர்தலில் 514 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தன. அசாம் மற்றும் பஞ்சாபில் நடந்த கிளர்ச்சி காரணமாக அங்குள்ள 27 இடங்களுக்கு 1985ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இரண்டு நியமன உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் 543 இடங்கள். மொத்தமாக 5,312 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.  இந்தத் தேர்தலுக்கு ஒருமாதத்திற்குமுன் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் ஆறாவது பிரதமராக ராஜிவ் காந்தி பதவியேற்றார்.

சிலநாட்களிலேயே பொதுத் தேர்தலை எதிர்கொண்டார் ராஜிவ். இந்திரா காந்தி படுகொலை மக்கள் மத்தியில் அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது.இதனால் காங்கிரஸ் கட்சி 404 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டாவது இடத்தில் ஆந்திராவின் என்டிஆர் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களைப் பிடித்தது. இதன்மூலம் தேசிய எதிர்க்கட்சியாக மாறிய முதல் மாநிலக் கட்சி என்ற பெருமையைப் பெற்றது தெலுங்கு தேசம்.  

1989- ஒன்பதாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 49,89,06129
இதில் ஆண் வாக்காளர்கள்: 26,20,45142, பெண் வாக்காளர்கள்: 23,68,60987
பதிவான வாக்குகள்: 30,90,50495
வாக்கு சதவீதம்: 61.95%

இந்தத் தேர்தலில் 543 தொகுதிகளில் 529க்கு தேர்தல் நடந்தது. அசாமில் நடந்த கிளர்ச்சி காரணமாக அங்கே தேர்தல் நடக்கவில்லை. மொத்தமாக 6 ஆயிரத்து 160 பேர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் போபர்ஸ் ஊழல், இலங்கை பிரச்னை உள்ளிட்டவையால் காங்கிரஸ் கட்சி 197 இடங்களே பிடித்தது. வி.பி.சிங்கின் ஜனதா தளம் 143 இடங்களைப் பெற்றது. அவர் ஏற்கனவே தேசிய முன்னணி என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியிருந்தார். தவிர அவருக்கு பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் உள்ளிட்டவை வெளியிலிருந்து ஆதரவு தர வி.பி.சிங் இந்தியாவின் ஏழாவது பிரதமரானார்.

ஆனால், அவர் ஓராண்டு கூட பிரதமராக இல்லை. பாரதிய ஜனதா ஆதரவை விலக்க, ஜனதா தளத்திற்குள்ளும் புகைச்சல். ஜனதா தளத்தினுள் இருந்த சமாஜ்வாடி ஜனதா கட்சி தலைவர் சந்திரசேகர் தலைமையில் அதிருப்தியாளர்கள் இருந்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் வி.பி.சிங் அரசு தோல்வியைத் தழுவியது. 1990ல் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் இந்தியாவின் எட்டாவது பிரதமரானார்.  

1991 - பத்தாவது பொதுத் தேர்தல்
 
மொத்த வாக்காளர்கள்: 49,83,63801
இதில் ஆண் வாக்காளர்கள்: 26,18,32499, பெண் வாக்காளர்கள்:  23,65,31302
பதிவான வாக்குகள்: 28,27,00942
வாக்கு சதவீதம்: 56.73%

காங்கிரஸால் சந்திரசேகர் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவு விலக்கப்பட, அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், மக்களவை கலைக்கப்பட்டு தேர்தல் வந்தது.
இந்தத் தேர்தல் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 534 தொகுதிகளுக்கு மட்டும் நடந்தது. இதில் நியமன உறுப்பினர்கள் 2 பேர் சேர்த்து 545 இடங்கள். ஜம்மு காஷ்மீரின் ஆறு தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. பஞ்சாப்பின் 13 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் 145 கட்சிகள், சுயேட்சைகள் என 8 ஆயிரத்து 668 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது ராஜிவ் படுகொலை பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் காங்கிரஸ் 232 தொகுதிகளைக் கைப்பற்றியது. பின்னர் பஞ்சாப்பிற்கு நடந்த தேர்தலில் 12 இடங்களைப் பிடித்தது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பி.வி.நரசிம்மராவ் இந்தியாவின் 9வது பிரதமராகப் பதவியேற்றார்.   

1996 - பதினொன்றாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 59,25,72288
இதில் ஆண் வாக்காளர்கள்: 30,98,15776, பெண் வாக்காளர்கள்: 28,27,56512
பதிவான வாக்குகள்: 34,33,08090
வாக்கு சதவீதம்: 57.94%

இந்தத் தேர்தலில் 209 கட்சிகள் போட்டியிட்டன. மொத்தமுள்ள 543 இடங்களுக்கு 13 ஆயிரத்து 952 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் பாரதிய ஜனதா 161 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் 140 இடங்களைக் கைப்பற்றியது. வாஜ்பாய் 10வது பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், 15 நாட்களில் அவர் ஆட்சி கவிழ்ந்தது. 11வது பிரதமராக தேவகவுடா பதவியேற்றார். ஆனால், இதுவும் அடுத்தாண்டு ஏப்ரல் வரையே நீடித்தது.

காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெற்றார். பின்னர் ஐ.கே.குஜ்ரால் 12வது பிரதமரானார். இவர் பதவியில் ஓராண்டு இருந்தார். இந்நேரம் மீண்டும் சீதாராம் கேசரி குஜ்ராலுக்கு அளித்து வந்த ஆதரவையும் திரும்பப் பெற்றார். இதனால், ராஜினாமா செய்தார் ஐ.கே.குஜ்ரால். மக்களவை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

1998- பனிரெண்டாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 60,58,80192
இதில் ஆண் வாக்காளர்கள்: 31,66,92789, பெண் வாக்காளர்கள்: 28,91,87403
பதிவான வாக்குகள்: 37,54,41739
வாக்கு சதவீதம்: 61.97%

இந்தத் தேர்தலில் 176 கட்சிகள் போட்டியிட்டன. 543 இடங்களுக்கு 4,750 பேர் களத்தில் நின்றனர். இதில் பாரதிய ஜனதா கட்சி 182 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 141 இடங்கள் பெற்றது. தெலுங்கு தேசமும், அதிமுகவும் பாஜகவுக்கு கைகொடுக்க வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால், ஓராண்டு மட்டுமே நீடித்தது. அதிமுக தன் ஆதரவை விலக்க 1999ல் மீண்டும் புதிய தேர்தலுக்கு வித்திட்டது.

1999 - பதிமூன்றாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 61,95,36847
இதில் ஆண் வாக்காளர்கள்: 32,38,13667, பெண் வாக்காளர்கள்:  29,57,23180
பதிவான வாக்குகள்: 37,16,69104
வாக்கு சதவீதம்: 59.99%

இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களுக்கு 4,648 பேர் போட்டியிட்டனர். 169 கட்சிகள் களத்தில் நின்றன. தேர்தலுக்கு முன் காபந்து பிரதமராக வாஜ்பாய் இருந்த நேரத்தில் கார்கில் போர் நடந்தது. இதில் வெற்றி பெற தேர்தலிலும் அவருக்கு அலை உருவானது.

அதனால் கடந்த தேர்தல்போல் இதிலும் பாஜக 182 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் 114 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மெஜாரிட்டி பெற்றதால் வாஜ்பாய் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.
 
2004- பதினான்காவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 67,14,87930
இதில் ஆண் வாக்காளர்கள்: 34,94,90864, பெண் வாக்காளர்கள்:  32,19,97066
பதிவான வாக்குகள்: 38,99,48330
வாக்கு சதவீதம்: 58.07%

இந்தத் தேர்தலில் 230 கட்சிகள் போட்டியிட்டன். மொத்த வேட்பாளர்கள் 5,435 பேர் களத்தில் இருந்தனர். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எனத் தேர்தலில் பெரிய கூட்டணி இருந்தது. காங்கிரஸ் 145 இடங்களில் வென்றது. பாஜக 138 இடங்களைப் பிடித்தது. வாஜ்பாய் கூட்டணிக்கு 187 இடங்களும், சோனியா கூட்டணிக்கு 215 இடங்களும் கிடைத்தன.

இதனால், எந்தக் கூட்டணிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை.இந்நேரம் இடதுசாரிகள் கைகொடுத்தனர். மார்க்ஸிட் 43 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 10 இடங்களிலும் வென்றிருந்தன. இன்னும் சில கட்சிகள் ஆதரவு கொடுக்க மன்மோகன்சிங் இந்தியாவின் 13வது பிரதமரானார்.

2009 -பதினைந்தாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 71,69,85101
இதில் ஆண் வாக்காளர்கள்: 37,47,58801, பெண் வாக்காளர்கள்:  34,22,26300
பதிவான வாக்குகள்: 41,73,57986
வாக்கு சதவீதம்: 58.21%

ஐந்து கட்டமாக நடந்த இந்தத் தேர்தலில் 363 கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் மொத்தம் 8070 பேர் போட்டியிட்டனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக, தெலுங்குதேசம் உள்ளிட்டவை மூன்றாவது கூட்டணியை உருவாக்கியிருந்தன.முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் நான்காவது கூட்டணியை அமைத்திருந்தன.

இந்நிலையில் காங்கிரஸ் 206 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 116 இடங்களே பிடித்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்கள் வென்றது. வெளியிலிருந்து கட்சிகள் ஆதரவு தர மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியைத் தொடர்ந்தது.  

2014- பதினாறாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 83,40,82814
இதில் ஆண் வாக்காளர்கள்: 43,70,35372 பெண் வாக்காளர்கள்: 39,70,18915
பதிவான வாக்குகள்: 55,41,75255
வாக்கு சதவீதம்: 66.44%

இந்தத் தேர்தலில் 464 கட்சிகள், சுயேட்சைகள் என 8,251 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்கள் பிடித்தது. பாரதிய ஜனதா 282 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது.காங்கிரஸ் கூட்டணி 59 இடங்களே பெற்றது. இதில் காங்கிரஸுக்கு 44 இடங்களே கிடைத்தன. பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி இந்தியாவின் 14வது பிரதமரானார்.  

2019- பதினேழாவது பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 91,19,50734
பதிவான வாக்குகள்: 61,46,84398
வாக்கு சதவீதம்: 67.40%

ஏழு கட்டமாக நடந்த இந்தத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 303 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 52 இடங்கள் பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 354 இடங்களுடன் மீண்டும் மோடி ஆட்சியை பிடித்தார்.   

2024 -பதினெட்டாவது - பொதுத் தேர்தல்

மொத்த வாக்காளர்கள்: 96,88,21926
இதில் ஆண் வாக்காளர்கள்: 49,72,31994, பெண் வாக்காளர்கள்: 47,15,41888, மூன்றாம் பாலித்தனவர்கள்- 48,044
இந்தத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. வெல்லப் போவது யார் என்பது ஜூன் 4ம் தேதி தெரியும்.

*பேராச்சி கண்ணன்