நம்பர் ஒன் காப்பி குடிக்கலாமா?



உலகளவில் அதிகமாக  விற்பனையாகும் சூடான பானம், காப்பி. முதன் முதலாக பதினைந்தாம் நூற்றாண்டில் ஏமனில் வாழ்ந்து வந்த சூஃபிகளின் மத்தியில் காப்பி குடிக்கும் பழக்கம் இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. 
அதே நேரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவர் ஒருவர், தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்; ஒரு செடியை மேய்ந்த ஆடுகள் மயக்க நிலைக்குச் சென்றிருக்கிறது. அந்தச் செடிதான் காப்பி என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

ஏமனிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா, ஆசியாவுக்கு காப்பி பரவியதாக மற்றொரு ஆய்வு சொல்கிறது. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் தான் காப்பியின் பயன்பாடு உலகம் முழுவதும் விரிவடைந்தது. இன்று சூடான காப்பி மட்டுமல்லாமல், குளிர்ந்த காப்பியும் கிடைக்கிறது. உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் தினமும் காப்பியைப் பருகுவதை ஒரு கடமை போல செய்து வருகின்றனர். 
 இதில் 60 சதவீதம் பேர் தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை காப்பியைப் பருகுகின்றனர்.  36 சதவீதம் பேர் தினமும் மூன்று முதல் ஐந்து கோப்பை காப்பியைப் பருகுகின்றனர். மீதியிருக்கும் 4 சதவீதம் பேர் தினமும் குறைந்தபட்சம் ஆறு கோப்பை காப்பியைப் பருகுகின்றனர். தினமும் 30 கோப்பை காப்பியைப் பருகுபவர்களும் கூட இருக்கின்றனர்.

மட்டுமல்ல, எழுபதுக்கும் அதிகமான நாடுகளில் காப்பி உற்பத்தி ஜோராக நடக்கிறது. இதுபோக உலகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட காப்பி வகைகள் உள்ளன. தவிர, ஏராளமான பிராண்டுகளிலும் காப்பி கிடைக்கிறது. ஒரு கோப்பை காப்பியின் விலை 10 ரூபாயிலிருந்து பல ஆயிரங்கள் வரை செல்கிறது. இதில் உலகிலேயே விலையுயர்ந்த காப்பி பிராண்டுகளில் ஒன்றாக மிளிர்கிறது, ‘பிளாக் ஐவரி காப்பி’. “இந்தக் காப்பியின் சுவைக்கு நிகரான இன்னொரு சுவை கிடையாது.

இதைப் பருகப்பருக சுவை கூடிக்கொண்டே போகும். இயற்கை முறையில் யானைகளால் சுத்திகரிக்கப்பட்ட உலகின் மிக அரிதான காப்பி” என்று பிளாக் ஐவரி காப்பியைப் பருகியவர்கள் புகழ்கின்றனர். உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் பலர் இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். தாய்லாந்தைச் சேர்ந்த ‘பிளாக் ஐவரி காப்பி கம்பெனி’யின் தயாரிப்பு இது.

கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபரான பிளேக் டின்கினால் உருவாக்கப்பட்ட ஒரு பிராண்ட் தான், ‘பிளாக் ஐவரி காப்பி’. சிறு வயதிலிருந்தே காப்பி பிரியராக இருப்பவர், பிளேக். விதவிதமான காப்பி வகைகளைச் சுவைப்பதுதான் அவரது முக்கியமான பொழுதுபோக்கு. இதற்காக தனது வாழ்க்கையின் பெரும்பகுதியையும், பெரும் தொகையையும் செலவழித்திருக்கிறார் பிளேக். 

ஆனாலும் அவருக்கு விருப்பமான சுவையை எந்த காப்பியும் கொடுக்கவில்லை. இருந்தாலும் புனுகுப் பூனையின் எச்சத்தில் இருந்து எடுக்கப்பட்ட காப்பிக் கொட்ைடகளால் தயாரிக்கப்படும், விலையுயர்ந்த காப்பியான ‘கோப்பி லுவாக்’ என்ற காப்பி அவரைக் கவர்ந்தது. ஆனாலும், அதில் சில குறைகள் இருப்பதாக உணர்ந்தார்.

அதனால், தானே ஒரு காப்பியை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார் பிளேக். இதற்காக பல வருடங்களாக சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடாக்கி, பிளேக் உருவாக்கிய நிறுவனம்தான், ‘பிளாக் ஐவரி காப்பி கம்பெனி’.  லாபத்தை இரண்டாம் இடத்தில் வைத்துவிட்டு, சுவையை மட்டுமே முதன்மையாக வைத்து உருவான பிராண்ட் இது. மட்டுமல்ல, கடந்த இருபத்தைந்து வருடங்களுக்குள் உருவான முக்கியமான காப்பி பிராண்டும் கூட.

‘‘பிளாக் ஐவரி காப்பியை உருவாக்க சில வருடங்கள் தேவைப்படும். குறைவான உற்பத்தியை மட்டுமே செய்ய முடியும். சில நேரம் தோல்வியில் முடிவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில்தான் இதில் இறங்கினேன்...’’ என்கிற பிளேக், இந்த காப்பி உருவாக்கத்துக்காக யானைகளைக் குறித்துப் படித்தார். யானை அறிஞர்களிடம் பேசி மேலும் பல விஷயங்களை அறிந்துகொண்டார். 

எவ்வளவோ உயிரினங்கள் இருக்க, அவர் யானையைத் தேர்ந்தெடுத்தது அதன் ஜீரண செயல்பாட்டுக்காகவும், உணவு முறைக்காகவும் தான். ஆம்;  சிறந்த ஜீரண மண்டலத்தைக் கொண்டிருக்கும் ஓர் உயிரினம், யானை. அத்துடன் அவை பசுமையான தாவரங்களைத்தான் உணவாக எடுத்துக்கொள்கின்றன.  அத்துடன் அதன் சாணத்தைக் கையாள்வதும் எளிதானது.

முதலில் மிக உயர்வான இடங்களில் விளையக்கூடிய அரேபிகா வகை காப்பி பீன்ஸ்களைத் தேடிப்பிடித்து வாங்கினார் பிளேக்.  இந்த வகை காப்பி பீன்ஸ்கள் பத்து வருடங்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். மட்டுமல்ல, பிளேக்கிற்குப் பிடித்தமான ஒரு காப்பி வகை, அரேபிகா. ‘கோப்பி லுவாக்’ காப்பியை உருவாக்கும் முறையைப் போலவே இதையும் உருவாக்கத் திட்டமிட்டார் பிளேக். 

இதற்காக தாய்லாந்துக்குச் சென்று, ஒரு யானை பவுண்டேஷனுடன் இணைந்து, பதினைந்து ஆசிய யானைகளை வாடகைக்கு எடுத்தார். அந்த யானைகளைப் பராமரிப்பதற்காக சிலரை நியமித்தார் பிளேக். இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. அதையெல்லாம் சமாளித்துதான் பிளாக் ஐவரி காப்பி உருவானது.

ஆரம்ப நாட்களில் யானைகளுக்கு அரேபிகா காப்பி பீன்ஸை உணவாகத் தந்தார்கள். ஆனால், யானைகள் அதை நேரிடையாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு யானைகள் சாப்பிடும் மற்ற உணவுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு, காப்பி பீன்ஸைத் தந்தார்கள். பெரும்பாலான காப்பி பீன்ஸ்களை யானைகள் மென்றுவிடும். 

சிலவற்றை மட்டுமே அப்படியே விழுங்கும். அப்படியே விழுங்கப்பட்ட காப்பி பீன்ஸ்கள், யானையின் சாணத்தில் கலந்து வெளியேறும். இந்த காப்பி பீன்ஸ்களைச் சுத்தம் செய்து, பிளாக் ஐவரி காப்பியைத் தயாரிக்கின்றனர். ‘பிளாக் ஐவரி காப்பி’யைத் தயாரிப்பதற்காக, 1840-ல் பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட காப்பி தயாரிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார் பிளேக். யானையின் ஜீரண நொதிகள் மூலம் காப்பி பீன்ஸில் இருக்கும் புரோட்டீன் உடைக்கப்பட்டு, காப்பிக்குப் புதுச்சுவையை அளிக்கிறது.

அத்துடன் காப்பி பீன்ஸின் சுவையும் அப்படியே இருக்கிறது. முக்கியமாக யானையின் ஜீரண சக்தி பிளாக் ஐவரி காப்பியின் மூலம் கடத்தப்படுகிறது.   33 கிலோ அரேபிகா காப்பி பீன்ஸை உணவாக எடுத்துக்கொண்ட யானைகளின் சாணத்திலிருந்து பத்து கிலோவுக்கும் குறைவான காப்பி பீன்ஸ் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை காப்பி இயந்திரத்தில் கொடுத்து காப்பி தயாரிக்கும்போது ஒரு கிலோ மட்டுமே எஞ்சும். அதனால்தான் பிளாக் ஐவரி காப்பியின் உற்பத்தி குறைவாக இருக்கிறது. இதை பெரிய அளவில் பிசினஸாக செய்ய முடியாது. அத்துடன் இதன் காப்புரிமையைத் தன்வசம் வைத்திருக்கிறார் பிளேக்.

பிளாக் ஐவரி காப்பியில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதி தாய்லாந்தில் உள்ள யானைகளைப் பராமரிக்கும் பவுண்டேஷனுக்கும், அங்கே யானைகளைப் பராமரித்து வருபவர்களுக்கும் செல்கிறது. கடந்த வருடம் 225 கிலோ பிளாக் ஐவரி காப்பிதான் உற்பத்தி செய்யப்பட்டது. மிகக் குறைவான அளவிலேயே உற்பத்தி நடப்பதால் இதற்கான தேவை அதிகம். அந்தத் தேவைதான் இதன் விலையைத் தீர்மானிக்கிறது.

அதே தேவைதான் இந்த காப்பியை மிக அரிதான ஒன்றாகவும் மாற்றுகிறது. பிளாக் ஐவரி காப்பி தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்று வரை ஒரே தரத்தில் உற்பத்தி செய்யப்படுவது இதன் முக்கியமான தனித்துவம். இப்போது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த வருட சந்தையில் 1 கிலோ ‘பிளாக் ஐவரி காப்பி’யின் விலை சுமார் 1.70  லட்ச ரூபாய். உலகிலுள்ள முக்கியமான நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே இந்த காப்பி கிடைக்கிறது. அங்கே ஒரு கோப்பை பிளாக் ஐவரி காப்பியின் குறைந்தபட்ச விலையே 4 ஆயிரம் ரூபாய்.  

த.சக்திவேல்