2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!



ஒரு நடிகை நம்பர் ஒன் இடத்திற்கு செல்வதும், அவரின் சம்பளம் அதிகரிப்பதும் அவர் நடிக்கும் படங்களைப் பொருத்ததுதான். அதிலும் இப்போதோ எந்த நடிகைக்கு ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தியா திரைப்படம் இடமளிக்கிறதோ அவர்தான் டிரெண்டிங் பான் இந்திய நடிகை. அப்படி இந்த வருடம் தென்னிந்திய நடிகைகள் எந்தெந்த பான் இந்திய திரைப்படங்களில் பிஸி? இதோ ஒரு ஸ்வீட் பான் லிஸ்ட்.

நயன்தாரா

‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்துவிட்ட லேடி சூப்பர் ஸ்டார் இந்த வருடம் ‘த டெஸ்ட்’ படம் மூலம் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். அத்துடன் ‘மண்ணங்கட்டி சின்ஸ் 1960’ படம். ஆக இரண்டு படங்கள் உள்ளன. ‘த டெஸ்ட்’ ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

த்ரிஷா

நடிக்க வந்து 24 வருடங்கள் முடிந்தாலும் இன்னமும் டாப் நாயகி வரிசையில் தனி அந்தஸ்துப் பெற்று மாஸ் காட்டுகிறார். விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ பாகங்கள், ‘த ரோட்’ என 2023 த்ரிஷாவுக்கு சாதகமான பான் இந்தியா வருடமாகவே இருந்தது. 
இந்த வருடமும் தமிழில் அஜித் உடன் ‘விடா முயற்சி’; மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘ராம்’... குறிப்பாக மணிரத்னம் + கமல் காம்போவில் ‘தக் லைஃப்’ என பிஸி.மேலும் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி ஜோடியாக ‘விஸ்வம்பரா’ தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார் த்ரிஷா. ஆக நான்குக்கும் மேலான பான் இந்தியா படங்களில் த்ரிஷா பிஸி.

கீர்த்தி சுரேஷ்

2023ல் தெலுங்கில் ‘தசரா’, ‘போலா சங்கர்’; தமிழில் ‘மாமன்னன்’ என கீர்த்தி சுரேஷ் சென்ற வருடமே பான் இந்தியா நடிகையாக டிரெண்டிங்கில் கலக்கினார். இந்த வருடமும் தமிழில் ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணி வெடி’ உள்ளிட்ட படங்கள் வரிசையில் இருப்பினும் அட்லியின் தயாரிப்பில் வருண் தவான் நடிக்கும் பான் இந்தியத் திரைப்படமான ‘பேபி ஜான்’ நாயகியாக பாலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ராஷ்மிகா மந்தனா

சென்ற வருடம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்த ‘அனிமல்’ படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் ரூ.4 கோடி. மேலும் விஜய்யுடன் ‘வாரிசு’, இந்தியில் ‘மிஷன் மஜ்னு’ என கல்லா கட்டியவருக்கு 2024ல் தெலுங்கில் ‘புஷ்பா 2: த ரூல்’, ‘ரெயின்போ’ மற்றும் ‘த கேர்ள்ஃபிரண்ட்’ ஆகிய படங்கள் காத்திருக்கின்றன. இதில் ‘புஷ்பா 2: த ரூல்’ டீசர் மற்றும் ராஷ்மிகாவின் போஸ்டர் வெளியானதில் தற்போது டிரெண்டிங்கிலும் மேடம் மாஸ் காட்டுகிறார்.

ஷ்ருதி ஹாசன்

சீனியர்களின் கொஞ்சும் கிளியாக சிரஞ்சீவி, பாலையா... என சென்ற வருடம் ஷ்ருதிக்கு தெலுங்கில் அமோகமான வருடம். சிரஞ்சீவியுடன் ‘வால்டர் வீரையா’ படம், பாலையாவுடன் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம், பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமான ‘சலார்’... என ஷ்ருதி ஹாசனுக்கு 2023 லக்கி வருடம். 

இந்த வருடம் ‘த ஐ’ என்னும் ஹாலிவுட் படத்திலும், ‘சேஷ் எக்ஸ் ஷ்ருதி’ இந்திப் படமும் வெளியாக காத்திருக்கின்றன. மேலும் ‘சலார் 2’ படமும் லிஸ்ட்டில் இருக்கும் பட்சத்தில் ஷ்ருதி ஹாசன் பான் இந்தியா லிஸ்ட்டில் வராமல் எப்படி?!  

பிரியா பவானி சங்கர்!

‘மேயாத மான்’ படம் மூலம் சின்னத்திரை டூ வெள்ளித்திரை வந்த தமிழ்ப் பொண்ணு. சென்ற வருடம் அமைதியாக ஆச்சர்யப் படுத்தியவர் பிரியாதான். தெலுங்கு, தமிழ் என ஐந்து படங்கள் மற்றும் ஒரு சீரீஸ் என நடித்து மாஸ் காட்டியிருக்கிறார். 

எனினும் சம்பளத்தில் கறார் காட்டாத நடிகை. 2024ல் தெலுங்கில் ‘ஜீப்ரா’, ‘பீமா’, தமிழில் ‘டிமான்டி காலனி 2’, விஷாலுடன் ‘ரத்னம்’ மற்றும் கமல் ஹாசனுடன் ‘இந்தியன் 2’.ஆக, ‘இந்தியன் 2’ நடிகர்கள் பட்டியலில் இவரும் இருப்பதால் பிரியா பவானி ஷங்கர் பான் இந்தியா லிஸ்ட்டிலும் இந்த வருடம் இடம் பிடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

கைநிறைய படங்கள் இருப்பினும் சம்பளத்தை பொருத்தவரை படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப கறார் செய்து கொள்ளாமல் வாங்கிக் கொள்கிறார் ஐஸ்வர்யா. 

2024ல் ‘கருப்பர் நகரம்’, ‘மோகன்தாஸ்’, ‘ தீயவர் குலைகள் நடுங்க’, ‘டியர்’; ‘அஜயந்தே ராண்டம் மோஷனம்’, ‘ஹெர்’ என மலையாளத்திலும் நடிக்கிறார். ‘சுழல் 2’ வெப் சீரீஸ் இந்தியா முழுக்கவே பிரபலமாகவே ஐஸ்வர்யா ராஜேஷ் பான் இந்தியா நடிகையாகிவிட்டார்!

காஜல் அகர்வால்

2004ல் ‘கியூன் ஹோகயா நா’ இந்திப் படம் மூலம் சினிமாவில் கால் பதித்த மஹாராஷ்டிரா மங்கை. தென்னிந்திய சினிமாவை ஒரு ரவுண்டு வந்து, தற்போது இரண்டாம் இன்னிங்ஸில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியிருக்கிறார். 

திருமணம், குழந்தை என கொஞ்சம் ஓய்வெடுத்தவருக்கு இந்த வருடம் தமிழில் ‘இந்தியன் 2’, தெலுங்கில் ‘சத்யபாமா’, இந்தியில் ‘உமா’ உள்ளிட்ட படங்கள் கைவசம் இருக்கின்றன. இவற்றில் ‘இந்தியன் 2’ பான் இந்தியா படமாகவும், ‘சத்யபாமா’ இருமொழிப் படமாகவும் வெளியாகும் பட்சத்தில் பான் இந்தியா லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறார் காஜல்.

ரகுல் ப்ரீத் சிங்

2011ம் ஆண்டு ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் ஃப்ரெஷ் முகம், திறமை, அழகிய சிரிப்பு, அழகான கண்கள் உள்ளிட்ட நான்கு பட்டங்களுடன் இன்னொரு புறம் சினிமாவிலும் கலக்கத் துவங்கியவர். கிட்டத்தட்ட தெலுங்கில் காஜல் அகர்வால் இடத்தை ஆக்கிரமித்தார் என்றே சொல்ல வேண்டும். 

டோலிவுட்டின் லக்கி நடிகையாக ஏராளமான படங்கள். தொடர்ந்து இந்தியிலும் பல படங்கள் நடித்தவர் இந்த வருடம் பிப்ரவரி 21ம் தேதி நடிகர், தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துகொண்டார். நடிப்பிற்கு ஓய்வில்லை என அறிவித்தவருக்கு இந்த வருடம் ஆரம்பமே ‘அயலான்’ வெளியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து  ‘இந்தியன் 2’, இந்தியில் ‘மேரி பத்னிகா ரீமேக்’ உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.

ஏனோ தெரியவில்லை 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு வருடங்களும் சீனியர் நடிகைகளுக்குதான் சாதமாக உள்ளன. ஷ்ருதி ஹாசன், த்ரிஷா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பான் இந்தியப் படங்கள் அத்தனையிலும் இவர்கள்தான் அதிகம் இடம்பிடித்திருக்கிறார்கள். 

சமந்தா, கீர்த்தி ஷெட்டி, பூஜா ஹெக்டே, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் கைகளில் படங்கள் நிறைய இருப்பினும் அனைத்தும் அந்தந்த மொழிப் படங்களாகவும், பிரம்மாண்ட ஸ்டார் படங்களாகவும் மட்டுமே இருப்பதால் பான் இந்தியா பட்டியலில் இவர்கள் மிஸ்ஸிங். எனினும் இப்போது இவர்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் அல்லது நடித்து வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படங்கள் ஒருவேளை ஐந்து மொழிப் படங்களாக அல்லது பான் இந்தியப் படமாக அறிவிக்கப்பட்டால் இந்தப் பட்டியலில் மாற்றம் நிகழலாம்.  

ஷாலினி நியூட்டன்