மகாபலிபுரம் to சென்னை... நீச்சலில் சாதித்த, ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன்



தலைமன்னார் டூ தனுஷ்கோடி வரையிலான கடல் தூரத்தை நீந்திக் கடக்கும் சாதனை அவ்வப்போது சில தீரர்களால் செய்யப்படுகிறது. சுமார் 30 கிமீ தூரமுள்ள அந்தத் தொலைவை நீந்திக் கடப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு நிறைய பயிற்சியும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அவசியம். அதனால் இது நார்மலாக இருக்கிற வெகுசிலரால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. ஆனால், ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு சிறுவன் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

இதுமட்டுமல்ல. சமீபத்தில் மகாபலிபுரம் டூ சென்னை கண்ணகி சிலை வரை சுமார் 50 கிமீ கடல் தூரத்தையும் அந்தச் சிறுவன் நீந்தி மற்றொரு சாதனையையும் செய்து பலரையும் வியக்க வைத்திருக்கிறார். தற்போது இந்த இரண்டு சாதனைகளும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும், இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்துள்ளன. 
 இந்தச் சாதனைகளை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கும் அந்தத் தீரனின் பெயர் ஹரேஷ் பரத்மோகன். சென்னை திருவான்மியூரில் இருக்கிறது அவரது வீடு. நம்மை உற்சாகமாக வரவேற்ற ஹரேஷின் அம்மா நிர்மலா தேவி, ‘தம்பி, அங்கிளுக்கு வணக்கம் சொல்லுங்க’ என ஹரேஷிடம் சொல்ல, ஒரு மெல்லிய புன்னகையுடன் கைகொடுத்தார் ஹரேஷ்.  

‘‘அவனுக்குப் பதினாறு வயசாகுது. பிறக்கிறப்ப எல்லா குழந்தையும் போல நார்மலாகத்தான் இருந்தான். எட்டு மாசத்துல நடக்கிறது. முகம் பார்த்து சிரிக்கிறதுனு எல்லாமே இருந்தது. ஒரு வயசு ஆனதும் அவன்கிட்ட மாற்றங்கள் தெரிஞ்சது. ஒண்ணே கால் வயசுல பேச்சு வரல. அப்ப நாங்க மருத்துவரிடம் காட்டினோம். மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஒண்ணாக இருந்தால் கொஞ்சம் பேச்சுல வளர்ச்சி இருக்கும்னு சொன்னார்.

சரினு க்ரீச்ல கொண்டுபோய் சேர்த்தோம். அங்க நிறைய பிள்ளைகளிடம் சேர்ந்து பேச கத்துப்பான்னு நினைச்சோம். என் கணவர் பரத்மோகன் வெளிநாட்டுல வேலை செய்றார். ஒன்றரை மாசத்துக்கு ஒருமுறை விடுமுறைக்கு வருவார். நானும் வேலைக்கு போறேன். அதனால், க்ரீச் சிறந்ததுனு சேர்த்தோம். அப்ப அவன் நடத்தையில் சிறு சிறு மாற்றங்கள் தெரிஞ்சது. துறுதுறுவென இருந்தான். அதேநேரம், மற்ற குழந்தைகளிடம் சேர்ந்து விளையாடாமல் அவன் இஷ்டத்துக்கு இருந்தான்.

அப்ப மறுபடியும் டாக்டரிடம் செக் பண்ணும்போது அவனுக்கு கவனக்குறைபாடு ஹைபர் ஆக்டிவிட்டி கோளாறு இருப்பது தெரிஞ்சது. அப்ப ஹைபர் ஆக்டிவிட்டியை குறைக்க என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப, பொதுவாக எல்லா தெரபிஸ்ட்டும் ஆக்குபேஷனல் தெரபி கொடுங்கனு சொல்வாங்க. சரினு நாங்களும் ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபினு எல்லாவற்றுக்கும் அனுப்பினோம். இந்தத் தெரபி எல்லாம் கொரோனா காலக்கட்டத்திற்கு முன்புவரை அத்தனை நாட்களும் கொடுத்தோம்.

அவனுக்கு சின்ன வயசுல இருந்தே தண்ணீர்னா ரொம்ப ஆசை. அவன் குழந்தையாக இருக்கிறப்ப எப்ப அழுதாலும் டப் தண்ணீர்ல உட்கார வைப்போம். உடனே அமைதியாகிடுவான். என் கணவருக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம் பக்கத்துல ஒரு கிராமம். அங்க விடுமுறைக்குப் போகும்போது முல்லைப் பெரியாறு தண்ணீர்ல அவங்க அப்பாவுடன் குளிப்பான். அவங்க அப்பாவும் அவனை நீச்சல் கத்துக்க அழைச்சிட்டு போவார்.

அப்பதான் அவனுக்கு நீச்சல் ரொம்ப பிடிக்குதுனு தெரிஞ்சது. அப்புறம், எல்லா சிறப்பு குழந்தைகளும் ஹைபராக இருக்கிறதால அவங்க எனர்ஜியை குறைக்க நீச்சல் பயிற்சியை செய்ய சொல்வாங்க.அப்படி பண்ணும்போது அவங்க எனர்ஜி அதுல போயிடும். வீட்டுக்கு வந்ததும் அமைதியாகிடுவாங்க. அதனால், நீச்சல் பயிற்சிக்கும் அனுப்பினோம். ஆனா, இந்தச் சாதனைகள் எல்லாம் செய்வான்னு அப்ப நாங்க நினைக்கல...’’ என உற்சாகமாகச் சொன்னவர், ஹரேஷின் தலையைக் கோதியபடி தொடர்ந்தார்.

‘‘நாலு வயசுல இருந்தே ஒரு பயிற்சியாளர் மூலம் நீச்சல் பயிற்சி அளிச்சிட்டு வந்தோம். ஒருமுறை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த நீச்சல் போட்டிக்கு அழைச்சிட்டு போேனாம்.
50 மீட்டர் சிறப்பு குழந்தைகளுக்கான நீச்சல் போட்டி அது. அதுல ரெண்டாவதாக வந்தான். முதலிடத்தில் கிர்த்திக்னு ஒரு பையன் வந்தான். 

அந்தப் பையனுக்கு யார் பயிற்சியாளர்னு பார்த்தப்ப கார்த்திக் குணசேகரன்னு தெரிஞ்சது. அவர் சிறப்புக் குழந்தைகளுக்கு மட்டுமே நீச்சல் பயிற்சி அளிச்சிட்டு வர்றார். அவரைச் சந்தித்து பேசினோம். நல்லவேளையாக அவர் நான் இருக்கிற திருவான்மியூரிலேயே இருந்தார்.

ஹரேஷை, கார்த்திக் குணசேகரனிடம் சேர்த்துவிட்டோம். அவர் பயிற்சியாளராக வந்தபிறகு எல்லாமே மாறுச்சு. இதுக்கிடையில், இன்னொரு விஷயத்தையும் சொல்லணும். அந்த நேரு விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியின்போது நாங்க என்ன தெரிஞ்சுக்கிட்டோம்னா இவனுக்குப் போட்டி மனப்பான்மை இல்லனு தெரிஞ்சது.

அதாவது தண்ணீர்ல இறங்கி நீச்சல் அடிக்கணும். அவ்வளவுதான். போட்டிபோட்டு முன்னாடி போய் சீக்கிரம் வெற்றி இலக்கை அடையணும் என்கிற எண்ணம் இல்லனு தெரிஞ்சது.
அவனை கவனிச்சப்ப மற்ற பசங்களைவிட இவன் அதிக நேரம் லேப் அடிப்பது தெரிஞ்சது. இப்ப ஒரு சிறப்பு குழந்தை இரண்டு லேப் அடிச்சால் இவன் ஆறு லேப் அடிப்பான். சோர்வடைய மாட்டான். அப்ப இவனால் தொடர்ந்து அதிகநேரம் நீச்சல் பண்ணமுடியுதுனு தெரிஞ்சது.

இப்படி நீண்ட நேரம் நீச்சலடிக்கிறது கடல் நீச்சலுக்கு நன்றாக இருக்கும்னு பயிற்சியாளர் கார்த்திக் குணசேகரன் சொன்னார். அதனால், அதுக்குத் தயார்படுத்தினோம்.  
இதுக்கு நடுவே, என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப பொதுவாக எல்லோரும் தலைமன்னார் டூ தனுஷ்கோடி கடல் தூரத்தை நீந்தி சாதனை பண்ணுவாங்க. அதையே நாமும் தேர்ந்தெடுக்கலாம்னு முடிவெடுத்தோம்.

இவனுக்கு முன்னாடி ஸ்ரீராம்னு சிறப்பு குழந்தை பையன் தலைமன்னார் டூ தனுஷ்கோடி நீச்சல் பண்ணியிருந்தான். அந்தப் பையனுக்கும் கார்த்திக் குணசேகரன்தான் ரெண்டாவது பயிற்சியாளராக உடன் இருந்தார். இரவு நேர நீச்சல் பயிற்சிக்கு ஸ்ரீராம் போறப்ப ஹரேஷையும் கார்த்திக் குணசேகரன் அழைச்சிட்டு போவார். 

ஸ்ரீராம் பண்ணும்போது ஹரேஷும் பயிற்சி எடுத்திட்டு இருந்தான். அங்க போயிட்டு வந்ததால இதுக்கு யாரை தொடர்பு கொள்ளலாம்கிற விவரங்களும் தெரிஞ்சது. அப்படியாக கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தலைமன்னார் டூ தனுஷ்கோடிக்கு நீச்சல் பண்ணலாம்னு முடிவாச்சு.

முதல்ல அக்டோபர் 5ம் தேதி ஏற்பாடு செய்திருந்தோம். ஆனா, அன்னைக்கு கடல் ரொம்ப சீற்றமாக இருந்ததால் பண்ணமுடியல. அதனால், மறுநாள் 6ம் தேதி இரவு 11.45 மணிக்கு தலைமன்னார்ல இறங்கினான். அப்பவும் கடல் சீற்றமாகவே இருந்தது.பொதுவாக, கடல் ஒவ்வொரு மூணு மணிநேரத்திற்கும் மாறும். இரவு 12 மணிக்கு ஒருமாதிரி இருக்கும். அதுவே அதிகாலை 3 மணிக்கு வேறுமாதிரி மாறும். இது காற்றின் நிலையைப் பொறுத்து நடக்கும்.  

சரி, சிரமப்பட்டு இறங்கினாலும் அடுத்த சில மணி நேரங்கள்ல கடல்நிலை மாறும்னு நினைச்சோம். தலைமன்னார் டூ தனுஷ்கோடி சுமார் 27 டூ 30 கிமீ தூரம்... 7 மணி நேரம்
அல்லது 8 மணி நேரத்துல முடிச்சிடுவான்னு எதிர்பார்த்தோம். ஆனா, கடல் நிலை 12 மணிக்கும் மாறல. 3 மணிக்கும் மாறல. 

அதனால், ஹரேஷ் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுட்டே வந்தான். கண் எல்லாம் பொங்கிடுச்சு. ஒருகட்டத்துல நானும் என் கணவரும் அவனை வெளி உலகத்துல காட்ட ரொம்ப கஷ்டப்படுத்துறோமோனு வருத்தப்பட்டு கண்கலங்கி நின்னோம். ஆனா, அவன் ரொம்ப ஆக்டிவ்வா வந்திட்டே இருந்தான்.

கூட கார்த்திக் குணசேகரனும், இன்னொரு பயிற்சியாளர் சரவண தேவநாதன் என்பவரும் வந்தாங்க. கயாக் ரைட்டரும் கூட வந்தார். நிறைவில், அவன் 11 மணி நேரம் 52 நிமிடங்கள் 22 நொடியில் தலைமன்னார் டூ தனுஷ்கோடியை முடிச்சான். அவனால் 7 மணி நேரம்தான் நீச்சலடிக்க முடியும்னு நினைச்சிருந்தோம். 

ஆனா, அவன் 12 மணி நேரம் நீச்சலடிச்சு தனுஷ்கோடியை அடைஞ்சான். அதிகநேரம் அவனால் நீச்சலடிக்க முடியும்னு தெரிஞ்சது. இதனால்,  பயிற்சியாளர் கார்த்திக் குணசேகரன் தூரத்தை அதிகப்படுத்திப் பார்க்கலாம்னு சொன்னார். சரினு சென்னையைத் தேர்ந்தெடுத்தோம்.

அப்படியாக மகாபலிபுரம் டூ கண்ணகி சிலை வரை 50 கிமீ தூரத்தை நீந்திக் கடக்க வைக்கலாம்னு முடிவெடுத்தோம். கடந்த மார்ச் 29ம் தேதி விடியற்காலை 2 மணிக்கு மகாபலிபுரம் கடல்ல இறங்கினான். இறங்கிய கொஞ்ச நேரத்துலேயே பாம்பு ஒண்ணு அவன் மேலே ஏறி இறங்கிடுச்சு. அதனால், ரொம்ப பயந்துட்டான்.இவன் பயிற்சியாளர்களும் பயந்துட்டாங்க. எப்பவும் கடல்ல இறங்கினால் அவன் சத்தம் போடமாட்டான். ஆனா, அன்னைக்கு ரொம்ப கத்திட்டான். அதனால், பாம்பு கடிச்சிடுச்சோனு பயந்திட்டோம். ஆனா, அப்படி எதுவும் நடக்கல.

பிறகு, மெதுவாக நீச்சலடிக்க ஆரம்பிச்சான். அப்புறம், சொறினு ஒரு பூச்சி கடல்ல இருக்கும். அது மேலே பட்டால் அப்படியே தடவக்கூடாது. தடவினால் ஒருமணி நேரத்துக்கும் மேல் வலிக்கும். இவனுக்கு இது தெரியாததால் அந்த சொறி படவும் தடவிட்டான். இதனால், எரிச்சலாகி அந்த வலியிலேயே வந்தான். சுமார் 15 மணி நேரம் 20 நொடிகளில் கண்ணகி சிலை வந்து சேர்ந்தான்.

இதற்கும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரிச்சு சான்றிதழ் வழங்கியிருக்காங்க. சென்னையில் இந்தச் சாதனையை சிறப்பு குழந்தைகள் பிரிவுல செய்தது இவன்தான் முதல்னு சொல்றாங்க’’ என ஹரேஷின் அம்மா நிர்மலாதேவி சொல்லிமுடிக்க பயிற்சியாளர் கார்த்திக் குணசேகரன் வந்து சேர்ந்தார்.

 ‘‘நான் கடந்த 13 ஆண்டுகளாக சிறப்புக் குழந்தைகளுக்கு மட்டுமே நீச்சல் பயிற்சி அளிச்சிட்டு இருக்கேன். பொதுவாக, சிறப்புக் குழந்தைகளுக்கு பெஸ்ட் தெரபி, நீச்சல். இதை ஹைட்ரோ தெரபினு சொல்வாங்க. நார்மலாகவே இந்தக் குழந்தைகள் ரொம்ப ஹைபராக இருப்பாங்க. நீச்சல் பண்ணும்போது கொஞ்சம் அமைதியாவாங்க.

மற்ற ஃபிசிக்கல் ஆக்டிவிட்டியில் இவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாது. ஆனா, தண்ணீர் உள்ளே அவங்களால் எதுவும் செய்யமுடியாது. அதனால், நாங்க என்ன சொல்றோமோ அதை செய்துதான் ஆகணும். அப்ப அவங்களுக்கு முதல்ல கவனிக்கிற திறனும், கேட்கும்திறனும் வளரும். இதனால், வீட்டுல சொன்னாலும் கேட்கும் திறன் தன்னால் வந்திடும்.

ஹரேஷ் ஸ்பிரின்ட்டர் கிடையாது. தொலைதூர நீச்சல் வீரர். மற்ற குழந்தைகள் நான்கு லேப் கொடுத்தாலே ஓய்வு வேணும்னு அழுவாங்க. இவன் அப்படியில்ல. நீச்சலடிச்சிட்டே இருப்பான். எதிர்காலத்துல இன்னும் நிறைய சாதனைகள் இதுல செய்ய வைக்கலாம்னு இருக்கோம்...’’ சந்தோஷமாகச் சொல்கிறார் கார்த்திக் குணசேகரன்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்