தராசு



“நேத்து ராத்திரி.... ரொம்ப நேரம் தூக்கமே வரல லலிதா. ஒரு ரெண்டு மணி இருக்கும். பக்கத்து சர்ச்சுல மணி அடிக்கறான். மனசு முழுக்க துக்கம். அழுகையா வரது. மொட்டை மாடிக்குப் போய் அங்கே இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன் தெரியுமா?”

“அடிப்பாவி... என்ன வசு இப்படியெல்லாம் பேசுற? பேசாம என்னோட வந்து ஒரு வாரம் இரு. இந்த பைத்தியக்கார எண்ணத்த முதல்ல விடு. என்ன ஆயிடுச்சு இப்போ?”
“என்ன லலிதா அப்படி சொல்ற? என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. தனி மரமாயிட்டேன். ஏன்னு கேட்க நாதியில்ல. எதுக்கு உயிரோட இருக்கணும்?”

“சே, சே... அழாத வசு. குமார் போனது பெரிய துக்கம்தான். அதுக்காக யாருமே இல்லன்னு நினைக்கணுமா? செல்வம் உன் மேல உயிரையே வெச்சிருக்கான். மீனாவும் ‘அத்தை அத்தை’ன்னு உன் கிட்ட பாசமாதானே இருக்கா? உன் பேத்தி ஷாலினிக் குட்டிக்கு உன்மேல எத்தனை ஆசை!”“நீ சொல்றது சரிதான். இருந்தாலும் எல்லாரும் என் பக்கத்திலேயா இருக்காங்க? கைக்கெட்டாத தூரத்துல, அமெரிக்காவுல இல்ல இருக்காங்க?  எனக்கு இந்த அத்வான காட்டுல பேசக்கூட ஆள் கிடையாது...”

“ஊரெல்லாம் தாண்டி வண்டலூர் கிட்ட இருக்க. அவ்ளோ தூரமா போனா உனக்கு சரிப்படுமான்னு நான் கேட்டப்போ, நீ தானே ‘பரவாயில்ல செல்வத்தோட பிளாட்டுக்கே போயிடறேன்’னு சொல்லிட்டு அங்கே போனே! ஹலோ... ஹலோ வசந்தி... கேட்கிறதா?”

“ம்... கேக்கறது லலிதா. நான் பால்கனியில உட்கார்ந்துதான் பேசுறேன். இங்கதான் டவர் கிடைக்கும். நீ சொன்னது சரிதான். நான்தான் இந்த ஃப்ளாட்டுக்கு வரேன்னு சொல்லி வந்தேன். இது நல்ல இடம்தான். அவர் இருக்கும்போதே மூணு வருஷத்துக்கு முன்னாடி செல்வம் வாங்கின பிளாட்டு. மொத்தம் 300 வீடுகள். அப்பவே செல்வம் சொன்னான், ‘அங்க எல்லா வசதியும் இருக்கு, அங்கேயே போயிடுங்களே’ன்னு.

இவருக்கு கூட போலாமோன்னு கொஞ்சம் சபலம்தான். எனக்குத்தான் அப்போ அடையாற விட்டு வரதுக்கு இஷ்டமே இல்ல. ‘மாட்டவே மாட்டேன்’னு சொல்லிட்டேன். இப்போ கதையே வேற. இங்க வந்து மாட்டிக்கிட்டேன்...”“சரி... இப்பவும் அங்கேயே இருந்திருக்கலாமே! அடையாறிலயும் சொந்த ஃபிளாட் தானே. பழகின இடம். அக்கம் பக்கம் தெரிஞ்ச மனுஷங்க...”

“பிரச்னையே அதுதான்.

லலிதா... நீ எனக்கு ரொம்ப நாள் ஃப்ரெண்ட். உன்கிட்ட சொல்றதுக்கு என்ன? நீ சொல்லறா மாதிரி, 20 வருஷமா இருந்த இடம் அது. ஆனால், பழகினவங்க பல பேர் இவர் இறந்து போன அப்புறம் மாறிப் போய்ட்டாங்க. ஒரு விதவையா என்னை அவங்க பாக்குற பார்வை, நடத்தற விதம் எல்லாமே ரொம்ப கஷ்டமா இருக்கவேதான் மனசு விட்டுப் போச்சு. சேன்னு கிளம்பி இங்க வந்துட்டேன்... குட் மார்னிங்...”

“யேய்... என்ன இவ்ளோ நேரம் பேசிட்டு இப்ப குட் மார்னிங் சொல்ற?”

“உனக்கு இல்லப்பா. எதிர் ப்ளாக்ல வேலை செய்யற பொண்ணுக்கு சொன்னேன். பால்கனில பெருக்க வரும்போது என்னைப் பார்த்து குட் மார்னிங் சொல்லுவா. சிரிச்ச முகம் பளிச்சுனு இருப்பா. அதுவும் ஆறாவது மாடி. நேர் எதிர் பால்கனி...”“ஓ... சரி சரி...”“லலிதா... இரு... அமெரிக்காவிலேர்ந்து என் பையன்கிட்ட இருந்து கால் வருது. நான் கட் பண்றேன். ராத்திரி பேசுறேன். ஹலோ... ஹலோ... செல்வம், சொல்லுடா. எப்படி இருக்க? என்ன விஷயம்? உனக்கு இப்போ ராத்திரி ஆச்சே! என்ன இப்ப போன் பண்ற?”

“ஆல் குட் அம்மா. ஒண்ணும் இல்ல, பயப்படாதே. நம்ம பழைய வீட்டு கார்ப்பெண்டர் பாலமுருகன் இன்னைக்கு அங்கே வருவான். அலமாரிய அளவெடுத்து கதவெல்லாம் போட சொல்லி இருக்கேன். நீ இனிமே அங்கதானே இருக்கப் போற! உனக்கு சௌகரியமா இருக்கட்டுமேன்னுதான்...”“என்னத்த... சௌகரியமோ... போ...”
“என்னம்மா டல்லா இருக்க? மூடு சரி இல்லையா?”

“போர் அடிக்கிறதுடா. எப்படி டைம் பாஸ் பண்றதுன்னே தெரியல...”“ஏம்மா நீ இன்னர்வீல், லேடிஸ் கிளப் அப்படின்னு எவ்ளோ ஆக்டிவா இருந்தே? புதுசு புதுசா ஃபிரெண்ட்ஸ் வருவாங்க. ப்ராஜெக்ட் பண்ணுவ, மீட்டிங்க்ல பேசுவே. இங்கயும் அப்படி இறங்கி தூள் கிளப்பும்மா!”“சரிடா. நீ கவலைப்படாதே. வாசல்ல பெல் அடிக்கிறது. நிர்மலா வேலைக்கு வந்துட்டான்னு நினைக்கிறேன்...”“ஓகே மா. சியர் அப். நான் நாளைக்கு பேசுறேன்...”“வா நிர்மலா. கொஞ்சம் சீக்கிரம் வந்துட்ட போல இருக்கு?”

“ஆமாங்கம்மா... இன்னிக்கு பையன் ஸ்கூல்ல ரிப்போர்ட் கார்டு தராங்களாம். வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு அதை வாங்குறதுக்கு நேரா ஸ்கூலுக்கு போகணும்மா...”
“இரு காபி கலக்குறேன். குடிச்சிட்டு வேலையப் பாரு...”“என்னம்மா இன்னும் சமையலே ஆரம்பிக்கலையா? வழக்கமா உள்ள வரும்போது குழம்பு மணம் தூக்குமே...”
“ஒரு ஆளுக்கு சமைச்சு... வேலை பார்த்து... பிடிக்கவே இல்லை நிர்மலா...”
“ஏம்மா அப்படி சொல்றீங்க. ஒரு ஆளுன்னாலும் வயிறுன்னு ஒண்ணு இருக்கே. உசுரு வாழணுமே?”

“அதுதான் எதுக்கு... யாருக்குன்னு இருக்கு...”“நீங்க படிச்சவங்க. நீங்களே அப்படி சொல்லலாமா? இங்க நேர் எதிர் ஃபிளாட்டில் ஆறாவது மாடில  ஒரு பொண்ணு வேல பாக்குது. சுந்தரின்னு பேரு...”“ஆமாமா... அது பேரு சுந்தரியா? என்னைப் பார்த்து கூட காலையில குட் மார்னிங் சொல்லும். 

சிரிச்ச முகம். எப்பவுமே பளிச்சுன்னு டிரஸ் பண்ணிகிட்டு இருக்கும்...”
“சுந்தரி கதையைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்கம்மா. அதுக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. புருஷங்காரன் எப்போ பார்த்தாலும் இது கிட்ட சண்டை போட்டு ரகளை விடுவான். குடிகாரன். அடிக்காத நாளே இல்ல. இது சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் புடிங்கிட்டுப் போயிடுவான்.

சுந்தரி உயிரை விட்டு வேலை செஞ்சு பிள்ளைங்களக் காப்பாத்துது. ரெண்டு வருஷம் முன்னால, பத்தாவது படிக்க சொல்ல, அவ பொண்ணு ஒரு மீன் பாடி வண்டிக்காரனோட ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கிச்சு. அவனும் குடிகாரன். இத விட பத்து வயசு பெரியவன்...”“அட கஷ்ட காலமே! இந்தா இந்த காப்பிய குடிச்சுகிட்டே கதை சொல்லு...”
“நீங்களும் அப்பிடி சோபாவுல உட்காருங்கம்மா. 

மேல கேளுங்க... ஆறு மாசம் முன்னால பெரிய பையன் ஃப்ரெண்டுங்க கூட பைக்கு பின்னால உக்காந்து போனானா? போனவன் ஹெல்மெட் போடல போல. ஆக்சிடெண்ட் ஆகி ஸ்பாட்டிலேயே காலி...”“என்னடி சொல்ற? அவ்ளோ கொடுமையா அந்த பொண்ணுக்கு. பாத்தா தெரியலையே!”

“ஆமாம்மா அது பிரச்னையை சொல்லி மாளாது. அதுவா இருக்க கண்டி சிரிச்சுகினே நடமாடுது. போன் அடிக்குது பாருங்க. நீங்க பேசுங்கம்மா. நான் வேலையைப் பாக்கறேன்...”
“ஹலோ... யாரு உஷாவா? சொல்லும்மா...”“அண்ணி... எப்படி இருக்கீங்க?”“இருக்கேன் உஷா... ஏதோ நாள் ஓடிட்டு இருக்கு...”

“உங்களை நினைச்சாலே கஷ்டமா இருக்கு அண்ணி. எப்படி கான்ஃபிடென்ட்டா இருப்பீங்க! எங்களுக்கெல்லாம் எவ்வளவு அட்வைஸ் பண்ணுவீங்க?”
“அதெல்லாம் போச்சு உஷா. அந்த வசுமதி செத்தே போயிட்டா. இப்ப இருக்கிறது உயிர் இல்லாத பொணம்...”“அண்ணி... அப்படி சொல்லாதீங்க. நீங்க மறுபடி பழைய மாதிரி நிமிர்ந்து நிக்கணும்...”

“எங்க..? அப்படியும் ஒரு நாள் வருமான்னே தெரியல...”“அம்மா... கார்ப்பெண்டர் பாலமுருகனாம். வாசல்ல வந்திருக்காரு...”“உள்ளே வரச் சொல்லு. என் பையன் போன் பண்ணி சொன்னான். உஷா... கார்ப்பெண்டர் வந்திருக்கான். நான் அப்புறம் மறுபடி பேசுறேன்...”“வாப்பா... பாலா. எப்படி இருக்க?”“நான் நல்லாதான் இருக்கேன்மா. 

நீங்க எப்படி இருக்கீங்க? ஆள் அடையாளமே தெரியலையே! பாதியா இளைச்சு போயிட்டீங்கம்மா...”“எல்லாம் போச்சுப்பா. சார் போன அப்புறம் எனக்கு ஏது வாழ்க்கை சொல்லு...”“ரெண்டு பேரும் ஜம்முன்னு டிரஸ் பண்ணிக்கிட்டு, கார்ல போறத பார்த்தாலே கம்பீரமா இருக்குமே அம்மா...”“எங்க அம்மா ஒரு நல்ல சேலை கட்டி பளிச்சுன்னு இருந்து நான் பார்க்கவே இல்லைங்க...”

“ஆமா நிர்மலா... நான் இங்க வந்து ஒரு மாசம்தானே ஆச்சு. பழைய வசுமதி மேடத்த நீ பார்த்ததில்லை. சரிப்பா நீ உள்ள போயி அலமாரி மெஷர்மெண்ட் எடு. நிர்மலா நான் பால்கனியில உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேப்பர் படிக்கிறேன்...”“சரிம்மா... அம்மா அந்த எதிர்பால்கனி அம்மா உங்களுக்கு ஏதோ பிரசாதம் கொடுத்து விடுறாங்களாம். எடுத்துட்டு வரவான்னு அந்த சுந்தரி கேக்குது...”“வரச் சொல்லு. எனக்கும் அந்த சுந்தரிகிட்ட நேரா பேசணும்னுதான் தோணுது.

போனை எடுத்து கைல குடுத்திட்டுப் போ. கேஸ் புக் பண்ணணும். அப்படியே வாட்ஸ் அப் மெசேஜ் பாத்துட்டு இருக்கேன்...”“அம்மா... இவதான் சுந்தரி. நான் சொன்னேனே... எதிர்பால்கனி வீட்டுல வேலை செய்யறா...”“வாம்மா சுந்தரி. உன்னை தினம் தூரத்தில் இருந்துதான் பார்க்கிறேன்...”“ஆமாம்மா.

எனக்கும் உங்க வீட்டுக்கு வரது ரொம்ப சந்தோஷம்மா. எங்க வீட்டுக்காரம்மா திருப்பதி பிரசாதம் கொடுத்து விட்டாங்க. இந்தாங்கம்மா. தூரத்தில இருந்து பார்க்கிறத விட, கிட்டக்க பார்த்தா இன்னும் அழகா இருக்கீங்க அம்மா...”“நீயும்தான் தினமும் மஞ்சள் பூசி பொட்டு வச்சு தலையில பூவெல்லாம் வைச்சு... பார்த்தாலே கும்பிடற மாதிரி இருக்கே. நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன்...”“அப்படின்னா..?”

“உன்னைப் பார்த்தாலே சந்தோஷமா இருக்குன்னு அர்த்தம்...”
“தேங்க்ஸ் மா... நான் கிளம்புறேன்...”
“இப்படி உட்காரு. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...”
“என்கிட்ட பேச என்னம்மா இருக்கு?”
“கொஞ்சம் காபி தரட்டுமா?”

“வேணாம்மா. இப்பதான் அம்மா எல்லாம் கொடுத்தாங்க...”“நிர்மலா இப்பதான் உன் கதையை சொன்னா. ரொம்ப பாவம் நீ. இத்தனை கஷ்டத்தோட எப்படி நடமாடுற?”
“என்னம்மா செய்யறது? வாழணுமே!”“அது சரி... ஒரு நாள் கூட உன் முகத்துல அலுப்போ சோகமோ நான் பார்க்கல. உன்னப் பத்தி கதை எல்லாம் கேக்குற எனக்கே மனசு வலிக்குது. நீ எப்படி தைரியமா வெளியில வர... வேல பாக்குற... உனக்கு துக்கமா இல்லையா? வெறுத்துப்போகலையா? கஷ்டமா இல்லையா?”“இருக்கும்மா. நீங்க சொன்னது எல்லாமே இருக்கு. அதுக்கு மேலயும் இருக்கு...”“பின்ன எப்படி சமாளிக்கிற?”

“அம்மா... நான் கிராமத்தில் வளர்ந்தேன். எங்க அம்மா என்னை மளிகை சாமான் வாங்க கடைக்கு அனுப்பும். அப்போ என்ன சொல்லி அனுப்பும் தெரியுமா? கடையில பொருளை எடை போடும்போது தராசுல முள்ளு நடுவுல நிக்கணும். ரெண்டு பக்கமும் ஒரே எடையில பொருள் சமமா இருக்கான்னு பார்க்க சொல்லும். அது என்னமோ மனசுல ஒட்டிக்கிச்சுமா. வாழ்க்கையிலயும் முள்ளு சமநிலையில இருக்கணும்.

சுகமோ துக்கமோ ஒரு பக்கம் அதிகம் வச்சுட்டோம்னா தராசு முள்ளு நடுவுல நிக்காதே! நம்ம மனசும் அப்படிதானேன்னு நினைச்சுக்குவேன். துக்கத்தால ஒரு பக்கமா மனச சரிய விடமாட்டேன். இழுத்துப் பிடிச்சு சம நிலையில் வைச்சுப்பேன். என்னமோ கிறுக்கச்சி சொல்றேன். நீங்கள்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க. உங்களுக்கு தெரியாததா? வரேம்மா. டைம் ஆயிடிச்சு...”தன் மனதுக்குள் தராசைத் தூக்கி மாட்டினாள் வசுமதி.

கிரிஜா ராகவன்