பீகார் தொழிலாளருக்கும் தமிழ் தொழிலாளருக்கும் என்ன வித்தியாசம்..?



இமாச்சலப் பிரதேசம், கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாட்டு மக்கள்தான் மாநிலம் விட்டு மாநிலம் அதிகம் புலம்பெயர்வதாக சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.
ஐஎல்ஓ என்று அழைக்கப்படும் உலகத் தொழிலாளர் அமைப்பு, ஐநா அமைப்புக்கு முன்பே தோன்றிய ஒரு பன்னாட்டு அமைப்பு. தொழிலாளர் தொடர்பான பல சட்ட திட்டங்களை அமைத்து உலகளவிலான தொழிலாளர்களின் தோழனாக இருக்கிறது இந்த அமைப்பு.

இந்த அமைப்புதான் இந்திய தொழிலாளர் தொடர்பான ஓர் ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையின் பெயர் ‘இண்டியா எம்ப்ளாய்மெண்ட் சர்வே 2024’. இந்திய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பற்றிய சர்வே அது. 2024 தேர்தலை வேலையின்மைப் பிரச்னைதான் முடிவு செய்யும் என்று இந்திய மக்கள் கருத்து தெரிவித்திருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்புக்கான பல்வேறு கோணங்களை இந்த ஐஎல்ஓ ஆய்வு செய்திருந்தது. 

அதில் முக்கியமானது இந்திய மாநில மக்களின் புலப்பெயர்வும், அந்தப் புலப்பெயர்வில் எத்தனை பேர் வேலைக்காக புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற கண்டுபிடிப்பும். இதில்தான் இமாச்சலப் பிரதேசம், கேரளாவுக்கு அடுத்து தமிழக மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் அதிகம் புலம்பெயர்வதாக சொல்கிறது ஆய்வு.

உதாரணமாக கேரளத்தின் மொத்தப் புலப்பெயர்வு 41.2 சதவீதம், இமாச்சலப் பிரதேசத்தின் புலப்பெயர்வு 38.1 சதவீதம், தமிழ்நாடு புலப்பெயர்வு 36.3 சதவீதம் என்று சொல்லும் ஆய்வு இதிலும் வேலைக்காக புலம்பெயர்ந்தவர்கள் எத்தனை பேர் என்றும் சொல்கிறது. 

எடுத்துக்காட்டாக கேரளாவில் 37.2 சதவீதம், இமாச்சல் 49.3 சதவீதம், தமிழ்நாடு 46.5 சதவீதம் வேலைக்காக புலம்பெயர்வதாக கண்டுபிடித்திருக்கிறது. வேலைக்காக புலம்பெயர்வதில் இந்த மூன்று மாநிலத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் இந்த ஆய்வில் பீகார்வாசிகள் எத்தனை பேர் புலம்பெயர்கிறார்கள், அதிலும் வேலைக்காக எத்தனை பேர் புலம்பெயர்கிறார்கள் என்று பார்த்தபோது ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம். பீகாரின் மொத்த புலப்பெயர்வு வெறும் 14.2 சதவீதம்தான். ஆனால், வேலைக்காக புலம்பெயர்வது தமிழ்நாட்டுக்கு நெருக்கமாக 39.0 சதவீதம். பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு கருத்து உண்டு. ‘பீகார்காரன், உ.பிக்காரன், ஒரிசாக்காரன் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து வேலை செய்கிறான்... இதனால்தான் தமிழ்நாட்டில் தமிழனுக்கு வேலையில்லாமல் ஆகிவிட்டது’ என்று.

இது தப்பான கருத்து என்று ஆணித்தரமாக மறுக்கிறார் தமிழ்நாடு புலம்பெயர்வுத் தொழிலாளர் தொடர்பாக பல ஆய்வுகளைச் செய்த சென்னை லயோ லா கல்லூரி பேராசிரியரான பெர்னார்ட் டி.சாமி.

‘‘இந்தியா அல்லது உலகநாடுகள் என்று எங்கு எடுத்துக்கொண்டாலும் மக்கள் அதிகமாக புலம்பெயர்வதற்கு காரணம் திருமணம்தான். அதிலும் பெண்களின் புலப்பெயர்வுதான் புலம்பெயர்வில் அதிக இடத்தைப் பிடிக்கும்...’’ என்று புதிய கோணத்தைச் சொல்லும் பெர்னார்ட் இந்த ஆய்வில் தமிழக தொழிலாளர் தொடர்பான கண்டுபிடிப்புகளைப் பற்றி பேசினார்.‘‘வேலைவாய்ப்பை பொறுத்தளவில் ‘டிமாண்ட் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கேதான் சப்ளையும் இருக்கும்’ என்ற பொருளாதார விதிதான் இதற்கும் பொருந்தும்.

உதாரணமாக 2015ல் சுமார் 20 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் வேலை செய்தார்கள். அதே ஆண்டில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்த தமிழர்கள் சுமார் 10 லட்சம்.
ஆனால், இந்த ஐஎல்ஓ சர்வேயில் எண்ணிக்கை எல்லாம் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் தமிழக புலப்பெயர்வு, அதிலும் வேலைக்கான புலப்பெயர்வு பற்றி எல்லாம் முன்பு செய்த ஆய்வுகளில் இருந்து தெரிந்துகொள்ளலாம்...’’ என்று சொல்லும் பெர்னார்ட் அந்த ஆய்வுகளையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘தமிழக புலப்பெயர்வை இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். திருமணத்துக்காகத்தான் அதிகமான புலப்பெயர்வு, அதிலும் பெண்கள் புலப்பெயர்வு அதிகம் என தமிழக புலப்பெயர்வையும் சொன்னாலும் அதையும் தாண்டி வேலைக்கான புலப்பெயர்வில் தமிழகத்தின் நிலை என்ன என்று சிந்தித்தால் சில விஷயங்கள் தெளிவு பெறுகின்றன.

அதாவது இரண்டு வகையான வேலைக்காக தமிழக தொழிலாளர்களின் புலப்பெயர்வு அரங்கேறுகிறது. இது இந்தியாவின் மற்ற வேலைக்கான புலப்பெயர்விலிருந்து வித்தியாசப்படுகிறது.

உதாரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் போன்ற மாவட்டங்களில் இருந்து பெங்களூர், ஆந்திராவுக்கு செல்லும் தொழிலாளர்களையும் அல்லது மதுரை, தேனி, போடி, கோவையில் இருந்து கேரளாவுக்கு புலப்பெயர்வு செய்யும் தமிழகத் தொழிலாளர்களையும் எடுத்துக்கொண்டால் அவர்களை ‘ப்ளூ காலர்’ தொழிலாளர்கள் என்று சொல்லிவிடலாம். ‘ப்ளூ காலர்’ தொழிலாளர்கள் என்றால் திறன் இல்லாத அல்லது பாதி திறன் நிறைந்த தொழிலாளர்கள் என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக பெயிண்டர், கார்பென்டர், ப்ளம்பர் போன்ற வேலைகள்.

அடுத்து ‘வைட் காலர்’ வேலைகள். இதை திறன் மிக்க தொழிலாளர்கள் என்று சொல்லலாம்...’’ என்று சொல்லும் பேராசிரியர் தமிழக புலம்பெயர் தொழிலாளர்கள் மற்ற மாநில புலம்
பெயர் தொழிலாளரைவிட வைட் காலர் பிரிவில்தான் அதிகம் வருவார்கள் என்று பெருமையாகச் சொல்கிறார்.‘‘தமிழகத்தில் கல்வி, அதனால் ஏற்பட்ட திறன் வளர்ச்சி எல்லாம் தமிழக இளைஞர்களிடம் திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற மனநிலையை ஏற்படுத்திவிட்டது. வேலை, நல்ல சம்பளம், பிறகு குடும்பத்தை ஏற்படுத்த இந்த இளைஞர்கள் மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்கிறார்கள்.

‘ப்ளூ காலர்’ தொழிலாளர்கள் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று போக, ‘வைட் காலர்’ தமிழ் தொழிலாளர்கள் மும்பை, தில்லி என்று பறக்கிறார்கள்...’’ என்ற பெர்னார்ட், தமிழகத்தில் ‘ப்ளூ காலர்’ தொழிலாளர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் ஏன் தமிழகத்தை விட்டு அண்டை மாநிலத்துக்குப் போகிறார்கள் என்பதையும் விளக்கினார்.
‘‘கேரளா, பெங்களூரில் எல்லாம் தினக்கூலிகளுக்கு தமிழகத்தைவிட நல்ல சம்பளம் கிடைக்கிறது. இந்த இடைவெளியை நிரப்பவே பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் பெங்கால் தொழிலாளர்கள் தமிழகத்துக்கு வருகிறார்கள்.

இதைப் புரிந்து கொள்ளாமல் வடநாட்டுத் தொழிலாளர்கள் மீது நாம் தேவையில்லாத வாட்ஸ் அப் செய்திகளைப் பரப்புவது வருத்தமான விஷயம். பீகார் தொழிலாளர்கள் இல்லையானால் தமிழகத்தில் நடைபெறும் வேலைகள் எப்படி நடக்கும் என நாம் யோசிக்க வேண்டும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் பெர்னார்ட்.

டி.ரஞ்சித்