ஒரே வீடியோவில் 73 ராகங்கள்...
கலக்குகிறார் இந்தியன் 2 பட நீலோற்பம்...பாடகரும் டிரெண்டிங்ஸ்டாருமான அபி வி
எத்தனை புது டிரெண்டுகள் உருவானாலும், உலகம் அறிவியலின் பால் நகர்ந்தாலும், ஒருசில பாரம்பரிய பழக்கங்கள் மட்டும் நம்மிடமிருந்து அகலவே அகலாது.
அதில் ஒன்று இசைக்கு மயங்கும் நம் மனம். தேடிச்சென்று பல வகையான இசையை உருவாக்கும் ஆர்வமுள்ள கலைஞர்களின் வருகை...
அப்படி என்னதான் கனடாவில் வளர்ந்தாலும் இந்திய இசையில் இருக்கும் அத்தனை முறைகளையும் கற்றுக்கொண்டு அதில் சில சிறப்பு முயற்சிகளையும் செய்து வருகிறார் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அபி வி (Abby V).
 ஒரே வீடியோவில் 73 ராகங்களை வேறு வேறு மாநில இசைக் கலவையில் ஆலாபனை செய்து டிரெண்டை உருவாக்கியிருக்கிறார் அபி. தொடர்ந்து தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் ‘நீலோற்பம்...’ பாடல் அபியின் குரலில் தற்போது எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது போதாது என்று பாடகி சித்ரா உட்பட பலருடனும் ஒன்றிணைந்து இவர் செய்யும் சில ஜாலியான இசை வீடியோக்களும் தற்போது இணையத்தில் டிரெண்டாகிக்கொண்டிருக்கின்றன.
 ‘‘சின்ன வயதில் இருந்து தெலுங்கில் ஆர்வம் அதிகம். அப்பா வெங்கி வி. அவரும் ஒரு ப்ரொஃபஷனல் கர்நாடிக் பாடகர். கனடா ரயில்வே துறையில் வேலை பார்த்திட்டு இருக்கார். அம்மா அன்னபூரணி, ஹவுஸ் வைஃப். அப்பாகிட்ட இருந்துதான் எனக்கு இசை வந்தது. நானும் கர்நாடிக், இந்துஸ்தானி, வெஸ்டர்ன்... என பலதரப்பட்ட இசையிலும் பயிற்சி எடுத்திருக்கேன்; இப்பவரைக்கும் எடுத்துட்டு இருக்கேன்.
இப்போ ‘இந்தியன் 2’ பாடல் மூலமா ஒரு மிகப்பெரிய அறிமுகம் எனக்கு கிடைச்சிருக்கு. இதற்கு முன்பு தெலுங்கில் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கேன். தொடர்ந்து ‘மாயவன்’ படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கேன்.ஆனால், ‘இந்தியன் 2’ திரைப்படம்தான் எனக்கு மிகப்பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்திருக்கு. முதல் இரண்டு பாடல்களும் ஹிட். ஆனால், என்னை யாருக்கும் பெரிதா தெரியாது.
நான் தற்சமயம் கனடாவில் ஃபைனான்ஸ் படிச்சிட்டு இருக்கேன். கனடாவைப் பொருத்தவரை நான் வளர்ந்த பகுதியிலே அதிகமான இந்திய பண்பாடு கலந்துதான் இருக்கும். அதனாலயே இசை வழியா ஏதாவது ஒரு முறையில் இந்தியாவுடன் நாங்கள் தொடர்பில் இருந்துகிட்டே இருப்போம். நான் வளர்ந்த குடும்பமும் இசைமேல அதிக ஆர்வம் கொண்ட குடும்பம் என்கிறதால் ரொம்ப சின்ன வயதில் இருந்தே இசை எனக்கு நெருக்கமாகிடுச்சு...’’ என்ற அபி, 73 ராகங்கள் ஒரு வீடியோ என்ற யோசனை தோன்றிய விதத்தை புன்னகையுடன் விளக்கத் தொடங்கினார்.
‘‘வெஸ்டர்ன் நாடுகளில் சில வீடியோக்கள் உண்டு. அவை பிரபலமும் கூட. அதாவது ஒரே வீடியோவில் பல கேள்விகள்... அதற்கு பதில்... என ஒரு ராபிட் ஃபயர் கான்செப்ட் இருக்கும். அந்த கான்செப்டில் ஏன் யாரோ ஒருவர் ராகங்களைக் கேட்க அதை அப்படியே பாடக்கூடாது எனத் தோணுச்சு. அதனால ரொம்ப இயல்பா என்னுடைய வேலைகளுக்கு இடையிலையே 73 ராகங்களை கேள்விகளாக கேட்க அதற்கு நான் பாடல் பாடுகிற மாதிரி வீடியோவை வெளியிட்டேன்.
அதிலும் ஒரே இசையா இல்லாமல் கர்நாடிக், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், கஸல் என எல்லாவற்றையும் கலந்து 73 ராகங்கள் ஆலாபனை கொடுத்தேன். நிறைய பாராட்டுக்கள் வந்தது. குறிப்பா என்னுடன் சேர்ந்து சித்ரா அம்மா உட்பட பல அனுபவம் வாய்ந்த பாடகர்கள் ஜாலியான கான்செப்டில் பாடும்பொழுது அது இன்னும் இளைஞர்கள் மத்தியில் பெரிய இன்ஸ்பிரேஷனா மாறுச்சு.
இந்தியர்களைப் பொருத்தவரை இசைக்கான பந்தம் ரொம்ப ஆழமானது. அதை என்னால் முடிந்த அளவு இப்போது இருக்கிற இளைஞர்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும்னு நினைச்சுதான் ஒவ்வொரு வீடியோவும் வெளியிடுறேன். ஆண்ட்ரியா கூட இணைந்து ஒரு தனி இசை பாடல் இதற்கு முன்பே வெளியாகி இருக்கு.
அது இல்லாம நிறைய தனியிசை பாடல்கள் வெளியிட்டிருக்கேன். சித்ராம்மா கூட டோனட் கான்செப்டில் ஒரு ஜாலியான பாடல் வீடியோ, சுதா ரகுநாதன் மேடம் கூட ஆன்லைன் ஃபுட் டெலிவரி கான்செப்ட், ஆண்ட்ரியா கூட பலூன் வரிகள் சேலஞ்ச்... இப்படி ஏதாவது இசையில் செய்து கொண்டே இருப்பேன். என் அப்பா கூட இணைந்து நிறைய பாடல் வீடியோக்கள் கூட போஸ்ட் செய்திருப்பேன்...’’ என்ற அபி வி, ‘இந்தியன் 2’ பாடல் அமைந்த விதத்தை நெகிழ்வுடன் பகிர்ந்தார்.
‘‘இசையுடன் இணைந்த கடவுள் ஆசீர்வாதம் அப்படின்னுதான் சொல்லணும். அதனால்தான் என்னால் இசை ரவுண்ட் டேபிள் கான்செப்ட் கூட மிக முக்கியத்துவம் வாய்ந்த பாடகிகளுடன் சேர்ந்து செய்ய முடிந்தது.
இப்படியான என்னுடைய வீடியோக்களை அனிருத் தொடர்ந்து பார்த்துட்டு இருந்திருக்கிறார். இது எனக்கு தெரியாது. ‘இந்தியன் 2’ படத்துல ‘நீலோற்பம்...’ பாடல் கம்போஸ் ஆனதும் அதுபற்றி சொல்லி ‘நீங்கதான் அதைப் பாடணும்...’ அப்படின்னு கூப்பிட்டார்.
கேட்டதும் அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. இதோ இப் பாடல் வெளியாகி எங்கே பார்த்தாலும் கேட்க முடியுது; வைரலாகவும் இருக்கு. எனக்கு கிடைத்த ஆசீர்வாதத்தால்தான் பல அனுபவம் வாய்ந்த இசைக் கலைஞர்கள் கூட சேர்ந்து பயணிக்க முடியுது.
நான் இப்போதான் இசைத் துறைக்கு புதிது. ஆனால், வரும்பொழுது எனக்கு கிடைத்த வரவேற்பு மிகப் பெரியது. இதற்கு என்னால் முடிந்த சிறப்பு செய்யணும். அதற்கு நான் நிச்சயம் முயற்சி செய்துகிட்டே இருப்பேன்.
மேலும் உலக அளவில் பாப் பாடகர்கள்... பாப் இசை... என்றாலே அதில் கனடாதான் டாப் சார்ட்டில் இருக்கு. அந்த வகையில் கனடாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவும் தனி இசை பாடலில் மிகப்பெரிய இடம் பிடிக்க வேண்டும். அதற்கு என்னாலான முயற்சிகளை நிச்சயம் செய்வேன்.
தற்சமயம் நிறைய திரையிசை பாடல்கள் பாடுவதற்கான வாய்ப்பு வரத் துவங்கி இருக்கு. நிறைய பாடல்களும் பாடியிருக்கேன். ஆனால், இப்போதைக்கு அது என்ன படம்... என்ன பாடல்... என சொல்ல முடியாது. படக்குழு இசை வெளியீட்டு தருணத்தில் நிச்சயம் சொல்வாங்க...’’ என்றவர் மேலை நாடுகளிலிருந்து இந்திய இசையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை விவரித்தார். ‘‘சொன்னால் நம்ப மாட்டீங்க. நம்முடைய இளையராஜா சார் மற்றும் ரகுமான் சார் உட்பட அத்தனை இசைக்கலைஞர்களின் கச்சேரி என்றாலும் அங்கே நம் இந்தியர்களை தாண்டி வெஸ்டர்ன் மக்களும் டிக்கெட் எடுத்து பார்க்கும் சம்பவங்கள் நிறைய நடக்குது. இந்திய இசைக்கு அவ்வளவு மதிப்பு அங்கு இருக்கு. ஒரே விஷயம் என்னவென்றால் நம் நாட்டைப் பொறுத்தவரை இசை, திரைப்படங்களின் கலவையாக இருக்கிறதால்தான் இன்னமும் நம்மால் முழுமையான உலக இசை தரப் பட்டியலுக்குள் அதிகாரபூர்வமாக நுழைய முடியவில்லை.
ஏன்னா உலக அளவில் இசை சார்ந்த அனைத்தும் தனி இசை பாடல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிட்டு இருக்கு. எனவே இந்திய இசை தனி இசை பாடல்களை நிறைய உருவாக்கணும். நிறைய தனி இசை ஆல்பங்கள் வெளியாகணும். அதுக்காக திரை யிசைப் பாடல்களை தவிர்க்கச் சொல்லலை. சினிமா பாடல்களுக்கும் அங்கே மிகப்பெரிய வரவேற்பும் அங்கீகாரமும் இருக்கு. அதனால்தான் சமீபத்தில் உலக அளவில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நம் இந்திய திரையிசை காப்புரிமையில் மட்டும் வருமானம் ஈட்டியிருக்கு.
ஆனால், இந்த நிலை இன்னும் அதிகரிக்க வேண்டும். இசைப் பிரசுரம், சீரமைப்பு, தனி இசைப் பாடல்களின் உருவாக்கம், தனி இசைக் கலைஞர்களின் வருகை இதெல்லாம் அதிகரிக்கும் பொழுது இன்னும் இந்திய இசைக்கான மதிப்பு உயரும் என்பது உறுதி...’’ அழுத்தமாகவே சொல்கிறார் இந்த இளம் இசைக்கலைஞர் அபி வி.
ஷாலினி நியூட்டன்
|