உள்ளங்கையில் விரியும் ஆபாசக் கடல்!
அதிரவைக்கும் மினி தொடர்-2
இவ்வளவு லட்சம் கோடி ரூபாய்களை ஆண்டு வருமானமாக யூடியூப் தளம் சம்பாதிக்கிறது என்றால்... ஒரு யூடியூப் சேனலை தொடங்கவும் லட்சங்களில் செலவாகுமா? இப்படிக் கேட்டால் நீங்கள் பூமர் அங்கிள் / ஆண்ட்டி! 2கே கிட்ஸ் அப்படித்தான் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள்.ஏனெனில் ஜஸ்ட் லைக் தட் யார் வேண்டுமானாலும் தங்களுக்கான சேனலை யூடியூப்பில் ஆரம்பிக்கலாம்.
இஸிட்?
யெஸ். உங்களுக்கான யூடியூப் சேனல் தொடங்க, youtube.comக்கு சென்று, அந்தப் பக்கத்தின் வலது மூலையில் உள்ள ‘உள்நுழை’ ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதும். இப்போது உங்கள் சேனலை நீங்கள் இணைக்க விரும்பும் Google கணக்கை (ஏற்கெனவே Gmail அக்கவுண்ட் இருப்பவர்கள்) பயன்படுத்தி உள்நுழையலாம்.பிறகு..? Create your channel என்ற பகுதியை கிளிக். தனிப்பட்ட சேனலா, வணிக சேனலா என அதற்கு ஏற்றாற்போல தகவல்கள், பெயர், புகைப்படம் மற்றும் உங்கள் சேனல் எதற்கானது என்பதற்கான விவரங்கள் அனைத்தையும் டைப் செய்தால்...
யுவர் சேனல் ரெடி! ஏற்கெனவே Google கணக்கு இல்லாதவர்கள், அதை கிரியேட் செய்துவிட்டு YouTube சேனலை தொடங்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. அதாவது கூகுள் கணக்கு இல்லையென்றால் யூடியூப் கணக்கு நஹி.
ரைட். யூடியூப் சேனல் தொடங்கியாச்சு. வீடியோ எடுக்க கேமரா?
தம்மாத்துண்டு ஆண்ட்ராய்ட் செல்போன் போதும். அதிலேயே வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் அப்லோட் செய்யலாம். ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றுக்கு அதற்குரிய தொழில்நுட்ப சாதனங்களை இலவசமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.
பின்னர் YouTube Analytics உதவியுடன் எந்த மாதிரியான வீடியோக்களை மக்கள் விரும்புகின்றனர், உங்களுக்கான பார்வையாளர்கள் யார் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப வீடியோக்களை பதிவிடலாம்.யூடியூப் சேனலை ஆரம்பிக்கும் வழி இம்புட்டுதான்.
பட், இதில் ஆபாச கன்டென்ட் எப்படி உள்நுழைகிறது?
அதைப்பற்றித்தானே தொண்டைத் தண்ணீர் வற்ற கத்திக் கொண்டிருக்கிறோம்?
இதற்கான ஆன்சரை அறிவதற்கு முன் யூடியூப் சேனல் வழியாக எப்படி பணம் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வது நல்லது. ம்ஹும். யூடியூப்புக்கு கிடைக்கும் வருமானம் அல்ல. நீங்கள் ஆரம்பித்த சேனல் வழியாக உங்களுக்கு கிடைக்கும் ஊதியம் அல்லது சன்மானம் அல்லது ஏதோ ஒரு லொட்டு லொசுக்கு.
இதற்கான ஃபர்ஸ்ட் ஸ்டெப், எத்தனை பேர் உங்கள் சேனலை பார்க்கிறார்கள் என்பது. ஏனெனில் பார்க்கப் பார்க்கத்தான் சேனல் பற்றி எரியும்! ஸோ, பார்த்த மாதிரி இருந்தாலும் பார்க்கும்படி அதை ப்ரசன்ட் செய்ய வேண்டும். இதற்கு எதைப்பற்றி வீடியோ போடுகிறீர்களோ அது தொடர்பான ஹேஷ்டேக்கை உருவாக்க வேண்டும். அதாவது ‘#’ என்ற சிம்பளை டைப் செய்து ஸ்பேஸ் விடாமல் ஒரு சொல்லை பதித்தால் அதுதான் ஹேஷ்டேக். உதாரணத்துக்கு #முட்டாள்!நீங்கள் உள்ளிடும் முதல் மூன்று ஹேஷ்டேக்குகளை மட்டுமே யூடியூப் முதன்மையானதாக எடுத்துக் கொள்ளும். ஸோ, கேட்ச்சியான ஹேஷ்டேக் மஸ்ட்.
அப்புறம்... வாரத்துக்கு ஒரு வீடியோ என்றால் அதை சரியாகப் பின்பற்ற வேண்டும். வாரந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டால் அதன் ரீச் நன்றாக இருக்கும்.
கடைசியாக இருக்கவே இருக்கிறது சமூகவலைத்தளங்கள். யூ டியூப்பில் வீடியோவைப் பதிவிட்ட பிறகு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ்... உள்ளிட்ட தளங்களில் உங்கள் வீடியோ லிங்க்கைக் கொடுத்து ‘வாங்க... வாங்க... ஐயா வாங்க... அம்மா வாங்க...’ என கூவிக் கூவி கூரையில் ஏறி வியூஸை அதிகரிக்க வேண்டும்.
எதற்கு?
ம்க்கும். துட்டு பார்க்கத்தான். ஒரு யூடியூப் சேனல், 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4 ஆயிரம் வாட்ச் ஹவர்ஸ் (Watch Hours) பெற்றால்தான் வருவாய் ஈட்டத் தகுதியானதாக கன்சிடர் செய்யப்படும். ஒரு சானலின் வீடியோ, ஒட்டுமொத்தமாக எத்தனை மணி நேரம் பார்க்கப்படுகிறது என்பதே வாட்ச் ஹவர்ஸ். ஃபார் எக்சாம்பிள், நீங்கள் 10 நிமிட வீடியோ ஒன்றைப் பதிவிடுகிறீர்கள். அதனை 6 பேர் முழுமையாகப் பார்த்தால் ஒரு மணி நேரம் கிடைக்கும். இப்படியாக பார்வையாளர்கள் பார்க்கும் நேரம் மிக முக்கியம்.
இதனால் அறியப்படும் நீதி யாதெனில், 10 நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோக்கள் நல்ல வாட்ச் ஹவர்ஸை பெற்றுத் தரும்!அடுத்து, 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4 ஆயிரம் வாட்ச் ஹவர்ஸ் கிடைத்த பிறகு ‘யூடியூப் ஸ்டுடியோ’ என்கிற அப்ளிகேஷனில் ‘Earn’ என்கிற ஆப்ஷனுக்குள் சென்று உங்கள் வங்கிக் கணக்கைப் பதிவு செய்ய வேண்டும்.
இதன் பிறகே உங்களுக்குப் பணம் வரத் தொடங்கும். உங்கள் வீடியோவுக்கு இடையே வரும் விளம்பரங்கள்தான் உங்களுக்கு வருவாய் ஈட்டித்தரும். கூகுள் தரும் விளம்பரங்கள் இல்லாமல் நீங்களே வீடியோவின் தொடக்கத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பியும் பணம் ஈட்டலாம். ஆக, எத்தனை நபர்கள் உங்களைப் பின்தொடர்கிறார்களோ அதற்கேற்ப பணம் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்துகொண்டே இருக்கும். வெயிட். விளக்குவது என்று ஆரம்பித்தாகி விட்டது. முழுமையாக விளக்கினால்தானே வெளக்க மாத்துக்கு பட்டுக் குஞ்சலம் கட்டிய கதையை, ஆபாச கன்டென்ட்டை நார் நாராகக் கிழிக்க முடியும்?
ஸோ... விளக்கம் தொடர்கிறது!
யூடியூப் பக்கத்தில் ‘எனது சேனல்’ என்பதைக் கிளிக் செய்தால் பிசினஸுக்கான வழிமுறைகள் தோன்றும். அதில் மோனெட்டைசேஷன் (monetization) என்ற வசதி இருக்கும். அதை ஆக்டிவேட் செய்தால் நீங்கள் பதிவிடும் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரங்கள் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு ‘ஆட்சென்ஸ்’ (Google Adsense) கணக்கு வைத்திருக்க வேண்டும். உங்கள் சேனலின் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டே ஆட்சென்ஸ் கணக்கைத் தொடங்க முடியும். அப்பாடா... முடிஞ்சுது. இனி ஆபாச கன்டென்ட் சோலியை சோழி போட்டுப் பார்க்காமலேயே பார்ப்போமா?
(தொடரும்)
கே.என்.சிவராமன்
|