பாம்புக்கடியின் தலைநகரம் இந்தியா!



உலகளவில் பாம்புக் கடியில் பாதிக்கப்படுபவர்கள், இறப்பவர்களை கணக்கில் கொண்டால் அதில் பாதிப் பேர் இந்தியாவில்தான் இருப்பார்கள் என்று சொல்கிறது அண்மைய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று. 
 பொதுவாக இந்தியாவில் பாம்புக்கடி அல்லது அதனால் ஏற்படும் மரணங்கள் பற்றி எல்லாம் பெரிய கரிசனை காட்டப்படுவதில்லை.ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ‘பாம்புக்கடியும் கவனிக்கப்படவேண்டிய ஒரு நோய்’ என்று இந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடகா தெரிவித்திருப்பது பலரை ஆறுதல் படுத்தியிருக்கிறது.

இந்தியா பாம்புக்கடி பற்றி அலட்சியம் காட்டினாலும் 2011ம் ஆண்டு வாக்கில் ஒரு தனியார் அமைப்பு ‘மில்லியன் டெத் ஸ்டடி’ (Million Death Study) என்ற அறிக்கையில் இந்தியாவில் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இறந்தவர்களைப் பற்றி முதன்முதலாக ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. 
அதன்படி ‘இந்தியாவில் வருடத்துக்கு சுமார் 45,900 கடிகள் நிகழ்வதாக’ அந்த ஆண்டில் கூறியது. ஆனால், 2020ல் அது மீண்டும் செய்த ஆய்வில் 2000 முதல் 2019க்குள் சுமார் 12 லட்சம் பாம்புக் கடிகள் நிகழ்ந்ததாக அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த இரண்டு ஆய்வுகளிலுமே என்ன தெரிகிறது என்றால் இந்தியாவில் வருடத்துக்கு சுமார் 50 ஆயிரம் பாம்புக் கடிகள் நிகழ்வதாக இருக்கிறது. ஆனால், இந்திய விலங்கின ஆய்வாளர்கள் இதைவிட கூடுதலாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள். 

உதாரணமாக அந்த ஆய்வாளர்கள் ‘இந்தியாவில் வருடத்துக்கு சுமார் 10 லட்சம் பாம்புக் கடி கேஸ்களாவது இருக்கும்’ என்றும், ‘இதில் சுமார் 58 ஆயிரம் பேராவது மரணத்தைத் தழுவுகிறார்கள்’ என்றும் சொல்கிறார்கள்.

இத்தோடு ‘பொதுவாக இந்த பாம்புக் கடி பிரச்னை நகரங்களில் பெரிதாக இருப்பதில்லை. கிராமங்களில்தான் அதிகபட்சமாக இருக்கும். இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள்தான்.

பாம்புக் கடி பற்றியும் அதில் இறந்துபோகும் நோயாளிகள் பற்றியும் பெரிய அளவிலான பதிவுகள் இந்தியாவில் இருப்பதில்லை. இதுதான் இந்தப் பிரச்னையின் பூதாகரத்தை இந்தியர்களுக்கு சரியாகச் சொல்வதில்லை’ என குற்றம்சாட்டுகிறார்கள் இந்த ஆர்வலர்கள்.

இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கத்தான் கர்நாடக மாநிலம் இந்த பாம்புக்கடி பற்றியும் அதனால் ஏற்படும் மரணங்கள் பற்றியுமான தகவல்களை உஷாராக கண்காணித்து வருகிறது. இதனால்
அண்மையில் கிடைத்த தகவல்கள் அந்தப் பிரச்னையை துல்லியமாக காண்பிக்கிறது. 

எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் 2023ம் ஆண்டில் மட்டும் சுமார் 6596 பாம்புக்கடி நிகழ்வுகள் நடந்திருக்கின்றணா. மரணம் 19. ஆனால், இந்த வருடம் முதல் 6 மாதத்தில் மட்டுமே 5418 நிகழ்வுகள். மரணம் 36. இதுபோன்ற தகவல்கள்தான் அரசு மற்றும் தனியாரை இந்தப் பிரச்னை தொடர்பாக விழிப்புணர்வையும் அதற்கான தீர்வுகள் பற்றியும் யோசிக்க வைக்கும்.

சரி... பாம்புக் கடிக்கான மருத்துவத்துக்கு இந்தியா போதுமான தயாரிப்புகளுடன் இருக்கிறதா?

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள கிண்டியில் இருக்கும் ‘கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில்’ இருந்துதான் இந்தியாவுக்கான மொத்த பாம்புக்கடி முறிவு மருந்துகளும் சப்ளை ஆகின்றன.

ஆனாலும் இது வெறும் 4 வகை பாம்புக் கடிகளுக்கு மட்டுமே தீர்வாகும் என்று சொல்லும் ஆர்வலர்கள், மேலும் சுமார் 18 வகைப் பாம்புக்கடிகளுக்கு இந்த மருந்து போதுமானதல்ல என்றும் சொல்கிறார்கள். ஆனால், கர்நாடகாவைப் பின்பற்றினால் இந்தியா இந்தப்  பிரச்னையிலிருந்து சுலபமாகத் தப்பிக்கலாம் என்றுதான் தோண்றுகிறது. இல்லையேல் பாம்பிடம் சரணடைய வேண்டியதுதான்.

டி.ரஞ்சித்