ஒரு சட்டை ரூ. 1,80,000... மாஸ் காட்டும் குட் பேட் அக்லி ஷர்ட்!
ஒரு சட்டை விலை ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம்! கேட்கவே பக்கென இருக்கிறதா?
உண்மைதான். சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகி எங்கும் ட்ரெண்டில் இருக்கிறது. இதுவரையிலும் இல்லாத புது ஸ்டைலில் அஜித் டீசரில் தோன்ற ரசிகர்கள் ஒவ்வொரு ஃபிரேமாக வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அஜித்தின் லுக், அவர் அணிந்திருந்த உடை, அக்சஸரீஸ்கள் என எதுவும் டிகோடிங்கில் தப்பவில்லை. அப்படி ஆய்வு மேற்கொண்டதில் அவர் அணிந்திருந்த ஒரு மல்டி கலர் சட்டை ரூ. 1,80,000 விலை என்கிறது கூகுள் லென்ஸ். என்ன ஒரு சட்டை இவ்வளவு ரூபாயா என வாயைப் பிளக்க வேண்டாம். அந்தச் சட்டை தயாரிக்கப்பட்ட பிராண்டின் வரலாறு அப்படி.  இந்தப் படத்தில் பெரும்பாலும் அஜித் அணிந்திருக்கும் அத்தனை சட்டைகளும் டாப் பிராண்ட் என்கிறது படக்குழு. அதில் டீசரில் காண்பிக்கப்பட்ட இந்த மல்டி கலர் சட்டை மொஸ்சினோ கோச்சர் என்கிற இத்தாலிய டாப் பிராண்டைச் சேர்ந்த சட்டை.
 ஏன் இந்த பிராண்ட் இவ்வளவு விலை?
1983ம் ஆண்டு இத்தாலியில் இந்த மொஸ்சினோ கோச்சர் (Moschino Courtor) என்னும் ஃபேஷன் பிராண்ட் நிறுவப்பட்டது. டீசரில் அஜித் உடுத்தி இருந்த மல்டி கலர் சட்டை போலவே கலர்ஃபுல் மற்றும் வித்தியாசமான பிரிண்ட், விசித்திரமான டிசைனிங் வகையறாக்களுக்கு இந்த பிராண்ட் பிரபலம். மேலும் அரேபிய ஷேக் மற்றும் ஜாலியான மிகப்பெரும் பணக்காரர்களால் இந்த உடைகள் அதிகம் விரும்பப்படுகின்றன. இந்த பிராண்டுக்கு சொந்தக்காரர் ஃபிரான்கோ மொஸ்சினோ (Franco Moschino).

ஹேண்ட் பேக், ஜிப்சி ஸ்டைல் உடைகள், பெல்ட் உள்ளிட்டவைகள் அடங்கிய ஆண் , பெண் ஃபேஷன் பிராண்ட்தான் மொஸ்சினோ. 1950ம் ஆண்டு பிரான்கோ இத்தாலியில் பிறந்தார். பிரெரா அகாடமியில் படித்துக் கொண்டிருந்த பிரான்கோவின் அப்பா சொந்தமாக இரும்புத் தொழில் செய்து வந்தார்.  தனக்குப் பிறகு தன் குடும்பத் தொழிலான இரும்பு பிசினஸில் பிரான்கோ ஈடுபடுவார் என கனவு கண்ட தந்தைக்கு அதிர்ச்சியாக பிரான்கோ, தான் ஒரு ஆர்டிஸ்ட் எனவும் மேலும் ஃபேஷன் டிசைனிங்கில் ஆர்வம் கொண்டவன் எனவும் தெரிவிக்க, குடும்பம் மொத்தமாக பிரான்கோவை வெறுக்கத் துவங்கியது. 
பிரான்கோவை தொடர்ந்து குடும்ப பிசினஸ் செய்ய வேண்டும் என வற்புறுத்தத் துவங்கியதன் விளைவு பிரான்கோ வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து படிக்க முடியாமல் தடைகளை எதிர்கொண்ட பிரான்கோ ஃபேஷன் டிசைனிங் ஆர்டிஸ்ட் ஆக பல பிரபல பிராண்டுகளுக்கு பகுதி நேரமாக வரைந்து கொடுக்கத் துவங்கினார்.
70 - 80களில் கைகளால் வரையப்பட்ட உடைகளுக்கு அதிக மவுசு என்பதால் மொஸ்சினோவின் டிசைன்கள் பலராலும் விரும்பப்பட்டு வாங்கப்பட்டன. பிரான்கோ தனது ஃபேஷன் மீதான ஆர்வம் காரணமாக பிரெரா அகாடமியில் இருந்து படிப்பை விட்டுவிட்டு, தனக்குப் பிடித்த ஃபேஷன் படிப்பை படிக்க இத்தாலியின் பிரபல ஃபேஷன் ஸ்கூலான மரங்கொனி இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார்.
எப்படியாவது இந்த படிப்பை முடித்தாக வேண்டும் என தீவிரமாக படித்து முடித்த பிரான்கோ தொடர்ந்து இத்தாலியின் பிரபல ஃபேஷன் டிசைனரான ஜியென்னி வெர்செஸ் (Gianne Versace) ஆடைகளுக்கு ஆர்டிஸ்ட் ஆக வேலையில் சேர்ந்தார். 1971ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு வருடங்கள் அவருடன் பணியாற்றி தொழிலையும் கற்றுக்கொள்ளத் துவங்கினார்.
பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை இத்தாலியின் பிரபல கடோட்டெ (Cadotte) பிராண்டின் டிசைனராக வேலை செய்தார். 1983ம் ஆண்டு தனது சொந்த பிராண்டான மூன் ஷேடோ என்கிற நிறுவனத்தைத் துவங்கி அதே வருடம் மொஸ்சினோ பிராண்டையும் நிறுவினார். துவக்கத்தில் எல்லா டாப் பிராண்டை போலவும் ஜீன்ஸ், கேஷுவல் உடைகள், ஆண்கள் பெண்களுக்கான அலுவலக உடைகள் உள்ளிட்ட வகையறாக்களைத்தான் டிசைனிங் செய்தார். ஆனால், 1988ம் ஆண்டு முதல் பிரான்கோவின் கற்பனை இன்னும் வேறு திசையில் பயணிக்கத் துவங்கியது. தனது பிராண்டின் முதல் கலர்ஃபுல் ஸ்டைல் பெண்களுக்கான ஜீன்ஸ் ஸ்கர்ட்டை வெளியிட்டார். அதன் விளிம்பில் டிசைன் செய்யப்பட்ட ஆம்லெட் டிசைன் ஃபேஷன் விரும்பிகளை திரும்பிப் பார்க்க வைத்தது.
மனிதர்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை பிரதிபலிக்கும் விதமாக உடைகளில் கார்ட்டூன், உணவுகள், பூக்கள், என டிசைன் செய்ததில் அவருடைய உடைகள் உலகம் முழுக்க பிரபலமானது. குறிப்பாக பெண்களுக்குள் இருக்கும் ஆண் தன்மை மற்றும் ஆண்களுக்குள் இருக்கும் பெண் தன்மையை வெளிப்படுத்தும் விதமான உடைகளை அதிகம் உருவாக்கத் தொடங்கினார்.
அதாவது ஆண்களுக்கான கோட் சூட் தயாரிக்கும் மெட்டீரியலில் பெண்களுக்கான உடைகள் உருவாக்குவது. பெண்களுக்கு உடைகள் உருவாக்கும் சாட்டின், சில்க், ஜார்ஜெட் உள்ளிட்ட மெட்டீரியல்களில் ஆண்களுக்கான உடைகள் என ஸ்டீரியோ டைப் ட்ரெண்டை உடைத்தார்.
இப்படியான உடைகள் மூன்றாம் மற்றும் நான்காம் பாலினத்தவரால் அதிகம் விரும்பப்பட்டது. மேலும் பல நாடுகள் மூன்றாம், நான்காம் பாலினம் மற்றும் LGBTQ மக்களை அங்கீகரிக்கத் துவங்கிய வேளை அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக பல வித்தியாசமான பிரிண்டட் உடைகளை வெளியிடத் துவங்கினார் பிரான்கோ.
உடைகளில் இதுதான் எல்லை என எதுவும் இல்லாமல் தன்னுடைய கற்பனைகளை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு விரித்தார் பிரான்கோ. கருப்பு நிற ஜாக்கெட்டில் தங்க நிற எம்ப்ராய்டரி, காளை மாடு சிம்பள் பொறிக்கப்பட்ட உடைகள் இப்படி அவருடைய உடைகள் வித்தியாசமாக இருப்பதால் உலகம் முழுக்க பலராலும் விரும்பப்பட்டு வாங்கப்பட்டது.
மிகச் சில ஆண்டுகளில் உச்சம் தொட்ட பிரான்கோ அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டே இருந்தார். தொடர்ந்து சொல்ல முடியாத பல உடல் பிரச்னைகள். பரிசோதனையில் அவருக்கு ஹெச்ஐவி - எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வர உடலாலும் மனதாலும் மனமுடைந்தார் பிரான்கோ.
எய்ட்ஸ் வைரஸ் தீவிரம் தொடர்ந்து பிரான்கோவின் உடலை மோசமாக்கிக் கொண்டே இருந்தது. தனக்கு எய்ட்ஸ் என தெரிய வந்தவுடன் இன்னும் தன்னை வேகமாக விரட்டத் துவங்கினார் பிரான்கோ. எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பிரசாரங்களில் பங்கெடுக்கத் துவங்கினார். அவர்களின் சிகிச்சை மற்றும் வாழ்க்கைக்கு நிதி திரட்டும் வகையில் டிசைனிங் செய்யத் துவங்கினார். தனது இறப்புக்கு முந்தைய இரண்டு வருட காலங்களை முழுமையாகவே எய்ட்ஸ் மற்றும் அது சார்ந்த பிரசாரங்கள், அதற்கு நிதி திரட்டல் என தனது வாழ்க்கையை கழிக்கத் துவங்கினார்.
இந்த வேளையில்தான் அவருக்கு எய்ட்ஸ் வைரஸ் காரணமாக நோய் எதிர்ப்புத்திறன் முற்றிலும் குறைந்து வயிற்றில் புற்றுநோய் உருவானது. இதற்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள 1992ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து 1994ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 44 வயதிற்குள் ஒரு பெரிய பிராண்டை உருவாக்கி ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர், தன்னுடைய ஆரோக்கியத்தை கவனிக்காததாலும், ஒழுங்கற்ற வாழ்வியலாலும் மரணம் அடைந்தார் என்பதையும் உலகுக்கு சொல்லத் தவறவில்லை. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் முறையான வாழ்க்கை முறை மிக முக்கியம் என்பதையும் தன் வாழ்க்கையின் மூலம் எடுத்துக்காட்டாக பதிவு செய்திருக்கிறார் பிரான்கோ. அவருக்குப் பிறகு அவருடைய முன்னாள் உதவியாளர், பின்னாளில் பிராண்டின் கிரியேட்டிவ் இயக்குனர் மற்றும் நெருங்கிய தோழியான ரூசெல்லா ஜர்த்தினி( Rossella Jardini) மொஸ்சினோ பிராண்டை வெற்றிகரமாக நடத்தத் துவங்கினர். மொஸ்சினோ பிராண்டை ரூசெல்லா நிர்வகிக்க துவங்கியதற்குப் பிறகு இன்னும் பல மடங்கு அதன் விற்பனையும் சரி அதன் பிராண்ட் மதிப்பும் சரி உயரத் துவங்கியது.
மடோனா, டயானா, நடிகை ஃபிரான் டிரஸ்சர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அதிகாரபூர்வ டிசைனராகவும் மாறியது மொஸ்சினோ கோச்சர். மட்டுமல்ல, உலக அளவில் டாப் பாப் பாடகர்கள் ஆன லேடி காகா, கேட்டி பெர்ரி , ரிக் ரோஸ், மைலி சைரஸ் உள்ளிட்ட பலருக்கும் அவர்களது இசை நிகழ்ச்சிகளுக்கு பிரத்தியேக உடைகள் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனமாகவும் மாறி இருக்கிறது மொஸ்சினோ கோச்சர். 2006ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தொடரில் துவக்க விழாவில் பாடிய மடோ னா மற்றும் லேடி காகாவிற்கு உருவாக்கிய உடைகள் இப்போதும் ஃபேஷன் வரலாற்றில் மிகப்பெரிய அடையாளமாக இடம் பிடித்திருக்கிறது.
தற்போது இந்த பிராண்டின் ஒரு கலர்ஃபுல் சட்டையைத்தான் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் பயன்படுத்தியிருக்கிறார்.அஜித் பயன்படுத்தியிருக்கும் இந்தச் சட்டை தரமான சில்க் மெட்டீரியலில் தயாரிக்கப்பட்டது. சட்டை முழுக்க இத்தாலியின் உலகப் புகழ் கட்டடங்கள் இடம்பெற்றிருக்கும்.
சட்டையின் முன்பகுதியில் இருக்கும் தங்க நிற இதய வடிவத்தில் ‘In Love We Trust’ என்னும் வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருக்கும். ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, அஜித், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ‘மைத்திரி மூவி மேக்கர்ஸ்’ இப்படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஒரு டீசர் வெளியானதற்கு குறியீடுகள்... அதில் பயன்படுத்திய உடைகள் என பிரித்து மேய்ந்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்து பாடல்கள், ட்ரெய்லர் இதெல்லாம் வருவதற்குள் இன்னும் எத்தனை வரலாறுகளை எழுத இருக்கிறார்களோ ரசிகர்கள்!
ஷாலினி நியூட்டன்
|