வண்ண மீன்கள் கிராமம்!
சென்னை-ஆந்திரா எல்லைப்பகுதியான கும்மிடிப்பூண்டியில் இருந்து சற்று வலது புறம் பயணித்தால் பல எழில்மிகு கிராமங்களைத் தரிசிக்கலாம். உழவுக்காகத் தயார் செய்யப்படும் வயல்களில் வாத்துகள் மேய்கின்றன. சாலையோரங்களில் பூத்து நிற்கும் செடிகளில் அணில்கள் தாவிச் செல்கின்றன.  இன்னும் ஏராளமான காட்சிகள் மனதுக்கு இதம் கூட்டுகின்றன. இந்தச் சூழலில் தொடரும் பயணத்தில் தேவம்பட்டு கிராமத்தை அடையலாம். சரியாக பொன்னேரிக்கு சற்று கூப்பிடு தொலைவில் இருக்கிறது இந்தக் கிராமம். தமிழகக் கிராமங்களில் இந்தக் கிராமம் மட்டும் தனித்துத் தெரிகிறது. ஊர் நடுவே சிறிதும், பெரிதுமாக வீடுகள் நிறைந்திருக்கின்றன.  அந்த வீடுகளைச் சுற்றி ஊர் முழுக்க குளங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்ற ஊர்களில் குளத்தில் மீன் இருக்கும். இந்த ஊரில் மீன்களுக்காகவே குளம் இருக்கிறது. மீன்கள் என்றால் நீங்கள் நினைப்பது போல் ஜிலேபி, கட்லா இல்லை. அனைத்தும் வண்ண மீன்கள். மஞ்சள், கருப்பு, வெள்ளை எனப் பல நிறங்களில் கண்ணைப் பறிக்கும் அழகில் குளத்தில் நீந்திக்கொண்டிருக்கின்றன வண்ண மீன்கள்.ஆசியாவின் மிகப்பெரும் அலங்கார மீன் சந்தையாக விளங்கும் சென்னை கொளத்தூருக்கு இங்கிருந்துதான் பெருமளவில் மீன்கள் அனுப்பப்படுகின்றன.
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தேவம்பட்டில் வளர்ந்த வண்ண மீன்கள்தான் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. காலை நேரங்களில் தேவம்பட்டு கிராமம் படு பிசி. குளங்களில் நீந்தும் மீன்களை கை `நெட்’டில் பிடித்து பாலித்தீன் பைகளில் நிரப்பி, சுவாசத்திற்காக ஆக்சிஜன் செலுத்தி, ஆப்பாவில் போட்டு ரகம், சைஸ் வாரியாக பிரித்தெடுத்து, மீண்டும் பேக் செய்து வாகனங்களில் ஏற்றுகிறார்கள் தொழிலாளர்கள்.
நாம் சென்ற காலைப்பொழுதிலும் இந்த வேலைகளில் மும்முரமாக இருந்தனர். பணிகளுக்கு இடையே தேவம்பட்டு கிராமம் வண்ண மீன் கிராமமான கதையைப் பகிர்ந்துகொண்டார், இந்த ஊரின் முன்ளாள் தலைவரான ரவி.``மற்ற ஊர்களை மாதிரி தேவம்பட்டும் நெல், மணிலான்னு வளமாக விவசாயம் பார்த்த ஊருதான். போகப்போக இந்த ஊரோட முகம் மாற ஆரம்பிச்சிது. தண்ணி சவுறடிக்க ஆரம்பிச்சதால விவசாயம் பண்ண கஷ்டமா இருந்துச்சி.
என்னடா நம்ம நிலமை இப்படி ஆயிடுச்சேன்னு நினைச்சோம். ஆனா அந்த சவுறுத்தன்மைதான் எங்க ஊரு இப்ப தனியா தெரிய காரணமா இருக்குது. சவுறு நிலம்ங்குறதால அலங்கார மீன்கள் நல்லா வளருது. இதனால நாங்க இதையே வாழ்வாதாரமா மாத்திக்கிட்டோம்’’ என வண்ண மீன்கள் இங்கு வந்த பூர்வகதையைச் சொன்னார் ரவி. ``1997-98 இருக்கும். விவசாயம் பண்ண முடியல. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப மீன் வளர்க்கலாம்னு தோணிச்சி. ஆரம்பத்துல கட்லா, ரோகு, மிர்கால், சில்வர் கெண்டை, உப்புக்கெண்டைன்னு சாப்பிடுற மீன்தான் வளர்த்தேன். கிலோ 17 ரூபாய், 18 ரூபாய்னு வித்தேன். ஓரளவு லாபம் கிடைச்சிது. அந்த சமயத்துல சவுறு நிலத்துல அலங்கார மீன் நல்லா வளரும்னு சொன்னாங்க. அதை ஏன் நாம செய்யக் கூடாதுன்னு நினைச்சி, அலங்கார மீன்வளர்ப்புல இறங்கிட்டேன்.
முதல்ல 5 சென்ட் நிலத்துல குளம் அமைச்சி மாலி, கோல்டு, கார்ப்-னு 5 ஆயிரம் மீன் குஞ்சுகளை கொளத்தூர்ல இருந்து வாங்கிட்டு வந்து வளர்த்தேன். 60, 70 நாள் வளர்த்து கொளத்தூர் வியாபாரிங்களுக்கு கொடுத்தேன். இதுவும் பரவால்லன்னு தோணிச்சி. அதனால ஒரு ஏக்கர், 2 ஏக்கர்னு மீன் வளர்ப்புக் குளம் பெருக ஆரம்பிச்சிது. அப்படியே என்னோட 8 ஏக்கர் நிலம் முழுக்க மீன் வளர்ப்புக்குளம் அமைச்சேன். அது போதாதுன்னு 7 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து அலங்கார மீன் வளர்க்குறேன்’’ என்கிறார்.
சொந்த நிலம் 8 ஏக்கர், குத்தகை நிலம் 7 ஏக்கர் என 15 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது ரவியின் மீன் வளர்ப்புக்குளம். ஒவ்வொரு குளத்திலும் கோல்டன் ஃபிஷ், மாப், டின் பைல், மாலி என விதம் விதமான மீன்கள் நீந்துகின்றன.
நீருக்கடியில் நீந்தும் மீன்கள் நம் மனதுக்கு மிக நெருக்கமாகிவிடுகின்றன. அவரது குளம் மட்டுமில்லை. ஊரில் உள்ள மற்ற குளங்களிலும் தளும்பி வழிகிறது வண்ண மீன்களின் கொள்ளை அழகு. அனைத்துக் குளங்களையும் சுற்றிப் பார்க்க ஒருநாள் போதாது. சில குளங்களைக் காண்பித்தவாறு தொடர்கிறார் ரவி.
``என்னைப் பார்த்துட்டு ஊருல நிறைய பேரு அலங்கார மீன் வளர்க்க ஆரம்பிச்சாங்க. விவசாயம் பண்ண முடியாத நிலங்களையெல்லாம் மீன் வளர்ப்புக்குளமா மாத்திட்டாங்க. இப்ப வண்ண மீன்கள்தான் எங்க ஊரோட அடையாளமாவே மாறியிருக்கு. 60 குடும்பங்கள் இந்த மீன் வளர்ப்புக் குளங்களை அமைச்சிருக்கு.
400 குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி இருக்கு. மீன் பிடிக்குறது, மீன் குட்டை பராமரிக்கிறதுன்னு பல வேலைகளுக்கு தொழிலாளர்கள் வராங்க. அவுங்க எல்லாத்துக்கும் இந்த வண்ண மீன்கள்தான் சோறு போடுது. இதனால தேவம்பட்டு வண்ண மீன் வளர்ப்பு கூட்டுறவு சங்கம்னு ஒரு சங்கமே ஆரம்பிச்சிருக்கோம்’’ என்ற தகவலோடு முடித்துக்கொண்டார் ரவி. தேவம்பட்டு பகுதியில் சுமார் 160 ஏக்கரில் வண்ண மீன் வளர்ப்புக் குளங்கள் அமைந்திருக்கின்றன. சுற்றிலும் சம்புகள் வளர்ந்து நிற்கின்றன. குளத்தின் மேல்பகுதியிலும், பக்கவாட்டிலும் நீலநிறத்தில் வலைகள் கட்டப்பட்டிருக்கின்றன. வண்ண மீன்களைப் பாதுகாப்பதில் வலைகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இதுகுறித்து விவரிக்கிறார் சந்தியா.
``வண்ண மீன்களைச் சாப்பிட நிறைய பறவைகள் வரும். அதுங்ககிட்ட இருந்து மீன்களைக் காப்பாற்ற குளத்துக்கு மேல்பகுதியில வலை அமைச்சிருக்கோம். பாம்பு உள்ளிட்ட விலங்குகள் குளத்துல இறங்கி மீன்களை லவட்டி சாப்பிட்டுவிடும். இதனால சைடு வலை கட்டி வைக்குறோம். இதுல நாங்க நிறைய பராமரிப்பு வேலையும் பார்க்க வேண்டியிருக்கு.
அலங்கார மீன் வளர்க்க குளம் நல்லபடியா அமைக்கணும். அதுக்காக 4 அடி ஆழத்துக்கு குளம் வெட்டுவோம். அதுல ஒரு அடி ஆழத்துல தண்ணி விடுவோம். தண்ணி விட்டதுக்கு அப்புறம் 4 நாள் கழிச்சி யூரியா, காம்ப்ளக்ஸ், டிஏபி, வேப்பம்புண்ணாக்கு கலந்து போடுவோம். இந்தக் கலவைய போடுறதால தண்ணியோட நிறம் மாறி, குளிர்ச்சியாகும்.
அதுல சின்னச் சின்ன பூச்சிங்க உற்பத்தியாகும். இந்தப் பூச்சிங்க மீன்களுக்கு நல்ல இரையா இருக்கும். யூரியா கலவை போட்டதுக்கு அப்புறம் 3 நாள் கழிச்சி 3 அடி உயரத்துக்கு தண்ணி விடுவோம். அப்புறமா 4 நாள் கழிச்சி மீன் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து விடுவோம். மீன் குஞ்சுகளுக்கு காலை 6-7 மணிக்கு தீவனம் கொடுப்போம்.
கோதுமை, சோளம், கம்பு, கேழ் வரகு, அரிசியை அரைச்சி, அது கூட 10 கிலோவுக்கு ஒரு கிலோங்குற அளவுக்கு கருவாட்டுத்தூளைக் கலந்து வேக வைப்போம். இதுதான் மீன்களுக்கான தீவனம். குளத்துல அங்கங்க தண்ணிக்குள்ள ஒரு தட்டு வச்சி, அதுல தீவனத்தை வைப்போம். அதைக் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம மீன்கள் சாப்பிட்டு விடும்.
தட்டுல தீவனம் மீதமா இருந்தா அதுங்களுக்கு ஜீரணம் ஆகலன்னு அர்த்தம். அதுபோன்ற நாட்கள்ல மறுநாளுக்கு தீவனம் வைக்க மாட்டோம். இப்படி செஞ்சா மீன்களுக்கு ஜீரணப் பிரச்னை சரியாயிடும். மறுநாள் வழக்கம்போல சாப்பிட ஆரம்பிச்சிடும்ங்க. ஒவ்வொரு மீன் வகையும் வளர்றதுல வித்தியாசம் இருக்கும். ஆனா பக்குவமான சமயத்துல அதுங்கள பிடிச்சி விற்பனைக்கு அனுப்பணும். எங்களுக்கு அந்தப் பக்குவம் நல்லா தெரியும். 60-70 நாள்ல எல்லா மீனையும் அறுவடை பண்ணலாம். கை நெட் (கையால் தூக்கும் சிறு வலை) மூலமாக மீன்களைப் பிடிச்சி, வெளில கொண்டு வந்து, பாலித்தீன் கவர்ல போடுவோம். அந்தக் கவர்ல சிலிண்டர் மூலமா ஆக்சிஜன் செலுத்துவோம்.
தண்ணிக்குள்ள இருக்கும் மீன்களுக்கு சுவாசிக்க காத்து வேணுமில்லையா? அதுக்காக ஆக்சிஜன் கொடுக்குறோம். அப்புறமா அந்த மீன்களைக் கொண்டு வந்து ஆப்பாவுல (மீன்களைக் கொட்டி வைப்பதற்கான பிரத்யேகமான தொட்டி போன்ற வலை) கொட்டி, ரகம் வாரியா பிரிச்சி எடுப்போம். அப்புறமா அதுங்கள பாக்கெட் பண்ணி ஆக்சிஜன் கொடுத்து வண்டில அனுப்பி வைப்போம். சின்ன மீன்கள் 24 மணி நேரம் அந்த ஆக்சிஜனைத் தாங்கி இருக்கும். பெரிய மீன்கள் 12 மணி நேரம் தாங்கும்.
நாங்க பேக் பண்ணிக் கொடுக்குற மீன்களை கொளத்தூர்ல இருக்குற வியாபாரிங்க வாங்கி வேற வேற ஊர்களுக்கு அனுப்புவாங்க. எங்களுக்கான பணத்தையும் கொடுத்துடுவாங்க. இதனால தேவம்பட்டு எப்பவும் செழிப்பா இருக்கு’’ என்று கூறும் சந்தியாவின் முகத்தில் பூரிப்பு நடனமாடுகிறது.
செய்தி: அ.உ.வீரமணி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|