தமிழர்களுக்கான அமீரக நண்பன்!



பிழைப்புக்காக ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், எப்படியாவது சம்பாதித்து நாமும் சமூகத்தில் அந்தஸ்தான இடம் பிடித்துவிட வேண்டும் என்னும் ஆசை பேராசையாகும்போதுதான் சில சமூக விரோதிகள் இந்த எண்ணங்களைப் பயன்படுத்தி அப்பாவிகளை ஏமாற்றிவிடுகிறார்கள்.
காலம் காலமாகவே இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அரசும், சமூக ஆர்வலர்களும் எத்தனையோ வழிகளில் அறிவுரை கூறியும் கூட ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளனர்.

அப்படி வேலைக்காக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் ஏமாற்றப்பட்டுக் கைவிடப்படும் தமிழர்களுக்கு உதவி செய்து மீண்டும் ஊருக்கு அனுப்பி வைப்பது அல்லது தகுந்த வேலை வாய்ப்புகளை முறைப்படி ஏற்படுத்திக் கொடுப்பது என பல சேவைகளைச் செய்து வருகிறார்கள் ஏ.கே.மஹாதேவன் மற்றும் அவரின் குழுவான அமீரக நண்பன். ‘‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...’’ ஆரம்பமே மருதகாசி பாடல் வரிகளுடன் நிறைவாகப் பேசத் தொடங்குகிறார் ஏ.கே.மஹாதேவன்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்... இந்த உதவும் எண்ணம் எங்கு, எப்போது உருவானது?

எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில். டிப்ளமோ இன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், பி.பி.ஏ, எம்.பி.ஏ படித்திருக்கிறேன். எனது தந்தை எஸ்.கிருஷ்ணமூர்த்தி உதவி அஞ்சல் அதிகாரி. தாய் எம்.மீனாட்சி தமிழ் ஆசிரியை. எனது மனைவி ராஜலட்சுமி கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். 

ஒரு மகள் அவருடன் பணிபுரிகிறார். மகன் 9ம் வகுப்பு படிக்கிறார்.கடந்த 17 வருடங்களாக அமீரகத்திலும் மொத்தம் 21 ஆண்டுகள் வெளிநாடு வாழ்க்கையுமாக என் வாழ்வியல் சென்றுகொண்டிருக்கிறது. என் அப்பாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. அதிகாலை எழுந்தவுடன் சொல்லாமலேயே கிளம்பிச் சென்றுவிடுவார். நாங்கள் ஏதோ நடைப்பயிற்சி அல்லது காலைக்கடன் முடிக்கச் செல்கிறார் என நினைத்தோம்.

ஆனால், பிற்காலத்தில்தான் புரிந்தது. அப்பா வேலை செய்த பகுதி மக்களிடம் அஞ்சல் சேமிப்பிற்கான விழிப்புணர்வு, அதற்கான கணக்குகள் துவங்குவதற்கான உதவிகள் என அனைத்துமாகச் செய்து வந்திருக்கிறார். அதுதான் என் மனதில் ஆழமாகவே பதிந்தது. கல்லூரி நாட்களிலேயே போராட்டம், சமூக விழிப்புணர்வுக் கூட்டம், இடதுசாரி நடவடிக்கைகள் என அனைத்திலும் முன்னணியாக நிற்பேன். அங்கே துவங்கிய பழக்கம் இது.

அமீரக நண்பன் மற்றும் தமிழ்க் குடில் உருவாக என்ன காரணம்?

துவக்கத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் சில தமிழர்களுக்கு ஊர் திரும்ப அல்லது முறையான விசா மற்றும் வேலை வாங்கிக் கொடுப்பது என உதவி செய்துகொண்டிருந்தேன். கொரோனா காலத்தில்தான் பலரும் வேலையின்றி அப்படியே நாதியின்றி விடப்பட்டனர். அவர்களை ஒன்றிணைத்து பாதுகாக்க வேண்டிய கடமை உருவானது.

ஆரம்பத்தில் வெறும் ஆறேழு நபர்கள்தான் உதவி எனக் கேட்டனர். அவர்களைத் தங்கவைத்து உணவு கொடுத்து வெள்ளை பாஸ்போர்ட் பெற்று ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டிய சூழல்.

இந்தச் செயல் இன்னும் விரிவடையத் துவங்கி ‘அமீரக நண்பன்’ என்னும் வாட்ஸ்அப் குழு துவங்கப்பட்டு, அதன் மூலம் என் நண்பர்கள் பலரையும் ஒன்றிணைத்தேன். பணமாக, உணவாக, பொருளாக என பலரும் எனக்கு உதவ முன்வந்தனர். சிலர் நேரடியாகக் களத்தில் இறங்கியும் வேலை செய்யத் தயாராக வந்தனர். 

யோசித்துப் பாருங்கள். கொரோனா தொற்று கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. அவ்வேளையில் களத்தில் இறங்கி வேலை செய்வதெல்லாம் எவ்வளவு ஆபத்து! அதிலும் இந்தியாவைக் காட்டிலும் வெளிநாடுகளில் கொரோனாவின் தாக்கம் வேறு விதமாக இருந்தது.

அதையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலரும் என்னுடன் கைகோர்த்தார்கள். சுகாதார, மருத்துவ ஊழியர்களே பலரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டுக்குள் தங்கிவிட்ட நேரம் என்கையில் நாங்கள் எம்மாத்திரம். ஆனாலும் இளைஞர்கள் வந்தார்கள். அன்று ஒரு சமயத்தில் 30 பேர் தங்கி, உண்டு செல்ல ஏதுவாக ‘தமிழ்க் குடில்’ துவங்கப்பட்டு இன்று வரை செயல்படு கிறது. 80க்கும் மேலான உறுப்பினர்கள் இந்தத் ‘தமிழ்க் குடில்’ சேவையில் தங்களை இணைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

எந்தெந்த பிரச்னைகளால் வெளிநாட்டில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள்? எப்படிப்பட்ட உதவிகள் தேவைப்படுகின்றன?

வெளிநாட்டில் வேலை என்றதும் முதலில் இந்தியர்கள் அணுகுவது உள்ளூரில் இருக்கும் இடைத்தரகர்களைத்தான். இந்த ஏஜென்ட்கள் கிடைத்தான் அடிமை என லட்சக்கணக்கில் வாங்கி பையில் போட்டுக்கொண்டு பாஸ்போர்ட்டுக்கு டூரிஸ்ட் விசா வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். 

அவர்களும் அதை சரியாகக் கவனிக்காமல் துபாய் வேலை, நிறைய காசு என்னும் கனவுகளுடன் வருவார்கள். ஏஜென்ட்டோ இங்கே பணத்தை வாங்கிக் கொண்டு அங்கே இருக்கும் இன்னொரு ஏஜென்ட்டைக் காட்டிவிடுவான். அவனோ இவர்கள் வந்து இறங்கிய பின்னர்தான் வேலை என்ன இருக்கிறது எனத் தேடவே துவங்குவான்.

ஏதேனும் வேலை கிடைத்துவிட்டால் அங்கேயும் ஒரு தொகை வாங்கிக்கொண்டு வேலைக்குச் சேர்த்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவ்வளவுதான். அதன்பின் இந்திய ஏஜென்ட்டுக்கும் அழைப்பு போகாது, வெளிநாடு ஏஜென்டுக்கும் போன் போகாது. இவர்களும் டூரிஸ்ட் விசா முடிந்து, மாட்டிக் கொள்வார்கள். 

அப்படியான சமயத்தில்தான் எங்களைப் பற்றித் தெரிந்து போன் செய்து உதவி கேட்பார்கள். அடுத்து சட்ட விரோதமாக கடத்தல், பொருட்கள் கொண்டு செல்வதால் மாட்டிக்கொள்வது, பாஸ்போர்ட் முதலாளி வசம் மாட்டிக் கொள்வது, அதனால் தொடர்ந்து வேலையின்றி ஆதரவற்று நிற்பது என எத்தனையோ பிரச்னைகள் உள்ளன.

இதில் வெளிநாட்டு வேலை என ஊரிலும் பந்தாவாகக் கிளம்பியிருப்பார்கள். அதனால் திரும்பிப் போவதும் முடியாது. இதை எல்லாம் சரி செய்து பத்திரமாக அவர்களைத் திருப்பி ஊருக்கு அனுப்புவதே ‘தமிழ்க் குடில்’ மற்றும் ‘அமீரக நண்பன்’ வேலை. இதில் சில அழைப்புகள் எல்லாம் மனதை உலுக்கும். ஒரு தாயிடமிருந்து, ஆறு மாதமாக என் மகனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என ஒரு அழைப்பு இந்தியாவில் இருந்து வந்தது. இப்படி அழைத்த ஒரு தந்தையும் கூட இருக்கிறார். முதலில் அந்த நபர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என பிணவறையிலிருந்து எங்கள் தேடல் துவங்கும்.

ஒருசிலரை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கூட மீட்டு ஊருக்கு அனுப்பி இருக்கிறோம். இதில் சர்வதேச தற்கொலை வழக்குகளைக் கூட நாங்கள் சந்தித்திருக்கிறோம். அடுத்து மிகவும் குறைந்த செலவில் கிடைக்கும் குடிக்கு அடிமையாகி இருப்போரை முதலில் மாற்ற வேண்டிய கடமையும் எங்களுக்கு உண்டு. ‘தமிழ்க் குடிலி’ல் மதுவுக்கு அனுமதி இல்லை.

பெண்கள் எப்படிப்பட்ட பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்?

பெண்கள் நிலைதான் இன்னும் நம் நெஞ்சைப் பதறவைக்கும். இந்திய மதிப்பில் வெறும் ரூ.20,000 சம்பளத்திற்கெல்லாம் இங்கே வேலை பார்க்கலாம் என நம்பி ஏமாந்து பணம், பொருள் இழந்தால் கூட பரவாயில்லை, தன்னையும் இழந்து நிற்கும் அவலத்தை நிறைய பார்த்திருக்கிறேன்.

இவர்களை உள்ளூரில் மூளைச் சலவை செய்து அனுப்பி வைப்பதற்காகவே தமிழகத்தில் பல ஏஜென்ட்கள் உள்ளனர். பாஸ்போர்ட், ஓரிரு லட்சம் பணம் எல்லாம் வாங்கிக்கொண்டு, இதோ உனக்கு விசா வந்துவிட்டது என அதே டூரிஸ்ட் விசா அல்லது விசிட்டர் விசாவுடன் தயார் செய்துவிடுவார்கள். அதே போல் வெளிநாட்டில் இருக்கும் ஏஜென்ட்கள் இப்படியான வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் கேட்கும் முதலாளிகளிடம் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கிக்கொண்டு அதில் ஒன்றோ இரண்டு லட்சமோ உள்ளூர் ஏஜென்டிடம் கொடுப்பான். அதில் ரூ.50,000தான் அந்தப் பெண்ணுக்குச் செல்லும். அதில் மயங்கி பெண்களை அவர்களின் குடும்பத்தார்களே வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு விட்டவர்கள் அதிகம்.

ஓரிரு லட்சத்தில் ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு எடுக்கும் முதலாளிகளிடம் இந்தப் பெண்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டு கிட்டத்தட்ட ஏலம் நடக்கும். அப்படிச் செல்லும் பெண் அங்கே எப்படி மரியாதையாக நடத்தப்படுவார்..? வீட்டு வேலை மட்டும் இல்லை, அரேபியாகாரனின் அடிமையாகவே இருக்க வேண்டும். அடி உதை, பாலியல் துன்புறுத்தல் அத்தனையும் உண்டு. ஒரு கட்டத்தில் சரிப்பட்டு வரவில்லை எனில் பாஸ்போர்ட் பிடுங்கப்பட்டு ஒரு அறையில் உணவு, தண்ணீர் என ஏதுமின்றி விடப்படுவர்.

 அங்கே பசி உச்சநிலையில் இருக்கும் போது வேறு வழியே உனக்கு இல்லை என்கிற நிலையை உண்டாக்கி அடுத்து பாலியல் தொழில் அல்லது பார் டான்ஸர் வேலைக்குக் கொண்டு விடுவர். இப்படி மாட்டிக்கொண்டு ஒரு ஏஜென்ட் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்த பெண்ணை சுவர் ஏறிக் குதித்துக் காப்பாற்றிய அனுபவம் கூட எங்களுக்கு உண்டு.

வெளிநாட்டில் வேலை எனில் முதலில் கவனிக்க வேண்டியவை எவை?

உங்களுக்குக் கொடுக்கப்படும் விசாவில்தான் முதல் கவனம் தேவை. எம்ப்ளாய்மெண்ட் விசா இல்லாமல் இங்கே வேலை செய்ய முடியாது. அதேபோல் வீட்டு வேலை எனில் ‘டொமஸ்டிக் ஹெல்பர்’ விசா அவசியம். இதெல்லாம் இல்லை என்றால் விமானத்தில் வேலைக்கென காலடி எடுத்து வைக்காதீர்கள். ரூ.15,000, - ரூ.40000 சம்பளம் வெளிநாட்டில் வாங்குவது நம் இந்தியாவில் ரூ.5000 மாதச் சம்பளம் வாங்குவதை விடக் கொடுமையானது. இதற்கு 100 நாட்கள் வேலைத் திட்டத்திலேயே ராஜா / ராணியாக நம் சொந்த மண்ணில் வாழலாம். அதை மனதில் வைத்துக் கொண்டு உங்களுக்கான சம்பள நிர்ணயத்தை சோதனை செய்யுங்கள்.

எல்லா நாடுகளிலும் பிரச்னை எனில் உதவ தூதரகங்கள் இருக்கும். ஆனால், எல்லாப் பிரச்னைகளையும் தெருவில் இறங்கிப் பார்த்து உதவ அவர்களாலும் முடியாது. அந்த நாட்டில் என்ன சட்ட திட்டங்களோ அதற்குள்தான் அவர்களும் வேலை செய்தாக வேண்டும். அதில் உள்ள வழிகளைக் கண்டறிந்து ஆவன செய்வதே எங்கள் ‘அமீரக நண்பன்’, மற்றும்  ‘தமிழ்க் குடில்’ வேலை.

அரசு சார்பில் அமெர், தஸ்ஹீல் போன்ற அரசு சேவை மையங்கள் உள்ளன. அங்குள்ள சேவைகளை நமது தொழிலாளர்களுக்குப் பெற்றுத்தர உதவி வருகிறோம். துபாயில் ஈமான் என்கிற அரசு அமைப்பும் உண்டு. இவற்றுடன் எல்லாம் ‘தமிழ்க் குடில்’ இணைந்து உதவிகள் செய்து வருகிறது.

எதிர்காலத் திட்டம் என்ன?

நானும் என் நண்பர் கணபதி சுப்பு (எ) மீடியா சுப்பு இருவரும் துவக்கத்தில் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், திருமணங்கள், பிறந்த நாள் நிகழ்வுகள்... இங்கே எல்லாம் மீதமாகும் விருந்து உணவுகளை ஒரு சின்ன வண்டியில் சேமித்துக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் இருப்பிடங்களுக்குச் சென்று ஒரு நாளாவது நல்ல சாப்பாடு கொடுப்போமே என கொடுத்து வந்தோம்.

தொடர்ந்து நாங்களே அங்கிருக்கும் தமிழர்கள் அமைப்புகள், சங்கங்கள், கிளப் எனச் சென்று, பல லட்சம் ஆடம்பரமாக செலவு செய்வதற்கு இவர்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கலாமே என்னும் விழிப்புணர்வை உண்டாக்கி அதன் மூலமும் சாப்பாடு கொடுக்கத் துவங்கினோம். பிறகுதான் ஓரிரு தாயகம் திரும்பும் உதவிகள், வழக்குகள் என செய்து வந்தோம்.
கொரோனா காலம்தான் எங்களை ‘தமிழ்க் குடில்’ உருவாக்கத் தூண்டியது.

எங்களுக்குப் பின்னால் இந்த சேவை அப்படியே நில்லாமல் இன்னும் பலர் இதில் இணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதோ 80க்கும் மேலான நண்பர்கள், இளைஞர்கள் இன்று ‘தமிழ்க் குடில்’ என்னும் அமைப்பை எங்களுடன் இணைந்து அற்புதமாக நடத்தி வருகிறார்கள். இன்னும் இந்த 80 , 800 ஆக மாற வேண்டும். அதே சமயம் இந்தத் தமிழர்கள் ஊர் விட்டு ஊர் வந்து ஏமாறு வதும் குறையவேண்டும்.

முன்பைக் காட்டிலும் இப்போது இந்தப் பிரச்னைகள் சிறிது குறைந்திருக்கின்றன. குறைந்தபட்சம் விசா அளவிலாவது இளைஞர்கள் கவனமாகச் செயல்படுவதைக் காண முடிகிறது. இன்னும் இந்த ஏமாற்றங்கள் பூஜ்ஜியமாக மாறவேண்டும் என்பதே எங்களின் நோக்கம். எந்தப் பலனும் எதிர்பாராமல் உதவிகள் செய்கிறோம். ஆனால், எங்களின் இந்த சேவையால் மீடியா சுப்புவுக்கும், எனக்கும் டாக்டர் பட்டம் கிடைத்திருக்கிறது. செய்யும் நன்மைக்கு என்றேனும் நமக்கான பலனும், அங்கீகாரமும் தேடி வரும் என்பதற்கு நாங்களே ஆதாரம்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: கார்த்தீஸ்வரன்