கண்ணாடிப் படகில் போனா பவளப் பாறைகளை பார்க்கலாம்!



ஓங்கி வளர்ந்து நிற்கும் தென்னை, சவுக்கு மரங்கள் நிறைந்த அழகிய வெண் மணல் பரப்புடன் கூடிய கடற்கரை. கடல் அலைகளின் ஆரவாரமற்ற, அமைதியான கடலுக்கு அடியில் அரியவகை பவளப் பாறைகள். 
கடல்பாசிகள், நீந்திச் செல்லும் வண்ண வண்ண மீன்கள், நடுவே வெண் மணல் திட்டு... இப்படி இன்னிசை பாடும் காற்றுடன் கூடிய கண்ணாடிப் படகில் சென்று பார்க்கும் மனதை மயக்கும் சொர்க்கமாக விளங்குகிறது ஏர்வாடி பிச்சைமூப்பன் வலசை மணல் திட்டு. இது ஒரு சூழல் சுற்றுலா தலம் ஆகும்.

திமிங்கலம், டால்ஃபின், கடற்பசு, கடல் ஆமைகள், கடல் குதிரை போன்ற அரியவகை மீன்கள், கடல் தாவரங்கள், கடல்பாசி, சங்கு, சிப்பி, முத்து என உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாதவகையில் ஆயிரக்கணக்கான அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுடன், அழகியலும், அரிய வகை பவளப்பாறைகளும் என இயற்கை வழிய அமைந்துள்ளது மன்னார் வளைகுடா கடல் பகுதி. 
ராமநாதபுரம் மாவட்டத்தின் இப்பகுதியில் பாதுகாப்பு அரணாக அரியவகை பவளப்பாறைகள் விளங்குகின்றன. மீன்களின் இருப்பிடமாகவும், புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மீனவ கிராமங்களுக்கும், மீனவர்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதுகாப்பு அரணாகவும் இவை இருக்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தேவிப்பட்டினம், தொண்டி, அடுத்தபடியாக தொடர்ச்சியான நீண்ட கடற்கரையாக வாலிநோக்கம், மூக்கையூர், நரிப்பையூர், ரோச்மா நகர் கடற்கரையும் விளங்குகிறது. 
நிலப்பகுதியிலிருந்து கடல்பகுதியில் சுமார் 3 முதல் 15 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் குட்டி தீவுகள் அமைந்துள்ளன.தூத்துக்குடி குழுவான வேம்பார், வாலிநோக்கம் வரையிலான 7 தீவுகள், கீழக்கரை குழுவில் 7 தீவுகள், மண்டபம் குழுவில் 7 தீவுகளாக உள்ளன. இந்தத் தீவுகளுக்கு மிக அருகில் அழகிய பவளப்பாறைகள் குழு, குழுக்களாக இயற்கையாக அமைந்துள்ளன.

கடல் வெப்பநிலையை சீராக வைப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த பவளப்பாறைகள், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தும், உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கும் கார்பன் டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் காரணியாகவும் அமைந்துள்ளதால் இவை மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்த இடமாக அமைந்துள்ளன.

இயற்கையின் அற்புதப் படைப்பு களில் ஒன்றாக விளங்கக்கூடிய இந்த பவளப்பாறைகள் பாதுகாப்பு அரணாக இருந்து கடல் சீற்றம், புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து கடற்கரையையும், மீனவர்கள், மீனவ கிராமத்தையும், கடல் வாழ் உயிரினங்களையும் கோட்டை போல் கவசமாக இருந்து பாதுகாக்கிறது.

மீனவர்களே செல்லாத தடை செய்யப்பட்ட அத்தகைய பவளப்பாறை பகுதியில் எவ்வித சேதம், தொந்தரவின்றி, நாம் நேடியாக பார்ப்பது என்றால் கடினமான சூழ்நிலை. ஏர்வாடியில் மட்டும் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில், அதாவது கண்ணுக்கு தெளிவாகத் தெரியும் தூரத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய பவளப் பாறைக் குழுக்கள்.

இதுகுறித்து ஏர்வாடி வனச்சரக அலுவலர் மா.பிரதாப்பிடம் பேசியபோது, ‘‘ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி ஊராட்சி, பிச்சை மூப்பன்வலசை கடலில் பவளப்பாறைகள் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்கள், கடல் தாவரங்கள் என இயற்கையாக அமைந்துள்ளதால் கடந்த 2021ம் ஆண்டு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பாக மணல் திட்டு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலாத் தலத்தை அமைத்து, கண்ணாடிப் படகு சவாரி துவங்கப்பட்டது.

கடற்கரைப் பகுதியிலிருந்து மரப்பாலத்தில் ஏறி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அடிப் பகுதியில் கண்ணாடியால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள, உலோகத்தால் ஆன 2 படகுகள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு அவசர கால மாற்றுப் படகும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் மன்னார் வளைகுடாவுக்கு வனத்துறையினர் உடன் வந்து, பாதுகாப்பு கவச உடை அணிவித்து ஒரு படகில் 12 பேர் அழைத்துச் செல்லப்படுவர். அலைகளின்றி அமைதியாக இருக்கும் கடலில் சீறிப் பாய்ந்து செல்லும் படகு ஒரு கிலோமீட்டர் தூரம் வந்தவுடன் வேகம் குறைக்கப்படும்.

அப்போது படகின் கீழ்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி வழியாக சுமார் 7 அடி ஆழத்தில் இருக்கும் அரிய வகை பவளப்பாறைகள், கடல் விசிறி உள்ளிட்ட பசுமையான கடல் தாவரங்கள், மனித மூளை, விரல் வடிவம், மலை வடிவம், மான்கொம்பு, விரிந்த தாமரை இலை வடிவம், மேஜை வடிவம் போன்ற வடிவ முடைய பவளப்பாறைகள், பல வண்ணங்களுடன் கலர், கலராகத் தெரியும் பவளப்பாறைகளின் நடுவே துள்ளிக் குதித்தோடும் வண்ண, வண்ண மீன்கள், சிறிய சைஸ் முதல் பெரிய சைஸ் சங்குகள், சிப்பிகள், முத்துகள், பச்சை, மஞ்சள், இளஞ் சிவப்பு, ஆரஞ்சு, நீல நிற கடற்பாசிகள், கடல் அட்டைகள், கடல் பஞ்சுகள், ஓங்கிகள் எனப்படும் டால்ஃபின்கள் என பலவகை கடல் உயிரினங்கள் காணப்படும். இவை குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கிக் கூறப்படும். மேலும் குடிநீர், கழிப்பறைகள், குளியலறைகள், பெண்கள் உடை மாற்றும் அறை, கேண்டீன் வசதி மற்றும் சிறுவர் பூங்கா உள்ளன. ...’’ என்றார்.

கருமுத்து.சுப்ரமணியசிதம்பரம்