100 ல் 10
ஒவ்வொரு வருடமும் ‘உலகின் செல்வாக்கான 100 பேர்’ என்கிற பட்டியலை வெளியிடுவது ‘டைம்’ பத்திரிகையின் வழக்கம். சமீபத்தில் 2025ம் வருடத்துக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் மார்க் சக்கர்பர்க், ஈத் ஷீரன், ஸ்கார்லெட் ஜொஹான்சன், செரினா வில்லியம்ஸ், டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் போன்ற பல பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர். இதுபோக அந்தப் பட்டியலில் பல துறைகளைச் சார்ந்த ஜாம்பவான்களும் இருக்கின்றனர். அவர்களில் சிலரைப் பற்றிய விவரங்கள் இதோ...
ஏஞ்சலின் முரிமிர்வா
ஜிம்பாப்வேயின் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர் ஏஞ்சலின் முரிமிர்வா. பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவியாகத் திகழ்ந்தார்; ஆனால், ஏஞ்சலினைத் தொடர்ந்து படிக்க வைக்கும் அளவுக்கு அவரது குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் இல்லை. தொண்ணூறுகளில் ‘CAMFED’ (Campaign for Female Education) என்ற அமைப்பு நூற்றுக்கணக்கான ஜிம்பாப்வேயின் பெண் குழந்தைகளின் கல்விக்காக பொருளாதார ரீதியில் உதவியது.
அந்த உதவி ஏஞ்சலினுக்கும் கிடைக்க, படிப்பை மகிழ்ச்சியாகத் தொடர்ந்தார். இப்போது ஜிம்பாப்வே, கானா, டான்சானியா, ஜாம்பியா, மாலாவி ஆகிய நாடுகளில் வசிக்கும் மில்லியன் கணக்கான பெண் குழந்தைகள் படிப்பதற்காக உதவி செய்து வருகிறார். ஆம்; இன்று ‘CAMFED’ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியே ஏஞ்சலின்தான்.
ரிச்சர்ட் தாம்ப்ஸன்
இருபது வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் குப்பைகள் குறித்து பேசிய கடல் உயிரியலாளர்தான், ரிச்சர்ட் தாம்ப்ஸன். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சூழலியலுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மைக்ரோபிளாஸ்டிக்ஸ் குறித்து உலகுக்கு அறிவித்தவரும் இவர்தான்.
ஆம்; மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தியது தாம்ப்ஸன். பல வருடங்களாக கடல் குப்பைகளைக் குறித்து ஆய்வு செய்து வரும் ரிச்சர்ட், சர்வதேச கடல் குப்பை ஆராய்ச்சி மையத்தை நிர்வகித்து வருவதோடு, கடல் உயிரியல் துறையின் பேராசிரியராகவும் இருக்கிறார். மரியா கொரினா மச்சாடோ
வெனிசுலாவின் ‘இரும்பு மனுஷி’ என்று அழைக்கப்படுபவர், மரியா கொரினா மச்சாடோ. வெனிசுலாவை ஆளும் கட்சியின் ஊழல் மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் எதிர்க்கட்சி தலைவர் இவர்.
வெனிசுலாவில் அதிக செல்வாக்கான பெண்ணும் இவரே. ஆளும் கட்சியின் ஊழல் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக இவர் நடத்திய போராட்டங்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. வெனிசுலாவை விட்டு எங்கேயும் செல்ல முடியாமல் தடை செய்யப்பட்டிருக்கிறார் மரியா. சைமன் பைல்ஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனைதான், சைமன் பைல்ஸ். ஒலிம்பிக் போட்டிகளில் 11 பதக்கங்களையும், 30 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்று ஜிம்னாஸ்டிக்கில் அசைக்க முடியாத வீராங்கனையாகத் திகழ்கிறார்.
எல்லா காலங்களிலும் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளில் ஒருவர் மற்றும் எல்லா காலங்களிலும் சிறந்த ஒலிம்பிக் போட்டியாளர்களில் ஒருவர் எனப் புகழப்படுகிறார் சைமன். இப்போது இவரது வயது 28. ஹோசியர்
அயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர், ஹோசியர். பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர் என்ற பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் இவர்.
ப்ளூஸ், சோல், ராக், ஆர் அண்ட் பி, ஃபோக், இண்டி என பல வகைமைகளில் இசைப் படைப்புகளைப் படைத்து, அயர்லாந்தின் இசை அடையாளமாகத் திகழ்கிறார். அரசியல் மற்றும் சமூக நீதியை மையமாக வைத்து பாடல்களை எழுதுவதால் ஹோசியருக்கு மக்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு.
ரோஸ்
நியூசிலாந்தில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, தென் கொரியாவுக்கு இடம் பெயர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியர்தான், ரோசன்னா பார்க் எனும் ரோஸ். உலகப்புகழ் பெற்ற பெண்களின் இசைக்குழுவான ‘பிளாக் பிங்க்’கின் உறுப்பினர் இவர். கடந்த 2021ம் வருடம் தனது முதல் தனிப்பாடல் ஆல்பமான ‘ஆர்’ஐ வெளியிட்டார் ரோஸ். முதல் வாரத்திலேயே 4.48 லட்சம் இசைப்பிரதிகள் விற்பனையாகின.
கொரியாவில் ஒரு பெண் இசைக் கலைஞரின் தனிப்பாடல் ஆல்பம் வெளியான முதல் வாரத்திலேயே இவ்வளவு பிரதிகள் விற்பனையானது இதுவே முதல் முறை. தென் கொரியாவிலேயே அதிக இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரையிலான ஜென் இஸட் தலைமுறையினரின் விருப்பமான இசைக் கலைஞர்கலில் ரோஸும் ஒருவர்.
பாபி பிரவுன்
உலகப் புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர் இவர். எழுத்தாளர், தொழில் அதிபர் என பன்முக ஆளுமையாவும் வலம் வருகிறார். “பாபி எந்தடிரெண்டையும் பின்பற்றுவதில்லை. அவரே புதிய டிரெண்டை உருவாக்குகிறார்...” என்கின்றனர்.
‘பாபி பிரவுன் காஸ்மெடிக்ஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பாய்ச்சலை உண்டாக்கினார். இவர் உருவாக்கிய நேச்சுரல் - ஷேட் லிப்ஸ்டிக்குகள் அழகு சாதனப் பொருட்கள் துறையில் புரட்சியை உண்டாக்கின. அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்து ஒன்பது புத்தகங்களை எழுதியிருக்கிறார். சாண்ட்ரா டயாஸ்
அர்ஜெண்டினாவை சேர்ந்த சூழலியாளர் மற்றும் பேராசிரியர் இவர். சூழலியல் சார்ந்த பிரச்னைகளைக் குறித்து விவாதிக்கும் போது, விஞ்ஞானிகள் அல்லது நிபுணர்கள் சொல்லிய முக்கியமான மேற்கோள்களைச் சுட்டுவது வழக்கம். அப்படிப் பயன்படுத்தப்படும் பல மேற்கோள்களுக்குச் சொந்தக்காரர் சாண்ட்ரா.
2019ம் வருடம் அறிவியலில் முக்கியமான பத்து நபர்களின் பட்டியலை சூழல் சார்ந்த ஒரு பத்திரிகை வெளியிட்டது. அதிலும் இடம் பிடித்தார். உலகளவில் சூழலியலில் முக்கிய பெண் ஆளுமையாகத் திகழும் சாண்ட்ராவின் வயது 64.
ரஷிதா ஜோன்ஸ்
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை, ரஷிதா ஜோன்ஸ். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் தனக்கான ஓர் இடத்தை அழுத்தமாகப் பிடித்து வைத்திருக்கும் நடிகை இவர். ‘த சோஷியல் நெட்வொர்க்’, ‘த டென்’, ‘லிட்டில் பிளாக் புக்’ உட்பட முப்பதுக்கும் மேலான படங்களிலும், ‘த லாஸ்ட் டான்’, ‘பாஸ்டன் பப்ளிக்’, ‘த ஆபிஸ்’ உட்பட நாற்பதுக்கும் மேலான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார். இப்போது ரஷிதாவின் வயது 49.
கிளாடியா செயின்பாம்
மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாறு படைத்தவர், கிளாடியா செயின்பாம். கடந்த வருடம் மெக்ஸிகோவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சமூக வலைத்தளங்களில் டிரெண்டானவர். 2024ம் வருடத்தின் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது.
இதில் நான்காம் இடத்தைப் பிடித்தார் கிளாடியா.அரசியல் மட்டுமல்லாமல் அறிவியலிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார். கால நிலை விஞ்ஞானியான கிளாடியா, சூழலியல் சார்ந்து இரண்டு புத்தகங்களையும், நூற்றுக்கும் மேலான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
த.சக்திவேல்
|