கழிவுகளின் தேசம்!



கடந்த வருடம் கேரளாவிலிருந்து நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவு தொடர்பாக இரண்டு மாநிலங்களுக்குமிடையே சர்ச்சைகள் வெடித்ததை பலர் நினைவு வைத்திருக்கலாம்.

இது தொடர்பாக இரண்டு மாநில உயர்நீதிமன்றங்களும் இரு மாநிலங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படிக் கேட்டுக்கொண்டது. 
நிஜத்தில் இன்றைய கேரளா என்பது ஒருகாலத்தில் இருந்தது மாதிரியான பச்சைப் பசேல் என்ற மாநிலம் கிடையாது. முன்பு கேரள மாநிலத்தின் பாதி மக்கள் கிராமத்தில்தான் வாழ்ந்தனர். ஆனால், இன்று நிலைமை வேறு.

உதாரணமாக இன்னும் 10 வருடங்களில் கேரள நகர்ப்புறங்களிலேயே அதிகளவு மக்கள் வசிப்பார்கள் என்கிறது புள்ளிவிபரம். அதாவது மாநில மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் நகரங்களில் வசிப்பார்களாம்.இந்த மாற்றம்தான் கேரளாவை ஒரு குப்பைக் கழிவு மாநிலமாக மாற்றிவருவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.  
கேரளாவின் கழிவுப் பிரச்னை குறித்து அந்த மாநில மக்களுக்கே இரு வருடங்களுக்கு முன்புதான் தெரியும் என்றால் நம்ப முடிகிறதா?

2023ம் ஆண்டு கொச்சிக்கு பக்கத்தில் இருந்த பிரம்மபுரம் எனும் ஒரு முனிசிபல் குப்பைக் கிடங்கில் இருந்த குப்பைகள் திடீரென பற்றி எரியத் தொடங்கின. இந்தத் தீயால் கொச்சி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட ஒருவாரத்துக்கு நகர மக்களால் கண்களைத் திறக்க முடியவில்லை. 

இந்தச் சம்பவம் கேரளாவையே உலுக்கியது. இந்நிகழ்வுக்குப் பிறகு கேரளாவிலுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியதாகவும் அதன் விளைவாகவே அருகில் இருக்கும் மாநிலமான தமிழ்நாட்டின் தென்பகுதியில் தங்கள் மாநிலத்தில் சேரும் குப்பைகளை கொட்டத் தொடங்கியதாகவும் சுற்றுச்சூழல்வாதிகள் சொல்கிறார்கள்.  

இக்குற்றச்சாட்டை சீரியசாக எடுத்துக்கொண்ட கேரள அரசும் ‘ஜீரோ வேஸ்ட்’ (zero waste) என பிரசாரம் செய்யத் தொடங்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்தது.
ஆனால், இந்த ஜீரோ வேஸ்ட் செயல்திட்டம் குப்பைகளை சேராமல் தடுத்ததைவிட இன்னும் அதிகமாக சேரத்தான் உதவியது என்று சொல்கிறார்கள் இது தொடர்பான சமூக ஆர்வலர்கள்.

பொதுவாக ஜீரோ வேஸ்ட் என்றால் ஒரு பொருளின் உற்பத்தி முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். உதாரணமாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை (சிங்கிள் யூஸ்ட் ப்ளாஸ்டிக்) தடைசெய்யவேண்டும். இதில்தான் நச்சுக்கள் அதிகம்.

ஆனால், இதைச் செய்யாமல் அந்த ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக்கை அது கழிவாக - குப்பையாக சேர்ந்ததும் அதை நிலத்தில் கொட்டுவதோ அல்லது எரிப்பதோ ஜீரோ வேஸ்ட் கிடையாது என்று சொல்கிறார்கள் விற்பன்னர்கள்.ஒருகாலத்தில் பெருமளவு கிராமங்களைக் கொண்ட மாநிலமாக கேரளா இருந்தது. உதாரணமாக 2011ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கேரள கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்கள்தொகை 47.7 சதவீதம். ஆனால், இன்று கேரளா நகரமயமாக்கலில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

இதனால்தான் வரும் 2036ம் ஆண்டுக்குள் கேரளாவின் மக்கள்தொகையில் சுமார் 96 சதவீதத்தினர் கிராமங்களைவிட்டு நகரத்துக்கு குடிபெயர்ந்துவிடுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள். 

இந்த நகரமயமாக்கலும் அதனோடு சேர்ந்த நுகர்வுக் கலாசாரமும்தான் கேரளாவை குப்பைக் காடாக மாற்றிவருவதாக கேரள ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.குப்பைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று மக்கும் குப்பை. மற்றது மக்காத குப்பை. கேரள குப்பையில் 80 சதவீதம் மக்கும் குப்பை. இதனால் பெரிய பிரச்னை இல்லை. இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

ஆனால், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் மற்றும் ஈ வேஸ்ட் குப்பைகள் நிலத்திலும் கடலிலும் கொட்டப்பட்டால் ஆபத்துதான் என்று எச்சரிக்கிறார்கள் ஆர்வலர்கள்.
உதாரணமாக கேரளாவின் கடற்கரைகளை எடுத்துக்கொண்டால் கரைப் பகுதிகளில், ஒரு சதுர மீட்டருக்கு சுமார் 1.66 பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. உலகளவிலேயே கரைப்பகுதிகளில் சதுர மீட்டருக்கு இது 0.55 ஆக இருக்க, கேரளாவின் இந்த எண்ணிக்கை அம்மாநில மக்களையே அதிகம் பாதிக்கும் என்று சொல்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக 2018ம் ஆண்டு கேரள அரசு குடிநீர் தொடர்பாக ஓர் ஆய்வை எடுத்தது. அதில் கேரளாவின் குடிநீரில் சுமார் 73 சதவீதம் சுத்தமில்லா குடிநீர் என்று அறிக்கை சமர்ப்பித்தது.
குடிநீர் மட்டுமல்ல... கேரளப் பகுதியைச் சேர்ந்த கடல் நீரிலும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு அதிகமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கேரள மக்களின் உணவில் மீன், இறைச்சி, முட்டையின் பங்கு அதிகம். இந்த அசைவ உணவுகள் எல்லாமே கடல் நீரையும், நிலத்தடி நீரையுமே நம்பி இருப்பவை. ஆகவே கேரள அசைவ உணவிலும் குப்பை நச்சு கலந்திருக்கும் என அடித்துச் சொல்கிறார்கள். இதனால்தான் எந்தவொரு வைரஸ் நோயும் முதன்முதலில் கேரளாவில் தோன்றி, அதன் பிறகே இந்தியா முழுக்க பரவுகிறது.

உதாரணமாக சிக்குன்குனியா, எலிக் காய்ச்சல், ஹெப்பாடிடிஸ், டெங்கு போன்ற நோய்கள் எல்லாம் முதலில் கடவுளின் தேசமான கேரளாவில்தான் கண்டறியப்பட்டது என்பதை நினைவில் கொண்டால் மேலே சொன்ன புள்ளிவிபரத்தின் வீரியம் புரியும். ஒருகாலத்தில் கேரள உணவு என்றால் அது லோக்கல் உணவாக இருக்கும். மரவள்ளிக் கிழங்கும், மீன் குழம்பும் இருந்தால் போதும்... சேட்டன்களும் சேச்சிகளும் கொண்டாடித் தீர்ப்பார்கள்.ஆனால், நகரமயமாக்கலும் அதனோடு இணைந்த நுகர்வுக் கலாசார உணவும் அம்மாநிலம் முழுக்க யூஸ் அண்ட் த்ரோ கல்சரை ஏற்படுத்திவிட்டது. அதனால் இன்று பாக்கெட் உணவுகள் கடவுளின் தேசத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது.  

இதோடு தொற்றுநோய் பாதிப்புகளால் ஏற்படும் மருத்துவக் கழிவுகள் புற்றீசல்போல் அதிகரித்து வருகின்றன. ஆக, பிளாஸ்டிக், பாக்கெட் உணவுகள், மருத்துவக் கழிவுகள்... என குப்பைகள் மலை மலையாகக் குவிகின்றன. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என அம்மாநிலம் முடிவெடுப்பது நல்ல விஷயம்தான். அதற்காக எல்லைப்புற மாநிலமான தமிழகத்தை குப்பைக் கிடங்காக மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

இந்திய அளவில் ஓர் ஆண்டுக்கு ஒரு நுகர்வோனின் மருத்துவத்துக்கான செலவு 13.3 சதவீதம் என்கிறது ஆய்வு. ஆனால், இது கேரளத்தில் 17.9 சதவீதமாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை ஒன்றே கேரள மக்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை உணர்த்த போதுமானது. குப்பைகளை அகற்றினால் போதுமானது, குப்பைகளை எரித்தால் போதுமானது, குப்பைகளை எறிந்துவிட்டால் போதுமானது... என்பதெல்லாம் மறுசுழற்சி இல்லை.

முன்யோசனையுடன் ஒரு பொருள் அதிக கழிவுகளை கொண்டுவராமல் இருக்கும்படி தயாரிப்பதும், ஒருவேளை கழிவுகள் வந்தாலும் அதை எறியாமல் - எரிக்காமல் எப்படி மறுசுழற்சி செய்வது என்று திட்டமிடுவதும்தான் ஜீரோ வேஸ்ட் எனும் கனவுக்கு தீனிபோடக்கூடியது. இதை கேரளத் தோழர்கள் கேட்பார்களா, சிந்திப்பார்களா என்பதே டிரில்லியன் டாலர் கேள்வி.

டி.ரஞ்சித்