தெரிந்த குரல்கள்... தெரியாத முகங்கள்!
பொழுதுபோக்கு அம்சமாகக் கருதும் திரைத்துறை பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துவருகிறது. இதில் நடிகர், நடிகைகள் தொடங்கி.. டச்சப் பாய், லைட்மேன் வரை பல்வேறு பிரிவில் திரைக்கு முன்னும் பின்னும் பல கலைஞர்களின் உழைப்பில்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது.  அந்தவகையில், ஒரு திரைப்படத்துக்கு உயிர் கொடுப்பவர்கள், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லப்படும் பின்னணிக் குரல் கலைஞர்களே.1980-க்கு முன்பு வரை, நடிகர், நடிகைகள் தாங்களே சொந்தக் குரலில் பேசித்தான் நடித்து வந்தார்கள்.
ஆனால், 1980க்குப் பிறகு இந்நிலை முற்றிலும் மாறிவிட்டது. மொழி தெரியாத பிற மாநிலங்களைச் சேர்ந்த கதாநாயகன்,கதாநாயகிகள் அறிமுகம் செய்யப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணம்.
 அந்தவகையில் 80-களின் கதாநாயகிகளான அம்பிகா, ராதா, ரேவதி, ரதி, ஷோபா, வீடு அர்ச்சனா, சில்க் ஸ்மிதா, குஷ்பு, கெளதமி போன்ற பல நடிகைகளுக்கு பின்னணிக் குரல் கலைஞர்களான ஹேமமாலினி (இவர், நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் சகோதரி.
சில்க் ஸ்மிதாவின் 95 சதவீத படங்கள் இவர் பேசியதே), அனுராதா, துர்கா போன்றோரும் குரல் கொடுத்தனர்.பின்னர், ஸ்ரீஜா ரவி, சவிதா போன்றோர் அறிமுகமாகினர். அரை நூற்றாண்டைத் தாண்டி இன்றும் இவர்கள் பேசி வருகின்றனர்.
அதுபோல மணிரத்னம் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பெண் கதாபாத்திரங்களுக்காக அவரது மனைவி சுபாஷினி டப்பிங் பேசியதுண்டு. நடிகை சரிதா நட்புக்காக சில கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
கதாநாயகர்களில், நடிகர் மோகனுக்கு பெரும்பாலான திரைப்படங்களுக்கு எஸ்.என். சுரேந்தர் பின்னணிக் குரல் கொடுத்தார் (இவர் நடிகர் விஜய்க்கு தாய்மாமா ஆவார்). பின்னர், மோகன் தனது சொந்தக் குரலிலேயே பேசினார். அதன்பின்னர், காதலன், மின்சாரக் கனவு போன்ற பிரபுதேவாவின் ஆரம்பக்கட்ட படங்களில் அவருக்கு நடிகர் விக்ரம் பின்னணிக் குரல் கொடுத்திருப்பார். அதேபோன்று, 12பி படத்தில் நடிகர் ஷியாமிற்கு டப்பிங் கொடுக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், டப்பிங் கலைஞர்கள் என்றதும் தீபா வெங்கட், சின்மயி, தன்ஷிகா, ஆண்ட்ரியா, எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் ராஜேஷ், நாசர், நிழல்கள் ரவி என்று ஒரு சிலரே பலரது நினைவுக்கு வருவார்கள். ஆனால், திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள், விளம்பரப் படங்கள், மொழி மாற்று படங்கள், சண்டைக்காட்சி குரல் கலைஞர்கள், கார்ட்டூன் சீரிஸ்கள், வெப் சீரிஸ்கள் என வெளியே தெரியாத டப்பிங் கலைஞர்கள் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ் திரைத்துறையில் இருக்கின்றனர்.
சமீபகாலமாக திரைத்துறையின் வாரிசுகளும் பலர் டப்பிங் கலைஞர்களாக வலம் வருகின்றனர். உதாரணமாக, நடிகர் சிவக்குமாரின் மகள் பிருந்தா சிவக்குமார், எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, ஸ்ரீஜா ரவியின் மகள் ரவீணா ரவி, சவிதாவின் மகள் ஷ்ரிங்கா என பலர் உள்ளனர்.
பி. ரவிஷங்கர்
தமிழில் நடிகராகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வருபவர். இவர் 1991-ஆம் ஆண்டு வெளிவந்த வைதேகி வந்தாச்சு படத்தின் மூலம் தமிழில் டப்பிங் கலைஞராக அறிமுகமானார். அதன்பின், பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
சேகர் பி. ஆர்
பவித்ரா படத்தில் அஜித்துக்கு டப்பிங் பேசி, தமிழில் டப்பிங் கலைஞராக அறிமுகமானவர் இவர். அதன்பின், பயணம், பாகுபலி, விவேகம், காஞ்சனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். மேலும், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்த அவெஞ்சர்ஸ், புஷ்பா, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களுக்கும் பேசியிருக்கிறார்.
முரளிகுமார்
1986-ஆம் ஆண்டு வெளிவந்த ஊமை விழிகள் படத்தில் அருண் பாண்டியனுக்கு டப்பிங் பேசி டப்பிங் கலைஞராக அறிமுகமானவர் இவர். அதன்பின், சண்டக்கோழி, வேலாயுதம், 7ஆம் அறிவு உள்ளிட்ட பல படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். இவர் பிரபல கார்ட்டூன் சீரிஸ்களுக்கும் பேசி வருகிறார். இதுதவிர, தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்த பைரேட்ஸ் ஆப் தி கரீபியன், ஸ்பைடர் மேன் 2, டைட்டானிக், அவெஞ்சர்ஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
ராஜேந்திரன்
தமிழ்ப் படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருபவர் ராஜேந்திரன். வில்லன் நடிகரான கோட்டா ஸ்ரீனிவாசராவுக்கு தமிழில் டப்பிங் பேசும் ஒரே கலைஞர் ராஜேந்திரன் மட்டும் தான்.
உமா மகேஸ்வரி
தமிழில் மிகவும் பிரபலமான டப்பிங் கலைஞர்களில் இவரும் ஒருவர். அனுஷ்காவிற்காக பாகுபலி படத்தில் டப்பிங் பேசியுள்ளார். மேலும், இறுதிச்சுற்று ரித்திகா சிங், களவாணி ஓவியா, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா நந்திதா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.
மானசி
நடிகை சமந்தாவின் குரலாக பல படங்களில் டப்பிங் பேசியவர் இவர். தமன்னாவுக்கும் இவரே பெரும்பாலான படங்களில் பேசியுள்ளார். மேலும் பல படங்களில் நாயகிகளின் குரலாகி உள்ளார்.
மீனலோசினி
திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு குரல் கொடுப்பவர் இவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்களின் நாயகிகள் மற்றும் ஒருசில கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுப்பவர் இவரே.
பிரதீப்
இவரும் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு குரல் கொடுப்பவர். விஜய் தொலைக்காட்சித் தொடர்களின் பெரும்பாலான நாயகர்களின் குரலாக ஒலிப்பவர்.
செபஸ்டீன்
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பின்னணிக் குரல் கலைஞராக இருப்பவர். இவர், மாற்றுமொழி படங்கள், சண்டைக்காட்சிகள், கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுப்பவர். மோட்டு - பட்லுவில் பட்லுவின் குரல் இவரே. நிஞ்சா அட்டோரியில் கியோ பூனை, வருத்தப்படாத கரடி சங்கத்தின் கரடி போன்ற காமிக் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
ஜெயவித்யா
இவரும், திரைப்படங்கள், தொடர்கள், மாற்று மொழி திரைப்படங்கள் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
கோபி
திரைப்படங்கள், விளம்பரப் படங்கள், தொடர்கள் என்று பிசியாக இருப்பவர். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Man vs Wild தொகுப்பின் குரல் இவரே. மற்றும் மகாபாரதம் தொடரில் சகுனியின் குரலும் இவரே.இன்னும் ஏராளமான டப்பிங் கலைஞர்கள் உள்ளனர்.
சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக பேசுபவர்கள் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அத்தனை பேரையும் இந்த ஒரு கட்டுரையில் கொண்டு வருவது எளிதல்ல. டப்பிங் கலைஞர்கள் ரவீணா ரவி மற்றும் பாரதிராஜா ஆகியோர் தங்களின் டப்பிங் அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை: ரவீணா ரவி
மூன்று தலைமுறையாக எங்கள் குடும்பத்தினர் பின்னணிக் குரல் கொடுத்து வருகிறோம். பாட்டி நாராயணி, அம்மா ஸ்ரீஜா ரவி, இப்போது நான். நான் முதன் முதலில் குரல் கொடுத்தது ஒண்ணே முக்கால் வயதில்.
அம்மா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதால் அவர் ஒரு விளம்பரப் படத்துக்கு குரல் கொடுக்கச் சென்றபோது, அங்கே நான் விளையாட்டாக மழலையில் பேசிய வார்த்தைகளை பதிவு செய்து அதை அந்த விளம்பரப் படத்தில் சேர்த்துவிட்டார்கள். இப்படித்தான் என்னுடைய பின்னணிக் குரல் அனுபவம் தொடங்கியது. இதுவரை சுமார் 200 படங்கள் வரை டப்பிங் பேசியுள்ளேன். ஐ படத்தில் எமி ஜாக்சனுக்கு குரல் கொடுத்தது நான்தான். சமந்தா, காஜல் அகர்வால், மடோனா செபாஸ்டியன், திரிஷா, மலையாளத்தில் நயன்தாரா என பல முன்னணி நடிகைகள், புது முகங்கள் என பலருக்கும் பேசியுள்ளேன். டப்பிங் தவிர, லவ் டுடே, மாமன்னன் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.
பத்துக் குரல் பாரதிராஜா
அப்பா இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடம் ஆர்ட் டைரக்டராக இருந்த எம்.சி சக்திவேல். அம்மா தயாரிப்பாளராக இருந்தவர். அதனால், திரைத்துறைக்குள் நுழைவது எனக்கு சிரமமாக இல்லை. ஆனால், டப்பிங் துறைக்குள் வந்தது நான் எதிர்பாராத ஒன்று. எனக்கு ஆரம்பத்தில் நடிப்பில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது.
பிப்ரவரி 14, ராம் போன்ற படங்களில் நடித்துள்ளேன்.அதன்பின்னர், குடும்ப சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டேன். பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பின், மீண்டும் திரைத்துறையின் மீது மோகம் தீவிரமாக, இந்தியா திரும்பினேன்.
இங்கே வந்ததும், முத்துசாமி ஐயாவின் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்புக்கலையைக் கற்றுக்கொண்டேன். அங்கேதான் பின்னணிக் குரல் கொடுப்பதையும் ஒரு பாடமாகக் கற்றேன். நடிப்பு ஆசைக்காக இருந்தாலும், வாழ்க்கைக்கு ஆதாரமாக டப்பிங் இருக்கட்டுமே என்று முடிவு செய்து 2013ல் டப்பிங் பேச ஆரம்பித்தேன். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பேசிவிட்டேன். இதைத்தவிர, கார்ட்டூன் தொடர்கள், வெப்சீரிஸ், விளம்பரப் படங்கள், சின்னத்திரை சீரியல்கள் என பேசி வருகிறேன். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே தொடரில், வில்லனாக வரும் கருணாகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்திரகாந்த் துக்கு குரல் கொடுத்து வருகிறேன். பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் அருண் விஜய்க்கு டிராக் வாய்ஸ் பேசியுள்ளேன். கேம் சேஞ்சர், விடுதலை 2 போன்ற படங்களில் பேசியுள்ளேன்.
பின்னணிக் குரல் கொடுக்கும் துறையைப் பொருத்தவரை, அன்று இருந்ததற்கும், இன்றைக்கும் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. அதிலும், கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு நிறையவே மாற்றங்கள் வந்திருக்கிறது. அதற்கு முன்பு வரை ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்குச் சென்று பேசி வந்தோம். ஆனால், கொரோனா நேரத்தில் வெளியே போக முடியாமல் இருந்ததால், வீட்டிலிருந்தே பேசி வாய்ஸ் அனுப்பும் வசதிகளை பல ஸ்டூடியோக்கள் செய்து கொடுத்தனர்.
அதற்குப் பிறகு, பெரும்பாலான டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் வீட்டிலேயே மினி ஸ்டூடியோ செட்டப் செய்து வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டனர். இதெல்லாம் இன்றைய நவீன டெக்னாலஜியினால் ஏற்பட்ட மாற்றங்களே. அடுத்து ஏஐ டெக்னாலஜி மெல்ல மெல்ல வந்து மிரட்டிக் கொண்டு இருக்கிறது.
ஸ்ரீதேவி குமரேசன்
|