மகன்களை தேடும் அப்பாக்கள்!
‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்பது தமிழ்ப் பழமொழி. திரைகடலோடியும் திரைக்கதை தேடு அல்லது தழுவி எடு என்பது திரையுலக மொழி. தமிழ்த் திரையுலகம், தெலுங்குத் திரையுலகம், மலையாளத் திரையுலகம், இந்தித் திரையுலகம் என வேறுபாடின்றி உலகத் திரையுலகம் மொத்தத்துக்கும் இந்தப் புதுமொழி பொருந்தும்.  தமிழ்த் திரையுலகில் அவ்வப்போது ஒரே கதையைக் கொண்ட பல படங்கள் வெளியாகும். எதனால் அப்படி என்று தேடிப்பார்த்தால், ஒரே வெளிநாட்டுப் படத்தை எல்லா இயக்குநர்களும் பார்த்து அதை இன்ஸ்பிரேஷனாக வைத்து தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவரும்.  அப்படி வெளியாகும் படங்கள் ஹிட்டாகும்போது தொடர்ந்து அதே மாதிரி கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகும். அதை டிரெண்ட் செட்டிங் படங்கள் என்று முத்திரை குத்தி சில வருடங்களுக்கு இந்த மாவையே அரைப்பார்கள். சில நேரங்களில் கதை குறித்த பஞ்சாயத்துகளும் அடிக்கடி நடக்கும். இப்படித்தான் ஒரு முறை, உருவாகிக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஒருவர் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட இயக்குநரை விசாரணைக்கு அழைத்தார்கள். விசாரணைக்கு நேரில் சென்ற இயக்குநர், ஐந்தாறு திரைப்படக் குறுந்தகடுகளை எழுத்தாளர்கள் சங்கத்தினரிடம் கொடுத்தார்.
‘இந்தக் குறுவட்டிலிருந்து மையக்கதையை எடுத்துக் கொண்டேன். முதல்பாதி திரைக்கதைக்கு இன்னொரு குறுவட்டு, இரண்டாம் பாதிக்கு மூன்றாம் குறுவட்டு, க்ளைமாக்ஸ் எனும் இறுதிக்காட்சி சிறப்பாக இருக்கவேண்டுமென்பதற்காக இந்தப்படத்திலிருந்து அந்தக் காட்சியை வைத்திருக்கிறேன்.
இதுதான் நான் எடுக்கும் திரைப்படத்தின் கதை. திரைக்கதை எல்லாம் உருவானது இப்படித்தான். நான் சொன்னதை எல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். படம் முழுமையடைந்ததும் நான் உங்களுக்குப் போட்டுக்காட்டுகிறேன்.
அப்போது நான் சொல்வதில் இருக்கும் முழு உண்மை உங்கள் அனைவருக்கும் புரியும். அப்போது தீர்ப்பு சொல்லுங்கள்.இதில் எந்த இடத்தில் என் மீது புகார் கொடுத்தவருக்குச் சொந்தம் என இப்போது கேட்டுச் சொல்லுங்கள்’ என ஒரே போடாகப் போட்டார். அப்புறமென்ன?
புகார் கொடுத்தவர், அதை விசாரித்தவர்கள் ஆகிய அனைவரும் மயங்கி விழாத குறைதான்.இப்படிதான் இயங்குகிறது திரைத்துறை. ஜோக்ஸ் அபார்ட். அனைத்து இயக்குநர்களுமே இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது என்பதுதான் முக்கியமான விஷயம். சமீப காலங்களில் வசூலில் சாதனை படைத்த பல திரைப்படங்களின் ஒன்லைன் ஒரே மாதிரி இருந்தாலும் அதன் திரைக்கதை - கதை சொல்லும் முறை - ஒன்றிலிருந்து மற்றொன்று வித்தியாசப்பட்டது. அதனால்தான் அப்படங்கள் பாக்ஸ் ஆபீசில் ஹிட் அடித்தன.
ஏனெனில் ரசிகர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் கதை - ஒன்லைனை விட அதை எப்படி சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து கொண்டாடுகிறார்கள்.இப்படிப்பட்ட படங்கள் வளரும் இயக்குநர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் பாடமாக அமைகின்றன; பென்ச் மார்க்காகத் திகழ்கின்றன.
உதாரணத்துக்கு ஒன்றைப் பார்க்கலாம். தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் என்றால் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி... உள்ளிட்ட அனைவரும் வந்து விடுவார்கள்.அண்மையில் இவர்களில் சிலர் நடித்த படங்களின் கதை அப்பா - மகன் பாசத்தை மையமாகக் கொண்டவை என்பது எதிர்பாராத ஒற்றுமை.
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில், ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி. அவருடைய மகனும் காவல் அதிகாரி. ஒரு வழக்கை விசாரிக்கப் போய் வம்பில் மாட்டி காணாமல் போய்விடுவார். ரஜினிகாந்த், அவரை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் கதை என்னவென்று பாருங்கள். மகன் காவல் துறை அதிகாரி. அவர் இரண்டு இலட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் கடத்தப்படும்போது அதைத் தடுத்து நிறுத்தி கைப்பற்றி பதுக்கி வைக்கிறார். அதன்பின் அவர் காணாமல் போகிறார். அவரைத் தேடி முன்னாள் உளவாளியான அவருடைய அப்பா செல்கிறார்...
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘த கோட்’ திரைப்படத்தின் கதையை அறிந்திருப்பீர்கள். ஏதோவொரு காவல் வகையறாவைச் சேர்ந்த விஜய்யின் மகன் சின்ன வயதிலேயே காணாமல் போகிறார்.
அவர் வளர்ந்து வாலிபனாகும் தருணத்தில் அவரை அவருடைய அப்பா கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. இப்போது வெளியாகியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட்அக்லி’ படத்தின் கதையும் இதேதான். தாதாவாக இருக்கும் அஜித், காணாமல் போன தன் மகனைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தின் மையக்கதை என்ன? ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு சிறுவனுக்காக அவனைப் பாதுகாப்பதற்காக ஒரு தந்தையின் பொறுப்போடு பெரும் எதிர்ப்புகளை எப்படி சூர்யா சந்திக்கிறார், போராடுகிறார் என்பதுதானே?
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் ‘சர்தார் 2’ படத்தின் கதையும் அப்பா - மகன் சம்பந்தப்பட்ட கதைதான்.
இவை எல்லாம் ரசிகர்களுக்கு தெரியாதா என்ன? தெரியும். ஆனால், மேலே சொன்ன அனைத்துப் படங்களின் திரைக்கதையும்... கேரக்டர் பின்புலமும் வெவ்வேறாக இருக்கிறதல்லவா..? அதுதான் முக்கியம்.
இதனால்தான் உலகில் அதிகபட்சம் 7 கதைகள் மட்டுமே உள்ளன... அனைத்து மொழிகளிலும் அனைத்து நாட்டு திரையுலகிலும் இந்த 7 கதைகளைத்தான் திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள்... காலத்துக்கு ஏற்ப யார் சுவாரஸ்யமாக எடுக்கிறார்களோ... யார் அந்தக் காலத்துக்கு ஏற்ற விஞ்ஞான தொழில்நுட்பங்களை திரைக்கதையில் பயன்படுத்துகிறார்களோ... அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்... என்கிறார்கள்.
உண்மைதானே? கட்டுரையின் தொடக்கத்தில் உதாரணத்துக்கு சொல்லப்பட்ட ‘குறுந்தகடுகள்’ புகழ் இயக்குநர்கள் ஒருபோதும் நிலைத்து நிற்பதில்லை. மாறாக ‘மகனை தேடும் அப்பாக்கள்’ என்பதுபோல் லைன் ஒன்றாக இருந்தாலும் ட்ரீட்மெண்டில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்துபவர்கள் காலம் கடந்தும் நிற்கிறார்கள்.வெற்றி, சாதனை என்பது இதுதான்.
எஸ்.ராஜா
|