Must Watch
 எ கம்ப்ளீட் அன்னோன்
உலகப் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரும், இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றவருமான பாப் டிலனின் வாழ்க்கையைத் தழுவிய ஆங்கிலப்படம், ‘எ கம்ப்ளீட் அன்னோன்’. இப்போது ‘ஜியோ ஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. அறுபதுகளில் படத்தின் கதை நடக்கிறது.
1961ம் வருடம், தான் பெரிதும் மதிக்கும் இசைக்கலைஞரான வூடியைத் தேடி நியூயார்க்கிற்கு வருகிறார் பாப் டிலன். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வூடியைச் சந்திக்கிறார் பாப். அந்தச் சந்திப்பின்போது மருத்துவமனையில் வூடியின் நெருங்கிய நண்பரான பீட்டும் இருக்கிறார். வூடிக்காக, தான் எழுதிய பாடலை மருத்துவமனையிலேயே பாடிக் காட்டுகிறார் பாப். வூடியும், பீட்டும் பாப்பின் பாடலில் சொக்கிப் போகின்றனர். தன் வீட்டில் வந்து தங்கும்படி பாப் டிலனுக்கு அழைப்பு விடுக்கிறார் பீட். நியூயார்க்கின் இசை உலகம் எப்படி பாப் டிலனின் இசைப் பயணத்துக்கு அடித்தளமிடுகிறது என்பதைச் சொல்கிறது மீதிக்கதை. பாப் டிலனாக நடிப்பில் கலக்கியிருக்கிறார் டிமோத்தி சாலமேட். படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்டு.
துடரும்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘துடரும்’. இப்போது ‘ஜியோ ஹாட்ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற சண்டைப் பயிற்சியாளராக இருந்தவர், சண்முகம்.
படப்பிடிப்பின் போது நடந்த விபத்துக்குப் பிறகு சினிமாவைவிட்டு ஒதுங்கிவிடுகிறார். இப்போது மனைவி, குழந்தைகளுடன் அமைதியாக வாழ்ந்துவருகிறார். டாக்ஸி ஓட்டி வரும் சண்முகத்தை சுற்றியிருப்பவர்கள் அன்புடன் பென்ஸ் என்று அழைக்கின்றனர். சண்முகத்தின் வாழ்க்கை அமைதியாகச் செல்கிறது. அவரது மகன் பவி தனது கல்லூரி நண்பர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அப்பாவின் காரை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வலம் வரும்போது, எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. காருக்கு அடிபட, தெரிந்த மெக்கானிக்கிடம் கொடுத்து சரி பண்ணுகிறார்.
இந்நிலையில் சென்னையில் இருக்கும் தனது ஸ்டண்ட் மாஸ்டர் இறந்துவிட, துக்க நிகழ்வுக்குச் செல்கிறார் சண்முகம். அவர் ஊருக்குத் திரும்பி வரும்போது காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துவிட, சூடுபிடிக்கிறது திரைக்கதை. ஆணவக் கொலையைக்கூட இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்ல முடியுமா என்று ஆச்சர்யப்படுத்துகிறது இந்தப்படம். இதன் இயக்குநர் தருண் மூர்த்தி.
நானஸ்
‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் ஆங்கிலப்படம், ‘நானஸ்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.அம்மா இறந்துபோன துயரத்தில் இருக்கிறான், ஜோ. எண்பதுகளில் மகிழ்ச்சியாகக் கழிந்த அவனது குழந்தைப்பருவம் நினைவுக்கு வருகிறது. அப்போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்காக அம்மாவும், பாட்டியும் பலவகை உணவுகளைச் சமைக்கின்றனர். அதை அருகிலிருந்து பார்க்கும் ஜோ, சமைப்பதையும் கற்றுக்கொள்கிறான்.
அம்மா இறந்ததால் கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தை நல்ல வழியில் செலவழிக்க முடிவு செய்கிறான் ஜோ. சிறு வயதில் அம்மா, பாட்டியுடன் ஓர் இடத்துக்கு அடிக்கடி செல்வது ஜோவின் வழக்கம். அம்மாவின் பெயரில் அந்த இடத்தில் ஓர் உணவகத்தை திறக்க முடிவு செய்கிறான் ஜோ. உணவகத்தில் சமைப்பதற்காக பாட்டிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பது அவனது திட்டம்.
பாட்டிகளின் சமையல் உணவகத்த்தில் சாப்பிட வரும் ஒவ்வொருவருக்கும் தங்களின் குழந்தைப்பருவத்தை நினைவுபடுத்தும் என்பது ஜோவின் எண்ணம். ஜோ உணவகத்தைத் திறந்து, பாட்டிகளை வேலைக்கு நியமித்தானா அல்லது ஏதாவது பிரச்னைகள் வந்ததா என்பதை அறிய படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.படத்தின் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பாஸ்கி. அக்கட அம்மாயி இக்கட அப்பாயி
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிவரும் தெலுங்குப்படம், ‘அக்கட அம்மாயி இக்கட அப்பாயி’. ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் சிவில் எஞ்சினியர், கிருஷ்ணா. எந்தச் சூழலிலும் யாருக்கும் உதவி செய்யக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக வைத்து வாழ்ந்து வருகிறான். ஒரு தொலைதூர கிராமத்துக்குக் கழிவறைகள் கட்டுவதற்காக அனுப்பப்படுகிறான், கிருஷ்ணா. பொதுவாக வெளிஆட்களை ஊருக்குள் அனுமதிக்காத கிராமம் இது. கிருஷ்ணா வெளியாள் என்பதால் அவனையும் உள்ளே அனுமதிப்பதில்லை.
அந்த ஊருக்குள் ராஜகுமாரி என்ற ஒரேயொரு பெண் இருக்கிறாள். அவளைத் திருமணம் செய்துகொள்ள ஊருக்குள் இருக்கும் ஆண்களிடையே போட்டி நிலவுகிறது. அந்தப் பெண்ணைப் பார்க்கவோ, பேசவோ கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டு, ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறான் கிருஷ்ணா. ஊருடைய விதியை ஏற்றுக்கொள்கிறான்.
நாட்கள் செல்லச் செல்ல ராஜகுமாரிக்கும், கிருஷ்ணாவுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட, என்னஆகிறது என்பதே கிளைமேக்ஸ்.எந்த லாஜிக்கும் பார்க்காமல் ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு உகந்த படம் இது. படத்தை இயக்கியவர்கள், நிதின் - பரத்.
தொகுப்பு: த.சக்திவேல்
|