Correct The Map! குரல் எழுப்பும் ஆப்ரிக்க ஒன்றியம்



உலக வரைபடத்தை சரி செய்யுங்கள் - சமீபமாக ஆப்ரிக்க ஒன்றியத்தில் இருந்து ஓங்கி ஒலித்து வரும் குரல்தான் இது. அங்கே இதற்காகவே, ‘Correct The Map’ என்ற பிரசார இயக்கமும் துவக்கப்பட்டுள்ளது. இதனை ஆப்ரிக்க ஒன்றியத்திலுள்ள 55 நாடுகளும் ஆதரித்துள்ளன.

என்ன பிரச்னை? 

உலக வரைபடம் என்பது பூமியின் அனைத்து மேற்பரப்புகளையும் காட்டும் ஒரு வரைபடமாகும். இதில் ஏழு கண்டங்களும், அதில் உள்ள நாடுகளும், எல்லைகளும், கடற்பரப்புகளும் அடங்கும். இது நாம் அனைவரும் அறிந்தது.இந்த உலக வரைபடத்தில் மிகவும் பிரபலமானது மெர்கேட்டர் ப்ரொஜெக்‌ஷன் (Mercator Projection) வரைபடமே. சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மெர்கேட்டர் ப்ரொஜெக்‌ஷன் முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள வரை படங்கள் தயாரிப்பாளர்களிடையே பிரபலமாக இருப்பதும் இந்த மெர்கேட்டர் வரைபடம்தான்.  ஆனால், இதில் உலகின் இரண்டாவது பெரிய கண்டமான ஆப்ரிக்காவின் வரை படம் துல்லியமாக இல்லை என வேதனை தெரிவிக்கிறது ஆப்ரிக்க ஒன்றியம். 

உதாரணத்திற்கு மெர்கேட்டர் வரைபடத்தில் ஆப்ரிக்கா போல் அதே அளவிற்கு கிரீன்லாந்து வரைபடம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் கிரீன்லாந்தைவிட ஆப்ரிக்கா 14 மடங்கு அளவில் பெரியது. 

கிரீன்லாந்தின் சரியான பரப்பளவு என்பது ஆப்ரிக்காவில் காங்கோ ஜனநாயகக் குடியரசின் பரப்பளவுடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது. 

அதுமட்டுமல்ல; இந்த மெர் கேட்டர் வரைபடத்தில் ஆப்ரிக்கா கண்டம், தென் அமெரிக்காவைப் போலவே தோராயமாக அதே அளவில் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவைவிட ஒன்றரை மடங்கு பெரியது.

இதனால் பரந்துபட்ட ஆப்ரிக்கா உலக அளவில் சுருக்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது ஆப்ரிக்க ஒன்றியம். இதனால் தங்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவதாகச் சொல்கிறது. இதனை மீட்டெடுக்கும் விதமாகவே, ‘கரெக்ட் த மேப்’ பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

 மெர்கேட்டர் ப்ரொஜெக்‌ஷன் வரைபடம்

1569ம் ஆண்டு ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட உலக வரைபடம்தான் மெர்கேட்டர் ப்ரொஜெக்‌ஷன். பெல்ஜியத்தின் ஃபிளாண்டர்ஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஜெரார்டஸ் மெர்கேட்டர். இவர் புவியியலாளர் மற்றும் வரைபடவியலாளராக விளங்கினார். 

மெர்கேட்டர் பூமிக் கோளத்தை ஒரு தட்டையான தாளில் முடிந்தவரை துல்லியமாகத் தெரியப்படுத்தும் தனித்துவமான வழியைக் கண்டுபிடித்தார். அப்படியாக அவர் கப்பலில் பயணிக்கும் மாலுமிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சித்தார்.பொதுவாக கப்பல் பயணத்தில் நிலையான திசைகாட்டி (Compass) இருக்கும். இந்தத் திசைகாட்டி காட்டும் பாதை ரம்ப் கோடு எனப்படுகிறது. இது அனைத்து மெரீடியன்களையும் ஒரே கோணத்தில் கடக்கும். இது மாலுமிகளுக்கு திசையை சரியாகக் காட்டுவதில் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. 

ஆனால், மெர்கேட்டர் ப்ரொஜெக்‌ஷன், வளைவான ரம்ப் கோடுகளை நேர்கோடுகளாக நீட்டிக் காட்டியது. இதனால் மாலுமிகள் திசைகாட்டியின் கோணத்தைக் கொண்டு வரைபடத்தில் நேராக கோடுகளை வரைந்து அதன்படி தொடர்ச்சியாக பயணித்தனர். இதன்வழியாக ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்புகளையும், காலனிகளின் விரிவாக்கத்தையும் செய்தனர். 
இந்த மெர்கேட்டர் வரைபடம் நாடுகளின் கோணங்களையும், வடிவங்களையும் சிறப்பாகக் காட்டியது. அதேநேரம் சில அளவுகோல்களைச் சிதைத்தது.

குறிப்பாக துருவங்களுக்கு அருகில் உள்ள நிலப்பரப்பை பெரிதாகவும், பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளவற்றை உண்மையில் இருப்பதைவிட சிறியதாகவும் காட்டியது. அப்படியாக ஆப்ரிக்கா தன்னுடைய உண்மையான அளவை இழந்தது.இது ஆப்ரிக்க மக்களின் முக்கியத்துவத்தை குறைக்கிறது என்கின்றனர் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் இதற்கு மாற்றாக பூமியின் சமமான கணிப்பு (Equal Earth Projection) வரைபடத்தை ஏற்க வேண்டும் என்கின்றனர்.

பூமியின் சமமான கணிப்பு வரைபடம் 

இந்த வரைபடம் கண்டங்கள் மற்றும் நாடுகளின் அசல் அளவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக  ஆப்ரிக்காவை பெரிய அளவில் நிஜத்தில் இருப்பதைப் போலவே காட்டுகிறது. 
இந்த சமமான கணிப்பு வரைபடத்தை கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவின் நேஷனல் பார்க் சர்வீஸைச் சேர்ந்த டாம் பேட்டர்சனும், அமெரிக்காவின் போஜன் சவ்ரிக்கும், ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்ன்ஹார்டு ஜென்னியும் உருவாக்கினர்.

இந்த சமமான கணிப்பு வரைபடம் கண்டங்களை நீட்டியும் வளைத்தும் சரிசமமாகக் காட்டுகிறது. இந்த வரைபடத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என ‘கரெக்ட் த மேப்’ பிரசாரத்தை மேற்கொள்பவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஆப்ரிக்க ஒன்றியமும் ஆமோதிக்கிறது. இந்நிலையில் இதற்காக பிரசாரம் செய்பவர்கள், உலகளாவிய புவிசார் தகவல் மேலாண்மை குறித்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிடம் இந்த பூமியின் சமமான கணிப்பு வரைபடத்தை ஏற்றுக்கொள்ளும்படி மனு அளித்துள்ளனர்.

ஆனால். இது அவ்வளவு எளிதானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். கூகுள் மேப், நேஷனல் ஜியோகிராபிக் உள்ளிட்டவை மெர்கேட்டர் ப்ரொஜெக்‌ஷன் வரைபடத்தையே பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் இந்த வரைபடம் வகுப்பறைகளிலும், செய்திகளின் வரைபடங்களிலும், ஆப்ரிக்க ஒன்றிய இணையதளங்களிலும வேரூன்றிவிட்டன. 

அதனை முற்றிலுமாக மாற்றுவது என்பது பாடப்புத்தகங்களைத் திருத்துதல், பாடத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்தல், டிஜிட்டல் சிஸ்டங்களை புதுப்பித்தல் ஆகிய விஷயங்களை உள்ளடக்கியதாக அமையும். அது சுலபமானதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

பேராச்சி கண்ணன்