அந்தத் துப்பாக்கி முதல் இந்தத் துப்பாக்கி வரை...



மதராஸி ரகசியம் சொல்கிறார் தேசிய விருது பெற்ற எடிட்டர் !

‘‘துப்பாக்கி எவன் கையிலே இருந்தாலும் வில்லன் நான்தான்டா...’’வித்யூத் ஜம்வால் டிரெய்லரில் பேசும் இந்த ஒற்றை வசனம் பல கேள்விகளையும் 13 வருட நினைவுகளையும்  உண்டாக்கியிருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
35 வருடங்கள் அனுபவம், 600க்கும் மேலான படங்கள், ஒன்பது தேசிய விருதுகள், 17 மொழிகளில் எடிட்டிங் செய்த ஒரே எடிட்டர் என லிம்கா சாதனைப் புத்தகத்தில் பெயர்... இப்படி பல புகழுக்கு சொந்தக்காரர், இப்போது ‘மதராஸி’ படத்தின் மூன்றாம் கண்! எடிட்டர் கர் பிரசாத், படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்கிறார். 

‘மதராஸி’..?மொத்த தென்னிந்தியாவையும் வட இந்தியர்கள் ‘மதராஸி’னு கூப்பிடுவாங்க. ஆனா, இங்கே ஐந்து மாநிலங்கள், நான்கு மொழிகள், நான்கு விதமான கலாசாரம் இருக்கு. ஆனாலும் பொதுவாகவே ‘மதராஸி’ன்னுதான் மொத்த தென்னிந்தியாவையும் அடையாளப்படுத்துவாங்க. 

அப்படி நினைக்கிற ஓர் ஆபத்தான வட இந்திய நபர் பார்வையில் ஒரு தென்னிந்தியர்... அதனால்தான் படத்துக்கு ‘மதராஸி’. திரில்லர், ஆக்‌ஷன் மற்றும் காதல்னு சரிசமமா கலந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் சார். அந்தத் துப்பாக்கி முதல் இந்த துப்பாக்கி வரை... முருகதாஸ் உடன் உங்கள் பயணம்?

முருகதாஸ் சார் கூட எனக்கு முதல் படம் ‘துப்பாக்கி’. தொடர்ந்து ‘கத்தி’, ‘அகிரா’, ‘சர்கார்’, ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’... இதோ இப்ப ‘மதராஸி’ வரை அவர் கூட வேலை செய்திருக்கேன். 
நிறைய இயக்குநர்கள் கூட பணி புரிஞ்சிருக்கேன். ஆனா, முருகதாஸ் சார் ஒரு சமூகப் பொறுப்புடன்தான் கதை எழுதுவார். அதேபோல் ஸ்லீப்பர் செல், 49p, இப்படி தெரியாத ஏதோ ஒரு விஷயத்தை கதையில் வைப்பார். அப்படிதான் ‘மதராஸி’ படத்திலும் ஒரு புது விஷயம் இருக்கு. அதைப்போல் திட்டமிட்டு வேலை செய்கிற இயக்குநர்.

சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் எப்படி வந்திருக்கு?

ஆரம்பகட்டத்தில் இருந்து அவருடைய வளர்ச்சியை பார்த்துட்டு இருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா தன்னை வடிவமைத்து, ‘அமரன்’ இப்ப ‘மதராஸி’ வரையிலும் தன்னைத் தானே அருமையா இந்த சினிமா கரியரில் பொருத்திக்கிட்டார். ஆனா, இன்னமும் அவர்கிட்ட அந்தப் பணிவு குறையவே இல்லை. விஜய்க்கு எப்படி ‘துப்பாக்கி’ ஒரு மைல் கல் படமாக இருந்ததோ, அதே மாதிரி ‘மதராஸி’ படம் சிவகார்த்திகேயன் கரியரில் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும்.

ஆக்‌ஷன் அதிரடியிலும் கலக்கி இருக்கார். கதைக்குத் தேவைப்பட்டால் தன்னை எப்படியும் மாத்திக்கிட்டு வேலை செய்கிற கலைஞர். ‘அமரன்’ படத்துக்காக அங்கே ராணுவ அதிகாரி மாதிரியான உடல், இங்கே ரகு கதாபாத்திரம், ஒரு பாய் நெக்ஸ்ட் டோர் இளைஞர் என்பதற்காக திரும்பவும் உடலை இறக்கி அதற்கேற்ற மாதிரி மாத்திக்கிட்டார். 
இந்த படத்தில் காதல் காட்சிகளும் கூட டிரெண்டிங்கா இருக்கும். ஜோடியாகவே சிவா - ருக்மிணி எல்லோரையும் கவர்வாங்க.

மியூசிக்கல் கட் டிரெய்லர்கள் மற்றும் ப்ரொமோஷன்கள்... இது சமீபத்தில் டிரெண்டாகி வருகிறதே?

பொதுவா நாங்க ஒரு டிரெய்லர் அல்லது டீசர் எடிட் செய்யும்போது எந்தவித பேக்ரவுண்ட் மியூசிக் அல்லது இசையோ இருக்காது. வேறு ஏதாவது படத்தின் மியூசிக்கை அடிப்படையாக வைத்துதான் எடிட் செய்வோம். 

அந்த எடிட்டட் வெர்ஷன் இசையமைப்பாளர்கள் கிட்ட போகும்போது இன்னும் சில ஸ்பெஷல் எபெக்ட்ஸ், பாடல் காட்சிகள் இதெல்லாம் கூட சேர்ந்து வரும். ஆனா, இன்னைக்கு அனிருத் வந்த பிறகு அவர் டீசர் அல்லது டிரெய்லரில் என்ன செய்கிறார் என்கிற எதிர்பார்ப்பு இளைஞர்கள் கிட்ட இருக்கு. 

அதேபோல் டிஜிட்டல் வைரல், ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் இதையெல்லாம் கூட மனதில் வச்சிக்கிட்டுதான் ப்ரொமோஷன் வீடியோக்கள் உருவாக்க வேண்டி இருக்கு. முந்தைய படங்களில் அவர் உருவாக்கிய டிரெண்ட்தான் அடுத்தடுத்து எல்லா படங்களிலும் அதிகரிக்க காரணம். ஏதாவது ஓர் அதிர்வை உருவாக்க வேண்டிய சூழல்தான் இந்த மியூசிக்கல் எடிட்டிங் ஸ்டைல். 

முன்பு பாடல் காட்சிகள் அல்லது வரிகளை மட்டும்தான் ப்ரொமோஷன் வீடியோக்களில் வைப்போம். இன்னைக்கு பேக்ரவுண்ட் முதற்கொண்டு பிளே லிஸ்ட் ரகமாக, ரிங் டோன் சிறப்பாக மாறியிருக்கு. 

இந்த கேரக்டர் அறிமுகத்துக்கு அப்புறம் அனிருத் என்ன செய்யறார் என்கிற எதிர்பார்ப்பு வந்திருக்கு. ஏன் நானே அவர் மியூசிக் செய்த படங்களை பார்க்கும்போது இந்த வில்லனுக்கு என்ன பிஜிஎம், இந்த கெஸ்ட்ரோலுக்கு அனிருத் என்ன செய்யறார்... இப்படி எல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பேன்.

ஒளிப்பதிவாளர் சுதீப் இளமானுக்கு இது முதல் தமிழ்ப் படம்..?

அவருடைய விஷுவல் ரொம்ப அருமையா வந்திருக்கு. இதற்கு முன்பு மலையாளத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ஜன கண மன’ உட்பட அவர் ஒளிப்பதிவில் வெளியான அத்தனை படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்; மேலும் விஷுவலாகவும் பாராட்டுகளை வாங்கிய படங்கள். இப்ப ‘மதராஸி’ படம் மூலமாக தமிழில் அறிமுகமாகறார். விஷுவலாகவும் தமிழில் இந்தப் படம் ஃபிரெஷ்ஷா இருக்கும். குறிப்பா காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் எல்லாம் கலர்ஃபுல்லாகவும் டிெரண்டியாகவும் வந்திருக்கு.

எதிர்மறை விமர்சனங்களை எப்படி பார்க்கறீங்க?

படம் வந்த பிறகு அதைப்பற்றி விமர்சனம் செய்தால் கூட பரவாயில்லை. சமீப காலமாக வெறும் டிரெய்லர் மற்றும் டீசரைப் பார்த்தே படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் கொடுக்கும் மனநிலை வந்திருக்கு. 

இது என்ன விதமான மனநிலை என தெரியலை. ஒரு படம் பார்த்துட்டு பிடிச்சிருக்கு, பிடிக்கலை... இதை இப்படி செய்திருக்கலாம்... இதை எல்லாம் சொல்வதற்கும் பேசுவதற்கும் எல்லாருக்குமே உரிமை உண்டு. அதே சமயம் தொழில் வேறு, ஒருத்தருடைய பர்சனல் வாழ்க்கை வேறு. அதையும் சேர்த்து கலந்து விமர்சனத்தில் அவர்கள் பெயரைக் கெடுப்பது எனக்கு சரியா படலை. 

எல்லாவற்றிலும் நெகட்டிவ் விஷயங்களை மட்டும்தான் இப்போ அதிகமா பார்க்க ஆரம்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன். அதேபோல் ‘படத்திற்கு வந்து பணத்தை வீணாக்காதீங்க, படம் பார்க்காதீங்க, ஓடிடிக்கு வரும் பார்த்துக்கோங்க’... இதையெல்லாம் ஏன் இவங்க சொல்றாங்க..? ஒரு கட்டத்தில் சினிமா உருவாக்கம் நின்னுடுச்சுன்னா இவங்களுடைய வாழ்க்கையும் சேர்ந்துதானே பாதிக்கப்படும்? எந்த கலைஞனும் ஒரு படம் வெற்றி பெறணும் அப்படின்னு நினைச்சுதான் எடுப்பாங்க. 

தோல்விக்காக யாரும் கோடிகளில் பணத்தை கொட்ட மாட்டாங்க. எதிர்மறை விமர்சனங்கள் அல்லது நெகட்டிவ் விஷயங்கள்தான் டிஜிட்டலில் விற்பனை ஆகுது. அதுதான் பிரச்னை.

இவர்களை உருவாக்கியதும் சினிமாதான். சினிமா ப்ரொமோஷன்களை இன்ஃப்ளூயன்சர்கள் கையிலயும், இன்டர்நெட் கைலயும் கொடுத்ததன் விளைவு பணம் கொடுத்தால் ஒரு மாதிரி விமர்சனம், கொடுக்கவில்லை என்றால் ஒரு விதமான விமர்சனம் என மாறிடுச்சு. 

இதை எப்படி சரி செய்யப் போறாங்கன்னு தெரியலை. அதிலும் மத்த மொழிகளை விட தமிழில் இந்த நெகட்டிவ் விமர்சன ட்ரெண்ட் அதிகமா இருக்கு. இதற்கு ஏதாவது ஒரு கட்டுப்பாடு விதிச்சாதான் சினிமா ஆரோக்கியமா இருக்கும்.

‘இந்தியன் 3’, ‘தேவரா 2’... உள்ளிட்ட பல படங்களின் பாகங்கள் உங்கள் எடிட்டிங் டேபிளில் இருக்கே?

‘இந்தியன் 3’ முடிஞ்சது. ஆனால், எப்போ ரிலீஸ் என்பதை தயாரிப்பு தரப்புதான் சொல்லணும். ‘தேவரா 2’ விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப் போகுது. தற்சமயம் ஜூனியர் என்டிஆர் ஒருசில பான் இந்தியா திரைப்படங்களில் பிஸியா இருக்கார். 

அதையெல்லாம் முடிச்ச பிறகு இந்தப் படம் ஆரம்பிக்கும். தமிழில் ஒரு ஆர்ட் ஃபிலிம் இப்ப எடிட் செய்துக்கிட்டு இருக்கேன். செம்மலர் அன்னம் மெயின் கதாபாத்திரம். அந்தப் படம் ஒருசில விருதுகளை கொண்டு வரும் என நம்பறேன்.

ஷாலினி நியூட்டன்