இன்ஸ்டாவில் ஃபிட்னஸ் ஸ்டார்...மூக்குத்தி அம்மன் 2 நயன் கோ-ஸ்டார்!



‘‘சினிமாவில் ஸ்டார் ஆகணும். இதுதான் ஆசை, கனவு எல்லாமே. இதோ இப்போ ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா மேடம் கூட டான்ஸ் ஆடறேன்...’’ மகிழ்ச்சியுடன் உற்சாகமாகப் பேசுகிறார் வர்ஷினி வெங்கட்.
இன்ஸ்டாகிராமில் வர்ஷினியின் ஃபிட்னஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் விடுகிறார்கள் இளசுகள். சின்னத்திரை ரியாலிட்டி ஷோவின் சென்சேஷன், கையில் அரை டஜன் படங்கள், இதோ இப்போது ‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படத்தின் ரிலீஸ் என படு பிஸியாக இருக்கிறார்.

யார் இந்த வர்ஷினி?

எட்டு வருஷம் ஆச்சு சினிமாத்துறைக்குள் வந்து. 2016ம் ஆண்டு த்ரிஷா மேடம் மற்றும் அரவிந்த் சார் நடிச்ச ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சேன். 

அந்தப் படம் முடிஞ்சிடுச்சு; இன்னமும் ரிலீஸ் ஆகலை. தொடர்ந்து பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டாகக்கூட சில படங்களில் நடிச்சேன். நிறைய தேடலிலேயே நேரம் போயி ட்டு இருந்துச்சு. பிறகுதான் தனியார் சேனலில் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமா ஒரு பெரிய அங்கீகாரம் கிடைச்சது. 

குறிப்பா இன்னைக்கு இருக்கிற இன்டர்நெட் உலகத்தில் என்னைத் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க. வித்யா மந்திர் பள்ளிப் படிப்பு. தொடர்ந்து பி.எஸ்சி போட்டோகிராபி படிச்சேன். 

மெட்ராஸ் போட்டோகிராபி அசோசியேஷனில் மூன்று வருடங்கள் தெருவோர போட்டோகிராபியில் விருதுகள் கூட வாங்கினேன். அப்பா வெங்கட் ராகவன், மார்க்கெட்டிங் துறையில் இருக்கார். அம்மா பத்மினி வெங்கட் ஹவுஸ் வைஃப். சென்னை பொண்ணு. நல்லா தமிழ் பேசி நடிப்பேன்.

புகைப்படக் கலைஞர் சினிமாவில் எப்படி?

போட்டோகிராபியில் நிறைய ஆர்வம் இருந்துதான் கோர்ஸ் எடுத்துப் படிச்சேன். அதற்கு முன்னாடி ஃபேஷன் டிசைனிங படிப்பில் சேர்ந்து ஒரே மாதத்தில் அதில் ஆர்வம் இல்லாமல் விட்டுட்டேன். பிறகுதான் போட்டோகிராபி. ஆனால், அந்த மூணு வருட காலத்தில்தான் கேமராவுக்கு முன்னாடி நான் இருக்கணும் என்கிற ஆசை அதிகரிக்க ஆரம்பிச்சது. பெரிய சினிமா ஸ்டார் ஆகணும் அப்படின்னு நினைச்சுதான் தேடலில் இறங்கினேன். 

ஆனால், யாரையும் தெரியாது; எந்த பின்னணியும் கிடையாது. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி தேட ஆரம்பிச்சேன். ஒரு சில மாடலிங் வாய்ப்புகளும் வந்தது. அதை செய்ய ஆரம்பித்து அந்த ரூட்டிலேயே பயணிச்சேன். வீட்டில் ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்தாங்க. 

காரணம், சினிமாத்துறை என்றாலே அங்கே பாதுகாப்பு கிடையாது என்கிற அடையாளம்தான். 
ஆனால், எப்போதுமே என்னுடைய ஆசைக்கும் ஆர்வத்துக்கும் வீட்டில் யாருமே குறுக்கே நின்னதே கிடையாது. என்மேல் இருந்த நம்பிக்கையில், உனக்குப் பிடிச்சதை செய் அப்படின்னு சொல்லிட்டாங்க. தொடர்ந்து சின்னத்திரை; அடுத்தடுத்து படங்கள். இப்போ வீட்டில் எல்லோருக்கும் ஹேப்பி.

‘பிட்னஸ் - வர்ஷினி’ என்கிறதே இன்ஸ்டாகிராம் ?

ஆக்சுவலி ஃபிட்னஸ் என்கிறது ஒரு தனி வேலை கிடையாது, அது ஒரு வாழ்க்கை. தினந்தோறுமான பழக்கமா ஏற்படுத்திக்கிட்டா உங்களால் அதிலிருந்து வெளியே வரவே முடியாது. 

ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வேன். தொடர்ந்து கார்டியோ, இரவு நேர வாக்கிங் 90 நிமிஷம் போவேன். இது எனக்கு வாழ்க்கையா மாறிடுச்சு. 
எப்படி மூணு வேளை சாப்பிடுகிறோமோ அப்படித்தான் எனக்கு ஒர்க் அவுட். 

இதை வாழ்வியலா ஏத்துக்க ஆரம்பிச்சிட்டா நிச்சயம் ஃபிட்னஸ் பெரிய சவாலா இருக்காது. ஃபிட்னஸ் என்னுடைய லைஃப்ஸ்டைல். அந்த வீடியோக்களைத்தான் நான் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வேன்.

‘சொட்ட சொட்ட நனையுது...’ பட அனுபவம் எப்படியிருந்தது..?

செம ஜாலியான டீம். எல்லோருமே அடுத்தடுத்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிற கலைஞர்கள். அதனால் ஃபிரண்ட்லியா ஒரே குடும்பம் மாதிரி பயணிச்சோம். 
அதிலும் ஹீரோ நிஷாந்த் ரூசோ தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக்க நிறைய மெனக்கெட்டு வருகிறார். 

அதிலும் ஒரு ஹீரோ தன்னுடைய படத்தின் விழாவுக்கு சொட்டைத் தலையுடன் முடி இல்லாமல் படத்தின் கேரக்டரிலேயே வருவதெல்லாம் எந்த நடிகர் செய்வார்? அவ்வளவு டெடிகேஷன் அவர்கிட்ட பார்க்கலாம். 

கதைப்படி இரண்டு கதாநாயகிகள். அதில் நான் ஒரு நாயகி. பட ஷூட்டிங் துவங்கறதுக்கு ஒரு நாள் முன்பு இன்னொரு ஹீரோயின் வேற ஒரு படத்தில் கமிட் ஆகிட்டாங்க. அப்ப கூட பெரிதா அவர் டென்ஷனை காட்டாமல் படம் நல்லா வரணும் என்கிற எண்ணத்தில் மட்டும்தான் காத்திருந்தார்.
அடுத்த படம் எப்போ?

விமல் சார்கூட ‘லக்கி 777’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிச்சேன். அந்தப் படம் இன்னும் முடியலை. அடுத்து ஸ்ரீகாந்த் சார் நடிப்பில் ‘வரமே சாபம்’ என்கிற படத்தில் மெயின் கதாபாத்திரம். அந்தப் படம் கூடிய சீக்கிரத்தில் ரிலீஸ் ஆகும். ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் ஒரு நல்ல ரோலில் நடிச்சிருக்கேன். நயன்தாரா மேடம் கூட டான்ஸ் போர்ஷன் எல்லாம் கூட இருக்கு. அதற்காகத்தான் பிரத்யேகமா டான்ஸ் பயிற்சி கூட எடுத்துக்கறேன். 

‘XY’ என்கிற சயின்ஸ் திரைப்படத்தில் சிவிக்குமார் சார் டைரக்‌ஷனில் நடிச்சிட்டு இருக்கேன். ‘லாரா’ என்கிற திரைப்படமும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் போயிட்டு இருக்கு.
என்னுடைய ஃபிட்னஸ் மேலே எனக்கு நம்பிக்கை அதிகம். அதனால் ஒரு நல்ல லேடி ஆர்மி ஆபீசர், போலீஸ் கதாபாத்திரம்... இப்படி ஆக்‌ஷன் அதிரடியாக நடிக்கணும் என்கிற ஆசையும் இருக்கு. 

சினிமாவில் யாரையும் தெரியாது; நண்பர்கள் கூட கிடையாது. எல்லாமே என்னுடைய சொந்த முயற்சி, தேடல் கொடுத்த இடம்தான் இப்போ நான் இங்கே நிற்கிறேன். 
நிறைய ஆசைகள் கனவுகள் இருக்கு. நல்ல நடிகை என்கிற பெயர் வாங்கணும். அதை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கேன்.

ஷாலினி நியூட்டன்