அமெரிக்க வரி விதிப்பும் தமிழக ஏற்றுமதியாளர்களும்!



அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது விதித்த 50 சதவீத இறக்குமதி வரி கடந்த வாரம் அமலானதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 
குறிப்பாக இறால், பின்னலாடைகள், ஜவுளிப் பொருட்கள், ஆர்கானிக் கெமிக்கல்கள், கம்பளங்கள், தங்க நகைகள் மற்றும் வைரங்கள், ஸ்டீல், அலுமினியம், காப்பர் பொருட்கள், மெக்கானிக்கல் பொருட்கள், ஃபர்னிச்சர்கள் உள்ளிட்டவை 50 சதவீத வரி விதிப்பைப் பெற்றுள்ளன.

இதனால் தமிழகத்தில் திருப்பூர் பின்னலாடை, ஆயத்த ஆடை, ஜவுளித் தொழில் ஆகியவை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இதேபோல் தமிழக இறால் உற்பத்தியாளர்களும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்குவதால் இந்தியா மீது கடந்த ஜூலை மாத இறுதியிலேயே 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தது அமெரிக்கா. 
அப்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாவிட்டால் அபராதமாக கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார் டிரம்ப். தொடர்ந்து அபராதமாக கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தார். இதனால் 25+25 என 50 சதவீதமாக இறக்குமதி வரி உயர்ந்துள்ளது. 
கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு ஏழரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது இந்த வரி விதிப்பால் 66 சதவீதப் பொருட்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது நான்கரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதியைப் பாதிக்கும் எனச் சொல்லப்படுகிறது. 
இந்நிலையில் பாதிப்புகள் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்ரமணியனிடம் பேசினோம். ‘‘அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரி, திருப்பூரின் செயல்பாட்டை பெருமளவில் முடக்கியுள்ளது. ஏனெனில், திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 40 சதவீதம் அமெரிக்காவிற்கே செல்கிறது.

அந்தவகையில் 12,000 கோடி ரூபாய் அளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். தற்போது 3,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நம் நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் 68 சதவீதம் பங்களிக்கிறது. தற்போது இங்கே 2,500 ஏற்றுமதியாளர்களும், 20,000 தனித்தனி யூனிட்களும் உள்ளன. 

அதாவது பின்னல், சாயமிடுதல், சுருக்குதல், எம்பிராய்டரி, அச்சிடுதல், லேபிள் உற்பத்தி, டேக் உற்பத்தி, பேக்கேஜிங் தொழில்கள் மற்றும் தையல் அலகுகள் உள்ளிட்டவை பின்னலாடை உற்பத்தியில் இருக்கின்றன. இதில் சுமார் பத்து லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள். 

இதிலும் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவின் 19 மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். கடந்த நிதியாண்டில் திருப்பூர் 44,747 கோடி ரூபாய் ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வருகை, கோவிட் ஊரடங்கு, ரஷ்யா-உக்ரைன் போர், செங்கடல் பிரச்னை, கன்டெய்னர் பற்றாக்குறை என எல்லாவற்றையும் தாங்கியே திருப்பூர் இந்த வரலாற்று வளர்ச்சியைப் பதிவு செய்தது. 

தற்போது திருப்பூரிலுள்ள ஏற்றுமதியாளர்கள், அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்பவர்கள், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள், அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் என மூன்று வகையினராக உள்ளனர். இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்படுபவர்கள் அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்யும் முதல் வகையினர்தான். அடுத்ததாக இரண்டாம் வகையினர் பாதிக்கப்படுகின்றனர். 

முதல் மற்றும் இரண்டாவது வகையினரால் தற்போது பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மூன்றாவது வகையினரும் பாதிக்கப்படுகின்றனர். காரணம், முதல் மற்றும் இரண்டாவது வகையினர் வரி விதிப்பால் மற்ற நாடுகளின் சந்தைகளை நாட ஆரம்பித்து இருப்பதுதான். இதனால் மூன்றாவது வகையினர் பாதிக்கப்படுவதுடன் உள்ளூரிலும் போட்டிகள் எழும் நிலை உருவாகி இருக்கிறது.  

அதனால், மத்திய அரசு தொழில் மற்றும் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். முதலில் ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை 8 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். 

அப்போதுதான் பங்களாதேஷுடன் போட்டியிட முடியும். பின்னலாடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு பங்களாதேஷ். இது ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதியில் குறைந்த வளர்ச்சியடைந்த நாடு (LDC) என்கிற தகுதியில் 10 சதவீத வரி விதிப்பைக் கொண்டுள்ளது.  

இந்நிலையில் நமக்கு ஊக்கத்தொகை அதிகரிக்கும்பட்சத்தில் நாமும் ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர்களுடன் வர்த்தகம் செய்யமுடியும். அப்படியாக அமெரிக்க வணிக அளவுடன் மேட்ச் செய்ய முடியும். 

இரண்டாவதாக அனைத்து சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்குமான கடன் தவணைக் காலத்தை 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக நீட்டிக்க வேண்டும். அதாவது கடன்களுக்கான செயல்படாத சொத்து (NPA) வகைப்பாடு காலத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.  

அடுத்ததாக அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் தற்போதுள்ள வரம்புகளை 30 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதியில் முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் கடனளிக்கும் வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தை நிறுத்தியது.

இதனை எந்த வரம்பும் இல்லாமல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் எனக் கேட்டுள்ளோம். இதன்வழியாக நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும். அத்துடன் நாம் இந்த இழப்பீட்டைச் சரிசெய்ய இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் அதிகப்படியான வர்த்தகம் செய்ய முயல வேண்டும்...’’ என்கிறார் கே.எம்.சுப்ரமணியன். 

இதனைத் தொடர்ந்து பேசிய அகில இந்திய இறால் குஞ்சு பொரிப்பக சங்கத்தின் தமிழ்நாடு செயலாளர் இளஞ்சேரன், ‘‘இந்த வரி விதிப்பால் ஒட்டுமொத்த இந்திய இறால் உற்பத்தியாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். 

ஏற்கனவே உற்பத்திச் செலவு அதிகமாகி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்போது போதுமான விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். இந்நிலையில் இந்த இறக்குமதி வரி கூடுதல் சுமையைக் கொடுத்துள்ளது...’’ என வேதனை தெரிவிக்கிறார். 

‘‘கடந்த 2000ம் ஆண்டு ஒரு கிலோ இறால் 520 ரூபாய்க்கு விற்றது. இன்று 400 முதல் 430 ரூபாய் வரையே விற்பனையாகிறது. இந்த 25 ஆண்டுகளில் இறால் வளர்ப்புக்கான இடுபொருட்களின் விலை, மின் கட்டணம், தொழிலாளர்கள் கூலி எல்லாம் எவ்வளவோ உயர்ந்திருக்கின்றன. ஆனால், இறால் விலை மட்டும் ஏறாமல் குறைந்திருக்கிறது.

இதற்குக் காரணம் உற்பத்தி செய்த இறால் அனைத்தையும் நாம் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என முயற்சி செய்ததுதான். தற்போது அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வால் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி செய்யப்பட்ட இறாலை அனுப்ப முடியாமல் ஸ்டாக் வைத்திருக்கிறோம். இதனால் இப்போது இறால் விவசாயிகள், இறால் குஞ்சுகளை வளர்ப்பதை நிறுத்தியுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இறால் குஞ்சு பொரிப்பகங்களை பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வரை கடற்கரைப் பகுதிகளில் வைத்துள்ளோம். இங்கே உற்பத்தி செய்யப்படும் குஞ்சுகளை கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் என இந்தியா முழுவதும் விநியோகிக்கிறோம்.

கிழக்குக் கடற்கரையை எடுத்துக் கொண்டால் ஆந்திரா, ஒடிசா, கொல்கத்தா பக்கங்களுக்கு அனுப்புகிறோம். இந்தியாவில் மொத்தம் சுமார் 10 லட்சம் டன் இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 30 ஆயிரம் டன்னும், மேற்கு வங்கத்தில் 80 ஆயிரம் டன்னும், ஒடிசாவில் 70 ஆயிரம் டன்னும், குஜராத்தில் சுமார் 40 ஆயிரம் டன்னும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இதில் ஆந்திரா மட்டும் 7 லட்சம் டன் வரை உற்பத்தி செய்கிறது. இறாலில் ஆந்திராதான் பெரிய உற்பத்தியாளர். இப்படி மொத்தமாக 10 லட்சம் டன் உற்பத்தி பண்ணி, அதில் 8 லட்சம் டன் ஏற்றுமதி செய்கிறோம். இதில் அமெரிக்காவிற்கு மட்டும் 40 சதவீதம் அனுப்புகிறோம். அதில்தான் இப்போது பிரச்னை வந்திருக்கிறது.

அதனால், நாங்கள் அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். முதலில் இறாலுக்கு இரண்டுவிதமான ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. நார்மலாக இறாலைப் பிடித்து மார்க்கெட்டில் விற்றால் ஜிஎஸ்டி கிடையாது. அதுவே குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி பாக்கெட்டில் போட்டு விற்றால் ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

அதனால், குளிரூட்டப்பட்ட இறாலுக்கு 5 சதவீத வரி என்பதை முழுவதுமாக நீக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறோம். அடுத்ததாக பதப்படுத்தப்பட்ட இறாலுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

அதாவது பதப்படுத்தப்பட்ட இறால் என்பது ரெடி டூ குக் மாதிரி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது. இறால் பிங்கர், இறால் நக்கெட்ஸ், இறால் கட்லெட் மாதிரி உணவுப் பொருளாக மதிப்பு கூட்டி விற்பார்கள். இதற்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனை 5 சதவீதமாக மாற்றுங்கள் என வலியுறுத்துகிறோம்.

இதன்பிறகு உள்ளூர் சந்தையை அதிகரித்து மக்கள் இறால் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். இறால், அதிக புரதச் சத்துள்ள நல்ல உணவு. அதனால், இதற்கான முயற்சியை அரசுகள் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம். இதனுடன் நாங்களும் தற்போது இறால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, பெரிய இறாலாக வளர்த்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நஷ்டமடைய வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகிறோம். 

முப்பது கிராம், நாற்பது கிராம் வளர்த்து வெளிநாட்டுக்காரர்களை நம்பி காசு பார்ப்பதைவிட, பத்து, பதினைந்து கிராம் என்றளவில் இறால்களை வளர்த்து உள்ளூர் சந்தையில் விற்றால் ஓரளவு லாபத்தை பார்க்கலாம். மக்களும் ஆர்வமாக வாங்க முன்வருவார்கள். உள்ளூர் சந்தையும் விரிவடையும். 

அத்துடன் பெரிய இறாலாக வளர்க்க 4 மாதங்களாகும். அதுவே சிறிய இறால் என்றால் இரண்டு மாதங்களிலேயே அறுவடை செய்து விற்பனை செய்யலாம். அப்போது மூன்று, நான்கு அறுவடைகூட செய்ய முடியும் என எங்கள் இறால் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

அதனால் ஜிஎஸ்டி, மின்கட்டணக் குறைப்பு, உள்ளூர் சந்தை விரிவாக்கம் உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டால் இந்தப் பிரச்னையில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். இதனுடன் அமெரிக்காவைத் தவிர்த்து வேறு நாடுகளையும் அணுகி வணிகத்தைத் தொடங்க வேண்டியது அவசியமாகிறது. அப்போது இந்தச் சுமை இன்னும் குறையும்...’’ என்கிறார் இளஞ்சேரன்.

பேராச்சி கண்ணன்