ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய்களை ஆன்லைனில் இழக்கும் இந்திய Gamers!



“எப்போ பார்த்தாலும் மொபைல் கேம், அதிலே என்னதான் இருக்கோ?’’ என வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இளைஞர்களிடம் கேட்டு சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். 
ஆனால், நம் நாட்டின் மதுப் பிரியர்களை விட இந்த கேமர்கள், ஆன்லைன் கேம்களில் கோடிகளில் பணம் இழக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம். வருடத்திற்கு இந்திய இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் இழக்கும் பணம் பல லட்சம் கோடி. இதில் UPI மூலம் மட்டும் மாதந்தோறும் சுமார் ₹10,000 கோடி செலவழித்து வருகின்றனர். நிதியாண்டு கணக்கீட்டின்படி ₹1.2 லட்சம் கோடி (₹1.2 ட்ரில்லியன்). வெறும் UPI வழியே மட்டுமே இந்தக் கணக்கீடு எனில் டெபிட் / கிரெடிட் கார்டு மற்றும் மற்ற கூப்பன்கள், ஆஃபர் கார்டுகள் சேர்த்தால் இது நான்கு மடங்காகும் என்கிறது புள்ளிவிபரங்கள். 

Fantasy Sports, Real-Money Games, Esports என விளையாட்டுகளைப் பிரித்தால் இதில் Fantasy Sports மற்றும் Real-Money Games (my 11 circle, Dream11, Rummy போன்றவை) இந்திய இளைஞர்களிடையே அதிகமாக பண இழப்பை உருவாக்குகின்றன. ஆனால், Dream 11, My 11 Circle போன்றவை கிரிக்கெட் சீசன்களில் மட்டுமே அதிகம் விளையாடப்படுபவை. ஆனால், ஃபேன் டஸி விளையாட்டுகள்தான் வருடந்தோறும் விளையாடப்படுகின்றன. 2023ம் ஆண்டு நிதி மதிப்பீட்டில் சுமார் ₹50,000 கோடி வரை இழக்கச் செய்திருக்கிறது இந்த ஃபேன்டஸி விளையாட்டுகள்.  

இதில் மும்பைதான் டாப்! 

இந்திய நிதித் துறையும், மாநில நிதி திட்டங்களும் சரியாக திட்டமிட்டு இந்த ஆன்லைன் விளையாட்டுகளை சீராக்கினால் அரசுக்கே இதில் மிகப்பெரிய வருவாய் வரும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் மெட்ரோ நகரங்களான மும்பை, பெங்களூரு இளைஞர்கள் அதிக அளவில் விளையாட்டில் பணத்தை இழக்கின்றனர். 

மும்பை (மகாராஷ்டிரா), பெங்களூரு (கர்நாடகம்), தில்லி NCR - இவை முக்கிய ஆன்லைன் கேமிங் மையங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
13 - 40 வயதினரில் இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் விகிதம்

வகை              மதிப்பு

மொத்த கேமர்கள்    568 மில்லியன்
ஆண் கேமர்கள்     335 மில்லியன் (59%)
பெண் கேமர்கள்    233 மில்லியன் (41%)

பெண் - ஆண் கேமிங் நேரம்

பெண்கள்: 11.2 மணி/வாரம் 
ஆண்கள்: 10.2 மணி/வாரம்
16-24 வயது கேமர் வீதம்:  91.2%

 
Fantasy Sports - மாநிலங்கள்- அவற்றின் நிலவரங்கள். அனுமதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள்: மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம்.

மறுவரி அல்லது தடைகள் உள்ள மாநிலங்கள்: தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, அசாம்.சட்டதிட்டத்தின் படி விளையாட்டுகளுக்குத் தடை அல்லது நிலுவை அல்லது லைசென்ஸ் தேவை என கட்டுப்பாடுகள் உள்ள மாநிலங்கள்: நாகாலாந்து, சிக்கிம்.இந்த மாநிலங்களில் Fantasy Sports போன்ற Real-Money Games உபயோகத்திற்கான சட்ட சிக்கல்கள் அல்லது கட்டுப்பாடுகள் உள்ளன. எனினும் அவற்றையும் மீறி இளைஞர்கள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. 

சராசரியாக ஓர் இளைஞர் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,600 லிருந்து ரூ. 1,700 வரை செலவிடு பவராக இருக்கிறார். இந்தியாவின் கேமிங் துறை கொரோனா காலங்களுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. ‘Lumikai’ என்ற கேமிங் மற்றும் இன்டர்ஆக்டிவ் மீடியா வென்ச்சர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 2024நிதியாண்டில் இந்திய கேமிங் துறை மொத்தமாக 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதாவது ரூ.300 கோடி. 

இது 2023 நிதியாண்டில் கிடைத்த 3.1 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 22.6 சதவீத வளர்ச்சி. அதாவது இவை இந்தியாவுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் அங்கீ
கரிக்கப்பட்ட கேம்கள் மூலம் வந்த வருமானம். எனில் 3ம் நபர் கேம்கள், சட்டத்திற்கு எதிரான கேம்கள், APK File கேம்கள் என இன்னும் எவ்வளவோ கேம்கள் உள்ளன. அவற்றை எல்லாம் கணக்கிட்டால் தலை சுற்றும். 

இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது செயலியில் பணம் கொடுத்து வாங்கும் முறைதான் (In-App Purchase). இதனால் 41 சதவீத கேம் வருவாய் உயர்வு ஏற்பட்டுள்ளது. 

எந்தெந்த விளையாட்டுகளில் அதிகமாக பணம் செலவிடப்படுகிறது? Battlegrounds Mobile India (BGMI), Free Fire Max, Clash of Clans, EA FC Mobile போன்ற மிட்-கோர் கேம்கள் 53 சதவீத வருவாய் அதிகரிப்பை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பதிவு செய்துள்ளன. 

இவ்வகை கேம்கள் தொடர்ந்து பயனர்களை ஈர்த்து வருவதால், எதிர்காலத்திலும் இந்த வருவாய் நிலை உயர்வாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது. 
மேலும் மாதந்தோறும் கொடுக்கப்படும் அப்டேட்கள், பணம் கட்டினால் கிடைக்கும் பிரீமியம் பலன்கள் என இவை விளையாட்டு ஆர்வலர்களை தொடர்ந்து அடிமையாக்கி, பணமும் செலவழிக்கச் செய்கிறது.

Lumikai-யின் நிறுவனர் மற்றும் நிர்வாகியான சலோனே சேகல், “இனி வரும் ஆண்டுகளில் இன்-ஆப் வாங்குதல்கள் மற்றும் இன்-ஆப் விளம்பர வருவாய் ஆன்லைன் விளையாட்டுத் துறையின் முக்கிய வருமானங்களாக மாறும். குறிப்பாக 2029 நிதிஆண்டை நோக்கிச் செல்லும் போதெல்லாம், இந்த வளர்ச்சி மிகப்பெரிய நிலைக்கு கொண்டு செல்லும்...” என்கிறார்.

அறிக்கையின்படி, இந்தியாவின் கேமிங் துறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரி 20 சதவீத வளர்ச்சியுடன் முன்னேறி, 2029 நிதியாண்டுக்குள் 9.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

மிட்-கோர் கேம்களின் பெருக்கம், இளைஞர்களிடையே ஆன்லைன் விளையாட்டு ஆர்வம், அதனுடன் சேர்ந்து வரும் விளம்பர சந்தை ஆகியவை இந்த வளர்ச்சியின் முக்கிய சக்திகளாகக் கருதப்படுகின்றன. இதில் இந்தியா இன்னும் சற்று புத்திசாலித்தனமாக மாறி அதிகம் விளையாடப்படும் அத்தனை விளையாட்டுகளையும் சட்டபூர்வமாக மாற்றி, அதற்கு வரிகளைக் கூட்டினால் அரசுக்கும் ஒரு குறிப்பிட்ட வருவாய் கிடைக்கும் என்கிறார்கள். 

அதுமட்டுமல்ல... இதனை மாநிலங்கள் வாரியாக சீர் படுத்தினால் தகுந்த கட்டுப்பாடுகளையும் விதித்து இளைஞர்களையும் அதிகம் அடிமையாக்கி விடாமல் ஒரு குறிப்பிட்ட வருமானமும் ஈட்ட முடியும் என அடித்துச் சொல்கிறார்கள். மொத்தத்தில் ஆன்லைன் கேம் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்கிறார்கள்.இது நன்மைக்கா... தீமைக்கா..?  காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

ஷாலினி நியூட்டன்