இந்தியாவின் பணக்கார Chief Ministers!
வேலை மெனக்கெட்டு ரூம் போட்டு யோசித்து இப்படியொரு பட்டியலை ஏடிஆர் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது.இதன்படி முதலிடத்தில் - அதாவது இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடம்பெற்றிருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.931.83 கோடி!கடந்த 1992ம் ஆண்டில் ‘ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கினார். இதற்காக அவர் முதலில் ரூ.7,000ஐ மட்டுமே முதலீடு செய்தார். பின்னர் வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி சித்தூரில் பால் பண்ணையை தொடங்கினார். அவரது மனைவி புவனேஸ்வரி இதன் நிர்வாக இயக்குனரானார். புவனேஸ்வரியின் திறம்பட்ட நிர்வாகத்தால் 2024ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.6,755 கோடி சாம்ராஜ்ஜியமாக உயர்ந்திருக்கிறது. இந்த அடிப்படையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பணக்கார சிஎம் ஆக முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332.56 கோடியுடன் 2வது இடத்தில் உள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.51.93 கோடி, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ ரூ.46.95 கோடி, மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவிடம் ரூ.42.04 கோடி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ.38.39 கோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் ரூ.30.04 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார். அவரிடம் ரூ.15 லட்சம் சொத்துகள் மட்டுமே உள்ளதாம்.
என்.ஆனந்தி
|