மூன்று நடிகர்களும் மூன்று ஷாக்களும்!
முன்பு ஜெயம் ரவி. இப்போது ரவி மோகன். இவர் சொந்தமாகத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் அறிமுக விழாவையும், அந்நிறுவனம் சார்பாக தயாரிக்கவிருக்கும் படங்களையும் ஆகஸ்ட் 26 அன்று ஒரு பெரிய விழா நடத்தி அறிவித்தார்.அந்நிகழ்ச்சியில் ரவி மோகனின் தற்போதைய தோழி கெனிஷா முக்கியப்பங்கு வகித்தார். இதுதொடர்பாக அந்த வட்டாரங்களில் கொஞ்சம் விசாரித்துப் பார்த்தால் பல தகவல்கள் கிடைக்கின்றன.
 கெனிஷா ஒரு பாடகி. தமிழ், ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் அற்புதமாகப் பாடுமளவுக்கு புலமை பெற்றவர். நடிகர் ஜீவா தயாரித்த ஒரு பாடல் தொகுப்பில் பாட வந்த அவர், முதல் முறையாக அப்பொழுது ஜெயம் ரவியாக இருந்த இன்றைய ரவி மோகனைச் சந்தித்தார். அன்று உருவான நட்பு, இப்போது இருவரும் இணைந்து தொழில் நடவடிக்கையில் இயங்கும் அளவுக்கு வந்திருக்கிறது.
அண்மையில் கெனிஷாவுடன் இலங்கை சென்றார் ரவி மோகன். அங்கு அவரும் கெனிஷாவும் சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரதவைச் சந்தித்தனர்.ரவி மோகனும், கெனிஷாவும் தன்னைச் சந்தித்த விவரத்தை தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத, ‘இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் இலங்கையின் வளமான கலாசாரத்தை ஊக்குவிக்கும் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
இந்த முயற்சிகள் இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்தவும், எமது வளமான கலாசார பாரம்பரியத்தை மேம்படுத்தவும் உதவும்’ என குறிப்பிட்டுள்ளார்.
ரவிமோகன் சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத, முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளே நடைபெறவில்லை என மறுப்பவர். அப்படிப்பட்டவரைச் சந்தித்து அவருடைய வேலைத் திட்டத்தில் ரவி மோகன் - கெனிஷா பணியாற்றப்போவதாகச் செய்திகள் வருவது தமிழ் உணர்வாளர்களைக் கொதிப்படைய வைத்துள்ளது.
இச்சூழலில்தான் ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முழு நிர்வாகப் பொறுப்பையும் கெனிஷாதான் ஏற்றிருக்கிறாராம். இது இப்படியென்றால்... கெனிஷாவை ரவி மோகனுக்கு அறிமுகப்படுத்திய நடிகர் ஜீவாவின் கரியரில் இப்பொழுது வினிஷா என்றொரு பெண் இருப்பதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். அதாவது இப்போது ஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படங்களை ‘இராவணக்கோட்டம்’ படத்தைத் தயாரித்த கண்ணன் ரவி குழுமம் தயாரிக்கிறது.இதன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜீவா முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகின்றன என்கிறார்கள்.
இந்நிலையில் அண்மையில் இன்னொரு படத்தைத் தொடங்கினார்கள். ‘பிளாக்’ படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஜீவா, ரஃபீயா கத்தூன், நைலா உஷா, பப்லு, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் அந்தத் திரைப்படத்திற்கு ஆர்.எஸ். சதீஷ்குமார் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படங்களை கண்ணன் ரவி குழுமம் தயாரிக்கிறது. முத்துக்குமார் ராமநாதன் இணை தயாரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த முத்துக்குமார், ஜீவாவின் பிரதிநிதி என்றும், அவர் பெயரில் இந்த மூன்று படங்களையும் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கும் பொறுப்பை ஜீவா ஏற்றிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த இடத்தில்தான் வினிஷா வருகிறார் என்கிறார்கள். படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பணியில் ஜீவாவுடைய பணியாளராக இருக்கும் வினிஷா, நடிகர்கள் தேர்வு, அவர்களுக்கான சம்பளம் தொடங்கி படப்பிடிப்பு நாட்களில் நடக்கும் அன்றாடச் செலவுகள் வரை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறாராம்.
இப்படியாக ரவி மோகன், ஜீவா ஆகிய இரு நடிகர்களின் திரையுலக எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் வேலையில் கெனிஷா, வினிஷா என இரண்டு ‘ஷா’க்கள் களம் இறங்கியிருக்கிறார்கள்.
இந்த ‘ஷா’க்களின் மேற்பார்வையில் இரு நடிகர்களும் கரியரில் வெற்றி பெறுவார்கள் என நம்புவோமாக.இந்த இடத்தில் இந்த மேட்டரின் தலைப்பில் மூன்று நடிகர்கள்... மூன்று ‘ஷா’க்கள் என இருக்கிறதே... 3வது நடிகர் யார்... 3வது ‘ஷா’ யார் என்றுதானே கேட்கிறீர்கள்?
நம் அனைவருக்குமே அறிமுகமான வர்கள்தான்.யெஸ். இந்த 3வது ‘ஷா’, திரைப்பட நடிகைதான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில், முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர்; நடிப்பவர்தான்.
இந்த ஆண்டே தமிழ் சினிமாவின் டாப் மோஸ்ட் நடிகர்களான இருவரது படங்களில் அவர்களுடன் டூயட் பாடியவர்தான். இவருக்கும், சமீபத்தில் அரசியலில் கால் பதித்திருக்கும் நடிகருக்கும் இடையில் இருக்கும் நட்பு தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்ததுதான்.
அப்படியிருக்க திடீரென்று இந்த நட்பு வைரலாக வலம் வருவதற்குக் காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த மாநாடு.இந்த மாநாட்டுக்கான வரவு செலவுக் கணக்கை இந்த ‘ஷா’ நடிகைதான் பார்க்கிறாராம். இது ஏன்..? அது எதற்கு...? என்று கேள்விகள் கேட்டு நிர்வாகிகளைத் திணறடிக்கிறாராம்.
மொத்தத்தில் மூன்று நடிகர்கள்... மூன்று ‘ஷா’க்களின் வழிகாட்டுதல் மற்றும் நிர்வாகத்தில் தங்கள் பயணத்தை இப்பொழுது மேற்கொள்கிறார்கள்.இந்தப் பயணம் எப்படியிருக்கும் என்பதை காலம் சொல்லும்.
எஸ்ஸார்
|