விமானத்தில் பயணிக்காமல் 203 நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறார்!



எல்லோருக்குமே உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையிருக்கும்தான். ஆனால், யாரும் அந்த முயற்சியை அத்தனை சுலபமாகக் கையில் எடுப்பதில்லை. இதற்குக் காரணம் வேலை, வாழ்க்கை, ஊர் சுற்றத் தேவையான பணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இதற்கு முற்றிலும் விதிவிலக்காக இருப்பவர் டென்மார்க்கைச் சேர்ந்த தோர் பீட்டர்சன். அவர் சுற்றி வந்த நாடுகள் வெறும் ஒன்றிரண்டல்ல. மொத்தம் 203 நாடுகள். இதனை அவர் சுமார் பத்து ஆண்டுகளில் நிறைவு செய்துள்ளார். 

அதுவும் இந்த நாடுகளுக்கு அவர் விமானம் மூலம் பயணிக்கவில்லை. மாறாக சாலை மார்க்கமாகவும், ரயில்களிலும், சில இடங்களைப் படகுகளிலும், கப்பல்களிலுமாக சென்றடைந்துள்ளார். 
இதில் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளார். 2013ம் ஆண்டு பயணத்தைத் தொடங்கியதில் இருந்தே அவர் குறித்தான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அவரும் தனது இணையதள பிளாக்கில், ‘Once Upon a Saga’ என எழுதி வந்தார். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு முழு உலகையும் சுற்றி முடித்தவர், இப்போது தனது அனுபவங்களைப் பேசி வருகிறார். சரி, தோர் பீட்டர்சனுக்கு எப்படி உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென ஆசை வந்தது? 

1978ம் ஆண்டு டென்மார்க்கில் பிறந்தவர் டோர்ப்ஜோர்ன் பீட்டர்சன். சுருக்கமாகத் தன்னை தோர் என அழையுங்கள் என்கிறார். சிறுவயதில் அவரின் அம்மா அவருக்கு சாகசங்கள் நிறைந்த கதைகளைக் கூறியுள்ளார். 

இது தோருக்கு பல்வேறு கற்பனைகளைக் கொடுத்துள்ளன. சாகசக்காரனாக மாறும் கனவுகளைத் தந்துள்ளன. ஆனால், நிஜவாழ்க்கை அதுவல்ல என்பது வளர்ந்த  பிறகே அவருக்குப் புரிந்துள்ளது. இருந்தும் அந்த எண்ணம் அவரை விட்டு மறையவில்லை.  

இந்நிலையில் ஒருநாள் அவரின் அப்பா, உலகைச் சுற்றி வந்த பல சாகசக்காரர்களைப் பற்றிய மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆனால், இது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இதற்கு வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டுமா என யோசித்துள்ளார். ‘‘நான் யோசித்ததற்குக் காரணம் இதுமட்டுமல்ல. இந்த சாகசத்தை 200 பேர் வரை செய்திருந்ததும் ஒரு காரணம். இருந்தும் அவர்களில் சிலர் 20 வயதினராக இருந்தது என்னை ஊக்கப்படுத்தியது. 

பொதுவாக விமானப் பயணம் செய்யாமல் யாரும் எந்த நாட்டுக்கும் பயணம் செய்வதில்லை. அதனால் நான் விமானப் பயணம் செய்யாமல் போக வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்போது எனக்கு 34 வயது வேறு.திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடர வேண்டிய நேரம். 

ஆனால், என்னால் அந்த சாகச எண்ணங்களை விட்டுவிட முடியவில்லை, அதனால் நான் வேகமாகத் திட்டமிடத் தொடங்கினேன்.அப்போது என் சகோதரி எனக்கு உதவினார். நானும் அவரும் இணைந்து எங்கிருந்து ஆரம்பித்து, எங்கே முடிப்பது என்பதைத் திட்டமிட்டோம். அப்படியாக முதலில் டென்மார்க்கிலிருந்து ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகளை முடித்துவிடுவதெனத் தீர்மானித்தேன்.

அங்கிருந்து வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, கரிபீயன் நாடுகளுக்குச் சென்றுவிட்டு ஆப்ரிக்காவினுள் நுழையத் திட்டமிட்டேன். பின்னர் மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் பகுதிகள் எனத் தீர்மானித்தேன். முடிவில் முழுமையாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமும், அதற்கான நிதியும் எனக்குக் கிடைத்தது. 

இதன்படி 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம், பத்தாம் தேதி, காலை பத்து மணி, பத்து நிமிடங்களுக்கு கிளம்பினேன்...’’ என அத்தனை உற்சாகமாகச் சொல்லும் தோர், இதற்காக தனக்குத்தானே சில விதிமுறைகளையும் உருவாக்கிக் கொண்டார்.   

‘‘நான் மூன்று முக்கிய விதிகளை மனத்திற்குள் விதித்துக் கொண்டேன். ஒன்று, ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 24 மணிநேரம் இருக்க வேண்டும் என்பது. அதேபோல் நான் விரும்பும் வரை அங்கே தங்கிக் கொள்ளலாம். இரண்டாவதாக, இறுதி நாட்டை அடையும் வரை நான் வீடு திரும்பக்கூடாது. இது ஒரு முழுப் பயணமாக இருக்கவேண்டும் என நினைத்தேன்.

இறுதியாக, எந்த காரணத்திற்காகவும் விமானத்தில் பறக்கக் கூடாது. ஏனெனில் நான் ஒரு விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டால், நான் மீண்டும் தொடங்கும்படியாக ஆகிடும். 
இதனுடன் மூன்று பக்க விதிகளையும் சேர்த்துக் கொண்டேன். முதலாவதாக நாள் முழுவதும் யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது என முடிவெடுத்தேன். இரண்டாவதாக ஒரு நாளைக்கு சராசரியாக 20 டாலர்தான் செலவழிக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டேன். 

ஒருவேளை விசாவிற்காக 50 அல்லது 100 டாலர்கள் செலுத்த வேண்டியிருந்தால், அதனை ஈடுகட்டும் வகையில் நான் பணம் செலவிடாமல் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன். 
மூன்றாவதாக அன்றைய நாள் முழுவதும் மெக்டொனால்டு ஐட்டங்களை சாப்பிடக்கூடாது எனவும் தீர்மானித்தேன்.அதனால் எங்கெல்லாம் பொதுப் போக்குவரத்து இருக்கிறதோ அதனையே பயன்படுத்திக் கொண்டேன். அப்படியாக 351 தடவை பஸ்களிலும், 158 முறை ரயில்களிலும் பயணித்துள்ளேன். 

இந்த ரயில் பயணம் ஐரோப்பிய நாடுகளில் சாத்தியமாக இருந்தது. பசிபிக் கடலில் உள்ள நாடுகளைச் சென்றடைய கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டேன்...’’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லும் தோர், இந்தப் பயணத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களைக் குறிப்பிட்டார். ‘‘என் பயணத்தில் பல்வேறு தருணங்கள் அழகியல் நிறைந்தவை. 

வெனிசூலா ரொம்பவே அழகான நாடாக இருந்தது. மலைகள், தாவரங்கள், பள்ளத்தாக்குகளின் அளவு, கடற்கரை மற்றும் தீவுகள் என என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. அதேபோல் பெரு நாட்டிலுள்ள மச்சு பிச்சு நகரம் மற்றொரு அழகு! 

இதேபோல் ஐஸ்லாந்தில் இருந்து கனடாவுக்கு படகில் கன்டெய்னர் கப்பலில் புயல் நேரத்தில் பயணித்தது திகில் அனுபவம். அந்த நான்கு நாட்களும் கப்பல் ரொம்பவே குலுங்கியது. அந்தக் குளிர்காலத்தில், தண்ணீரில் பனி இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது.நாங்களும் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை. அது ஒரு நல்ல சூழ்நிலையாக இருக்கவில்லை. பயந்தபடியே பயணித்தேன். அன்றிரவு, நார்தன் லைட்ஸ் எனும் துருவ ஒளியைக் கண்டு ரசித்தேன். இதன்பிறகு கனடா வந்து சேர்ந்தேன். 

அப்புறம், ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில் ஒரு லாரியின் மேல் இரண்டு நாட்கள் பயணித்தது மற்றொரு தனி அனுபவம். அப்போது கேமரூன், காங்கோ குடியரசு எல்லையில் ராணுவ சீருடையில், குடிபோதையில் இருந்த ஆயுதம் ஏந்திய விரோதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டபோது என் உயிர் என்னிடம் இல்லை. 

அதேபோல் என் காதலி லீயை விட்டு நீண்டநாட்கள் பிரிந்து வந்ததால் அவளுடனான பிணைப்பும் நீங்கிக் கொண்டிருந்தது. இதற்கிடையே என் பாட்டியும், நெருங்கிய உறவினர் ஒருவரும் மரணித்தனர். யாருடைய இறுதி நிகழ்விற்கும் என்னால் செல்ல முடியவில்லை.

சில சோர்வுகளும் வேதனைகளும் இருந்தாலும் ஒவ்வொரு நாடும் புது உற்சாகத்தை எனக்குள் விதைத்தது. ஒருவழியாக நியூசிலாந்தில் வைத்து என் காதலி லீயை மணப்பதாக இருந்தேன். அது மார்ச் 2020ம் ஆண்டு. ஹாங்காங்கில் இருந்து என்னால் கோவிட் காரணமாக வெளியேற முடியவில்லை. 

அங்கே இரண்டு ஆண்டுகள் தங்கும்படி நேர்ந்தது. பிறகு ஆன்லைனில் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கைத் துணை விசா கிடைக்கச் செய்தேன். என்னுடன் லீ இணைந்தார். பிறகு வானுட்டு நாட்டில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். தொடர்ந்து அவர் கோபன்ஹேகன் சென்றுவிட்டார். பிறகு நானும் அவளும் வெவ்வேறு நாடுகளில் 27 முறை சந்தித்தோம். 

தொடர்ந்து நான் இலங்கையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நிறைவாக மாலத்தீவுடன் என் பயணத்தை முடித்தேன். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், 2023ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி என் மனைவி, தந்தை, இரண்டு சகோதரிகள், நலம் விரும்பிகள் என எல்லோரும் என்னை வந்து வரவேற்றனர்.

அதனை இப்போது நினைத்தாலும் மனம் உயரே பறக்கிறது. இதற்காக நான் ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் 16 நாட்கள் எடுத்துக் கொண்டேன்...’’ என மகிழ்ச்சியாகக் குறிப்பிடும் தோர், அவர் கண்ட கனவு போலவே இப்போது ஒரு அட்டகாசமான சாகசக்காரனாக இந்த உலகில் காட்சியளிக்கிறார்.

பேராச்சி கண்ணன்