ரூ.30 ஆயிரம் கோடிக்கு எத்தனை சைபர்..? கேட்கிறார்கள் அமெரிக்கர்கள்



ஒரு கோடி ரூபாயில் எத்தனை சைபர் இருக்கும் என யாராவது திடீரெனக் கேட்டால் நமக்குக் குழப்பம் ஏற்படும் இல்லையா..?
ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு 30 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு என்று கணக்கிட்டு அதில் எத்தனை சைபர் வரும் எனக் கேட்கிறார்கள் அமெரிக்க பத்திரிகையாளர்கள்!

இந்த 30 ஆயிரம் கோடியையும் டிரம்ப் தனது இரண்டு முறையிலான ஆட்சிகளில் குவித்தது என பத்திரிகையாளர்கள் கணக்கிட்டு, நம்மை மலைக்க வைக்கிறார்கள். 

இத்தனைக்கும் இந்தச் சொத்து வருமானம் எல்லாம் பலவித தொழில்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்தன என ஆதாரம் காண்பிக்கிறார்கள் அவர்கள். அதிலும் எதிரி நாடுகளில் இருந்தெல்லாம் இந்த வருமானம் வந்தது, வருவதுதான் ஆச்சரியம்.

பண வர்த்தகத்தில் இன்று பிரபலமான ஒரு முறை கிரிப்டோ கரன்சி முறை. தாளில்லாத, உலோகம் இல்லாத பண வர்த்தகத்தில் இந்த கிரிப்டோ கரன்சி எனும் பணம்தான் ஆன்லைன் வர்த்தகத்தில் இப்போது சக்கைபோடு போடுகிறது. இதில் டிரம்ப் கில்லாடி. உதாரணமாக கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஒருவருடைய முதலீடு என்ன, உற்பத்தியாகும் பொருள் என்ன, விற்பனை என்ன, லாபம் என்ன... என்பதை எல்லாம் யாரும் தெரிந்து கொள்ளமுடியாது. 

இதனால்தான் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை ஊக வணிகம் என சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஊகம் என்றால் பங்கு வர்த்தகம் போல் இருக்கும். ஆனால், கிரிப்டோ கரன்சி வர்த்தகம் பங்கு வர்த்தகத்தைவிட ஊக வணிகத்தில் இன்னும் ஒரு படி மேலானது. இதில்தான் நம்ம டிரம்ப் கில்லி. உதாரணமாக பிறரின் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் எல்லாம் டிரம்ப் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை. காரணம் சொந்தமாகவே ஒரு கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை நடத்துவதால்!

ஆம். ‘வேர்ல்ட் லிபர்டி ஃபினான்சியல்’ எனும் பெயரில் ஒரு கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை டிரம்பே நிர்வகிக்கிறார். இதில் இந்திய மதிப்பில் சுமார் 2000 கோடி ரூபாய் வரை வருமானம் வருவதாகச் சொல்லி மூச்சை முட்டுகிறார்கள் விற்பன்னர்கள். இதுபோல வேறு ஒரு கிரிப்டோ நிறுவனமான ‘அமெரிக்கன் பிட்காய்ன்’ நிறுவனத்தில் டிரம்பின் பங்கு 13 சதவீதமாக இருப்பதாகவும், இதில் வரும் வருமானம் சுமார் 100 கோடி ரூபாய் வரை இருப்பதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

வெறும் இந்த ‘மேலான’ ஊக வணிகத்தில் நேரடியாக மட்டுமல்லாமல் வேறு மாதிரியான வர்த்தகத்திலும் தொழிலிலும் டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளை மட்டுமே நம்பி லாபத்தை அள்ளுவதாகவும் செய்திகள் வருகின்றன. உதாரணமாக டிரம்பின் மீடியா நிறுவனத்தின் பெயர் ‘டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி’. இந்த நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தையில் சக்கைபோடு போட்டது. எல்லாம் கிரிப்டோ கரன்சியில் வாங்கப்பட்ட பங்குகள். மொத்தம் இந்திய மதிப்பில் ரூபாய் 17ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனையாகின. 

இந்த வகையில் வந்த லாபம் ரூபாய் 9 ஆயிரம் கோடி. ‘வேர்ல்ட் லிபர்டி ஃபினாசியல்’ மாதிரி டிர்ம்ப் அண்மையில் ‘$TRUMP’ எனும் பெயரில் ஒரு கிரிப்டோ நிறுவனத்தை தொடங்கினார். இதில் ஊக வணிகத்தின் மூலம் சுமார் ரூபாய் 350 கோடி கிடைத்ததாக சொல்கிறார்கள். இதுபோல இன்னொரு கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை தன் மனைவியின் பெயரில் ஆரம்பித்திருக்கிறார். இதன் பெயர் ‘$MELANIA’. இதில் சுமார் ரூபாய் 83 கோடி கிடைத்தது. 

இந்த கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் அப்படியென்ன வர்த்தகம் நடந்தது என்று நீங்கள் கேட்டால் அதற்கு யாரிடமும் விடை இல்லை. ஆனால், எல்லாம் டிரம்பின் பெயருக்காக நடந்தவை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்கிறார்கள். 

டிரம்ப் மூலம் சில விஷயங்களை சாதிப்பதற்காக பல்வேறு நபர்களும் இந்த வர்த்தகத்தில் முதலீடு செய்திருப்பதாகவே பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். லாபம் வந்தால் டிரம்பின் நிறுவனம் என்ன விற்கிறது என்று அவரிடம் கேட்பதெல்லாம் வேண்டாத வேலையாக இந்த முதலீட்டாளர்களும் நினைப்பதால் டிரம்பின் காட்டில் பண மழை.

பிறகு வளைகுடா நாடுகள். அமெரிக்கா அடிக்கடி விரோதித்துக் கொள்ளும் நாடுகள் இந்த வளைகுடா நாடுகள்தான். அதிலும் ஈரான், ஈராக், சிரியா, எகிப்து, ஜோர்டான்... எல்லாம் அமெரிக்காவுக்கு பிடிக்காது. ஆனால், இவற்றுக்கு அப்பாலும் வளைகுடா நாடுகள் இருக்கிறதல்லவா..? ஆமாம். எதிரி வளைகுடா நாடுகளைச் சுற்றிலும் இருக்கும் மற்ற வளைகுடா நாடுகளைத்தான் அமெரிக்காவும், குறிப்பாக டிரம்பும் வளைத்துப்போட்டிருக்கிறார்கள்.

ஓமனில், சவுதி ரியல் எஸ்டேட் நிறுவன உதவியுடன் ஒரு ரிசார்ட், துபாயில் ஆடம்பர ஹோட்டல் திட்டம், ரியாத் - ஜெட்டாவில் ஹோட்டல்கள், கத்தாரில் ரியல் எஸ்டேட் பிசினஸ்... இத்தோடு துபாயில் கோல்ஃப் விளையாட்டுத் திடல். இவையெல்லாம் சேர்த்து வளைகுடா நாடுகளில் டிரம்ப் ஆரம்பித்த பிசினஸ் மூலம் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்ததாக; வருவதாகச் சொல்கிறார்கள். 

பொதுவாக தனிப்பட்ட ரீதியில் அமெரிக்க அரசியல்வாதிகள் நட்பு நாடுகளில் இருந்துகூட பரிசுப் பொருட்களை வாங்குவதில்லை. ஆனால், டிரம்புக்கு கத்தார் நாடு ரூ.1300 கோடி மதிப்புள்ள ஒரு பிரைவேட் ஜெட்டை கடந்த வருடம் ‘பரிசாக’ வழங்கியது. இத்தோடு டிரம்ப் பெயரில் அமெரிக்காவில் டி ஷர்ட், ஷாம்பூ, வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் எக்கச்சக்கமாக விற்பனையாகின்றன. இதிலிருந்தும் சுமார் 250 கோடி ரூபாய் வருவாயை டிரம்ப் கல்லா கட்டுவதாக சொல்கிறார்கள். 

வளைகுடா நாடுகள் மட்டுமல்ல... வரலாற்றில் அமெரிக்கா படுதோல்வி அடைந்ததாகப் பதிந்திருக்கும் வியட்நாம் நாட்டில்கூட டிரம்பின் கொடி இப்போது பறப்பதாக சொல்கிறார்கள்.
வியட்நாமின் தலைநகர் ஹனோய். இங்கே பணக்காரர்களுக்கு என ஒரு கோல்ஃப் விளையாட்டு மைதானம் இருக்கிறது. 

இது டிரம்புடையது. இதிலிருந்து சுமார் 350 கோடி ரூபாய் வருவதாகச் சொல்கிறார்கள். இத்தோடு டிரம்பின் சோஷியல் மீடியாவான ‘ட்ரூத் சோஷ’லிலிருந்து சுமார் 1500 கோடி ரூபாயும், அமேசான் பிரைம் டாக்குமெண்டரி சேனலின் மூலமும் வருமானம் வருவதாக ஆதாரம் காண்பிக்கிறார்கள் அமெரிக்காவின் துப்பறியும் பத்திரிகையாளர்கள். 

மொத்தத்தில் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கோடீஸ்வரனாவது வரலாற்றில் நடப்பதுதான். ஆனால், டிரம்ப் அளவுக்கு மாபெரும் கோடீஸ்வரனாக இதுவரை அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரும் வளர்ந்ததில்லை என்கிறார்கள் அமெரிக்க குடிமக்கள். இனிமேல் ‘பணம் பாதாளம் வரையும் பாயும்’ என்பதை மாற்றி ‘டிரம்ப் வரை பாயும்’ என்று சொல்லலாம். தப்பில்லை!

டி.ரஞ்சித்