கணணீர வருதே...

இயக்குநர் சேரன் பதிப்பகம் ஆரம்பித்திருக்கிறார் என்ற செய்தி காற்றுவாக்கில் வந்தது. ஆச்சரியத்தோடு அலுவலகம் சென்று பார்த்தால், நெகிழ்வும் புன்னகையுமாக காத்திருந்தார் சேரன். தமிழ் சினிமாவின் தனிக்குரலாக ஒலிக்கும் சேரனுக்கு, பதிப்பகம் தொடங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? கேட்டால் கிடைத்தது வலியும், வேதனையும், பரிவும், கோபமும் பொங்கிய வார்த்தைகள்.

‘‘அன்று ஷூட்டிங்கின் இடையில் அலுவலகத்தில் இருந்த நேரம். இலங்கையிலிருந்து சாவித்திரி அத்துவிதானந்தன் என்ற பெண்மணி என்னை சந்திக்க வந்திருந்தார். அவர் எழுதிய ‘போரும் வலியும்’ என்ற புத்தகத்துக்கு ஒரு அணிந்துரை வாங்குவதற்கான முயற்சிதான் அது. என்னிடம் புத்தகத்தின் பிரதியைக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். மெல்ல ஈழத் தமிழ் நிலத்தின் நினைவுகளை, துயரப் பிழிவைச் சொல்ல ஆரம்பித்தார்.

என்னை அறியாமல் பெருகியது கண்ணீர்! நான்கு நிமிடத்தில் முடியும் என்று உட்கார்ந்த சந்திப்பு நான்கு மணிநேரத்திற்கு மேல் நீண்டது. உறவுகளைக் கூவி அழும் அவலம், குடும்பத்தை பறிகொடுத்த துயரம், வெந்து தணிந்த புண்ணின் மேற்பரப்பில் கீறல் ஏற்படுத்தின. மனிதகுலம் காணத் தவறிய அநாகரிகம் அங்கே நடந்திருக்கிறது. நான் சொல்வது எதையும் நீங்கள் நம்பத் தேவையில்லை. இந்தப் ‘போரும் வலியும்’ எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி சொல்லும்.

டெல்லியில் நம் மனம் கரைந்து குரல்கொடுத்த பெண்ணும் நம் சகோதரிதான். ஆனாலும் இந்த ஆயிரம் ஆயிரம் தமிழ்ப்பெண்களின் துயரத்திற்கு நாம் என்ன செய்தோம்? என்ன செய்வது... இந்தப் புத்தகத்தின் உள்ளார்ந்த செய்தி மொத்த ஈழ மக்களின் அவலம் குறித்தது. தீராத் துயரம் நிறைந்திருக்கிற, ரத்தம் உறையச் செய்கிற, வாய்மூடி மௌனிக்கிற, கனிந்து கண்ணீர் வரவழைக்கிற பக்கங்கள் இவை. அனைத்தும் சாவித்திரி அம்மா ரத்தமும் சதையுமாகக் கண்டு, கேட்டு, உணர்ந்த சம்பவங்கள். இது சாட்சியங்களற்ற போர் என்பது உண்மையல்ல. வலிமை இழந்து, குரல் எழுப்ப முடியாமல் இருந்தது ஒன்றே நம் பலவீனம்!

யுத்தம் எல்லாவற்றையும் தின்று விடுகிறது. நாகரிகம், மனிதப்பண்பு, தத்துவம், செயல் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டு கோரப் பற்களோடு சிரித்த போரின் அவலத்தை இந்தப் புத்தகம் அடுத்தடுத்து பதிவு செய்கிறது. உண்மையைத் தவிர சிறந்த மதம் வேறில்லை. நானே சேரன் நூலகம் ஆரம்பித்து ‘போரும் வலியும்’ வெளியிட்டிருக்கிறேன். நானும் கொஞ்சம் சொரணையோடு இருக்கிறேன் என்பதற்கான பதிவு இது.

நமக்கு ஓரளவு சந்தோஷமான வாழ்க்கை இருக்கிறது. குழந்தைகளை ‘பாபா ப்ளாக் ஷீப்’ சொல்லக் கேட்டு ஆனந்திக்கிறோம். நம் குடும்பத்தில் ஒருவரை இழந்தால் துக்கம் தொண்டையை அடைக்க செயல் இழக்கிறோம். ஆனால், ஈழ மண்ணின் மனிதர்களுக்கு இந்த உலகில் என்னதான் இருக்கிறது - நம்பிக்கையைத் தவிர!’’
- நா.கதிர்வேலன்