தனியார்மயமாகிறது தண்ணீர்




இனி எல்லா தண்ணீருக்கும் விலை உண்டு



இருபதடி தோண்டினால் குமுறிக் கொப்பளித்த நிலங்களில் 200 அடி தோண்டினால் கூட கசிய மறுக்கிறது தண்ணீர். கட்டுப்பாடில்லாமல் தண்ணீரை வீணாக்கியதன் விளைவை உணரும் காலம் வந்துவிட்டது. பெட்ரோலைப் போலவே தண்ணீரும் இனி நுகர்வுப் பொருள். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டி, உங்கள் இஷ்டத்துக்கு இனி தண்ணீரைக் குடிக்க முடியாது!
கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘தேசிய நீர்க்கொள்கை-2012’, தண்ணீரை முற்றிலும் தனியார்மயமாக மாற்றியிருக்கிறது. இதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தனி ஆணையம் அமைக்கப்பட்டு, குடிநீர், பாசன நீர் அனைத்துக்கும் விலை நிர்ணயிக்கப்படும். ஆற்று நீர், ஏரி நீர், நிலத்தடி நீர் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை. (தேர்தல் ஆணையத்தைப் போலவே சுயேச்சையாக செயல்படும் இந்த ஆணையம், ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது!) தண்ணீர் வினியோகம் தனியார்மயமாகும். விவசாயத்துக்கான இலவச மின்சாரமும் நிறுத்தப்படும். நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அணைகள், ஆறுகள் உள்ளிட்ட மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நீர்நிலைகளையும்
மத்திய அரசு கண்காணிக்கும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் விரைவில் சட்டம் இயற்றப்படும்.

மக்கள்தொகை அதிகரிப்பதால் தண்ணீரின் தேவையும் அதிகரித்து வருகிறது. வீணாகும் தண்ணீரைக் கட்டுப்படுத்தவும், தண்ணீர்ப் பகிர்வை உறுதிப்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவுமே இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறது மத்திய அரசு. ஏற்கனவே இருக்கும் சட்டங்களையே சில மாநில அரசுகள் மதிக்கத் தயாராக இல்லாத நிலையில், இந்த புதிய கொள்கை என்ன சாதிக்கப்போகிறதோ, தெரியவில்லை. காங்கிரஸ் ஆளாத மாநிலங்கள் இக்கொள்கையை எதிர்க்கின்றன. ‘அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைக் குறிப்பாகவே இந்தக் கொள்கை இருப்பதாக’ குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், ‘மாநிலங்களுக்கு உள்ள கொஞ்ச நஞ்ச உரிமையையும் பறிக்கும் நடவடிக்கை இது’ என்றும் குமுறுகின்றன.
அதேநேரம், ‘ஓரிரு அம்சங்கள் தவிர, மற்றவை அனைத்தும் காலத்துக்கேற்ற முற்போக்கான கொள்கைகள்’ என்று பாராட்டுகிறார்கள் நீர்வள நிபுணர்கள்.
பொறியாளர் இரா.வேங்கடசாமி, ‘‘அபாயகரமான கட்டத்தில் இருக்கிற இந்தியாவுக்கு இதுபோன்ற ஆக்கபூர்வமான கொள்கைகள் அவசியம் தேவைதான்’’ என்கிறார்.

‘‘உலகில் அதிக தண்ணீரைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், நம்மால் தண்ணீரை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. இந்தியாவில் 10ல் 1 பங்கு நீர்வளத்தைக் கொண்ட சிங்கப்பூரில் தண்ணீர் பிரச்னை எழவில்லை. காரணம், வினியோக ஒழுங்கு. நீரை முறையாக வினியோகிப்பதற்கான திட்டமோ, ஏற்பாடோ இதுவரை நம்மிடம் இல்லை. மழையின் மூலம் ஆண்டுக்கு 4000 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்தியாவுக்குக் கிடைக்கிறது. ஆனால் இது எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைப்பதில்லை. ராஜஸ்தானில் 100 மி.மீ பெய்தால், கேரளாவில் 6000 மி.மீ பெய்கிறது. மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் 11,500 மி.மீ பெய்கிறது. இதுதான் சிக்கலுக்கு அடிப்படை. மாநிலங்களின் மனோபாவம் இந்தப் பிரச்னையை வலுவாக்குகிறது. ஒருபக்கம் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து முரண்டு பிடிக்கிறது கேரளா. ஆனால், அங்குள்ள 44 ஆறுகளில் 80 சதவீதம் நீர் அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. இங்கு மட்டுமல்ல... கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகளின் 50 சதவீதத் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதையெல்லாம் இதுபோன்ற கொள்கை வரைவுகள், சட்டங்கள் மூலமாகவே சரிசெய்ய முடியும். என் பார்வையில் இது எந்தவித ஒளிவு மறைவுமற்ற தெளிவான கொள்கை’’ என்று பாராட்டுகிறார் வேங்கடசாமி.

‘‘தண்ணீருக்கு விலை நிர்ணயிப்பதும் காலத்தின் கட்டாயம். இனிமேல் பழங்கதை எல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது. தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த அதற்கு விலை நிர்ணயிக்கத்தான் வேண்டும். அதேநேரம், அத்தியாவசியத் தேவைகளுக்கான தண்ணீரை அரசு இலவசமாகக் கொடுக்க வேண்டும்’’ என்கிற வேங்கடசாமி, இலவச மின்சாரத்தை ரத்துசெய்வதை எதிர்க்கிறார்.

ஆனால், காவிரி டெல்டா மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மன்னார்குடி ரங்கநாதன், ‘‘இலவச மின்சாரத்தை முறைப்படுத்த வேண்டியது அவசியம்’’ என்கிறார்.
‘‘தமிழகத்தில் வருடத்துக்கு 7 மாதங்கள் பருவமழைகள் பெய்கின்றன. சாகுபடி நேரத்தில் 40 நாட்களுக்கு மேல் ஆறுகளில் தண்ணீர் வருகிறது. கோடைசாகுபடிக்கு மட்டுமே விவசாயிகள் பம்ப் செட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தொழிற்சாலைகளை விட விவசாயத்துக்கே அதிக மின்சாரம் செலவாகிறது என்று அரசின் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. உண்மை நிலவரத்தை நிச்சயம் கண்டறிய வேண்டும்.

இந்த நீர்க்கொள்கை தெளிவாகவும், காலத்துக்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வளம் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா, குறைந்த அளவு உணவு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலிலும் இருக்கிறது. 81 நாடுகள் கொண்ட அந்தப் பட்டியலில் 67வது இடம் இந்தியாவுக்கு. 10 லட்சம் டன் உணவு தானியங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று சொல்கிற இந்த நாட்டில்தான் மக்கள் பட்டினியால் சாகிறார்கள். தண்ணீர் வினியோகத்தை முறைப்படுத்தி நாட்டை சமநிலைக்குக் கொண்டு வரவேண்டும். அதற்கு, இதுபோன்ற கொள்கைமுடிவுகள் அவசியம்’’ என்கிற ரங்கநாதன், ‘‘மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை மத்திய அரசு கண்காணிப்பதிலும் எந்தத் தவறுமில்லை’’ என்கிறார்.
‘‘தவறான புள்ளிவிபரங்களைக் கொடுத்து மத்திய அரசையும், அண்டை மாநிலங்களையும் ஏமாற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களே இதற்கு அஞ்சவேண்டும். தமிழகத்திற்கு இதனால் எந்தப் பிரச்னையும் வராது’’ என்கிறார் ரங்கநாதன்.

சென்னை வளர்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய பேராசிரியரும், நீர்வள நிபுணருமான வைத்தியநாதன், ‘‘பருவமழைகள் தப்பி, தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, மாநிலங்களுக்கு இடையே பிரச்னைகள் வலுத்து வரும் நிலையில், இருக்கும் நீர்நிலைகளை முறையாகப் பராமரித்து பாதுகாப்பதே நிரந்தரத் தீர்வு.  தண்ணீரை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது பற்றி எந்த மாநிலத்திடமும் புள்ளி விபரங்கள் இல்லை. இந்தக் கொள்கை, மாநிலங்களுக்கு பொறுப்பை உணர்த்தும். நிர்வாக சீரமைப்புக்கும் உதவும்’’ என்கிறார்.

கிராம நீராதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் ‘தானம் வயலகம் கண்மாய் அறக்கட்டளை’ முதன்மை நிர்வாகி குருநாதன், ‘‘இதுபோன்ற ஒரு கொள்கைத்திட்டம் அவசியம்தான் என்றாலும், தண்ணீரை தனியார்மயமாக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்’’ என்று எச்சரிக்கிறார். ‘‘தண்ணீர் பொதுச்சொத்து. அதை வணிகப்பொருளைப் போல சந்தைப் படுத்துவது நல்லதல்ல. தனியார்மயமாக்குவது, அரசு தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதற்கு சமம். விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க் கையை கேள்விக்கு உள்ளாக்கி விடும்’’ என்கிறார் குருநாதன்.

‘காட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு உலக வர்த்தக அமைப்புக்கு கட்டுப்பட்டே ஒரு நாடு இயங்கமுடியும் என்பதே எதார்த்தம். கல்வி, சுகாதாரம் வரிசையில் இப்போது தண்ணீரும் தனியார் கையில். ஒருவேளை உணவுக்கே வழியற்ற கோடிக்கணக்கான இந்திய ஏழைகளுக்கு இனி தண்ணீரும் கிடைக்காது போலிருக்கிறது.
- வெ.நீலகண்டன்