இது ஓ.எல்.இ.டி டி.வி!


எல்.சி.டி டி.விதான் இப்போது எல்லா இடத்திலும் இருக்கிறது. அதைவிட அட்வான்ஸ்டு என்று எல்.இ.டி டி.வியைச் சொன்னார்கள். இப்போது புதிதாக ஓ.எல்.இ.டி டி.வி வந்திருப்பதாகச் சொல்கிறார்களே... அதில் என்ன விசேஷம்?
- எம்.ராணிகுமாரி, கோவை.

பதில் சொல்கிறார்கள் எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினர்.

அந்தக் கால பெரிய டி.வி பெட்டிகளை விட பல மடங்கு மின்சாரத்தை மிச்சப் படுத்தக் கூடியது எல்.சி.டி டி.வி என்பதை நீங்கள் அறிவீர்கள். மிகச் சமீபத்தில் எல்.ஜி நிறுவனத்தால் தென்கொரியாவில் வெளியிடப்பட்டிருக்கும் ஓ.எல்.இ.டி டி.வி அதை விடவும் அதிக அளவில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
எல்.இ.டி என்றால் ‘லைட் எமிட்டிங் டையோட்’ என்று அர்த்தம். ஓ.எல்.இ.டி என்றால், ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட். அதாவது, கார்பன் உள்ளிட்ட பொருட்களால் மிக மெல்லிய படிமத்தை உருவாக்கி, அதை லட்சக்கணக்கான பிக்சல்களாக ஒளிரச் செய்வது. உங்கள் திரையில் வெள்ளை உள்ளிட்ட நிறங்கள் தோன்றும்போது மட்டும்தான் இது மின்சாரத்தை செலவு செய்யும். கறுப்பு நிறம் தோன்றும் இடங்களில் எல்லாம் கொஞ்சமும் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாதபடி இந்தப் புதிய தொழில்நுட்பம் பாதுகாக்கிறது.

மேலும் இதன் திரையில் மிக மெல்லிய படிமமே பயன்படுத்தப்படுவதால், எல்.சி.டியை விடவும் மெல்லிய வடிவமைப்பில் எடை குறைவாக இது கிடைக்கும். வருங்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் வளர வளர, பிளாஸ்டிக் பேப்பர் போல வளைத்து நிமிர்த்தக் கூடிய ஓ.எல்.இ.டி டி.விக்கள் வரலாம்! அதை பேப்பர் போல ரோல் செய்து எங்கும் எடுத்துப் போகலாம்.

நமக்கென ஒரு பிளாக் உருவாக்கி எழுதலாம் என்கிறார்களே, அது பற்றிய விளக்கம் கிடைக்குமா?
- மாலினி, கோயம்புத்தூர்.


பதில் சொல்கிறார் எ.அ.பாலா (பிளாக் எழுத்தாளர், சென்னை)
ஒரு கதையோ, கட்டுரையோ, கவிதையோ எழுதி ஏதோவொரு பத்திரிகைக்கு அனுப்பி வைக்கிறீர்கள். அவை பிரசுரமாகலாம்; பிரசுரிக்கப்படாமலும் போகலாம். நினைத்ததை எழுத வேண்டுமெனத் துடிப்பவர்கள் எல்லோரும் தனியாக பத்திரிகை நடத்துவதென்பதும் இயலாத காரியம். தமிழில் ‘வலைப்பூ’ என அழைக்கப்படுகிற ‘பிளாக்’, இப்படிப்பட்டவர்களுக்காகவே இணையம் அளித்துள்ள வரப்பிரசாதம்.
இன்று தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கையே பல ஆயிரங்கள். பிளாக் ஆரம்பிப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஒரு ‘இ-மெயில்’ உருவாக்குவது போன்றதுதான். கூகுளின் ‘பிளாக்ஸ்பாட்’, ‘வேர்ட்பிரஸ்’ போன்ற இணைய தளங்கள் வாயிலாக இலவசமாகவே வலைப்பூவைத் தொடங்கலாம். இந்த இணையதளங்களின் முகவரிக்குச் சென்றால் ‘ஒரு பிளாக்கைத் தொடங்க விருப்பமா; இங்கு கிளிக் செய்யவும்’ என இருக்கும். அதன்மீது கிளிக் செய்து, தொடர்ந்து நம்மைப் பற்றிக் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்தால் பத்து நிமிடத்தில் உங்களது ‘பிளாக்’ ரெடி. நீங்கள் இஷ்டப்பட்ட பெயரை அதற்கு சூட்டிக் கொள்ளலாம்.
பிளாக் ரெடி. எழுதுவது? எழுதுவதற்கு முதலில் உங்களது பிளாக் அக்கவுன்ட்டுக்குள் நுழைய வேண்டும். உட்புகுந்ததும் ‘நியூ போஸ்ட்’ என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதைக் கிளிக் செய்தால், நீங்கள் எழுதுவதற்கு வசதியாக ஒரு திரை வரும். ஆங்கிலம் போல எல்லா கணினியிலும் புலப்படக் கூடிய யுனிகோட் தமிழ் எழுத்துரு இன்று பரவலாகிவிட்டதால், தமிழிலேயே எழுதலாம். இதற்கென இ-கலப்பை உள்ளிட்ட பல தமிழ் தட்டச்சு மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. நம் கம்ப்யூட்டர் கீ போர்டில் ஆங்கில எழுத்துகள் இருந்தாலும் இந்த மென்பொருட்கள் தமிங்கிலீஷ்படி அவற்றை தமிழில் மாற்றித் தரும். எழுதி முடித்ததும் கீழே இருக்கும் ‘பப்ளிஷ்’ என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் எழுதியது உங்கள் பிளாக்கில் பளிச்சிடும்.
இப்படிப்பட்ட வலைப்பதிவுகளைத் திரட்டித் தருவதற்கென்றே ‘வலைப்பூ திரட்டி’களும் வந்துவிட்டன. அவற்றில் உங்களின் வலைப்பதிவை பதிவு செய்துவிட்டால், உங்கள் எழுத்துகளைப் பலரும் வாசிக்க ஏதுவாக இருக்கும். டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வலைப்பூவின் ‘லிங்க்’கை அங்கும் இணைக்கலாம்.

‘பணவீக்கம்’ என்கிற வார்த்தையை செய்தித்தாள்களில் அடிக்கடி பார்க்கிறோமே... அதற்கு என்ன அர்த்தம்? அது நம் வாழ்வில் தாக்கத்தை உண்டாக்குமா?
- யாழினி பர்வதம், சென்னை.


பதில் சொல்கிறார் ஸ்ரீனிவாசன் (பொருளாதார பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்)
நாம் பயன்படுத்துகிற பணத்தின் அளவு (மதிப்பு அல்ல) அதிகரிப்பதைத்தான் பொருளாதாரத்தில் ‘பணவீக்கம்’ என்கிறார்கள். உதாரணத்துக்கு ‘ஒரு பென்சிலின் விலை முதலில் ஒரு ரூபாயாக இருந்து பிறகு அதே பென்சிலின் விலை இரண்டு ரூபாயாக உயர்ந்திருக்கிறது’ என வைத்துக்கொள்வோம். பென்சில் ஒன்றுதான்... அதை வாங்க ஆகும் பணத்தின் அளவு உயர்ந்திருக்கிறது. எல்லா பொருட்களுக்கும் இது பொருந்தும். பாமர மக்களைக் கேட்டால், ‘அட, விலைவாசி ஏறிடுச்சுப்பா’ என்பார்கள். பணவீக்கமும் விலைவாசி உயர்வும் ‘கோழி-முட்டை’ கதைபோல் தோன்றினாலும், ‘பணவீக்க’த்தால்தான் விலைவாசி உயர்வு நிகழ்கிறது என்பதே பொருளாதார உண்மை. பொருட்களின் உற்பத்தி அதிகரித்து, பணத்தின் அளவு குறையுமானால், அதற்குப் பெயர் ‘பணவாட்டம்’.
பணவீக்க காலத்தில் குடும்பங்களின் வாங்கும் சக்தி குறைந்து, வியாபாரத்தின் எதிர்பார்ப்புகளெல்லாம் சின்னாபின்னமாகலாம். பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது சேமிப்பைக் கடைப்பிடிக்காதவர்களே. வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியைச் சேமிப்பவர்கள், பணவீக்கத்தின்போது சேமிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு அந்தச் சூழலை எதிர்கொள்கிறார்கள். சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் மற்றும் சேமிக்க இயலாதவர்களால் மட்டுமே பணவீக்கத்தின் விளைவுகளைச் சமாளிக்க முடிவதில்லை. சொல்லப் போனால், இது அடித்தட்டு மக்கள் மீதுதான் வந்து விடியும். ‘பணவீக்க’த்தைத் தடுத்து, பணத்தின் அளவைக் கட்டுக்குள் வைக்கும் பொறுப்பு அரசாங்கத்திடமும் ரிசர்வ் வங்கியிடமும்தான் இருக்கிறது.