நிழல்கள் நடந்த பாதை





திருகிய மீசையும் சிவந்த கண்களுமாக அலையும் மாசியின் நடைதான் அவனது போதை அளவைத் தீர்மானிப்பதாக இருக்கும். போதையின் நடைகளை - அதாவது போதையில் தள்ளாடுகிறவனின் கால் அசைவுகளை - கணக்கிட்டால், அதுவும் குத்து மதிப்பாக ஏதாவதொரு நடன வகைக்கு ஒப்பானதுதான். சுமாரான போதை என்றால் கால்கள் அதிகம் அலைவதில்லை. அதிக போதைக்கு தாவித் தாவி நடக்கும். இன்னும் அதிகமெனில் விழுந்து எழும் நடைதான். சுமார் அல்லது அதிகமான போதையில் எப்போதும் இருப்பவன் மாசி.

போதையின் காரணமாக, உப்புசப்பில்லாத காரணத்திற்கெல்லாம் அரிவாளோடு வந்து அரற்றிவிட்டுப் போவது அவனது அனாவசிய நடவடிக்கைகளில் ஒன்று. பாப்பான்குளத்திலிருந்து வாங்கிவந்த அரிவாளை இதற்காகப் பயன்படுத்தி வந்தான். மாசியின் கணக்கில், இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நான்கு பெட்டிகேஸ்களும் இருந்தன. இதற்கு முந்தைய வழக்கு ஒன்றில் நான்கு மாதம் சிறைக்குச் சென்று வந்திருந்தான் என்பதால், ‘அவங்கிட்டெ சொரணாவக் கூடாதுல. பட்டுன்னு கத்திய நீட்டிருவான்’ என்கிற எச்சரிக்கை உணர்வு எல்லாருக்கும் இருந்தது.

அவனது பெயரைச் சொல்லித்தான் குழந்தைகளுக்கு சோறூட்டுவார்கள் பெண்கள். ‘ஒழுங்கா திய்ங்கணும். இல்லன்னா, குடிகார மாசிட்டெ புடிச்சிக் குடுத்திருவென்’ என்கிற மிரட்டலில் குழந்தைகள் உணவு உண்டு வந்தனர். தெருவில் அவன் நடந்து சென்றால் வீட்டின் வெளிக்கதவை அடைத்துவிட்டு பெண்கள் உள்ளுக்குள் ஓடிவிடுவார்கள். இந்த ஓடலுக்கு, ‘ஒத்த செத்தெயில பொம்பளயோ நின்னா, பட்டுனு கைய புடிச்சு இழுத்துருவானாம்லா’ என்கிற காரணம் சொல்லப்பட்டு வந்தது. இதற்காகவே ஆற்றோர வயல் மற்றும் தோப்புகளுக்கு செல்கிற பெண்கள் இரண்டு மூன்று பேர்களாகவோ, அல்லது யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டோ சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மாசியின் பிரதான தொழிலாக சாராயம் வடிப்பது இருந்தது. உப தொழில் விவசாயம். வடிப்பதன் பொருட்டு குடிப்பதும் உண்டென்பதால் சண்டை, சச்சரவுகள் அவனுக்கு விருப்ப விஷயமானது. இதன் பொருட்டு மாசிக்கு ‘மரியாதை’ தானாக ஒட்டிக்கொண்டது. உள்ளூரை விட வெளியூர்க்காரர்களே மாசிக்கு வாடிக்கையாளர்களாக இருந்தனர். ஊரில் மொத்தமே மூன்று நான்கு பேர்தான் குடிகாரர்கள். அவர்களும் மாசியிடம் சரக்கு வாங்கிக் குடித்துவிட்டு அரவம் இல்லாமல் வருபவர்களாகவே இருந்தனர். பக்கத்து ஊர் வாடிக்கையாளர்களான ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த துபாய் ஸ்டீபனும் பூவன் குறிச்சியைச் சேர்ந்த பாம்பே சுடலையும், சிகரெட் அட்டை சிட்டாவில் கணக்கெழுதி குடித்தும் வந்தனர். இந்த எளிய குடிகாரர்களால் ஊரில் எப் பிரச்னையும் இல்லை. இவர்கள் தினமும் குடிப்பவர்களாகவும் இருந்ததில்லை. ஆனால், இதில் மாசி விதிவிலக்கு. குடித்துவிட்டானென்றால், அரிவாளால் மிரட்டுவது, யார் வீட்டிலாவது கல்கொண்டு எறிவது என ஏதாவதொன்று நடக்கும். இதனால் ஊரில், ‘பெரும் குடிகாரன்’ என்கிற தகுதியைப் பெற்றவனாக அவன் மட்டுமே இருந்தான்.

வழக்கமாக அவன் சாராயம் வடிக்கும் கடனா நதியின் ஒற்றைத் தென்னம்பிள்ளை வேலியிலிருந்து நடந்து சிவன் கோயில் வழியாக ஊருக்குள் நுழைந்து விட்டால் கண்டிப்பாக சலம்பல் தொடங்கும். உள்ளே போயிருக்கிற இளஞ்சூட்டு சாராயம் போகப் போகத்தான் ஆளைத் தூக்கும். கோயில் திண்டில் படுத்திருப்பவர்களிடம், ‘‘இங்கெ யாம்லெ படுத்திருக்கியோ. வீட்டுல போயி தூங்குங்கெல’’ என்று தள்ளாடியபடி விரட்டுவான். ‘‘யாரை வந்து வெரட்டுதெ. நீ ஒழுங்கா போலெ’’ என்று யாராவது குரல் கொடுப்பார்கள். பிரச்னைதான். மாசி அரிவாளைத் தூக்க, அவர்கள் கல்லை எடுக்க... ரணகளம் ஆரம்பமாகும். இது அப்படியே செக்கடித் தெருவுக்கும் தொடரும்.

அங்கு பலசரக்குக் கடை வைத்திருக்கும் குட்டியிடம், ‘‘செயிது பீடி ஒரு கெட்டு’’ என்று கேட்பான். இந்த நேரத்தில் துட்டு கேட்டால் தகராறு வரும் என்பதால், பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவான் குட்டி. கடையில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் தள்ளி நின்றுகொள்வார்கள். அவன் இவர்களைப் பார்க்க ஆரம்பித்தால் உடனே இடத்தை காலிபண்ணிவிட வேண்டும் என்கிற ரீதியில் அவர்கள் தயாராகவே இருப்பார்கள். பீடியை பற்ற வைத்துவிட்டு அரிவாளைத் தூக்கியபடி கெட்டவார்த்தைகளில் பேசத் தொடங்குவான் மாசி. அதற்குள் நான்கைந்து தெரு தள்ளி இருக்கிற அவனது வீட்டுக்குத் தகவல் போகும்.

அவன் பொண்டாட்டிக்காரி, ‘‘இதெ வேலயா போச்சு. எங்கெயும் விழுந்து கெடந்துட்டு வரட்டும். நான் அங்கெ போவ மாட்டென். எனக்குலா வேசடையா இருக்கு. ஊரு ஒலகத்துலயெல்லாம் ஆம்பளெ இல்லையா? இப்டியா இருக்காவோ எல்லாரும்? இங்கெ கெடந்து கேவலப்படணும்னு எந்தலையில எழுதிருக்காம், அந்த சொல்லமாடன்’’ என்று புலம்பியவாறு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வாய்க்காலுக்கு குளிக்கக் கிளம்பி விடுவாள். ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினந்தோறும் என்றால் எரிச்சல் வராதா என்ன? அவன் அம்மா அனச்சிதான் இப்போதும் போவாள்.

‘‘இவன் சாவவும் மாட்டாம்போலுக்கு. எங்கெ கொதவாளயெ அறுக்கென்னெ வந்திருக்காம், சனியம் புடிச்சவன்’’ என்று திட்டிக்கொண்டே வருவாள். அம்மாவைப் பார்த்ததும் மாசி சத்தத்தை இன்னும் அதிகமாக்குவான். வாதமடக்கி மரத்தைத் தவிர எதிரில் யாருமற்ற தெருவில் நின்றுகொண்டு, ‘‘எவனா இருந்தாலும் வாங்கெல. இங்ஙெனயே நிய்க்கென் வாங்கெல’’ என்று சாரத்தை நெஞ்சுவரை கட்டிக்கொண்டு சத்தம் போடுவான். நாக்கைத் தொங்கப் போட்டவாறு ஓடிவரும் டிரைவர் வீட்டு நாய், அவனை பரிதாபமாகப் பார்த்தபடி வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். ‘‘ஏம்முன்னாலயே நின்னு வாலெ ஆட்டுதியா?’’ என்று அரிவாளை ஓங்குவான். அதற்குள் நாய் ஓடியிருக்கும்.



ஓங்கிய அவனது கையைப் பிடித்து அம்மா இழுப்பாள். ‘‘ஏழா, நீ போழா. அவனெ வெட்டாம வரமாட்டென்’’ என்று இல்லாத எதிரியைத் திட்டியபடி திமிறுவான். விஷயம் அவன் நண்பன் உச்சிமகாளிக்குப் போகும். யார் சொல்லியும் கேட்காத மாசி, உச்சிமகாளி சொன்னால் எதையும் கேட்பவனாக இருந்தான். ஆனால், மாசிக்கு நேரெதிரானவன் உச்சி. குடி இவனுக்கு ஆகவே ஆகாது. இவர்களின் நட்பை ஊரில் அதிசயமாகவே பார்த்து வந்தார்கள்.

‘‘ஏலெ கோட்டிக்காரப் பெயல. ரோட்டுல நின்னா சலம்புவெ. கூறுகெட்டவனெ, வா’’ என்று உச்சி சொன்னதும் பெட்டிப் பாம்பாக நடப்பான். வீட்டுக்குப் போனாலும் தொடர்ந்து சத்தம் வந்துகொண்டே இருக்கும். அருகில் குடியிருக்கிற கோட்டி மணிக்குத்தான் எரிச்சல். இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்துவிட்டான். நான்கைந்து முறை சண்டையும் போட்டுவிட்டான். இப்போது பழகிவிட்டதால் கண்டுகொள்வதில்லை.

உள்ளூர் கடைகளில் மிரட்டியும் மிரட்டாமலும் மாசி, ஓசிக்கு சாமான்கள் வாங்கிப் போய்க் கொண்டிருந்ததை அடுத்து அவனுக்கு எதிராக கடைக்காரர்கள் திடீர் கூட்டம் போட வேண்டியதாகிவிட்டது. உள்ளூர் பிரதான கடைகளைத் தாண்டி அக்கம்பக்கத்து ஊர்களிலும் காசில்லாமல் மிரட்டி சாமான்கள் வாங்கியதாக மாசி மீது குற்றச்சாட்டு. அவன் அம்மாவிடம் கேட்டால், ‘‘ஏங்கிட்டெ கேட்டா கொடுத்தியோ. அவன் பாடு, ஒங்க பாடு. நா என்ன செய்ய முடியும்?’’ என்று கையை விரித்துவிட்டாள். இப்படியே விட்டால் வியாபாரம் செய்ய முடியாது என்பதால் திடீர் கூட்டம். கூட்டத்தில் மாசி மீது போலீஸில் புகார் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மறுநாள் அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டு, தெரிந்த போலீஸ்காரர் ஒருவரைப் பார்த்துப் பேசிவிட்டும் வந்தார்கள்.

அவர்கள் வந்த மறுநாள், ‘‘எவம்லெ போலீசுக்குப் போவாம். பாத்துக்கிடுதென். கையெ காலெ ஒடிச்சிரமாட்டென்?’’ என்று செக்கடி தெருவில் நின்று மாசி கத்தியபோது, போலீஸ் ஏட்டு அவன் பொடதியில் அறைந்தார். மூஞ்சி குப்புற விழப்போனவனை, இன்னொரு போலீஸ்காரர் பிடித்துக்கொண்டார். ‘‘எழுந்திர்ல’’ என்று பஸ்ஸ்டாண்டுக்கு அழைத்துப் போனார்கள். இதுவரை கத்தியவன், அவர்களின் முன்னால் வாயைப் பொத்தி நடந்துகொண்டிருந்தான். பஸ்ஸ்டாண்டில் கடை வைத்திருக்கும் தங்கராசுவும் குட்டிமணியும் போலீஸ்காரர்களுக்கு கலர் பாட்டில்களை கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மாசிக்கு இது ஒன்றும் புதிதில்லை. அடிக்கடி போய் வருகிற ஸ்டேஷன்தான். எல்லா போலீஸ்காரர்களுமே இவனை அடித்தவர்கள்தான். ஸ்டேஷனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிற யாராவது வந்து அவனை மீண்டும் அடிப்பார்கள். வலி தாங்காமல் கத்துவான். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, உள்ளூர் சிறையில் ரிமாண்ட். பதினைந்து நாள் கழித்து வெளியில் வருவான். வந்து இரண்டு மூன்று நாட்கள் சும்மா இருப்பவன் மீண்டும் தொடங்கிவிடுவான்.

இப்படி ‘உள்ளே’ சென்றுவந்தால் கூட, ‘‘கேரளாவுக்கு வேலைக்குலா போயிருந்தென்’’ என்று சொல்வது அவனுக்கு வழக்கம். ஆனால், ஊர்க்காரர்களுக்கு ஏதாவதொரு கதை கிடைத்துவிடும். ‘‘மூதி, பாளயங்கோட்டெ ஜெயில்ல குப்புற கெடந்துட்டு நம்மட்ட பிராடு உடுததெ பாரென்’’ என்பார்கள்.

காலம் வேகமாக ஓடுகிறது. குடிகார மாசி, குடும்பத்தின் பொருட்டு திருப்பூருக்கு இடம்பெயர்ந்தான். கோயில் கொடை, தீபாவளி, பொங்கல் விழாக்களிலோ மட்டும் தலைகாட்டிவிட்டுப் போகும் மாசியை, பிறகு சில வருடங்களாகக் காணவில்லை. போதையின் அடையாளம் கொண்ட அவனது வீடு, மண் சுவர் கரைந்து, ஓடுகள் விழுந்து, கருவை முட்களுடன் சிதிலமாகிக் கிடக்கிறது. மாசி என்கிற ஒரே ஒரு குடிகாரன் மட்டுமே இருந்த ஊரில், டாஸ்மாக் தயவில் ஏராள இளங்குடிகாரர்கள் ‘பெருமையாக’ உருவாகி இருக்கிறார்கள். குடியை வெறுக்கும் மாசியின் நண்பன் உச்சி, ‘‘மருமவனெ, ஒரு கோட்டரு வாங்கித் தாரும்வே?’’ என்று கேட்டபோதுதான் நொறுங்கிப் போனேன் நான்.
(வாசம் வீசும்...)