கஸ்டமர் சேவை





அன்று நான் அலுவலகத்துக்கு லேட். நான்தான் அங்கு தலைமை அதிகாரி. நேற்றும் அதற்கு முன் தினமும் அலுவலக வேலையாக ஐதராபாத் போயிருந்தேன். நான் இல்லையென்றால் என்ன கூத்தடிக்கிறார்களோ ஆபீசில். முட்டாள்களையும், சோம்பேறிகளையும் வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டியிருக்கிறது.

ஐதராபாத்தில் மேலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில், ‘வாடிக்கையாளர் சேவை’ பற்றிய தலைப்பில் எனது பேச்சு. ஒரே கைதட்டல். ‘ரொம்ப பிரமாதம்’ என நண்பர்கள் பாராட்டினார்கள். சந்தோஷமாக இருந்தது.

அலுவலகத்தில் நுழைந்தேன். சந்தைக்கடை போல் வாடிக்கையாளர்கள் அங்கும் இங்கும் அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ‘‘இப்போ முடியாது...’’, ‘‘நாளைக்கு வாங்க’’, ‘‘இந்த கவுன்ட்டர் இல்ல... அங்க போங்க’’ என்று ஊழியர்கள் வாடிக்கையாளர்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். குமுறல்கள், அங்கலாய்ப்புகள், கோபதாபங்கள் நிறையவே வழிந்து கொண்டிருந்தன. ஒரு பக்கம் சில ஊழியர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களாகவே எடுத்துக் கொண்ட தேனீர் இடைவேளை! அக்கவுன்டன்ட் கேபினில் மட்டும் வாடிக்கையாளர் கூட்டம்... ஒரே சத்தம்.
என்ன அக்கவுன்டன்ட் இவர்? நிர்வாகத் திறனே இல்லையே! கன்ட்ரோல் பண்ணத் தெரியலையே! இருக்கட்டும், நேரம் கிடைக்கும்போது இவருக்குக் கொஞ்சம் நிர்வாகத் திறன் பற்றி கிளாஸ் எடுக்க வேண்டும். நினைத்துக்கொண்டே என் அறையை அடைந்தேன்.

அறை வாசலில் சில வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். புகார் கொடுக்கவா, கையெழுத்துக்காகவா தெரியவில்லை. சில பேர் முகத்தில் எள்ளும் கொள்ளும்! ‘இந்த ஆபீசில் எல்லாத்துக்கும் நான் மட்டும்தானா? என் வேலையை செய்ய விட மாட்டேங்கிறாங்களே!’ - கொஞ்சம் கடுப்புடன் அவர்களைக் கடந்து இருக்கையில் அமர்ந்தேன்.

கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து மெயில்களைப் பார்த்தேன். அங்கும் என் அனுமதி கேட்டு நிறைய நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள், மனுக்கள் காத்துக்கொண்டிருந்தன. அடேடே! ஹெட் ஆபீஸிலிருந்து எனக்கு ஒரு பாராட்டு வந்திருக்கிறதே! போன மாதம் நான் புவனேஸ்வரில் ஆற்றிய ‘எப்படி வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது’ சொற்பொழிவு போல், டெல்லியிலும் பேச வேண்டுமாம். அடி சக்கை!

அறை வாசலில் ஆளரவம். கஸ்டமரோ? உடனே அட்டெண்டரை பெல்லடித்து கூப்பிட்டேன்.
‘‘ரவி, உடனே சூடா கொஞ்சம் டீ, பிஸ்கட் கொண்டு வா. ஏதாவது போன் வந்தா, நான் முக்கியமான கஸ்டமர்கூட பேசிட்டிருக்கறதா சொல்லு. அப்புறம்... ஒரு கஸ்டமரையும் உள்ளே விடாதே. வாசல்ல நிக்கிறவங்களை அக்கவுன்டன்டை பார்க்கச் சொல்லு. எனக்கு நிறைய வேலை இருக்கு...’’
ரவி கதவை மூடிக் கொண்டு வெளியேறினான். அப்பாடா! என் ப்ரீஃப்கேஸைத் திறந்து முக்கியமான பேப்பர்களை எடுத்தேன். ரயில் டிக்கெட்டுகள், டாக்ஸி பில், ஹோட்டல் பில், எல்லாவற்றையும் தேடி ரக வாரியாகப் பிரித்தேன். அடடா! எவ்வளவு வேலை இருக்கிறது? ஐதராபாத்திற்கு சென்று வந்த செலவுப் பட்டியலை ஹெட் ஆபீஸுக்கு அனுப்ப வேண்டும். அப்புறம் எனது பெட்ரோல் பில், மெடிக்கல் பில்... இது மட்டுமா? டெல்லியில் நான் பேச வேண்டிய ‘வாடிக்கையாளர் மகிழ்ச்சியும் வணிக மேம்பாடும்’ தலைப்பு பற்றி நோட்ஸ் வேறு தயார் பண்ண வேண்டும். அதற்கே இன்றைய நாள் போதாது!