குட்டி சுவர் சிந்தனைகள் : ஆல்தோட்ட பூபதி





‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மக்கள் மனசுல இடம் புடிச்சு செம ஹிட் ஆனதால, கோலிவுட் முழுக்க இப்போ டி.வி விளம்பரத்துல இருந்து வார்த்தைகளைப் பொறுக்கி படத்துக்கு தலைப்பா வைக்கிறதுதான் ஹாட் மேட்டர். அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் படங்களையும், அதற்கான கதைகளையும் நம்ம ரகசிய களவுப் படை துப்பு துலக்கியதிலிருந்து...


‘வித்யா, புதரு பக்கம் போகாத!’
வித்யான்னு பேரு கொண்ட பாம்பு ஒண்ணு, அடிக்கடி பால் குடிக்காம பொதரு பக்கம் ஓடி ஒளிவதால் வரும் சிக்கல்கள் பற்றிய பாம்பு படம்!

‘என் தங்கம் என் உரிமை’
வீட்டுக்கு வேலைக்கு வர்ற தங்கம் என்கிற பொண்ண லவ்வுகிறார் ஹீரோ. அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க ஹீரோவோட மனைவியும், தங்கத்தோட புருஷனும். அதை முறியடித்து காதலர்கள் எப்படி ஒண்ணு சேருறாங்க என்பதுதான் கதை.

‘நம்பிக் கட்டினோம் நன்றாக இருக்கிறோம்’
கணக்கு பாடத்துல பாஸே பண்ணாத அண்ணன்-தம்பிக்கு, கணக்கு டீச்சர்களான அக்கா-தங்கச்சியை கல்யாணம் கட்டி வச்சிடுறாங்க. ஆரம்பத்துல கொட்டு, அடி, இம்போசிஷன்னு இருக்கிற குடும்ப வாழ்க்கை, கடைசில அன்பா முடியறதுதான் கதை.

இந்த வாரக் குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
இந்திய ராணுவ வீரர்களுக்கு திறமை இருக்கான்னு கேட்ட ஆல் இன் ஆல் அழகுராஜா ராஜ் தாக்கரே

மனிதன் முதன்முதலில் கண்மூடி செய்யும் காரியம் தாய்ப்பால் குடிப்பது. முடி வெட்டும்போது கண்மூடி அமர்ந்து தலையை கத்திரிக்கோலுக்கு குத்தகை விடுவது எவ்வளவு உன்னதமான செயல். கண் மூடித் தூங்குவது எவ்வளவு பெரிய தியானம். கண் மூடி கொட்டாவி விடும்போது அருகில் ஒலிப்பது எதுவும் கேட்காத ஒரு பரவச நிலை. விழித்திருந்து செய்யும் செயல்களை விட, இப்படிக் கண்மூடி செய்யும் செயல்களும் வேலைகளும் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் மரியாதைக்கு உரியதாகவும் இருக்கின்றன! அப்புறம் ஏன் இந்த அட்வைஸ் அப்பாடக்கருங்க, ‘எதையும் நல்லா யோசிச்சு பண்ணு, கண்மூடித் தனமா செய்யாத’ன்னு சொல்றாங்க?

‘நீ குழந்தையா இருக்கச்சே அதான் கொடுத்தேன்’
எல்லா தேர்தலுக்கும் ஓட்டுப் போட வெறும் 100 ரூபாய் மட்டுமே தரும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, மக்கள் துணையுடன் ஹீரோ போராடி, ஓட்டு ரேட்டை உயர்த்தித் தரக் கேட்கும் வித்தியாசக் கதை!

‘அம்மா சொன்னாங்க, கறை நல்லது’
பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாமல் இருந்த ஹீரோ, தன் அம்மாவின் ஆசைக்கிணங்க கஷ்டப்பட்டு முன்னேறி, ஓட்டல் வைத்து, எல்லா டேபிளையும் தன் வேட்டியால் துடைத்து அம்மாவின் சத்தியத்தைக் காக்கும் உன்னதக் கதை!

ஆயிடுச்சு, மருத்துவக் கல்லூரி மாணவிக்கு டெல்லில கொடுமை நடந்து எல்லாம் முடிஞ்சு ஒரு மாசம் ஆயிடுச்சு. இன்னும் நாட்டில் பெரிய மாற்றம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் 4 வன்கொடுமைகள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருக்கிறது. இதுக்கிடையில ஒரு சாமியாரு, ‘பெண்கள் ஆண்களை அண்ணான்னு கூப்பிட்டா எல்லாம் சரியாயிடும்’னு சொல்றாரு. இந்த தேசத்தில் உண்மையில் பெண்களுக்கான பாதுகாப்பு, ஆண்களின் மனதில் இருக்கிறதே தவிர, வேறெங்கும் கிளைகள் இல்லை.

கோவம் வர்ற மாதிரி காமெடி பண்றதுல நம்மாளுங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது. காமெடிங்கிற பேருல இவிங்க கிளப்பற கடுப்புகளுக்கு மிக நல்ல உதாரணங்களைப் பார்ப்போம்.

ஒரு வாரம் கூட ஓடாத படத்துக்கு ஒண்ணரை பக்கத்துல ரலாறு காணாத வெற்றின்னு விளம்பரம் தர்றது!

ஜல்லிக்கட்டை விட அபாயகரமான பண்டிகைக் கூட்டத்துல புகுந்து, அடிச்சுப் பிடிச்சு சட்டை, பேன்ட் வாங்கிப் போட்டுட்டு போனா, ‘அப்புறம் மச்சான்... இதை எந்த வீட்டுல காயப் போட்டப்போ உருவுனே’ன்னுகேட்கிறது.

நம்ம க்ளாஸ்மேட்ஸை வீட்டுக்குக் கூட்டிப் போறப்பதான், இந்த அம்மாவும் ஆயாவும் சேர்ந்து ஏதோ ஃபிளைட்ல போன கதையை சொல்ற மாதிரி, சின்ன வயசுல பெட்டுல உச்சா போன கதைய சொல்றது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் 13426 முறையாக பட்டிமன்றங்களில் சொல்லப்படும் ஜோக்குகள்... முடியலைடா சாமி!

நல்ல ஃபிகர்களை எல்லாம் விட்டுட்டு, ஒரு மொக்கை ஃபிகரையும் நம்மையும் கனெக்ட் பண்ணிவீட்ல போட்டுக் கொடுக்கறது.

மாட்டுப் பொங்கல் அன்னைக்கு ‘ஹேப்பி பர்த்டே’னு எஸ்.எம்.எஸ் அனுப்பறது.

*  மினிமம் 50 படம் நடிக்காம, கிரானைட் ஸ்டார், ஜெலட்டின்குச்சி ஸ்டார், புரட்சி ஸ்டார், புண்ணாக்கு ஸ்டாருன்னு பட்டம் தரவோ, தானா வச்சுக்கவோ கூடாதுன்னு சட்டம் நிறைவேத்தணும்.

*  ஹீரோவுக்கு எல்லா சட்டை பட்டன்களையும் போட்டு விடணும்; ஹீரோயினுக்கு அட்லீஸ்ட் ரெண்டு வரியாவது டயலாக் கொடுக்கணும்.

*  டாடா சுமோ, உருட்டுக்கட்டை, வீச்சரிவாள் போன்ற பொருட்களை வாடகைக்கு விடுறவங்களுக்கு, கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது வேற தொழில் வச்சு கொடுத்துடணும்.

*  படத்துல எல்லா அடியாள்களுக்கும் யூனிபார்ம் போட்டு விடுற வேலையெல்லாம் இருக்கப்படாது. அவங்க அடியாளா? இல்ல, ஓ.சி.ஓ.சி பேங்க் எம்ப்ளாயியா?

*  பட டைட்டிலை போட்டுட்டு ஹீரோ பேரை போட்ட வரைக்கும் தமிழ் சினிமா நல்லா இருந்துச்சு. எப்போ டைட்டிலுக்கு முன்னாடியே ஹீரோ பேரப் போட்டாங்களோ, அப்பவே கெட்டுடுச்சு. மொதல்ல இந்தப் பழக்கத்தை விடணும்.

நாட்டுல உழைப்புக்குத்தான் பஞ்சமா இருக்குன்னா பொங்கல், தீபாவளிக்குப் போடுற டி.வி பட்டிமன்ற தலைப்புக்கு அதுக்கு மேல பஞ்சமா இருக்கும் போல! எப்போ பார்த்தாலும் வீரமா, காதலா? இலக்கியமா, இலக்கணமா? முன்னேறிடுச்சா, முன்னேறலையான்னு மொக்க போட்டுக்கிட்டு இருக்காங்க. இதோ... வரும் விடுமுறை நாட்களுக்கு பேசி பன்ச்சடிக்க சில தலைப்புகள்!

*  மனதில் மறக்க முடியாமல் கிடக்கும் நினைவைத் தந்தது முதல் காதலியா, முப்பதாவது காதலியா?
*  மாமியார் வீட்டுக்குப் போகும்போது ஆறுதலாய் இருப்பது மாமனாரா, மச்சினிச்சியா?
*  தமிழர்களை அழகால் கிறங்கடித்தவர் நமீதாவா, சில்க் ஸ்மிதாவா?
*  பெற்றோர்கள் கட்டுவதற்குக் கஷ்டமானது ஸ்கூல் பீஸா, டியூஷன் பீஸா?
*  உங்கள் வருமானத்தை அதிகம் பங்கு போடுவது மின்சார வாரியமா, டாஸ்மாக்கா?
*  கல்யாணத்திற்குப் பின் எஞ்சி இருப்பது நல்ல காதலா, கள்ளக் காதலா?
*  இந்தியாவில் நிறுத்தப்பட வேண்டிய விளையாட்டு ஜல்லிக்கட்டா, டெஸ்ட் கிரிக்கெட்டா?
*  மம்மியின் காலில் மடார் மடாரென அதிகம் விழுவது அமைச்சர்களா, எம்.எல்.ஏக்களா?