நூறாண்டு பாலத்தில் விபத்து!





ரயில் போகிற பாலத்தை ‘ரயில்வே பாலம்’ எனலாம். கப்பல் கடக்கிற பாலத்தை..? தமிழகத்தின் பெருமைக்குரிய அடையாளமாகக் கருதப்படும் இந்த நூறு வயது பாம்பன் பாலம் கடந்த வாரம் விபத்தில் சிக்கி மீண்டிருக்கிறது.

‘‘இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட சுமார் 22 மைல் தூரமானது, மணற்திட்டுகளாக ஆழம் குறைஞ்சு காணப்படுகிற பகுதி. அப்போதிருந்த ஆங்கிலேய ரயில்வே அதிகாரிகள், ‘இப்பகுதியில் கடலுக்குள் ரயில்பாதை அமைத்தாலென்ன’ என்று யோசித்தார்கள். ஆனால் பெரும் செலவு பிடிக்கும் என்பதால் அது கைவிடப்பட்டிருக்கு. அதன்பிறகுதான் ராமேஸ்வரத்துக்கு ரயில் பாலம் அமைச்சாங்க. 1914 பிப்ரவரி 2ம் தேதி பாலத்துல ரயில் ஊர்ந்து வந்தது. தனுஷ்கோடி வரை ரயில்ல வந்து, அங்கிருந்து கப்பல்ல தலைமன்னார் போயிருக்காங்க ஜனங்க’’ என்கிறார்கள் தெற்கு ரயில்வேயின் திருச்சி டிவிஷன் அதிகாரிகள். ஆரம்பத்தில் திருச்சியே தெற்கு இந்திய ரயில்வேயின் தலைமையகமாக இருந்திருக்கிறது.
‘‘அதிக காத்து, அலைன்னு அடிக்கிற இந்த ஏரியாதான் அமெரிக்காவின் மியாமிக்கு அடுத்ததா உலகத்துலயே அதிகம் துருப்பிடிக்கிற பகுதின்னு சொல்றாங்க. அதனால பாலத்தோட கட்டுமானப் பணி கடும் சிரமத்துக்கிடையிலதான் நடந்திருக்கு. சுமார் 6800 அடி தூரத்துக்கு சிமென்ட், ஜல்லி, மணல் கொண்டு போக ரொம்பவே சிரமப்பட்டிருக்காங்க. ‘ஹெட் வாஷிங்டன்’ங்கிற அமெரிக்க கம்பெனி, கப்பலுக்கு வழிவிடுகிற அந்த தூக்குப் பாலத்தை வடிவமைச்சுது. ஸ்கெர்சர்ங்கிற எஞ்சினியர் வடிவமைச்சதால அவர் பேரையே பாலத்துக்கு வச்சிருக்காங்க. 145 தூண்களோட பிரமாண்டமா காட்சியளிக்கிற பாலம் 1964 தனுஷ்கோடி புயல்ல போயிடும்னு நினைச்சோம். ஆனா பக்கவாட்டுத் தண்டவாளங்கள் மட்டும் கடல்ல போக, தூக்குப் பாலம் அசராம நின்னுச்சு. திரும்ப ஆறே மாசத்துல தண்டவாளங்களையும் சரி பண்ணியாச்சு. அவ்வளவு ஸ்ட்ராங் தம்பி’’ என்கிறார் தனுஷ்கோடி புயலுக்குப் பிந்தைய நாட்களில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற பாம்பன் ஊழியர் நூர்தீன்.
இந்திய கடற்படைக்குத் தயாரான மிதவைக் கப்பலை தனியார் கப்பல் ஒன்று இழுத்துவந்தபோது காற்றின் வேகத்தில் மிதவைக் கப்பல் பாலத்தில் லேசாக மோதியதால் விபத்து நிகழ்ந்தது. கப்பல் நிர்வாகத்திடம் ரூ.ஒன்றரைக் கோடி நஷ்ட ஈடு கேட்டிருக்கிறது தெற்கு ரயில்வே. கப்பல் நிர்வாகமோ, கப்பற்படையோ தருவார்களா?
- அய்யனார் ராஜன்