எல்லையில் ஏன் தொல்லை?





இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் பார்த்து கைதட்டிய இந்திய மிடில் கிளாஸ், அடுத்து இந்தியா - பாகிஸ்தான் போருக்குக் கைதட்டவும் தயாராக இருக்கிறது. தேசபக்தியில் திளைத்திருக்கும் எதிர்க்கட்சிகள், இந்த பகை நெருப்பை விசிறி விடுகின்றன. கடந்த ஜனவரி 8ம் தேதி சுதாகர் சிங், ஹேம்ராஜ் என்ற இரண்டு இந்திய ராணுவ வீரர்கள், காஷ்மீரின் மெந்தார் பகுதியில் இந்திய எல்லையிலேயே வைத்துக் கொல்லப்பட்டதும், ஹேம்ராஜின் தலையை துண்டித்து வெற்றிக் கோப்பையாக பாகிஸ்தான் வீரர்கள் எடுத்துப் போனதும் தேசத்தைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இந்தக் கொடூரம் இன்னொரு முறை இந்த இரண்டு தேசங்களையும் போர்முனையில் கொண்டு போய் நிறுத்துமா? அப்படி ஒரு போர் வந்தால் யாருக்கு பாதிப்பு?

இந்திய - பாகிஸ்தான் எல்லையின் மொத்த தூரம் 3323 கி.மீ. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களைத் தொட்டுச் செல்லும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. காஷ்மீரிலும் ஜம்முவில் கொஞ்ச தூரத்திலும் இருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில்தான் சர்ச்சை.

மொத்தம் 778 கிலோமீட்டர் தூரம். சுதந்திரம் வாங்கிய கையோடு 1947 அக்டோபர் மாதம் பாகிஸ்தான் படைகள் காஷ்மீரை ஆக்கிரமித்தன. போர் நிறுத்தம் செய்துகொண்டபோது எது எல்லையாக இருந்ததோ, அதுவே இந்த எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி ஆனது. 1972ம் ஆண்டு போருக்குப் பிறகு போடப்பட்ட சிம்லா உடன்படிக்கையின்படி இதையே எல்லையாக இரண்டு நாடுகளும் ஏற்றன. ஆனாலும் தெளிவாக வேலி போட்டு எங்கும் எல்லை பிரிக்கப்படவில்லை.

இருந்தபோதிலும் எதுவும் சர்ச்சைகள் எழுந்ததில்லை. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சமயத்தில் எல்லை புரியாமல் பாகிஸ்தான் பகுதிக்குள் பிரவேசித்து விடுவதுண்டு. அப்படிப் போகிறவர்களை பாகிஸ்தான் வீரர்கள் பார்த்தால், ‘‘நீங்கள் எங்கள் நாட்டுக்குள் வந்து விட்டீர்கள்’’ என்று சொல்லி, பிஸ்கெட்டும் டீயும் கொடுத்து உபசரித்து, இந்திய எல்லைக்கு வழிகாட்டி விட்டதெல்லாம் நடந்திருக்கிறது.



ஆனால் 90களில் பாகிஸ்தானின் ஆசியோடு தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்தபோது இந்த நிலைமையெல்லாம் தலைகீழாக மாறியது. தினம் தினம் காஷ்மீர் மண் ரத்தத்தை தரிசித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், உலகிலேயே மிக ஆபத்தான பூமியாக இந்த எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி மாறியது. தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க வேலி போட்டது இந்தியா. 12 அடி உயர முள்வேலி. 4 முதல் 9 அடி அகலத்துக்கு முள் கம்பிகள் தரையில் படர்ந்திருக்கும். கண்ணாடிச் சில்லுகள், கூர்மையான இரும்புத் துண்டுகள் எல்லாம் தூவியிருக்கும். சென்சிடிவ்வான இடங்களில் இந்த வேலியில் மின்சாரமும் பாய்ச்சப்பட்டிருக்கும்.

பிரச்னை என்னவென்றால், இந்த வேலியை மிகச்சரியாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின்மீது இந்தியாவால் அமைக்க முடியவில்லை. பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. வேலி போடும் வேலையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதனால் இந்திய எல்லைக்குள்ளாகவே வேலி அமைந்தது. சில இடங்களில் 2 கி.மீ தூரம் வரை இந்திய எல்லைக்குள் உள்ளடங்கி இருக்கும் வேலி. ஆனாலும் வேலிக்கு அப்பால் இருக்கும் இந்தியப் பகுதியைக் கண்காணிக்க வேண்டுமே! அதற்காக கண்காணிப்பு கோபுரங்களை அங்கே அமைத்தார்கள். வேலியில் இந்திய வீரர்கள் தாண்டிப் போக ஆங்காங்கே ரகசிய வழிகள் இருக்கும். தெர்மல் இமேஜிங் பைனாகுலர்கள் மூலமாக அந்த இடங்களைக் கண்டறிந்து, வேலி தாண்டிப் போய் ரோந்துப்பணி செய்வார்கள் வீரர்கள்.
அதையும் பகலில் செய்ய முடியாது. அந்தப் பக்கம் உயரமான கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தபடி பாகிஸ்தான் ராணுவம் சுட்டு சல்லடை ஆக்கிவிடும். இரவில்தான் போவார்கள். செல்போன் கூடாது; சர்ச் லைட் எடுத்துக்கொள்ளக் கூடாது; குளிருக்கு இதமாக புகைக்கவும் முடியாது; உடன் வரும் வீரர்களுடன் பேசிக்கொள்ளவும் முடியாது. பக்கத்தில் வருபவர்கூட தெரியாமல் பனி போர்த்தியிருக்கும் இரவில், தீவிரவாதிகள் பழக்கிய வேட்டை நாய்கள் பாய்ந்து கடித்துக் குதறிய அனுபவமும் இந்திய ராணுவ வீரர்களுக்கு உண்டு. இருட்டில் கால்கள் திசைமாறினால், பாகிஸ்தான் ராணுவம் புதைத்து வைத்திருக்கும் கண்ணிவெடிகளில் சிக்கி கால்களை இழக்க நேரிடும். ஆயினும் இந்தக் கடினமான ரோந்து பணியை தினம் தினம் இந்திய ராணுவம் செய்துவருகிறது. (இப்படியான ஒரு ரோந்து பணியில்தான் சுதாகர் சிங்கும் ஹேம்ராஜும் கொல்லப்பட்டார்கள்!)

இந்த 778 கி.மீ எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் துப்பாக்கிகள் ஓய்ந்திருந்த நாள் என எதுவும் இல்லை. தினம் தினம் போர்க்களம்தான். தீவிரவாதிகள் ஊடுருவும்போது அவர்களுக்கு அரணாக பாகிஸ்தான் வீரர்கள் எங்கிருந்தாவது இந்திய கண்காணிப்பு கோபுரங்கள்மீது தாக்குதல் நடத்துவார்கள். இரு தரப்பும் மாறி மாறி சுட்டுக்கொள்ளும்போது, சந்தடியில்லாமல் சற்று தூரத்தில் தீவிரவாதிகளின் எல்லை தாண்டுதல் நடந்து முடிந்திருக்கும்.



இதன் உச்சமாக கார்கில் போர் நிகழ்ந்தது. அந்தப் போரின்போதும் கேப்டன் சௌரவ் காலியாவை கைதியாக பிடித்துச் சென்று மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றது பாகிஸ்தான் ராணுவம். பிற்பாடு ஒப்படைக்கப்பட்ட அவரது உடலில் இருந்த காயங்களைப் பார்த்து மன உறுதி கொண்ட ராணுவத் தளபதிகளே நொறுங்கிப் போனார்கள்.
ஆனால் அந்த யுத்தம் ஒரு வகையில் நன்மையாக அமைந்தது. 2003ம் ஆண்டு கார்கில் யுத்தம் முடிவுக்கு வந்து, போர்நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009ம் ஆண்டு ஜெனரல் முஷாரப் அங்கு பதவியில் இருந்தவரை அந்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்கள் எதுவும் எல்லையில் நடக்கவில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏகப்பட்ட தாக்குதல்கள். 2010ம் ஆண்டில் 57 முறை; 2011ம் ஆண்டில் 61 முறை; கடந்த ஆண்டில் 117 முறை இந்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது பாகிஸ்தான்.

ஆனால் ஒவ்வொருமுறையும் அது அரசியல் மட்டத்தில் மறுக்கப்படும். இப்போதுகூட இரண்டு வீரர்களை நாங்கள் கொல்லவில்லை என்று சொல்லி, ‘‘ஐ.நா ராணுவப் பார்வையாளர் குழுவின் விசாரணைக்குத் தயார்’’ என்கிறது பாகிஸ்தான். இந்திய - பாகிஸ்தான் எல்லை சர்ச்சைகளை கண்காணித்த இந்தக் குழுவின் அங்கீகாரத்தை கடந்த 72ம் ஆண்டே இந்தியா நிராகரித்து விட்டது. அங்கீகாரமே இல்லாத ஒரு குழு எப்படி விசாரணை நடத்த முடியும்?

பாகிஸ்தான் அரசியலில் ஸ்திரமற்ற தன்மை நிலவும் ஒவ்வொரு முறையும் இந்தியாவை சீண்டிப் பார்க்கும் அந்நாட்டு ராணுவம். பாகிஸ்தான் அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த ராணுவம் கையாளும் தந்திரம் இது.
இதற்கு எப்போதும் பலியாடுகள் இந்திய வீரர்கள்!
- அகஸ்டஸ்