விஜயசாந்திக்கு கிடைத்த பிரேக்!





‘கடல்’ ஜோடி கௌதம் கார்த்திக் - துளசிக்கு முந்தைய தலைமுறையின் புகழ்பெற்ற ஜோடி கார்த்திக் - ராதா. முதல் படமான ‘அலைகள் ஓய்வதில்லை’ போலவே ‘இளஞ்ஜோடிகளி’லும் அவர்கள் ஜோடி சேர்ந்தனர். அந்தப்படம் பற்றிய நினைவுகளில் மூழ்கினார் கதாசிரியர் கலைஞானம்.  

‘‘ஒரு நட்சத்திரத்துக்கு இரண்டாவது படம்தான் மிக முக்கியமானது. நான் கதை, வசனம் எழுதி தயாரித்த ‘இளஞ்ஜோடிகள்’ படம்தான் கார்த்திக், ராதாவுக்கு இரண்டாவது படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோதான் இது.

அது, ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் சூப்பர் ஹிட்டாகியிருந்த சமயம். ‘இளஞ்ஜோடிகள்’ படத்தில் இதே ஜோடி நடித்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்தேன். அப்போது ராதாவுக்கு கால்ஷீட் பார்த்துக்கொண்டிருந்த சித்ரா லட்சுமணனிடம் விஷயத்தைச் சொல்லி கால்ஷீட் வாங்கினேன். கார்த்திக் கால்ஷீட்டிற்காக முத்துராமனைப் பார்க்கப் போயிருந்தேன். முத்துராமன் நாடகங்களில் நடித்த சமயங்களிலேயே... அதாவது, சூளைமேட்டிலிருந்து அவர் சைக்கிளில் வந்து போன காலத்திலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். அடிக்கடி நாடக அனுபவங்களை பகிர்ந்துகொள்வோம். எங்களுக்கிடையே இருந்த நட்பின் அடையாளமாக எனக்கு கார்த்திக்கின் கால்ஷீட்டைக் கொடுத்ததோடு, நான் சொன்ன சம்பளத்துக்கும் சம்மதித்தார்.

கார்த்திக் - ராதா தவிர, சுரேஷ் - விஜயசாந்தியும் படத்தில் இன்னொரு ஜோடி. அவர்களுக்கும் இதுதான் இரண்டாவது படம். இதற்கு முன் ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் சுரேஷும், ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் விஜயசாந்தியும் நடித்திருந்தனர். விஜயசாந்தியின் அப்பா சீனிவாசன்தான் என்னிடம் வம்படியாகப் பேசி ‘என் மகளுக்கு ஒரு பிரேக் வேணும்... எப்படியாவது இந்தப் படத்தில் அவளுக்கு கேரக்டர் கொடு’ என்று கேட்டு வாய்ப்பு வாங்கினார்.

படத்தின் பூஜைக்கு முத்துராமனை அழைத்தேன். ‘ஏவி.எம் தயாரிக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஊட்டி போறேன். அதனால கார்த்திக்கை உங்களோட மகனா நினைச்சு ஒப்படைக்கிறேன். படத்துல அவனுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க’ என்று எங்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போனவர்தான். அதுக்குப் பிறகு உயிரோட திரும்பி வரல. அதன் பிறகு ‘இளஞ்ஜோடிகள்’ ரிலீசாகி நல்லா ஓடியதுடன், தெலுங்கு டப்பிங்கும் 125 நாள் ஓடியது. தெலுங்கு டப்பிங்கை வச்சுதான் விஜயசாந்திக்கு அடுத்தடுத்து அங்கே வாய்ப்புகள் குவிஞ்சுது. ‘பூ ஒன்று புயலானது’ படம் அவங்களை பெரிய ஹீரோயினாக்கிடுச்சு.
படம் ஹிட்டானதும் எல்லாரும் என் வீடு தேடி வந்து நன்றி சொன்னாங்க. ஆனா, என்னோட
நன்றியை முத்துராமனுக்கு எப்படி சொல்றது?’’
- அமலன்
படம் உதவி: ஞானம்