கொலைக்கள கொடூரம்!





‘‘ஒரு சிறுவனை உயிரோடு பிடித்து உட்கார வைத்து, பிஸ்கெட் எல்லாம் கொடுத்து சாப்பிட வைத்து, அதன்பிறகு திட்டமிட்டு அவனை கொடூரமாக சுட்டுக் கொல்லும் ஒரு ராணுவத்தின் உளவியலை கற்பனை செய்து பார்ப்பதே கடினம். இதையெல்லாம் போட்டோ எடுத்து வைத்து, அதைப் போரின் வெற்றிச் சின்னம் போல வைத்துக் கொண்டாடும் மனநிலை இன்னும் அபாயகரமானது’’ என படபடக்கிறார் கெல்லம் மெக்ரே. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் உயிரோடு பிடித்து ராணுவ பங்கரில் வைத்திருக்கும் புகைப்படங்களை கடந்த வாரம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திவர் இவர்தான்!

பிரிட்டிஷ்காரரான மெக்ரே, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து, அதன்பிறகு டாகுமென்டரி படத் தயாரிப்பாளராக ஆனவர். உலகெங்கும் போர்கள், உள்நாட்டு யுத்தங்கள் நடக்கும் தேசங்களின் மீது அவரது கண் இருக்கும். இரண்டு தேசங்கள், அல்லது இரண்டு குழுக்களிடையே நடைபெறும் மோதலில் சம்பந்தமில்லாத அப்பாவிகள் பலியாவது தான் எங்கும் நேர்கிறது. அவர்களின் குரல் வெளியில் கேட்பதே இல்லை. அத்தகைய குரல்களின் அழைப்பை ஏற்று அங்கு போவதையே வழக்கமாக வைத்திருப்பவர் மெக்ரே. உகாண்டா உள்நாட்டு யுத்தம், இராக்கில் நிகழ்ந்த இனப் படுகொலைகள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார். இராக்கில் பிரிட்டிஷ் படை அப்பாவிகளைக் கொன்றதையும் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியவர். தன் தேசம் என்பதற்காக பிரிட்டனை அவர் விட்டுவிடவில்லை.

‘அவுட்சைடர் டி.வி’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் அவர், அதன்மூலமாகத்தான் ஏற்கனவே பிரிட்டனின் ‘சேனல் 4’ டி.விக்காக ‘இலங்கை கொலைக்களங்கள்’ என்ற ஆவணப்படத்தை எடுத்தார். சர்வதேச சமூகத்தின்முன் இலங்கையின் போர்க்குற்றங்களை பதிவு செய்த ஆதாரமாக அது அமைந்தது. இலங்கைப் போரின் இறுதி நாட்கள் பற்றி இப்போது அவர் எடுத்திருக்கும் ‘போர்க்களமல்ல; இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற படத்தில் பாலச்சந்திரனுக்கு நேர்ந்த கதி பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக நடைபெறும் ‘மனித உரிமைகள் தொடர்பான திரைப்பட விழா’வில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது.



‘‘பாலச்சந்திரன் போர்ச்சூழலில் குண்டடிபட்டு சாகவில்லை. அவனை உயிரோடு பிடித்து வைத்திருந்து, அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். புகைப்படங்களை பிரிட்டனில் இருக்கும் புகழ்பெற்ற தடயவியல் நிபுணர்களிடம் காண்பித்து உறுதி செய்திருக்கிறோம். ஏதோ கூட்டத்தில் தொலைந்த குழந்தை போன்ற முகபாவத்தோடு தென்படும் ஒரு சிறுவனை இப்படித் துடிக்கத் துடிக்கக் கொன்றிருக்கிறார்கள் என்றால், அந்த ராணுவத்தின் பண்பாடு எவ்வளவு அழுகிப் போயிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அந்த தேசத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேருக்கும் இருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்களை குண்டுவீசிக் கொன்று போர் முடிந்துவிட்டபிறகு, உயர் மட்டத்தில் இருக்கும் யாரோ சொல்லாமல் இந்த சித்திரவதைகளும் படுகொலைகளும் நடந்திருக்காது.

அந்தக் குற்றங்களைச் செய்த அத்தனை பேரும் இன்னமும் பொறுப்பில் இருக்கிறார்கள். தமிழர் பகுதிகளில் தினம் தினம் கொடூரமான அடக்குமுறைகளைச் செய்கிறார்கள். எதிர்குரல் கொடுக்க முடியாத அரசியல் சூழல் அங்கு இருக்கிறது. அரசை விமர்சனம் செய்தால், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதிகூட பதவியிழக்க நேர்கிறது. அங்கு நீதித்துறை சுயேச்சை தன்மையை இழந்துவிட்டது. இந்தச் சூழலில் தங்கள் குற்றங்களை தாங்களே விசாரித்துக் கொள்வதாக இலங்கை அரசு சொல்கிறது. சுயேச்சையான நீதித்துறை இல்லாத ஒரு தேசம், தன் தவறுகளை சுயபரிசோதனை செய்துகொள்ளத் தகுதியற்றது’’ என சாடுகிறார் மெக்ரே.



இந்த ஆவணப்படத்தை தான் எடுத்தது இந்தியாவுக்காகத்தான் என்கிறார் அவர். ‘‘இந்தியா தனது தலைமைத்தன்மையைக் காட்ட வேண்டும். போர்க்குற்றங்களை ஐ.நாவின் சுதந்திரமான அமைப்பு ஒன்று விசாரித்தால்தான் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும். இந்தியா முயற்சி எடுத்தால், இது நிச்சயம் நடக்கும்’’ என ஆணித்தரமாக சொல்கிறார் அவர்.
- அகஸ்டஸ்