சோனாக்ஷி ஔவையார்!





‘ஜெயப்ரதா மகனை காதலிக்கிறார் ஹன்சிகா’ என்று அட்டையில் படித்துவிட்டு பரபரவென்று உள்ளே போனேன். அது சினிமாவுக்காகத்தான் என்றதும் பெருமூச்சு விட்டுக்கொண்டேன். நல்லவேளை ஹார்ட் அட்டாக் வரவில்லை. என்ன விளையாட்டுங்க இது?
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

அழகிய மலர் வினோதினியை காதல் என்ற பெயரில் கருகச் செய்தவனை சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும். வினோதினிக்காக நீங்கள் கேட்டிருந்த கேள்விகள் ஒவ்வொன்றும் நியாயத்தின் மறுகுரலாகவே ஒலித்தது!
- ரேவதி ப்ரியன், ஈரோடு;
ஆர்.தனபால், சென்னை-63.

பிரமாண்ட மகாபாரதம் சன் டி.வி.யில் கலக்கப் போவதை அறிந்து மகிழ்ச்சி. இது ஒரு சின்னத்திரை திரைப்படமாக இருக்காது. பெரியதிரை படங்களுக்கே சவாலாக இருக்கும் என்பதே உண்மை!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

மீசை கூடாது, பந்தா வேண்டாம், நகைச்சுவையாகப் பேசணும், உயரமாக இருக்கணும்... ஒரு ஆணிடம் சோனாக்ஷி இப்படியெல்லாம் குவாலிஃபிகேஷனை எதிர்பார்த்தால், காலம் பூரா ஔவையார்தான்!
- எஸ்.குமார், வேலூர்.

அழுகைக்குள் சிரிப்பு இருக் காது... ஆனால், சிரிப்புக்கு நிச்சயம் அழுகை இருக்கும் என்று சர்க்கஸ் கோமாளிகளின் வாழ்க்கை உணர்த்திவிட்டது.
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

ஒரு காலத்தில் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஜீனத் அமன், இப்போது 61 வயது ஆகியும் தன்னை விட 30 வயது குறைவான ஒரு அரசியல்வாதியை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரா? எந்தக் காலத்திலும் ஜீனத் தலைப்புச் செய்திதான் போங்க!
- ஏ.விஷால், புதுச்சேரி.

போப் பெனடிக்ட் பற்றிய கட்டுரையில் ‘அதிகாரத்தை அடைவதை விட அதைத் துறப்பதற்கு அதிக மனோதிடம் வேண்டும்’ என்ற வரிகள் வைரம். அடுத்து அந்தப் பதவியில் அமரப்போவது யாரென்பது கர்த்தருக்கே வெளிச்சம்!
- ஸ்டீபன் சார்லஸ், நாகை.

பெரம்பலூர் போன்ற சிறிய நகரத்தில் புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கு ஹேட்ஸ் ஆஃப்!
- பி.ஜெயராஜ், சென்னை-91.

‘பைரவி’ படம் தொடங்கி, ரஜினியுடன் தனக்கிருந்த நட்பை ஸ்ரீகாந்த் சொல்லியிருந்தது சூப்பர். சூப்பர் ஸ்டாரே ஸ்டைலாக ஸ்ரீகாந்துக்கு சிகரெட் பற்ற வைக்கும் ஸ்டில் வெரி நைஸ்!
- ரஜினிதாசன், புதுக்கோட்டை.

சக கலைஞனுக்கு வாய்ப்பு இல்லை என்றால் சந்தோஷப்படுகிற இந்தக் காலத்தில், வடிவேலுவுக்காக நாலு வார்த்தை பேசி, காமெடி ரசிகர்களைக் குளிர வைத்துவிட்டார் கருணாஸ். வெல்டன்!
- முத்தையா தம்பி, மஞ்சக்குப்பம்.

‘சுண்டாட்டம்’ படத்தின் அறிமுகம் இப்போதே மனதை சுண்டியிழுக்க ஆரம்பித்து விட்டது. கேரமும் வீரமும் வெற்றியை பாக்கெட் பண்ணட்டும்!
- சி.விஜயாம்பாள், கிருஷ்ணகிரி.