எகிறுமா கல்விக் கட்டணம்?
தமிழக அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு பெற்று விடுவோம். எனவே அடுத்த ஆண்டு முதல் கட்டணம் அதிகரிக்கும் என எங்கள் மகன் படிக்கும் பள்ளியின் நிர்வாகி ஒவ்வொரு வகுப்பாக வந்து சொல்லிக் கொண்டிருக்கிறாராம். எங்கள் மகன் வந்து சொன்னான். உண்மையா? - கே.சீனுவாசன், சென்னை-33.
பதில் சொல்கிறது தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயக் குழு
னி-கி எந்தப் பள்ளியும் நாங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்திலிருந்து விதிவிலக்கு பெற முடியாது. ஆனால் கட்டணங்களை உயர்த்தி நிர்ணயிக்குமாறு கேட்டு எங்களை அணுகலாம். சில பள்ளிகள் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும், இப்படி உத்தரவிட்டு சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் ஊதியம், பிற ஊழியர்களின் ஊதியம், நிர்வாகரீதியான செலவுகள் என ஒவ்வொரு பள்ளியும் தந்திருக்கும் பட்டியலை பரிசீலித்துத்தான் நாங்கள் கட்டணம் நிர்ணயிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவரும் செலவையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு என்ன கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயிக்கும் பணியில் இப்போது குழு ஈடுபட்டுள்ளது. இதற்காக பள்ளிகளிலிருந்து விவரங்கள் கேட்டிருக்கிறோம். இதைப் பொறுத்தும், கல்விக் கட்டண நிர்ணய சட்டவிதிகளுக்கு உட்பட்டும் ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படும். அது நியாயமான கட்டணமாகவே இருக்கும். கட்டண விவரம் வழக்கம்போல இணையதளத்தில் வெளியிடப்படும். அதைவிடக் கூடுதலாக பள்ளிகள் கேட்டால், நீங்கள் தாராளமாக எங்களிடம் புகார் செய்யலாம்.
நல்ல வேலையில் இருந்த என்னை விபத்தொன்று நடக்க முடியாதவனாக்கி விட்டது. ஆனால் திரும்பவும் பழைய நிலை போல் பரபரப்பான ஒரு வேலைக்கு மனம் ஆசைப்படுகிறது. அப்படியொரு வேலை எனக்குத் திரும்பவும் கிடைக்குமா? - கண்ணன், திருச்சி.
பதில் சொல்கிறார் பார்கவ் சுந்தரம் (நிறுவனர், ‘கல்லிடை’ வீல்சேர் தயாரிப்பு நிறுவனம், சென்னை)
நிச்சயமாக. இந்தக் காலத்தில் நார்மலானவர்கள், உடல் ஊனமுற்றோர் என எந்த வித்தியாசத்தையும் பல நிறுவனங்கள் பார்ப்பதில்லை... வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு எங்கும் வேலை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். தங்களுக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது துரதிர்ஷ்டம் என்றால், நம்பிக்கையூட்டும் மனம் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என நினைத்துக்கொள்ளுங்கள். தற்போது ஏகப்பட்ட நிறுவனங்கள் உடலுறுப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்க முன்வருகின்றன. ஒருவித சமூகப் பொறுப்புணர்வுடனும் சம்பந்தப்பட்ட நபர்களின் திறமையின் அடிப்படையிலும் அவை அந்தப் பணிகளை வழங்குகின்றன.
முதலில் தாங்கள் ஏற்கனவே வேலை பார்த்துக்கொண்டிருந்த துறையிலேயே, கால்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் தங்களால் செய்ய முடிகிற வேலைகள் உள்ளதா என விசாரியுங்கள். அப்படி இருந்தால் அதற்கு முயற்சி செய்யலாம். இல்லாதபட்சத்தில் தங்களால் சாத்தியமாகுமெனத் தெரிகிற துறைகளில் முயற்சிக்கவும். தங்களது பழைய வேலைத் திறனும், உடல் குறைபாட்டைத் தாண்டி வேலை செய்யத் தூண்டும் மனதும் எல்லா இடத்திலும் உங்களுக்குக் கை கொடுக்கும்.
இன்னொருபுறம், உடல் ஊனமுற்றோர் செய்வதற்கென்றே நிறைய வேலைவாய்ப்புகள் தனியாக உள்ளன. அரசுத் தரப்பில் ஊனமுற்றோர் நலத்துறையை அணுகினால் அந்தப் பயிற்சிகள், வேலைகள் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சிலவும் உங்களைப் போன்றவர்களுக்கென்றே உதவக் காத்திருக்கின்றன. அவற்றையும் அணுகலாம். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் தயாரிக்கும் எங்களது நிறுவனத்திலும் கை, கால்கள் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். பொதுவாக அரசுத் துறைகளில் புதிய நியமனங்கள் செய்யப்படும்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு என்றே குறிப்பிட்ட சதவீத பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தாங்கள் முயற்சி செய்வதற்கும் எந்தத் தடையும் இல்லை.
|